சொட்டுநீர்ச் சிக்கல்கள்... தீர்வு உங்கள் கையில்!
தண்ணீரைச் சிக்கனமாக்கி, ஆட்கள் தேவையைக் குறைக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், சொட்டுநீர் பாசனத்தில் பயன்படும் பாகங்கள், அவற்றின் பயன்பாடு மற்றும் பராமரிப்புகள் குறித்து பலரும் அறிந்து வைத்திருப்பதில்லை. எதற்கெடுத்தாலும், அத்துறை சார்ந்த நிபுணர்கள் அல்லது சர்வீஸ் செய்பவர்களைத்தான் தேடி... ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதைப் பற்றியெல்லாம் நாம் தெரிந்து வைத்துக் கொண்டால், மொத்த ரிப்பேரையும் பார்க்காவிட்டால்கூட, குறைந்தபட்சம் என்ன பிரச்னை என்பதையாவது நாமே கண்டுபிடிக்கலாம்தானே! இங்கே, இந்த விஷயத்தில் உங்களுக்குக் கைகொடுக்க வருகிறார்... திண்டுக்கல் நகரைச் சேர்ந்த நீர்மேலாண்மை ஆலோசகர், பொறியாளர் இளமுருகு.
''சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 60% வரை தண்ணீரை மிச்சப்படுத்த முடியும் என்பதோடு, மேடு பள்ளமான நிலங்களிலும் பாசனம் செய்ய முடியும். அதோடு களைகள், மண்ணரிப்பு ஆகியவற்றைத் தடுக்க முடியும். இவையெல்லாம்... மின்சாரம் மற்றும் கூலிச்செலவைக் குறைப்பதற்கு நமக்கு ரொம்பவே கைகொடுக்கும்! அதேபோல, அதன் தொழில்நுட்பங்களையும் நாம் தெரிந்து வைத்து கொள்வது, பலசமயங்களில் நம்முடைய பணத்தை மிச்சப்படுத்துவதாக இருக்கும்'' என்ற இளமுருகு, ஒவ்வொன்றையும் வெகு தெளிவாக எடுத்து வைத்தார் இப்படி-
அழுத்தம்... கவனம் !
'ஸாண்ட் ஃபில்டர்’ எனப்படும் மணல் வடிகட்டி: இதுதான் சொட்டுநீர்க் குழாயின் முதல் உபகரணம், நீரிலுள்ள குப்பைகள், பாசி மற்றும் மணல் உள்ளிட்ட இதர பொருட்களை வடிகட்டப் பயன்படுகிறது. இந்த வடிகட்டியில், அழுத்தமானி மற்றும் பைபாஸ் அசெம்ப்ளி போன்ற அமைப்புகளும் இருக்கும். இவற்றை அடிக்கடி பார்வையிட வேண்டும். இன்புட் மற்றும் அவுட்புட் ஆகியவற்றுக்கு இடையில், அதிகளவு அழுத்த வித்தியாசம் இருந்தால்... பாசிகள் அடைத்திருக்க வாய்ப்புகள் உண்டு. உடனே, ஃபில்டரின் அவுட்லெட்டை மூடிவிட்டு, இன்லெட்டில் வரும் தண்ணீரை ஃபில்டரின் உள்ளே செலுத்தாமல், பைபாஸ் வழியாக செலுத்தினால் (பேக் வாஷ்) எதிர்திசையில் மேல் மூடியின் வழியாக பாசிகள் வெளியேறிவிடும்.
தினமும் என்னை கவனி !
ஸ்கிரீன் பில்டர்: தண்ணீரில் வரும் மிக நுட்பமான தூசுகள் மற்றும் இலைகளை வடிகட்ட ஸ்கிரீன் ஃபில்டர் பயன்படுகிறது. இதில் மிக நுட்பமான துவாரங்களைக் (120 மைக்ரான்) கொண்ட கேட்ரிட்ஜ் பொருத்தப்பட்டிருக்கும். அதன் வழியாக தண்ணீர் செல்லும்போது, தூசுகள் வடிகட்டப்பட்டு சுத்தமான நீர் வெளியேறுகிறது. இதிலும் அழுத்த மீட்டர், பைபாஸ் அசெம்ப்ளி ஆகிய அமைப்புகள் இருக்கும். தினமும் மோட்டாரை இயக்கும் முன்பு, ஃபில்டரைத் திறந்து இந்த வலையைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். சொட்டுநீர் அமைப்பு இயங்கும்போது அழுத்த மீட்டர்களில் ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை அழுத்தம் இருக்க வேண்டும். உள்ளே அடைப்பு இருந்தால்... இதில் அதிக வித்தியாசம் இருக்கும். உடனே ஃபில்டரின் அடியில் உள்ள கேட்வால்வை திறந்து, மாசுகளை அகற்ற வேண்டும். ஃபில்டரில் உள்ள வலையில் உப்பு படிந்திருந்தால் அமிலம் அல்லது பிரஷ் மூலமாகச் சரி செய்ய வேண்டும்.
உரத்தொட்டி: ரசாயன மற்றும் இயற்கை உரங்களை நீரில் கரைத்து, சொட்டுநீர்க் குழாய்கள் மூலமாகவே செடிகளுக்குக் கொடுக்க, இந்த உரத்தொட்டி பயன்படுகிறது. இதன் மூலம் உரங்கள், பயிரின் வேர்ப்பகுதிக்கு நேரடியாகச் செல்லும். இதுவும் இன்லெட் மற்றும் அவுட்லெட்டில் நிலவும் அழுத்த வேறுபாட்டால் இயங்குகிறது. தேவையான உரத்தை முன்கூட்டியே நீரில் கரைத்து, துணி மூலம் வடிகட்டி உரத்தொட்டியில் நிரப்பி, தொட்டியை இறுக்கமாக மூடிவைத்து விட வேண்டும்.
பிரதானக் குழாய்கள்: கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து கிளைக் குழாய்களுக்கு நீரைக் கொண்டு வர, பிரதானக் குழாய்கள் பயன்படுகின்றன. இந்தக் குழாய்களை 2 அல்லது 3 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும். அப்போதுதான் நிலத்தில் உழவு செய்யும்போதும், சூரிய ஒளியாலும் குழாய்கள் பாதிப்பு அடையாது. இந்தக் குழாய்களைக் கிளைக் குழாய்களுடன் இணைக்கும் இடத்தில் நீர்க்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மண், சேறு படியக்கூடாது !
கிளைக் குழாய்கள்: பிரதானக் குழாய்கள் மூலமாக வரும் நீரை பாலிதீன் குழாய்களுக்கு (லேட்ரல்) கொண்டு சேர்க்க, கிளைக் குழாய்கள் பயன்படுகின்றன. இந்தக் குழாய்களையும் ஒன்று அல்லது ஒன்றரை அடி ஆழத்தில் புதைக்க வேண்டும். பிரதானக் குழாய் மற்றும் கிளைக் குழாய்கள் இணையும் இடத்தில் பொருத்தப்படும் கேட் வால்வுகள் மூலமாக நீரின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இந்த வால்வுகளைச் சுற்றி தொட்டி போல் அமைத்து மண், சேறு படியாமல் பராமரிக்க வேண்டும்.
லேட்ரல்: கிளைக் குழாய்கள் மூலமாக வரும் தண்ணீர் இந்த லேட்ரல்கள் மூலமாகத்தான் பயிருக்குச் செல்கிறது. லேட்ரலில் கடைசியில் உள்ள எண்ட் கப் மூலமாக அடிக்கடி மாசுகளைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்தக் குழாய்களை அறுவடையின்போது சுற்றி வைத்துவிட வேண்டும்.
தலையில் தண்ணீர் கசியக்கூடாது !
டிரிப்பர்கள்: லேட்ரலில் இருந்து வரும் நீரைப் பயிரின் வேர்ப்பகுதிக்கு கொண்டு சேர்ப்பவை டிரிப்பர்கள். இவை லேட்ரலில் வரும் நீரின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி ஒரே சீராக சொட்டச் செய்கின்றன. நிலத்தின் தன்மை, பயிருக்கு ஏற்ப டிரிப்பர்களின் அளவையும், இரண்டு டிரிப்பர்களுக்கிடையே உள்ள தூரத்தையும் நிர்ணயிக்கலாம்.
டிரிப்பர்களில் தூசி அல்லது அடைப்பு இருந்தால்... சைக்கிள் பம்ப் மூலமாக காற்றைச் செலுத்திச் சுத்தம் செய்ய வேண்டும். உப்புப் படிந்தால், ஹைட்ரோ-குளோரிக் அமிலத்தில் மூழ்க வைத்து நன்கு ஊறிய பிறகு சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதன் தலைப்பகுதியில் நீர் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நுண் குழாய் (மைக்ரோ டியூப்): குறைந்த அழுத்தம், உப்புநீர் உள்ள இடங்களில் டிரிப்பர்களை அமைக்க முடியாது. அது போன்ற இடங்களில் பாசனம் செய்ய இந்த நுண் குழாய்கள் பயன்படுகின்றன. இதில் மாசுக்கள் மற்றும் உப்புகள் எளிதில் படிவதில்லை.
நிறைவாகப் பேசிய இளமுருகு, ''நீரில் உப்பின் அளவு அதிகமாக இருந்தால், நாளடைவில் குழாய்கள் மற்றும் டிரிப்பர்களில் உப்புப் படிமங்கள் ஏற்படும். இதைச் சரி செய்ய அமிலத்தைப் பயன்படுத்தலாம்.
கிளைக் குழாய்கள் மற்றும் லேட்ரல் ஆகியவற்றை சரியாகப் பொருத்தாமல் இருந்தாலோ, லேட்ரலின் நீளம் குறைவாக இருந்தாலோ, எலி கடித்திருந்தாலோ தண்ணீர் சொட்டி வீணாகிக் கொண்டே இருக்கும். என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.
குழாயில் கடைசி வரை தண்ணீர் வரவில்லை என்றால், இடையில் எங்காவது மடங்கி இருக்கிறதா என்று பார்த்து சரி செய்ய வேண்டும். இவைப் போன்ற சின்ன, சின்ன விஷயங்களை உடனுக்குடன் சரி செய்து விட்டால், பெரியளவில் பிரச்னைகள் வராது'' என்று சொன்னார்.
தொடர்புக்கு,
இளமுருகு, செல்போன்: 98421-15657.
இளமுருகு, செல்போன்: 98421-15657.
ஆர். குமரேசன்
Source:pasumaivikatan
No comments:
Post a Comment