Tuesday

செழிப்பு தரும் 'தெளிப்பு' ! 10 ஆயிரம் ரூபாய் செலவில் பலே தொழில்நுட்பம் !

செழிப்பு தரும் 'தெளிப்பு' !
10 ஆயிரம் ரூபாய் செலவில் பலே தொழில்நுட்பம் !

ஆறு, ஏரி, ஏற்றம், கமலையேற்றம், ஆயில் இன்ஜின், பம்ப்-செட், போர்வெல்... என்று நீர் மேலாண்மை படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால், பாசன மேலாண்மை மட்டும் 'மண்வெட்டி கொண்டு மடை திருப்பும்' முறையிலிருந்து பலகாலமாகவே மாறவில்லை. காலத்தின் கட்டாயம், சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் என்று அதிலும், இப்போது மாற்றங்கள் பரவிக் கொண்டிருப்பது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது!
பாசனத்தைப் பொறுத்தவரை நிலத்தின் தன்மை, தண்ணீரின் அளவு... போன்ற காரணிகளை வைத்து அவரவர்க்கு வசதியான பாசன முறைகளைப் பயன்படுத்துவதில்தான் வெற்றியே இருக்கிறது. இதில் சொட்டுநீர்ப் பாசனம் போலவே விவசாயிகளுக்கு வலுவாகக் கைகொடுக்கும் மற்றொரு பாசனம்தான் இந்தத் தெளிப்பு நீர்!
கோயம்புத்தூர் மாவட்டம், பச்சார்பாளையம் ஜெகநாதனின் தோட்டத்தில், கொடைக்கானல் மலைச்சாரல் போல, நாலாபக்கமும் தண்ணீர் சிதறிக் கொண்டிருக்க... சிலிர்த்து தலையாட்டிக் கொண்டிருந்தன, நான்கு அடி உயரத்துக்கு மேல் செழித்து வளர்ந்திருந்த தீவனப்புற்கள். அதையெல்லாம் ரசித்தபடியே அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, கடகடவென பேச ஆரம்பித்தார் தெளிப்புநீர் பெருமையை!
வேலை மிச்சம் !
''இந்த இடத்துல 6 ஏக்கர் பூமி இருக்கு. பம்ப்-செட்டோட கிணறு இருக்கு. ஆள்பற்றாக்குறைப் பிரச்னையால பிஞ்சு வெள்ளாமையை விட்டுட்டு, தென்னை, வாழைனு நானும் மாறிட்டேன். தென்னைக்கும், வாழைக்கும் வட்டப்பாத்தி போட்டு சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுருக்கேன். இதுபோக, நாலு கறவை மாடுகளும் இருக்கு. அதுகளுக்கு தீவனத்துக்காக அரை ஏக்கர்ல கோ-3 தீவனப்புல்லை சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். பசுந்தீவனத்துக்கு 'ஸ்பிரிங்லர்’னு சொல்ற தெளிப்புநீர்ப் பாசனத்தை அமைச்சுருக்கேன். இதுல வேலையே கிடையாது. சுவிட்சைப் போட்டு விட்டா போதும்... தானா, சுத்தி சுத்தித் தண்ணி அடிச்சுடும்.
தீவனப்புல்லுக்கு ஏற்றது !
கோ-3 புல் அஞ்சு வருஷம் வரைக்கும் மறுதழைவு வந்துட்டே இருக்கும். தண்ணியையும் அதிகம் குடிக்கும். இது நல்லா அடர்த்தியா வளர்ற பயிர்ங்கறதால, பாசனம் பண்றப்போ... ஒரு சில இடங்கள்ல தண்ணி தேங்கிப் போயிடும். அதோட இந்தப் புல்லு நம்ம உடம்புல பட்டா அரிக்கும். ஆக, வாய்க்கால் மூலம் சுலபமா பாசனம் பண்ண முடியாது. அதனாலதான், தெளிப்புநீர்ப் பாசனத்தை அமைச்சுட்டேன். அரை ஏக்கர்ல ஏழடி உயரத்துல 50 தெளிப்பான் போட்டிருக்கேன். இதுக்கு மானியம் இல்லாம ஆறாயிரம் ரூபாய் செலவாச்சு. 3 வருஷம் வரைக்கும் பழுதில்லாம இயங்கும்னு சொல்றாங்க. ஒரு தெளிப்பான்ல இருந்து 15 அடி சுற்றளவுக்கு தண்ணி பீய்ச்சி அடிக்கும். மேல இருந்து தண்ணி கொட்டுறதால பயிர் முழுசும் நனைஞ்சு, மழை பேய்ஞ்ச மாதிரி சூழ்நிலை உருவாகிடுது.
மின்சாரம் மிச்சம் !
பயிர் நல்ல செழிப்பா வளர்றதோட... புல்லுல இருக்குற சுனையும் தண்ணியில அடிச்சுட்டுப் போயிடுது. அதனால அறுவடை பண்றப்ப அரிப்பு ஏற்படுறதில்ல. அரை ஏக்கருக்கு வாய்க்கால் மூலமா பாசனம் செய்ய ரெண்டு மணி நேரம் பிடிக்கும். இந்த முறையில முக்கால் மணி நேரம் மோட்டார் ஓடினா போதும். அதனால கரன்ட்டையும் மிச்சப்படுத்த முடியும். இதுக்கு மானியமும் கிடைக்குது. ஒரு அறுப்பு முடிஞ்சதும் கோழி எரு
500 கிலோவை தோட்டத்துல விசிறி விடுவேன். இதைத்தவிர வேற உரங்கள் எதுவும் கொடுக்கறதில்லை. துளி இடம்கூட மிச்சமில்லாம தெளிப்பு நீர் விழறதால... தீவனப்பயிரும் ஒரே சீரா வளர்ந்து மகசூல் கொடுக்குது'' என்றார் மகிழ்ச்சி பொங்க!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்த நீர்மேலாண்மை நிபுணர், பொறியாளர் சு. ராஜாமணி, தெளிப்புநீர்ப் பாசன சங்கதிகளை, தொழில்நுட்பத் தகவல்களுடன் சேர்த்தே சொன்னார் இப்படி-
''தீவனப்பயிர்களுக்கு மட்டும்தான் தெளிப்புநீர்ப் பாசனம் அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நிலக்கடலை, பீட்ரூட், வெங்காயம், முள்ளங்கி, கொத்தமல்லி... என பல பயிர்களுக்கும் இப்பாசன முறையை அமைத்து தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக செலவழிக்க முடியும்.
திறந்தவெளி வாய்க்கால் வழியே ஓடும் நீர் ஆவியாதல்... நீண்டதூரம் செல்லும் நீர் கசிந்து மண்ணில் இறங்குதல்... எலிவங்கு, எறும்புக்குழி, பூமி வெடிப்பு போன்றவைகளால் ஏற்படும் நீர் சேதாரம் ஆகியன முழுமையானப் பாசனத்துக்குத் தடையாக இருக்கின்றன. இதன் மூலம் 40% தண்ணீர் விரயம்தான் ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனால், கருவிகள் மூலமான பாசனத்தில் துளிகூட சேதாரம் இன்றி பயிர்களுக்கு சீராக நீர் சென்றடைகிறது.
திறந்தவெளிப் பாசனத்தில் மடைதிறந்துவிட ஆள் தேவைப்படும். ஒரு ஏக்கர் பாசனம் செய்ய குறைந்தபட்சம் 5 குதிரைத்திறன் பம்ப்-செட் மோட்டாருக்கு 3 மணி நேரம் பிடிக்கும். ஆனால், கருவிநீர்ப் பாசனத்தில் பத்து ஏக்கருக்குகூட ஒரேநேரத்தில் பாசனம் செய்யலாம். ஒரே ஆள் 100 ஏக்கர் நிலத்துக்குக்கூட மடை திருப்பலாம்.
தெளிப்புநீர்ப் பாசனம் அமைக்கும்போது, பிரதான தண்ணீர் குழாய்களை மட்டும் சாகுபடி வயலில் நிரந்தரமாகப் பதித்துக் கொள்ள வேண்டும். தெளிக்கும் கருவியை மட்டும் ஒவ்வொரு வரிசையிலும் பாசனம் முடிந்த பிறகு மாற்றி மாற்றிப் பொருத்திக் கொள்வது, கருவிகளுக்கான செலவைக் குறைக்கும் யோசனையாக இருக்கும். இந்தக் கருவிகள் 'பிளாஸ்டிக்’ தயாரிப்பு என்பதால், பழுதாவதற்கான வாய்ப்புகள் குறைவு.
தண்ணீர் ஆற்றல் மூலமே தெளிப்பான் இயங்குவதால்... மோட்டாருக்கும் அதிக வேலை இருக்காது. 5 ஹெச்.பி. மோட்டார் உள்ள பாசனக் கிணற்றிலிருந்து இரண்டு சர்க்யூட்டாக பிரித்து, எந்தப் பயிராக இருந்தாலும், ஒரு மணி நேரத்தில் பாசனம் செய்யலாம்'' என்ற ராஜாமணி, தன் பேச்சை செலவுகள் பக்கம் மடைமாற்றினார்.
''ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் செலவில் இதை அமைத்துக் கொள்ளலாம். இந்த பத்தாயிரம் ரூபாய்கூட புதிய செலவு என்று சொல்லத் தேவையில்லை. தெளிப்புநீர்ப் பாசனத்துக்கு வாய்க்கால், வரப்பு, பாத்தி எதுவும் தேவை இல்லை என்பதால், ஏற்கெனவே அதற்காக செலவிட்டுக் கொண்டிருக்கும் பத்தாயிரம் ரூபாயை அப்படியே திருப்பிவிடுகிறோம்... அவ்வளவே!'' என்று எளிமையாகப் புரிய வைத்தார்!
தொடர்புக்கு,

ஜெகநாதன், செல்போன்: 99761-43084, 
ராஜாமணி, செல்போன்: 94433-57180.
ஜி.பழனிச்சாமி
படங்கள்: தி.விஜய்
Source:pasumaivikatan

No comments: