40 செண்ட் சுரைக்காய்... 40 செண்ட் பாகற்காய்...
ஆத்மா விவசாயிகள் சங்கத்தின் அசத்தல் சாகுபடி
'பசுமை விகடன்' 25.3.11-ம் தேதியிட்ட இதழில் 'நாட்டு மாடு வாங்கிட்டோம்... இயற்கைக்கு மாறிட்டோம்..!’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலூகாவில் உள்ள கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள 45 விவசாயிகள் இணைந்து இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றிய கட்டுரைதான் அது. கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கும் நிலையில், அவர்களின் இயற்கை விவசாயம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக அங்கே ஒரு நடைபோட்டோம்!
மாற்றத்தை ஏற்படுத்திய பசுமை விகடன்!
ரசாயனத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த விவசாயிகளை இயற்கையின் பக்கம் இழுத்தவர், கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம். கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரான இவர், தற்போது, முழு நேர விவசாயி. இவர்தான் தற்போது இயற்கைக்கு மாறியிருக்கும் விவசாயிகள் அமைத்திருக்கும், 'ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்க’த்தின் தலைவர்.