120 ஏக்கர்... 50 ஆயிரம் மரங்கள்...
புவி வெப்பமயமாதல், மழையின்மை, தொடரும் வறட்சி... என அனைத்துக்கும், 'மரம் வளர்க்க வேண்டும்’ என்பதைத்தான் தீர்வாகச் சொல்கிறார்கள். இதனால்தான், தன்னார்வ அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள், அரசுத் துறைகள் என அனைத்துமே மரம் வளர்ப்பைத் தீவிரமாகச் செய்து வருகின்றன. இந்நிலையில், 120 ஏக்கரில் ஆயிரக்கணக்கான மரங்களை வளர்த்து 'லிட்டில் ஊட்டி’ என்ற பெயரில் ஒரு காட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள், துரைசாமி-சிவகாமி என்ற டாக்டர் தம்பதியர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பச்சைமலை அடிவாரப்பகுதியான காஞ்சேரியில்தான் இருக்கிறது 'லிட்டில் ஊட்டி' பண்ணை. உள்ளே நுழைந்ததுமே மலை வாசஸ்தலத்துக்குச் சென்றது போன்றதொரு குளுமை. திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள். ஏதோ ஓர் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து விட்ட பிரமை.