பெயர் வாங்கித் தந்த, பெயரில்லா எலுமிச்சை... இயற்கை விவசாயியின் எளிய கண்டுபிடிப்பு !
இரண்டே ஆண்டுகளில் கொட்டிக் கொடுக்கும் நாட்டு ரகம் !
விவசாயப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் லட்சக்கணக்கில் செலவு செய்து, அவ்வப்போது புதிய ரகப்பயிர்களை அறிமுகப்படுத்தி வருவது வழக்கம். ஆனால், சில விவசாயிகள், தங்களுடைய அனுபவத்தை வைத்தே, பெரிதாக செலவேதும் இல்லாமல், புதுப்புது ரகங்களை சர்வசாதாரணமாக உருவாக்கி விடுவதுண்டு. இத்தகைய ரகங்களுக்கு முன்பாக... விஞ்ஞானிகளின் ரகங்கள் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு. அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 'புளியங்குடி’ அந்தோணிசாமி உருவாக்கியுள்ள புதிய ரக எலுமிச்சையை, தென் மாவட்ட விவசாயிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். பின்னே... குறைவான காலத்திலேயே நிறைவான மகசூலைத் தருகிறதே!
இந்த ரக எலுமிச்சையை நடவு செய்து நிறைவான மகசூலை எடுத்து வருபவர்களில் ஒருவராக வெற்றிநடை போடுகிறார்... கடம்பூர் இளைய ஜமீன்தார், மாணிக்கராஜா. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரில் இருந்து, கயத்தாறு போகும் வழியில் மூன்றாவது கிலோ மீட்டரில் வருகிறது, ஜமீன் தோட்டம். தோட்டத்திலிருந்த மாணிக்கராஜாவிடம், நாம் அறிமுகப்படுத்திக்கொள்ள, உற்சாகமாகப் பேச்சைத் துவக்கினார்.