Tuesday

பத்து சென்ட் நிலத்துக்கும் சொட்டுநீர்..!


பத்து சென்ட் நிலத்துக்கும் சொட்டுநீர்..!

தரிசு நிலங்கள் அதிகரிப்பதற்கு பற்பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் 'தண்ணீர் பற்றாக்குறை' என்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல் முதற் காரணமாகவே இருக்கிறது. ஆனால், வழக்கமான பாசன முறையைக் கைவிட்டு, சிக்கனமாகக் கையாளும் முறைகளைக் கடைபிடித்தால், தண்ணீர் பற்றாக்குறையை எளிதாக சமாளிக்க முடியும் என்பதுதான் அனுபவ விவசாயிகள் பலரும் சொல்லும் உண்மை. அப்படிப்பட்ட நீர் மேலாண்மை முறைகளில் ஒன்றுதான் சொட்டுநீர்ப் பாசனம்!
சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க அதிக செலவு பிடிக்கும் என்பதால், ஆரம்ப காலங்களில் வசதியுள்ள விவசாயிகளால் மட்டும்தான் இதை அமைக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இதை மாற்றி, சிறு மற்றும் குறு விவசாயிகளும் பயன்படுத்தும் அளவுக்குக் குறைந்த விலையில் சொட்டுநீர்ப் பாசனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது 'கே.பி. டிரிப்’ நிறுவனம்.
கிராமப்புற விவசாயிகளின் மேம்பாட்டில் பணியாற்றி வரும், 'இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் எண்டர்பிரைசஸ் இந்தியா’ என்கிற தொண்டு நிறுவனத்தின் கிளை அமைப்புதான், கே.பி. டிரிப். விவசாயிகள் மத்தியில் தண்ணீர் சிக்கனம் தொடர்பான விழிப்பு உணர்வைத் தொடர்ந்து  ஏற்படுத்தி வரும் இந்நிறுவனத்தின் தமிழ்நாடு மேலாளர் கோபாலகிருஷ்ணன், 'நீர் மேலாண்மை சிறப்பிதழு'க்காக சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
''ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் தேவை? என்று கேள்வி கேட்டால், 3 லிட்டரில் இருந்து 30 லிட்டர் வரை என்று ஆளுக்கொரு பதில் சொல்வார்கள். அவரவர்கள் நேரடியாகப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவைத்தான் சொல்வார்கள். மறைமுகமாகப் பயன்படுத்தும் தண்ணீரை மறந்து விடுவார்கள். அசைவ உணவு சாப்பிடக்கூடிய வயது வந்த இந்திய ஆண் ஒருவரின் ஓராண்டுக்கான மொத்த தண்ணீர் தேவை... 5 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் என்கிறது, ஒரு புள்ளி விவரம். இந்தக் கணக்கில் பார்த்தால், ஏறத்தாழ ஒரு நாளைக்கு சுமார் 1,500 லிட்டர் தேவை. ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.
ஒரு கப் காபிக்கு 140 லிட்டர் தண்ணீர் !
காலை எழுந்தவுடன் நாம் பருகும் ஒரு கப் காபி உற்பத்திக்கு 140 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. செடியை வளர்க்க, கொட்டைகளை சுத்தம் செய்ய, பொடியாக்க... என ஒவ்வொரு நிலைக்கும் தேவையான தண்ணீரைக் கணக்கிட்டால், இவ்வளவு தண்ணீர் தேவை. அதேபோல் ஒரு கிலோ தேங்காய் உற்பத்திக்கு 2,500 லிட்டர்; ஒரு டம்ளர் பாலுக்கு 200 லிட்டர்; ஒரு கிலோ கோதுமைக்கு 1,300 லிட்டர்... என ஒவ்வொரு தேவைக்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
தண்ணீருக்கு இவ்வளவு தேவை இருந்தாலும், உலகில் நமக்குத் தேவையான அளவு தண்ணீர் இல்லை என்பதுதான் உண்மை. உலகில் மொத்தமுள்ள  தண்ணீரில் 97.5% உப்புத் தண்ணீராக இருக்கிறது. மீதமுள்ள 2.5% தண்ணீர்தான் நல்ல நீர். இந்த 2.5% நீரிலும், 30.1% நீரைத்தான் பயன்படுத்த முடியும்'' என்று சொல்லி, உண்மை நிலையை நடுமண்டையில் 'நச்' சென்று குட்டிக்காட்டிய கோபாலகிருஷ்ணன், சொட்டுநீர் பக்கம் வந்தார்.
''இந்தச் சூழலில், விவசாயத்துக்கு பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தண்ணீர், தேவைக்கும் அதிகமாகவே விரயம் ஆகிக் கொண்டிருப்பதுதான் நடக்கிறது. திட்டமிட்டு சிக்கனமாகப் பயிர் செய்தால், நிலத்தை தரிசாகப் போடாமல் தடுப்பதோடு, தண்ணீரையும் மிச்சப்படுத்த முடியும். இதற்கு எளிய தீர்வு சொட்டுநீர்ப் பாசன முறைதான். இதை அமைப்பதற்கு முன்பாக சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், போதும்... பிரச்னைகளே வராமல் சமாளிக்க முடியும்.
ஆலோசனை அவசியம் !
சொட்டுநீர் அமைக்கும் முன்பு, ஏற்கெனவே இதை அமைத்துள்ள மற்ற விவசாயிகளின் தோட்டங்களுக்குச் சென்று பார்த்து, அவர்களது அனுபவங்கள், அவர்கள் வாங்கி வீணான பொருட்கள், அத்தியாவசியமான பொருட்கள், அவசியமான பொருட்களின் செயல்பாடுகள்... போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்தடுத்து நாம் பயிரிடப் போகும் பயிர்களுக்கும் பயன்படும் வகையில் திட்டமிட்டு சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அமைக்கும்போது கூடவே இருந்து பார்த்துக் கொண்டால்... அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு கோளாறுகளை நாமே சரி செய்து கொள்ள முடியும்.
நான்கைந்து நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பேசி, விலை வித்தியாசம், பொருளின் தரம், அவர்களது தொடர் ஆலோசனை, விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்பு உதவி போன்றவற்றைத் தெரிந்து கொண்டு தங்களுக்கு சாத்தியப்படும் நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்வதுதான் சிறந்தது'' என்றவர், தங்கள் நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.  
செலவு குறைந்த சொட்டுநீர் முறை !
''ஏழை விவசாயிக்கும் இது சென்று சேர வேண்டும் என்ற நோக்கில்  மிகமிகக் குறைந்த செலவில் சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்துத் தருகிறோம். இதை அமைத்துவிட்டால்... பார் பிடித்தல், களை எடுத்தல், தண்ணீர் கட்டுதல் போன்றவற்றுக்கான செலவு முற்றாக குறைந்துவிடும். இந்த வேலைகளுக்காக ஒரு விவசாயி செலவழிக்கும் தொகையிலேயே, நாங்கள் இதை அமைத்துக் கொடுத்து வருகிறோம். எனவே, இதில் கூடுதல் செலவு என்பதே இல்லை.
பொதுவாக, குறைந்தது இரண்டரை ஏக்கர் நிலம் இருந்தால்தான் சொட்டு நீர் அமைக்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால், நாங்கள், 10 சென்ட் நிலத்துக்கும்... ஏன், வீட்டுத் தோட்டத்துக்கும்கூட அமைத்துக் கொடுக்கிறோம். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், தொழில்நுட்பத்தை நேரடியாக விவசாயிகளுக்குத் தெரியபடுத்தி விடுகிறோம். அதனால், விவசாயிகளேகூட இந்த ஏற்பாட்டை சுயமாக அமைத்துக் கொள்ள முடியும். எங்களுடைய முறையைப் பயன்படுத்துவதும் சுலபம்.
வழக்கமாக, ஒரு ஏக்கர் கரும்புக்கு சொட்டுநீர் அமைக்க 40 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால், எங்கள் நிறுவனம் மூலமாக 10 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரைதான் செலவாகும். ஒரு பயிர் முடிந்தவுடன் சொட்டுநீர் பைப்புகளை சுருட்டி வைத்துவிட்டு உழவு செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.
எங்கள் நிறுவனம் மூலம் சொட்டுநீர் முறையை அமைக்க அரசு மானியம் கிடைக்காது. ஆனால், மானிய முறையில் அமைப்பதைவிட மிகமிக குறைவான செலவிலேயே இதை அமைத்துவிட முடியும். தற்போது ஒரு ஏக்கருக்கு சொட்டுநீர் அமைக்க மானியம் நீங்கலாக 30 ஆயிரம் ரூபாய் ஆகிறது. நாங்களோ 12 ஆயிரம் ரூபாயில் முடித்துக் கொடுக்கிறோம். மேலே தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில், அதை எளிதாக இறைத்துப் பாய்ச்சுவதற்கு பெடல் பம்புகளையும் விற்பனை செய்து வருகிறோம்'' என்று விரிவான விளக்கங்களைத் தந்தார் கோபாலகிருஷ்ணன்.

தினமும் நீர் பாய்ச்சத் தேவையில்லை!
குறைந்த செலவில் சொட்டுநீர் அமைப்பது எந்த அளவுக்குப் பலன் தருகிறது?
ஈரோடு மாவட்டம், நசியனூர், தொட்டிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி, ''சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சா தினமும் தண்ணி விடனும்னு சொன்னாங்க. ஆனா, எங்க கிணறு பங்குக் கிணறா இருக்கறதால அது சாத்தியமில்லாம இருந்துச்சு. அப்பத்தான் கே.பி. டிரிப் பத்திக் கேள்விப்பட்டேன். இதுல, 'தினமும் தண்ணிப் பாய்ச்சத் தேவையில்லை’னு சொன்னாங்க. கரும்புத் தோட்டத்துல சொட்டு நீர் போட்டிருக்கேன். இதுல கொஞ்சம் வேகமாவே தண்ணி வரும். அதனால, அரை மணி நேரத்துல நிலம் ஈரம் கட்டிக்குது. டியூப்ல எங்கயாவது அடைச்சுக்கிட்டா, கடைசி முனையை அவுத்து குழாயை உதறுனா அடைப்பு சரியாகிடுது. அதேமாதிரி, குழாயை எலி கடிச்சுட்டாலும் இன்சுலேசன் டேப்பை ஒட்டி சரி பண்ணிடலாம். இந்தக் காரணங்களால எனக்கு இதைப் பயன்படுத்துறது ரொம்ப எளிமையா இருக்கு. எனக்கு ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய்தான் செலவாச்சு. இப்ப நாலு வருஷமா எந்தப் பிரச்னையும் இல்லை'' என்றார்.
மின் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம்!
சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் காலனி பகுதியைச் சேர்ந்த அசோகன், ''இது ரொம்ப நல்லாயிருக்கு. யாரோட தேவையும் இல்லாம நானே அமைச்சுக்குறேன். ஆரம்பத்துல அரை ஏக்கர்ல மட்டும்தான் போட்டேன். இப்ப 10 ஏக்கருக்கு போட்டிருக்கேன். இதுக்கு செலவு பண்ற தொகையை முதல் பயிர்லயே எடுத்திடலாம்'' என்றார்.
 டெல்டா விவசாயிகளுக்கு பெடல் பம்ப் !
மின்சார வசதி இல்லாத விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இது 25 அடி ஆழம் வரை உள்ள தண்ணீரை வெளியேற்றும். நமது அடிகுழாய் செயல்படும் அதே முறையில்தான் இது செயல்படுகிறது. இதிலிருக்கும் பெடலை காலால் மிதித்தால்... தண்ணீர் பாயும். மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் மேல்மட்டத்தில் தண்ணீர் கிடைக்கும். அதனால், அந்தப் பகுதிகளில் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களின் கடைமடை விவசாயிகளுக்கு மிகவும் பயன் தரக்கூடியது. ஒரு மணி நேரத்துக்கு 4,000 லிட்டர் முதல்
6,000 லிட்டர் தண்ணீரைப் பாய்ச்ச முடியும். இதன் விலை 2,500 ரூபாய்.
குமரேசன்
Source: pasumaivikatan

3 comments:

Unknown said...

please give me K.B. Trip contact no.

Unknown said...

please give condact no

Unknown said...

Please give me kB trip Number