10 சென்ட்... 100 பயிர்...
வியக்க வைக்கும் வீட்டுத் தோட்டம்...!
நகரமோ... கிராமமோ... புதிதாக வீடு கட்டுகிறார்கள் என்றால், வீட்டுத் தோட்டத்துக்காகவும் இடம் விடுவது, இப்போதெல்லாம் ஒரு வழக்கமாகவே மாறிக் கொண்டிருக்கிறது. ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்றவற்றைப் பயன்படுத்தாமல், சொந்த உழைப்பில் இயற்கை முறையில் நாமே காய்கறிகளை உற்பத்தி செய்து வீட்டின் ஆரோக்கியத்தைக் காப்பதோடு, மனதின் நிம்மதியையும் கூட்டிக் கொள்ளலாம் என்பதுதான் இதற்குக் காரணம்!
இதோ... கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையிலிருந்து, அருமனை செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கும் 'வட்டவிளை’ கிராமத்தில் வசிக்கும் ரஞ்சிதஜாய் என்பவரின் வீடு... செடி, கொடிகள் சூழ, பசுமை போர்த்திய வீடாகவே மாறி கிடக்கிறது!
காம்பவுண்ட் வாயிலிலிருந்த கொய்யா, பலா, முருங்கை, அழகுச் செடிகள்... என அசைந்து வரவேற்க, வாசல் தொடங்கி வீடு வரை படர்ந்து கிடக்கிறது, முல்லை. பலவித பூக்களின் நறுமணங்கள் ஒன்றாகக் கலந்து பரவ, அந்த இடமே ஏகாந்தமாக இருந்தது.
''டி.எஸ்.பி.-யா வேலை பாத்திட்டிருந்த என் வீட்டுக்காரர் தாசப்பன், கொஞ்ச வருஷத்துக்கு முன்ன இறந்துட்டார். எங்களுக்கு நாலு ஆம்பளைப் பசங்க. நாலு பேரையும் கல்யாணம் முடிச்சுக் கொடுத்து பேரன், பேத்தியெல்லாம் எடுத்தாச்சு. மன அமைதிக்காகத்தான் இந்தத் தோட்டத்தை அமைச்சேன். ஆனா, அது இப்போ எனக்கான அடையாளமாவே மாறிடுச்சு. அறுபது வயசுலயும் என் மனசு இளமையா இருக்கறதுக்குக் காரணமே இந்தத் தோட்டம்தான்'' என்று உற்சாகமாகப் பேச்சை ஆரம்பித்த ரஞ்சிதஜாய், தோட்டத்தில் உள்ள செடிகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
10 சென்டில்... 100 பயிர்கள்!
''வீட்டைச் சுத்தி பத்து சென்ட் அளவுக்குக் காலி இடம் இருந்துச்சு. அதுலதான் தோட்டத்தை அமைச்சுருக்கேன். அஞ்சு மாமரம், ஆறு தென்னை, அஞ்சு ரொபஸ்டா வாழை, ஏழு ஏந்தன் வாழைனு இருக்கு. பப்பாளி, சீதா மரங்களும் இருக்கு. மிச்சமிருக்குற இடத்துலதான், மத்த பயிர்கள். மொத்தமா கணக்கெடுத்தா... ஏறத்தாழ நூறு பயிர்களுக்கு மேல இருக்கும். ரசாயனத்தைப் பயன்படுத்துறதே கிடையாது. தோட்டத்துக்குள்ள மட்டும் இல்லாம... பால்கனி, மொட்டை மாடினு எல்லா இடத்துலயும் பிளாஸ்டிக் சாக்குகளை வெச்சுச் செடிகளை வளர்க்கறேன்.
ரோஜா முதல் கற்றாழை வரை!
கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கட்டுமேனு ரோஜாவை வெச்சுருக்கேன். சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, நீலம், நாட்டு ரோஜானு மொத்தம் பனிரெண்டு ரகங்கள் நிக்குது. தண்டுகளை ஒடிச்சு விட்டுட்டா... நிறையப் பூக்கள் கிடைக்கும். பக்கத்திலயே மணத்தக்காளி, வெண்டை, காலிஃபிளவர், மிளகாய், இஞ்சி, சோற்று கற்றாழைனு வரிசையா இருக்கு.
அழகுக்காக ஆர்கிட் மலர்களையும் நட்டுருக்கேன். இந்தத் தொட்டிகளைக் கயித்துல கட்டித் தொங்க விடுறப்போ... தண்ணிவிட வேண்டிய அவசியமில்லை. காத்துல இருக்குற ஈரத்துலேயே வளந்துடும்.
ரகம் ரகமா மிளகாய், கீரை!
மிளகாய்ல... பச்சை, உருண்டை, வெள்ளை, ஃபேன்சி, பஜ்ஜி மிளகாய், 'காந்தாரி’ன்ற மோர் மிளகாய்னு ஏகப்பட்ட ரகங்கள் என்கிட்ட இருக்கு. வாரம் ஒரு தடவை மிளகாய் பறிக்கிறேன்.
அதேமாதிரி, பொன்னாங்கண்ணி, சிவப்புக் கீரை, பச்சைக் கீரை, கொடிப்பசலி, ஆப்பிரிக்கன் கீரை... இப்படி நிறைய கீரை வகைகளும் இருக்கு. எங்க வீட்டுச் சாப்பாட்டுல தினமும் ஏதாவது ஒரு கீரை இருக்கும். வீட்டுத்தேவைக்குப் போக மீதியை பக்கத்து வீடுகளுக்கு வித்துடுவேன். கீரையில மட்டும் தினமும் அம்பது ரூபாய்க்குக் குறையாம கிடைக்கிது.
ஆறு மாசத்துக்கு முன்ன நட்டு வெச்ச அயர்ன் பீன்ஸ், இப்ப கொடி விட்டு மூணாவது மாடி வரைக்கும் போயிடுச்சு. இந்த பீன்ஸ், பாக்குறதுக்கு அரிவாள் மாதிரி இருக்கும். இதைப் பிஞ்சா இருக்குறப்பவேப் பறிச்சு சமைச்சுடணும். முத்திடுச்சுனா உபயோகப்படாது. நல்ல சுவையாவும் இருக்கும்.
மலைக்க வைக்கும் மலைப் பயிர்கள்!..
இதுபோக, சேம்பு, சேனை, முள்ளங்கி, சுரைக்காய், கூவைக்கிழங்கு, சோளம், சுண்டக்காய், வலுதலங்காய், சீனி அவரை, வெண்டை, கறிவேப்பிலை, அன்னாசி, சாம்பார் இலை, ரம்பை இலைனு எதுவுமே இல்லைனு சொல்ற அளவுக்கு அவ்வளவு காய்கறியும் இருக்குது. மலைப் பிரதேசத்துல விளையுற முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கேரட், பீட்ரூட் எல்லாம்கூட இங்க அருமையா விளையுது. அதனால வெளியில காய்கறி வாங்குறச் செலவே எனக்குக் கிடையாது.
என் பசங்க, மருமகள்கள், பேரப்பிள்ளைகள்னு அவ்வளவு பேரும் சேர்ந்துதான் தோட்ட வேலைகள் அத்தனையையும் செய்றோம். செலவில்லாம ஆரோக்கியமான உணவு கிடைக்கறதோட, எங்க எல்லாருக்கும் நூறு சதவிகிதம் மன நிறைவும் கிடைக்குதுங்கறது சத்தியமான உண்மை'’ என்று நெகிழ்ந்தார் ரஞ்சிதஜாய்.
இப்படித்தான் தோட்டம் போடணும்...
வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பாக ரஞ்சிதஜாய் தந்த சிறப்பு ஆலோசனைகள் இதோ...
'தொட்டிகளில்தான் செடிகளை வளர்க்க வேண்டும் என்பதில்லை. பழைய சாக்குகளிலும் வளர்க்கலாம். சாக்கின் அடிப் பகுதியில் ஒரு அடுக்கு கதம்பையைப் (தேங்காய் மட்டை) போட்டு, அதன் மேல் மட்கிய இலை தழைகளை ஒரு அடுக்குப் போட வேண்டும். மீதமுள்ள கொள்ளளவில் பாதியளவுக்கு செம்மண், மணல் கலந்தக் கலவையை இட்டு... ஒரு கிலோ தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம்பிண்ணாக்கு, அதே அளவு எலும்புத்தூள், கொஞ்சம் சுண்ணாம்புத்தூள் ஆகியவற்றை இட வேண்டும். பிறகு நமக்கு விருப்பமான செடிகளை நடவு செய்யலாம். கதம்பை போடுவதால், தண்ணீர் கீழே வடியாமல் இருப்பதோடு, மண்ணும் உறுதியாக இருக்கும்
அதிகளவில் கேந்திப்பூச்செடியை வளர்ப்பதன் மூலம் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்கலாம். தவிர, துளசி, புதினா, வசம்பு, செவ்வந்தி... போன்ற செடிகளும் பூச்சிகளின் வரவைத் தடுக்கின்றன. வசம்பின் வாசம் இருந்தால்... அந்தப் பக்கமே பாம்பு தலை வைக்காது.
தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகள் தண்ணீர் ஊற்ற வேண்டும். வாரம் ஒருமுறை, சிறிது பச்சை சாணம், சிறிது கடலைப் பிண்ணாக்கு, சிறிது வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைத் தண்ணீரில் கரைத்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் ஒரு கையளவு தொழுவுரம் இட வேண்டும். காய்ந்த இலை தழைகளை செடிகளில் மூடாக்காகப் பயன்படுத்தலாம். முட்டைக் கூடு, வெங்காயத் தொழி... என்று சமையலறைக் கழிவுகளையும் செடிகளுக்கு உரமாக இடலாம். தேவைப்பட்டால், வேப்பெண்ணெய், மஞ்சள்தூள் ஆகியவற்றை சோப்புக்கரைசலில் கலந்து பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment