Monday

தமிழர்களின் அளவீடுகளும் அதிநுட்ப அறிவாற்றலும்!


நாழி, குருணி, பதக்கு...
தமிழர்களின் அளவீடுகளும் அதிநுட்ப அறிவாற்றலும்!
ஆதிகாலத்திலிருந்தே தங்களுக்கென அளவீட்டு முறையைக் கண்டுபிடித்து, அதைப் பயன்படுத்தி வந்தவர்கள் தமிழர்கள். ஆங்கிலேயர்களின்  ஆக்கிரமிப்பு ஆரம்பமான பிறகு, அவர்களுடைய அளவீட்டு முறைகள் மெள்ள இங்கே புகுத்தப்பட்டதால்... பாரம்பரிய அளவீட்டு முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் இந்திய அரசாங்கமே, ஆங்கில அளவீட்டு முறைக்கு ஒட்டுமொத்தமாக சலாம் போட்டு சரண்டராகிவிட்ட நிலையில்... பாரம்பரிய அளவீட்டு முறைகள், சட்டப்பூர்வ அங்கீகாரத்தை இழந்துவிட்டன. ஆனாலும், கிராமப்புறங்கள் பலவற்றிலும், இன்னமும்கூட அவை புழக்கத்தில் இருக்கின்றன என்பது ஆச்சர்யமே!
ஆழமான அறிவின் அளவீடு !
தமிழர்களின் மரபு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து பல ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து வரும் பாமயன், அதைப் பற்றி பெருமை பொங்க நம்மிடம் பேசியபோது, ''முன்னோர்களின் அளவீட்டு முறைகள் ஆழமான அறிவை அடிப்படையாகக் கொண்டவை. நீட்டல் அளவை முறையில், விரக்கடை, அடி, குழி, மா, வேலி... உள்ளிட்ட கணக்கீடுகள் இருந்தன. எண்ணெய், மோர் போன்ற நீர்மப் பொருட்களையும், தானியங்களையும் அளக்கக்கூடிய 'முகத்தல்’ அளவை முறையில்... ஆழாக்கு, உழக்கு, படி, மரக்கால்... உள்ளிட்ட கணக்கீடுகள் புழக்கத்தில் இருந்தன. புளி, மிளகாய், விறகு மற்றும் சில வகை தானியங்களை எடை பார்க்கக்கூடிய நிறுத்தல் அளவையில், வீசை, சேர், தோலா போன்ற கணக்கீடுகள் புழக்கத்தில் இருந்தன.
பெரும்பாலும், அளவுகளைக் குறிக்கக்கூடிய பெயர்களே, கருவிகளின் பெயர்களாகவும், எடைக்கற்களின் பெயர்களாகவும் இருந்தன. பொருட்களை எடை பார்க்க... கூழாங்கற்கள், நெல்மணிகள், குன்றிமணி, தெள்ளுக்காய், களர்ச்சிக்காய் போன்றவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிற்பம் மற்றும் மர வேலைகளின்போது, அளவுகள் குறிக்க, செம்மண் தண்ணீர் நனைத்த நூலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். வட்டம் போட, மரக்குச்சியை இரண்டாகப் பிளந்து, மேற்புறத்தை நூலால் கட்டி, கவராயமாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்'' எனப் பட்டியலிட்டார்.
'சரி, இதுபோன்ற கருவிகள் மற்றும் அளவுகள் எல்லாம், இப்போதும் எப்படி பயன்படுத்தப்படுகின்றன?' என்பதற்காக சில விவசாயிகளைத் தேடிப்பிடித்துப் பேசினோம். அவர்களிடம் சேகரிக்கப்பட்ட பாரம்பரிய அளவீட்டுக் கருவிகள் மற்றும் முறைகள்... இங்கே இடம் பிடிக்கின்றன!
நாழி, குருணி, பதக்கு !
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மூத்தாக்குறிச்சியைச் சேர்ந்த முதியவர் ரெங்கசாமி, மலரும் நினைவுகளாக சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ''முன்னயெல்லாம்... 'தப்படி முறை’னு ஒண்ணு இருந்துச்சு. ஒரு ஆள், நிலத்துல நடந்து போயி, தன் காலடி கணக்குல அளக்கறதைத்தான் இப்படி சொல்வாங்க. நிலத்தை பாகம் பிரிக்கவும், விற்பனைக்கும் இந்த முறையைத்தான் பயன்படுத்தினாங்க. தானியங்களை அளக்க... நாழி, குருணி, பதக்கு, முக்குருணினு அளவீட்டுக் கருவிகள வெச்சுருப்போம். இதையெல்லாம் இப்போ இருக்குற தலைமுறை பார்த்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனா, இப்பவும் என்கிட்ட நாழி, குருணி எல்லாம் இருக்கு'' எனப் பெருமையோடு சொன்னவர், அவற்றைக் கொண்டு வந்து நம்மிடம் காட்டியவாறே தொடர்ந்தார்.  
''கால் மரக்கால் கொண்டது... ஒரு நாழி; ஒரு மரக்கால் கொண்டது... ஒரு குருணி; இரண்டு மரக்கால் கொண்டது... ஒரு பதக்கு; மூணு மரக்கால் கொண்டது... முக்குருணி. இப்படி இன்னும் நிறைய அளவுகள் உண்டு. இப்ப என்கிட்ட இருக்குற நாழியும், குருணியும் பல தலைமுறைகளைக் கண்டது. காய்கறி, புளி, மிளகாய் மாதிரியான பொருட்களை எடை போட 'தூக்கு'தான் பயன்படுத்துவோம். இப்போல்லாம் தூக்கு இருக்குதானே தெரியல' என்றார் ஏக்கத்தோடு!
இதோ தூக்கு !
'தூக்கு' என்கிற அளவுக் கருவி பற்றி ரெங்கசாமி சொன்னதும்... 'அது எப்படி இருக்கும்?' என்கிற ஆவல் நம்மிடம் பற்றிக் கொண்டது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க ஆரம்பித்தோம். பல கிராமங்களிலும் புகுந்து புறப்பட்ட நமக்கு... சோர்வே மிஞ்சியது. கடைசியாக... தஞ்சாவூர் மாவட்டம், சூழியக்கோட்டையைச் சேர்ந்த பழனிவேல், ''தூக்குதானே...!'' என்று நம்பிக்கையூட்டியவர்,
''ஒரு காலத்துல எங்க ஊருல தூக்கு செஞ்சு கொடுத்த ஆசாரிங்க, இப்பவும் இருக்காங்க. அதுக்குத் தேவை இல்லாம போனதால, செய்றத நிறுத்திட்டாங்க. அவங்கக்கிட்ட சொன்னா, புதுசாவே செஞ்சு கொடுப்பாங்க...'' என்று சொன்னதோடு... அடுத்த நாளே ஒரு தூக்கு தயார் செய்து எடுத்து வந்தார்.
பூவரசு மரத்தில் செய்யப்பட்ட வளவளப்பான நீளமான உருளைக் கட்டையில், ஒரு முனையில் மட்டும் முக்கால் அடி விட்டத்தில் ஒரு மூங்கில் தட்டு தொங்க விடப்பட்டிருந்தது. அளவீட்டுக்காக அதில் சிறிய பள்ளங்கள் பறிக்கப்பட்டு அந்த உருளைக் கட்டை ஒரு கயிற்றில் இணைக்கப்பட்டிருந்தது.
'எடை போடறவரோட இடது கை பக்கத்துல மூங்கில் தட்டு இருக்கும். தட்டுல பொருளை வெச்சு கயிறால் ஆன கைப்புடியைக் கொஞ்சம் கொஞ்சமா நகத்திக்கிட்டே வரணும். ஒரு கட்டத்துல உருளை சமமா படுக்கை வசத்துக்கு வரும். அப்போ, கைப்புடி எந்த கோட்டுல இருக்கோ... அதை வெச்சு ஒரு தூக்கு, ரெண்டு தூக்குனு கணக்கு சொல்லுவாங்க'' என்ற பழனிவேல்... புளியை அதில் எடை போட்டுக் காட்டினார்.  
படி, பக்கா, மரக்கால் !
தானியங்களை அளப்பதற்கு கிலோ, குவிண்டால், டன் என ஆங்கிலேயே அளவீடுகள் வழக்கத்துக்கு வந்துவிட்டாலும்... பாரம்பரியம்மிக்க படி, பக்கா, மரக்கால் போன்றவைதான் இன்னமும் பெரும்பாலான வீடுகளில் அளந்து கொண்டிருக்கின்றன. 'அக்கா ஒரு படி அரிசி கொடுங்க...', 'ஏண்டி, இட்லிக்கு அரைக்கறதுக்கு மூணு படி அரிசி போடலாம்னு இருக்கேன். எத்தனை படி உளுந்து சேர்க்கணும்டி' இப்படி பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் படி, மரக்கால் குறித்துப் பேசிய திருவாரூர் மாவட்டம், வீரமாங்குடி, சாவித்திரி,
''2 படி கொண்டது, ஒரு பக்கா. 4 படி கொண்டது, ஒரு மரக்கால். 6 மரக்கால் கொண்டது, ஒரு பறை.2 பறை கொண்டது, 1 கலம். 2 கலம் கொண்டது, 1 மூட்டை. 60 மரக்கால் கொண்டது, ஒரு உறை. நெல், தானியங்களை அளந்து போடும்போது, பத்தாவது மரக்கால் போட்டதும், அதை ஒரு 'ஓக்கு’னு கணக்கு வெச்சுக்குவாங்க'' என்று பாரம்பரியக் கணக்கை பக்காவாகச் சொன்னார்!
காணி, அரைக்காணி, முந்திரி !
நிறைவாக கல்வெட்டு மற்றும் வரலாற்று ஆய்வாளரான 'குடவாயில்’ பாலசுப்ரமணியனிடம், இதைப் பற்றி பேசியபோது, ''பின்ன எண்களைக் கொண்ட கீழ் கணக்கு முறையில் கால், அரை, முக்கால், நாலு மா, மும்மா முக்காணி, மும்மா, அரைக்கால், இருமா, மாகாணி, ஒரு மா, முக்காணி, அரை மா, காணி, அரைக்காணி, முந்திரி... என நுட்பமாகப் பகுத்துப் பிரிக்கும் கணக்கீடுகளை முற்கால தமிழர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
'கால்’ 'அரைக்கால்’ போன்றவை நமக்குத் தெரியும். ஒரு பகுதியை 320 பாகங்களாகப் பிரிக்கும்போது, அதில் ஒரு பாகம்தான் 'முந்திரி’. இதுபோல இன்னுமும் பல நுட்பமானக் கணக்கீடுகள் இருந்திருக்கின்றன. ஆனால், கால ஓட்டத்தில், அவற்றின் பயன்களை அறியாமல், நாம்தான் கைவிட்டுவிட்டோம்'' என்று ஆதங்கப்பட்டவர்,
''பாரம்பரியம் என்பதற்காக மட்டுமல்லாமல்... 'அதிநுட்பமான அறிவாற்றல் மிக்கவை’ என்கிற அடிப்படையிலும், போற்றப்பட வேண்டியவைதான், தமிழர்களின் இந்த அளவீட்டு முறைகள் மற்றும் கருவிகள்'' என்று சொன்னார்!
உண்மைதானே!

ஒரு குழி...
நிலங்களின் அளவைக் குறிக்க, சென்ட், ஏக்கர் அளவுகள் தற்போது வழக்கத்தில் உள்ளன. ஆனாலும், ஒவ்வொரு பகுதியிலும் வட்டார வழக்கில் ஒவ்வொரு அளவு வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, 'ஒரு குழி’ என்பது, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி (காவிரிப் பாசனப் பகுதிகளில்) ஆகிய மாவட்டங்களில் 144 சதுர அடி நிலத்தையும்; மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் 60 சென்ட் நிலத்தையும்; சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில்
8 சென்ட் நிலத்தையும்; கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 576 சதுர அடி நிலத்தையும் குறிக்கிறது. கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் 16 சென்ட் அளவை 'ஒரு வல்லம்’ என்கிறார்கள். திருநெல்வேலி, ராமநாதபுரம் பகுதிகளில் 8 சென்ட் பரப்பு கொண்ட நிலத்தை 'ஒரு குருணி’ என்கிறார்கள்.
கு. ராமகிருஷ்ணன்
படங்கள்: கே. குணசீலன், பா. காளிமுத்து, எஸ். சிவபாலன்
Source:pasumaivikatan


1 comment:

Unknown said...

Antha thokku photo poturuntha nallarunthurukum...nangalum patha Mari irukum.