மகத்தான லாபம் கொடுக்கும் மலர்கள்
இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
விவசாயத்தில் ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம், தினசரி
வருமானம் எனக் கிடைக்குமாறு பிரித்துக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டும்
என்று விவசாய வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இப்படி
வருமானம் தரும் பயிர்களில் காய்கறிகள், கீரைகள், பூக்கள் போன்றவை தினசரி
வருமானத்துக்கு ஏற்ற பயிர்களாக இருந்தாலும், அவற்றில் முதலிடம் வகிப்பவை
பூக்கள்தான்!
பூ சாகுபடியில் பெரிய தேவையே… வேலையாட்கள்தான். ஆனால், இன்றைக்கு வேலை
ஆட்கள் கிடைப்பது பிரச்னையாக இருக்கும் நிலையிலும், அதைச் சமாளித்து
வெற்றிகரமாக வருமானம் ஈட்டி வருகிறார்கள் பூ விவசாயிகள். அந்த வகையில்
பெண்களுக்கு அழகு சேர்க்கும் ‘குண்டுமல்லி’யையும், பூ மாலைகளுக்கு அழகு
சேர்க்கும் ‘செண்டுமல்லி’யையும் இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல
மகசூல் எடுத்து வருகிறார், இயற்கை விவசாயி பாஸ்கர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் கிராமத்தில் இருக்கிறது, பாஸ்கரின்
பூந்தோட்டம். மல்லிகைப் பூக்களை சாக்குப்பையில் கொட்டி தண்ணீர் தெளித்துக்
கொண்டிருந்த பாஸ்கரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ”நான் டிப்ளமோ மெக்கானிக்கல்
இஞ்ஜினீயரிங் படிச்சிருக்கேன். பூர்வீகமாகவே விவசாயக் குடும்பம்.
காய்கறிகள், பருத்தி, கடலைனு பட்டம் பாத்து விதைப்போம். படிக்கும்போதே லீவு
நாள் முழுக்க முழுக்க தோட்டத்துலதான் வேலை. பாலிடெக்னிக் முடிச்ச அடுத்த
வருஷமே அப்பா விபத்துல காலமாயிட்டாங்க. குடும்பத்துல நான் ஒரே
பையன்தாங்குறதுனால விவசாயத்தைத் தொடர வேண்டியதாகிடுச்சு. விவசாயத்துல
முழுமையா இறங்கி 15 வருஷம் ஆகுது’ என்று முன்னுரை கொடுத்த பாஸ்கர்,
தொடர்ந்தார்.
‘சுத்துபட்டு கிராமங்கள்ல எல்லாருமே சொல்லி வெச்ச மாதிரி காய்கறிகள்,
கடலையைத்தான் போடுவாங்க. அதுக்கு அடிக்கடி விலை கிடைக்காம போயிடும். அதனால,
வெள்ளாமையை மாத்துவோம்னுதான் பூ சாகுபடியில இறங்கினேன். எங்க பகுதியில பூ
சாகுபடி அதிகம் கிடையாது. அரை ஏக்கர்ல குண்டுமல்லி, அரை ஏக்கர்ல
கோழிக்கொண்டை, அரை ஏக்கர்ல செண்டுமல்லினு சாகுபடி செய்தேன். அடியுரமா
தொழுவுரம் கொடுத்துட்டு ரசாயன உரம் போட்டுத்தான் விவசாயம் செஞ்சேன். ஆனா,
அதுல கணக்குப் பாக்கிறப்போ, ரசாயன உரத்துக்கும், பூச்சிக்கொல்லிக்கும்
மட்டுமே அதிக செலவு ஆயிக்கிட்டிருந்துச்சு. எப்படியோ சமாளிச்சுதான்
விவசாயம் பண்ணிட்டு இருந்தேன்.
மூணு வருஷத்துக்கு முன்ன சொட்டு நீர் அமைக்கலாம்னு முடிவு பண்ணுனேன்.
அதுக்காக, யோசனைகள் கேக்கலாம்னு முக்கூடலைச் சேர்ந்த இயற்கை விவசாயி
சுப்பிரமணியனைச் சந்திச்சேன். அவர், தோட்டத்துக்கு வந்து பூக்களைப்
பாத்துட்டு, ‘பூக்கள் சுருங்கிப் போயி இருக்கே, ரசாயனம் உரம்
பயன்படுத்துறீங்களா?’னு கேட்டார். ‘ஆமா, பூச்சித்தாக்குதலும் அதிகமா
இருக்கு. இதைக் கட்டுப்படுத்த வேற ஏதும் மருந்து இருக்கா’னு கேட்டேன்.
அவர்தான் இயற்கைப் பூச்சிவிரட்டி பத்தியும் ரசாயன உரத்துக்கு மாற்றா
ஜீவாமிர்தம் பத்தியும் சொன்னார்.
உடனே ஜீவாமிர்தம் தயாரிக்க ஆரம்பிச்சிட்டேன். அவர் சொன்ன மாதிரி
ஜீவாமிர்தம் தெளிச்ச அஞ்சு நாள்லயே மாற்றம் தெரிஞ்சது. பூக்கள் தரமாவும்,
வெளிர் நிறமாகவும், காம்புகள் நீளமாவும் பூக்க ஆரம்பிச்சது. அப்போதான்
எனக்கு ரசாயன முறைக்கும் இயற்கை முறைக்குமான வித்தியாசம் தெரிஞ்சது.
உடனடியா, ‘இனி ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்தவே
கூடாது’னு முடிவெடுத்துட்டேன். மூணு வருஷமா இயற்கை விவசாயம்தான்’ என்ற
பாஸ்கர்,
’80 சென்ட்ல குண்டுமல்லி இருக்கு. ஒரு ஏக்கர்ல செண்டுமல்லி இருக்கு.
செண்டுமல்லி 90 நாள் பயிர். ஆனா அதுவும் வருஷம் முழுக்க கிடைக்கிற மாதிரி
சுழற்சி முறையில பண்ணிட்டு இருக்கேன். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகள்,
முக்கியப் பண்டிகைகள், விசேஷ தினங்கள்ல ஒரு கிலோ மல்லி 500 ரூபாய்க்கு மேல
விற்பனையாகும். கல்யாண முகூர்த்த நேரங்கள்ல கிலோ ஆயிரம் ரூபாய் வரைகூட விலை
போகும். அதனால மல்லியில நஷ்டம்ங்கிற பேச்சுக்கே இடமில்லை. அதேமாதிரி,
செண்டுமல்லி இல்லாத கதம்பமோ, பூமாலையோ இருக்காது. அதனால அதுக்கும் எப்பவும்
தேவை இருக்கு. இந்த ரெண்டு பூக்களையும் இயற்கை முறையில சாகுபடி செஞ்சா
போதும். விவசாயத்துல வருமானம் இல்லைங்கிற பேச்சே இருக்காது” என்று சந்தோஷம்
பொங்கச் சொன்னார்.
செண்டுமல்லி சாகுபடி!
‘மல்லியைப் போலவே செண்டுமல்லிக்கும் நிலத்தைத் தயார் செய்யவேண்டும்.
கடைசி உழவின்போது ஏக்கருக்கு 5 டிராக்டர் தொழுவுரத்தை இறைத்து உழவுசெய்து 5
நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, பார் பாத்தி பிடித்து, செடிக்குச் செடி
ஒன்றரை அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை 2 அடி இடைவெளியில் நாற்றுகளை ஈர நடவு
செய்ய வேண்டும். நடவு செய்தவுடன் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை சொட்டுநீர்
மூலமாகக் கொடுக்க வேண்டும். 40ம் நாளில் இருந்து பூக்கள் பூக்கும்.
அதிலிருந்து 3 நாட்களுக்கு ஒரு பறிப்பு வீதம் சராசரியாக 15 பறிப்புகள்
பறிக்கலாம். நடவு செய்த 90ம் நாள் வரை பூக்கள் கிடைக்கும். ஒரு பறிப்புக்கு
150 முதல் 200 கிலோ வரை கிடைக்கும்.’
தண்டுத்துளைப்பானுக்கு வேப்பங்கொட்டைக் கரைசல்!
பூக்களின் காம்பு சுருங்கிய நிலையிலும், பூக்கள் சிவப்பு நிறமாகவும்,
காய்ந்தும், காம்புகளில் துளையும் தெரிந்தால் தண்டுத்துளைப்பானின்
தாக்குதல் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 10 கிலோ வேப்பங்கொட்டையை
இடித்து, 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் ஒருவாரம் ஊற வைத்து… அதில் 300
மில்லி கரைசலை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் தண்டுத்துளைப்பான்
கட்டுப்படும்.
இயற்கை மகத்துவம்!
‘ரசாயன முறையில மல்லி சாகுபடி செஞ்சா மல்லியோட ஆயுள் 7 முதல் 8
வருஷம்தான். ஆனா, இயற்கை முறையில சாகுபடி செய்தா மல்லி 15 வருஷம் வரை
மகசூல் கொடுக்கும்னு சொல்றாங்க. ரசாயன முறையில விளைஞ்ச மல்லி, பறிச்ச 5 மணி
நேரத்துக்குள் மலர்ந்துடும். மலர்ந்துட்டா விலை போகாது. ஆனா, இயற்கை
முறையில விளையுற மல்லிக்கு காம்பு நீளமா இருக்கிறதோட, 8 மணி நேரம் வரை
மலராம வாசனை குறையாம இருக்கும். அதனாலேயே இயற்கை முறை பூக்களுக்கு
சந்தையில் வரவேற்பு அதிகம்’ என்கிறார், பாஸ்கர்
ஆண்டுக்கு ஒரு முறை அடியுரம்!
ஒரு ஏக்கருக்கு… ஒரு டன் தொழுவுரம், 70 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 30 கிலோ
வேப்பம் பிண்ணாக்கு, 50 கிலோ அசோஸ்பைரில்லம் நான்கையும் கலந்து ஒரு வாரம்
வைத்திருந்து… இக்கலவை உரத்தை ஆண்டுக்கு ஒரு முறை செடிக்கு
3 கிலோ வீதம் அடியுரமாக வைக்க வேண்டும். அப்போதுதான் செடிகளின் வளர்ச்சி
சீராக இருக்கும். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால், களைகள் மண்டாது.
செண்டுமல்லி நாற்று… கவனம்!
10 அடிக்கு 8 அடி பாத்தி அமைத்து, அதில் 3 அங்குல இடைவெளியில் வரிசையாக
குச்சி மூலமாக கோடு போட்டு விதையைத் தூவி லேசாக மண் போட்டு மூட வேண்டும்.
விதை தூவிய 4ம் நாள் முளைப்பு தெரியும். 18 முதல் 22 நாட்களுக்குள்
நாற்றைப் பறித்து நிலத்தில் நடவு செய்ய வேண்டும். 22 நாட்களுக்கு
மேலாகிவிட்டால், பூக்கும் பருவத்துக்கு வந்துவிடும். அதன் பிறகு செடி
வளராமல் போய்விடும்!
செண்டுமல்லி காலையில், குண்டுமல்லி மாலையில்!
”நான் திருநெல்வேலி டவுன், பூ சந்தையிலதான் விற்பனை செய்றேன்.
செண்டுமல்லியை அதிகாலையில பறிச்சு 10 மணிக்குள்ளேயும், மல்லியை மாலையிலும்
விற்பனைக்கு அனுப்புறேன். 90 நாள்ல 2 ஆயிரத்து 250 கிலோ வரை செண்டுமல்லி
கிடைக்குது. சராசரியா கிலோ 50 ரூபாய்னு 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய்
கிடைக்கும். இதில் 35 ஆயிரம் ருபாய் செலவு போக, 77 ஆயிரத்து 500 ரூபாய்
லாபமாகக் கிடைக்கும்.
குண்டுமல்லியில தினமும் 15 கிலோவுல இருந்து 20 கிலோ வரை மகசூல்
கிடைக்குது. குறைந்தபட்சம் 15 கிலோனு வெச்சுக்கிட்டா, மாசம் 450 கிலோ
கிடைக்கும். சராசரியா கிலோ 120 ரூபாய்னு கணக்கு வெச்சுக்கிட்டா, 450 கிலோ
மல்லி மூலமா 54 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, செலவு 20 ஆயிரம்
ரூபாய் போக மாசத்துக்கு 34 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்’ என்கிறார்,
பாஸ்கர்.
சீரான வளர்ச்சி கொடுக்கும் கார்த்திகைப் பட்டம்!
குண்டுமல்லி, செண்டுமல்லி ஆகியவற்றை சாகுபடி செய்யும் விதம் பற்றி பாஸ்கர் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…
‘மணல் கலந்த வண்டல் மண் நிலம் பூ சாகுபடிக்கு ஏற்றது. குண்டுமல்லி நடவு
செய்ய கார்த்திகைப் பட்டம் சிறந்தது. இந்தப் பட்டத்தில் மழை பெய்வதால்
அடுத்த இரண்டு மாதங்கள் வரையிலும் தண்ணீர் இல்லாமல்கூட செடிகள் வளரும்.
இந்தப் பட்டத்தில் செடிகளின் வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.
தேர்வு செய்த நிலத்தை புரட்டாசி மாதம் ஐந்து கலப்பையால் உழவு செய்து,
பத்து நாட்கள் காயவிட வேண்டும். பத்து நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து
மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, வாய்க்கால்களை அமைத்துக்
கொண்டு 5 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழம் ஒரு அடி விட்டம் என்ற அளவில்
குழி எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு குழியிலும் தலா 200 கிராம் தொழுவுரம், வேப்பம் பிண்ணாக்கு,
கடலைப்பிண்ணாக்கு ஆகியவற்றை இட்டு 7 நாட்கள் ஆறவிட்டு, மூன்று மாத வயதுடைய
மல்லிகைச் செடிகளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள்,
இரண்டாவது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் இருமுறை தண்ணீர்
விட்டால் போதுமானது.
நடவு செய்த 60ம் நாளில் பூக்கள் தென்படும். பூக்கத் தொடங்கி ஓர் ஆண்டு
வரை தினம் அரை கிலோ அளவு பூக்கள் கிடைக்கும். 2ம் ஆண்டில் தினம் 3 முதல் 5
கிலோ வரை பூக்கள் கிடைக்கும். 3ம் ஆண்டில் தினம் 8 முதல் 12 கிலோ வரை
பூக்கள் கிடைக்கும். அதற்குப் பிறகு மகசூல் அதிகரிக்கத் தொடங்கி தினமும் 15
முதல் 20 கிலோ வரை பூக்கள் கிடைக்கும்.’
Source: pasumaivikatan
No comments:
Post a Comment