தொடக்கத்தில் முதலீடு செய்ய ஓரளவு பணம், கொஞ்சம் இடம், நாமே களத்தில் இறங்கி உழைப்பதற்கான மனம் இருந்தால் வெண்பன்றி வளர்ப்பில் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுவதற்கான பெரும் வாய்ப்பு நம் முன்னே உள்ளது.
வெண்பன்றி இறைச்சிக்கான தேவை மிகவும் அதிகமாகவும் அதன் உற்பத்தி மிகவும் குறைவாகவும் இருப்பதால் விற்பனை என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்றும், அதிக லாபம் கிடைப்பதாகவும் வெண்பன்றி உற்பத்தியாளர்கள் பலர் கூறுகின்றனர்.
"மற்ற எந்த கால்நடைகளை விடவும் வெண்பன்றி வளர்ப்பு அதிக லாபம் தரக் கூடியது" என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பா.டென்சிங் ஞானராஜ்.

"கேரளம் உள்பட மற்ற மாநிலங்களில் வெண்பன்றி இறைச்சி உண்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், உற்பத்தியோ மிகவும் குறைவாக உள்ளது. அதனால் இறைச்சிக்கான வெண்பன்றி பண்ணை, இனப்பெருக்கத்துக்கான வெண்பன்றி பண்ணை ஆகிய இரண்டு வகை பண்ணைகளில் எந்த பண்ணையைத் தொடங்கினாலும் அதிக லாபம் பெறலாம்" என்கிறார் அவர்.
"இனப்பெருக்க பன்றி பண்ணையை 25 பெண் குட்டிகள், 3 ஆண் குட்டிகளுடன் தொடங்கலாம். ஒரு மாத வயதைக் கடந்த, 15 கிலோவுக்கும் மேல் எடையுள்ள குட்டிகளை வாங்க வேண்டும். ஒரு குட்டி ரூ.3 ஆயிரம் என்ற விலையில் கிடைக்கிறது. 10 மாதத்தில் அவை இனப்பெருக்க வயதை எட்டும். அதன் பிறகு கருவுற்றதிலிருந்து 114 நாள்களில் குட்டிகளை ஈனும். ஒரு தடவைக்கு குறைந்தது 8 குட்டிகளும், ஆண்டுக்கு குறைந்தது 16 குட்டிகளும் ஒரு தாய்ப் பன்றியிடமிருந்து கிடைக்கும்.
தொடக்கத்தில் குட்டிகள் வாங்கும் செலவு தவிர, கொட்டகை செலவு, தீவனச் செலவு, மருத்துவ செலவு என முதல் 2 வருடத்தில் சுமார் ரூ.8 லட்சம்வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் 2 வருடம் முடியும் நிலையில் நம் பண்ணையில் வளர்த்த பன்றிகளை ரூ.16 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யலாம். இதனால் 2 ஆண்டுகளில் ரூ.8 லட்சம் வரை நிகர லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது.
இறைச்சிக்கான பன்றி வளர்ப்பு பண்ணை எனில் கொட்டகைக்காக ரூ.3 லட்சம் செலவு செய்ய வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் குட்டிகள் வாங்க, தீவனம், மருத்துவச் செலவு போன்றவற்றுக்காக சுமார் ரூ.4 லட்சம் செலவு செய்தாக வேண்டும். 8 மாதங்களுக்குள் குட்டிகள் விற்பனைக்கு வந்து விடும். அப்போது ரூ.1 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது" என்கிறார் அவர்.
இனப்பெருக்க பன்றி வளர்ப்புப் பண்ணையில் உள்ள குட்டிகளுக்கு கண்டிப்பாக அடர் தீவனம் மட்டுமே கொடுத்து வளர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இறைச்சிக்கான பன்றி எனில் ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், மாணவர் விடுதிகளில் கிடைக்கும் உணவுக் கழிவுகள், இலைகளை சேகரித்து கொடுக்கலாம். பண்ணையிலிருந்து 15 கி.மீ. சுற்றளவுக்குள் அவ்வாறு தினமும் உணவுக் கழிவுகள் நிச்சயம் கிடைக்கும் என்றால் மட்டுமே இறைச்சிப் பன்றி பண்ணையில் லாபம் ஈட்டலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சென்னை மேடவாக்கம் – கவுரிவாக்கம் இடையேயுள்ள வேங்கைவாசலில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் வெண்பன்றி வளர்ப்பு பண்ணை ஒன்றின் மேலாளராக உள்ளார் எஸ்.ராஜகோபால். 12 குட்டிகளுடன் தொடங்கப்பட்ட பண்ணை இன்று 300 வெண்பன்றிகளை பராமரிக்கும் இடமாக வளர்ந்துள்ளதாகவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் வெண்பன்றி இறைச்சியை பதப்படுத்தி ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு விநியோகம் செய்வதாகவும் ராஜகோபால் கூறுகிறார்.
"தொடக்கத்தில் 15 அல்லது 20 குட்டிகளுடன் சிறிய அளவில் பண்ணையைத் தொடங்குவதே சிறந்தது. முதல் இரண்டு ஆண்டுகளில் லாபத்தை எதிர்பார்க்கக் கூடாது. அப்போது தேவையான செலவுகளை செய்தே ஆக வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லாபம் கிடைக்கத் தொடங்கும். திட்டமிட்டு சரியாக செயல்பட்டால் மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் லாபம் ஈட்டலாம்" என விவசாயிகளுக்கான தனது ஆலோசனையாக ராஜகோபால் கூறுகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 2 பண்ணைகளை வைத்திருக்கும் வி.ராஜேந்திரனிடம் 500 பன்றிகள் உள்ளன. இது தவிர பண்ணைகளுக்கே நேரில் சென்று வெண்பன்றிகளை கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரியாகவும் இவர் திகழ்கிறார். "தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களின் பல பகுதிகளிலிருந்து வெண்பன்றிகளை கொள்முதல் செய்து கேரள மாநிலத்துக்கு அனுப்பி வருகிறேன். இவ்வாறு ஒரு மாதத்துக்கு 100 டன் அளவுக்கு வெண்பன்றிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறேன். தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் பண்ணை இருந்தாலும் நேரில் சென்று கொள்முதல் செய்ய தயாராக உள்ளேன்" என்கிறார் ராஜேந்திரன்.
சென்னை அருகே படப்பையில் வெண்பன்றி வளர்ப்பு பண்ணை வைத்துள்ள காமேஷ் – கற்பகம் தம்பதியினர் குடும்பமாக சேர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். "சொந்த உழைப்பை செலுத்த தயாராக இருந்தால் இந்தத் தொழிலில் நம் குடும்பம் முன்னேறுவதோடு, மேலும் ஐந்தாறு குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பையும் நம்மால் கொடுக்க முடியும்" என்கின்றனர்.
பண்ணை தொடங்கும் முன்னர் ஏற்கெனவே பண்ணை நடத்தி வருபவர்களையும், சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களையும் அணுகி அவர்களின் அனுபவங்களை நேரில் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
மேலும் விவரங்கள் அறிய 94455 64121 என்ற செல்போன் எண்ணில் பேராசிரியர் பா.டென்சிங் ஞானராஜ், 90922 95050 என்ற எண்ணில் எஸ்.ராஜகோபால், 96267 51220 என்ற எண்ணில் ஒட்டன்சத்திரம் ராஜேந்திரன் மற்றும் 96000 46519 என்ற எண்ணில் காமேஷ் – கற்பகம் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
devadasan.v@thehindutamil.co.in

source:tamil.thehindu.com