Saturday

'குறைந்த நாட்களில், அதிக மகசூல்’ என்பதுதான் வீரிய ஒட்டு ரக நெல் விதைகளுக்குச் சொல்லப்படும் தாரக மந்திரம். ஆனால், அதைச் சாகுபடி செய்வதற்குள் மூட்டைக் கணக்கில் ரசாயன உரங்களையும்... லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் அள்ளி இறைக்க வேண்டியிருக்கும். அதேசமயம், இவ்வளவெல்லாம் பாடுபடாமல், இயற்கை முறையிலேயே வீரிய ரகங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், குறைந்த நாட்களிலேயே மகசூல் கொடுக்கக் கூடிய பாரம்பரிய விதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.


1 ஏக்கர்... 3 மாதம்... 20,000...
குறைவில்லாமல் லாபம் கொடுக்கும் குள்ளங்கார் நெல்...
'குறைந்த நாட்களில், அதிக மகசூல்’ என்பதுதான் வீரிய ஒட்டு ரக நெல் விதைகளுக்குச் சொல்லப்படும் தாரக மந்திரம். ஆனால், அதைச் சாகுபடி செய்வதற்குள் மூட்டைக் கணக்கில் ரசாயன உரங்களையும்... லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் அள்ளி இறைக்க வேண்டியிருக்கும். அதேசமயம், இவ்வளவெல்லாம் பாடுபடாமல், இயற்கை முறையிலேயே வீரிய ரகங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், குறைந்த நாட்களிலேயே மகசூல் கொடுக்கக் கூடிய பாரம்பரிய விதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அதுபோன்ற பாரம்பரிய ரகங்களைத் தேடிப்பிடித்து சாகுபடி செய்துவரும் இயற்கை விவசாயிகளில் ஒருவர்... காஞ்சிபுரம் மாவட்டம், கட்டியாம்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் குள்ளங்கார் ரக நெல்லைச் சாகுபடி செய்து வருகிறார்.
பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கை!
காலைப் பொழுதொன்றில் ரவிச்சந்திரனை சந்தித்தோம். ''விவசாயக் குடும்பத்துல பிறந்ததால, சின்னவயசுல இருந்தே எனக்கு விவசாயம் பரிச்சயமானதுதான். ஆனா, அப்போல்லாம் விவசாயத்துல பெருசா வருமானம் கிடைக்கல. அதனால... 81ம் வருஷம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துல டிரைவரா சேர்ந்துட்டேன். அப்படியே போய்கிட்டிருந்தப்பதான் நாலு வருஷத்துக்கு முன்ன எதேச்சையா 'பசுமை விகடன்’ புத்தகத்தைப் பார்த்தேன். தொடர்ந்து படிக்க ஆரம்பிச்ச பிறகுதான்... திரும்பவும் விவசாயத்து மேல நம்பிக்கை வந்துச்சு. உடனே, தரிசா கிடந்த என்னோட நிலத்தைச் சுத்தப்படுத்தி விவசாயத்தை ஆரம்பிச்சேன்.
என்னோட நிலம் களிமண், மணல் கலந்த இருமண்பாங்கானது. கிணத்துப் பாசனமும் இருக்கு. அதனால 'பசுமை விகடன்’ புத்தகத்துல அனுபவ விவசாயிகள் சொல்லிக் கொடுக்குற சாகுபடி பாடங்களைக் கத்துக்கிட்டு... நிலக்கடலை, உளுந்து, முருங்கை, நெல்னு இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். அப்புறம் திருவண்ணாமலையில் நடந்த 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன். இப்ப ஒரு ஏக்கராவுல குள்ளங்கார் நெல் போட்டு அறுவடை செய்திருக்கேன். இந்த நெல்லை, நேரடி விதைப்புக்கருவி மூலமாத்தான் விதைச்சேன். குள்ளங்கார் ரகம்... நல்ல மகசூல் கொடுக்கக்கூடிய ரகம். இட்லி, தோசை... செய்யுறதுக்கு ஏத்த ரகம்'' என்று முன்னுரை கொடுத்த ரவிச்சந்திரன், ஒரு ஏக்கருக்கான சாகுபடி முறையைப் பாடமாகவே சொல்ல ஆரம்பித்தார்.
நேரடி விதைப்பில் கூடுதல் மகசூல்!
'குள்ளங்கார் நெல் ரகத்துக்கு வயது 90 நாட்கள். கார்த்திகை, மார்கழி பட்டங்கள் ஏற்றவை. நடவு மற்றும் நேரடி விதைப்பு என்று இரண்டு முறைகளுக்குமே ஏற்ற ரகம். எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. நாற்றுப்பாவி நடவு செய்ய வேண்டுமென்றால், ஏக்கருக்கு 25 கிலோ விதைநெல் தேவைப்படும். நேரடி விதைப்புக்கு 9 கிலோ போதுமானது. நேரடி விதைப்பில் அதிக தூர்கள் பிடித்து, கூடுதல் மகசூல் கிடைக்கும்.  
விதைநேர்த்திக்கு பீஜாமிர்தம்!
பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ கல் உப்பைக் கரைத்து, அதில் 10 கிலோ விதைநெல்லைக் கொட்ட வேண்டும். மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு, மூழ்கிய நெல்லை மட்டும் எடுத்து தண்ணீரில் அலசி, அதிலிருந்து 9 கிலோ நெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, பீஜாமிர்தத்தில் (பார்க்க, பெட்டிச் செய்தி) இரண்டு மணி நேரம் ஊற வைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். அடுத்து, சணல் சாக்கில் நெல்லைக் கொட்டி, அதை மூட்டையாக் கட்டி, 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து, 24 மணி நேரம் இருட்டில் வைத்திருந்து, பிறகு விதைக்க வேண்டும்.
அடியுரத்துக்கு கன ஜீவாமிர்தம்!
நிலத்தை நான்கு சால் சேற்று உழவு செய்து, 300 கிலோ மட்கிய தொழுவுரம், 100 கிலோ கன ஜீவாமிர்தம் (பார்க்க, பெட்டிச் செய்தி) ஆகியவற்றைக் கலந்து நிலத்தில் பரப்பி வயலைப் பரம்படிக்க வேண்டும். பிறகு, வயலில் காலை அல்லது மாலை நேரத்தில் ஓர் அங்குல உயரத்துக்குத் தண்ணீர் நிறுத்தி, நேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் விதைக்க வேண்டும். அதில் முக்கால் அடி இடைவெளியில் நான்கைந்து விதைகள் விதைக்கப்படும்.  
மழை... கவனம்!
விதைத்த பிறகு, வயலில் இருந்து தண்ணீரை வடித்துவிட வேண்டும். விதைத்த தினத்தன்று மழை பெய்யும் என்று எதிர்பார்த்தால், தண்ணீரை வடிக்கக் கூடாது. மழை நின்ற பிறகுதான் வடிக்க வேண்டும். இல்லாவிடில், மழையால் விதைகள் புரண்டு விடும். தொடர்ந்து 3, 5 மற்றும் 7-ம் நாட்களில் தண்ணீர் கட்டி, ஒரு மணி நேரம் வைத்திருந்து வடித்துவிட வேண்டும். 11-ம் நாள் வயலில் ஓர் அங்குல உயரத்துக்குத் தண்ணீர் கட்டி, 25 கிலோ கன ஜீவாமிர்தத்தை வயல் முழுவதும் தூவ வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
10 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம்!
பத்து நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இதேபோல பத்து நாட்களுக்கு ஒரு முறை 60 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து வயல் முழுக்கத் தெளித்துவிட வேண்டும். விதைத்த 20 மற்றும் 35-ம் நாட்களில் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்திவிட வேண்டும். இதனால் பயிரின் பக்க வேர்கள் அறுபட்டு, அதிக தூர்கள் பிடிக்கும்.
பூச்சிகளுக்கு அஸ்திரங்கள்!
இலைப்பேன், வெட்டுக்கிளி, புகையான், வைரஸ் தாக்குதல் ஆகியவை இருந்தால்... 60 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பிரம்மாஸ்திரத்தைக் (பார்க்க, பெட்டிச் செய்தி) கலந்து தெளிக்க வேண்டும். ஒருவேளை இதற்குக் கட்டுப்படாவிட்டால், 60 லிட்டர் தண்ணீரில் 1,200 மில்லி அக்னி அஸ்திரத்தைக் (பார்க்க, பெட்டிச் செய்தி) கலந்து தெளிக்கலாம். இவை தவிர, வயலில் வேறு எந்த வேலையும் பார்க்கத் தேவையில்லை. வேறு ஊட்டங்களும் அளிக்கத் தேவையில்லை. 60 நாளில் கதிர் பிடித்து.... 80-ம் நாளுக்கு மேல் முற்றி... 90-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும்.’
சாகுபடிப் பாடம் முடித்த ரவிச்சந்திரன், நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றிப் பேச ஆரம்பித்தார். ''ஒவ்வொரு தூர்லயும் 25 முதல் 35 சிம்பு வரை இருந்துச்சு. ஒவ்வொரு சிம்புலயும் 120 முதல் 150 நெல் மணிகள் வரை இருந்துச்சு. அறுவடை பண்ணின பிறகு 25 மூட்டை (75 கிலோ மூட்டை ) நெல் கிடைச்சிருக்கு.அரிசியா அரைச்சு விக்கலாம்னு இருக்கேன். ஒரு மூட்டைக்கு சராசரியா 45 கிலோ வரை அரிசி கிடைக்கும். அந்தக் கணக்குல பாத்தா... எப்படியும் மொத்தம் 1,125 கிலோ அரிசி கிடைக்கும். கிலோ 25 ரூபாய்னு வித்தாலே 28,125 ரூபாய் கிடைக்கும். செலவு போக எப்படியும் 20 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்'' என்றார் உற்சாகமாக.

பிரம்மாஸ்திரம்:

சாணம் - 5 கிலோ
மாட்டுச் சிறுநீர் - 5 லிட்டர்
வேப்பிலை - 5 கிலோ
புங்கன் இலை - 2 கிலோ
ஆடாதொடை இலை - 2 கிலோ
எருக்கன் இலை - 2 கிலோ
நுனா இலை - 2 கிலோ
ஊமத்தை - 2 செடி
இலைகளை ஒன்றாகச் சேர்த்து இடித்து, மாட்டுச் சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவற்றைச் சேர்த்து 60 லிட்டர் தண்ணீரில் கலந்து 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, வடிகட்டினால் பிரம்மாஸ்திரம் தயார். மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.  
அக்னி அஸ்திரம்:
புகையிலை - 1 கிலோ
பூண்டு - அரைக் கிலோ
பச்சைமிளகாய் - அரைக் கிலோ
வேப்பிலை- 5 கிலோ
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து, மண்பானையில் இட்டு, 15 லிட்டர் மாட்டுச் சிறுநீரைக் கலந்து, ஆறு லிட்டர் கரைசலாக சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து 48 மணி நேரம் கழித்து வடிகட்டினால்... அக்னி அஸ்திரம் தயார். மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பீஜாமிர்தம்:
சாணம் - 2 கிலோ
மாட்டுச் சிறுநீர் - 2 லிட்டர்
சுத்தமானச் சுண்ணாம்பு - 50 கிராம்
ஜீவனுள்ள மண் - ஒரு கைப்பிடி
இவற்றை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து 12 மணி நேரம் வைத்திருந்தால், பீஜாமிர்தம் தயார்.
கன ஜீவாமிர்தம்:
சாணம்- 100 கிலோ, மாட்டுச் சிறுநீர்- 10 லிட்டர் ஆகியவற்றுடன், முளைகட்ட வைத்து பொடித்த சிறுதானியக் கலவை நான்கு கிலோ அளவில் கலந்து பிசைந்து, உலர்த்தி எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். இதை ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.  

தொடர்புக்கு
ரவிச்சந்திரன், 
அலைபேசி: 94442 - 02362.
Source: pasumaivikatan

No comments: