Saturday

மஞ்சள் + வெங்காயம் + மிளகாய் + சேனை... உற்பத்திச் செலவை ஈடுகட்டும் உற்சாகக் கூட்டணி!

மஞ்சள் + வெங்காயம் + மிளகாய் + சேனை...
உற்பத்திச் செலவை ஈடுகட்டும் உற்சாகக் கூட்டணி!

ஆண்டுப் பயிரான மஞ்சள் விதைக்கும் விவசாயிகள், அதன் அறுவடைக் காலத்துக்குள், குறுகிய காலப் பயிர்களான வெங்காயம், மிளகாய், துவரை... போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்து, கூடுதல் வருமானம் பார்ப்பது வழக்கம். அந்தவகையில் நாட்டு மஞ்சளுக்கு இடையில் வெங்காயம், மிளகாய், சேனைக்கிழங்கு மூன்றையும் ஊடுபயிராக சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அடுத்துள்ள கும்பிக்கருக்கு கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ். பாலசுந்தரம்!
அளவெடுத்து அமைக்கப்பட்ட பாத்திகளுக்குள் அணிவகுத்து நிற்கும் மஞ்சள் செடிகள்; அதனூடே பச்சைக் குடைகள் பிடித்தது போல சேனைச்செடிகள்; வெள்ளை மூக்குத்திகளாய் பூவெடுத்து நிற்கும் மிளகாய் செடிகள்; பயிர்களுக்குப் பதமாகப் பாசனம் செய்யும் சொட்டுநீர்க் கருவிகள்... இத்தகைய கண்கொள்ளாக் காட்சிகளுக்கு நடுவே, பராமரிப்புப் பணிகளில் மூழ்கியிருந்தார் பாலசுந்தரம். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும்... குஷியானவர், கை வேலைகளை முடித்துவிட்டு, நம்முன் வந்தார்.
''என்னோட விவசாயம், இயற்கை பாதி, செயற்கை பாதினு சொல்லாம். அதாவது, இயற்கை உரம்தான், மண்ணுக்கும் பயிருக்கும் நல்லது. பூச்சிக் கொல்லி மட்டும் ரசாயனத்தைத் தெளிச்சிக்கிட்டிருக்கேன். பல வருஷமா இந்தப் பகுதியில மஞ்சள் விவசாயம்தான் பிரதானம். இந்த மண்ணுக்கும், தண்ணிக்கும் மஞ்சள் வெள்ளாமை நல்லா வருமுங்க. வழக்கமா மஞ்சள் போட்டா... அதுக்குள்ள ஊடுபயிர் வெள்ளாமையும் செய்வோம். நான், ஒரே கல்லுல நாலு மாங்காய்ங்கிற மாதிரி மஞ்சளுக்குள்ளாறயே வெங்காயம், சேனை, மிளகாய்னு மூணு ஊடுபயிரை விதைச்சேனுங்க'' என்று உற்சாகமாக முன்னுரை கொடுத்த பாலசுந்தரம், ஊடுபயிர்கள் பற்றி பாடம் எடுக்கத் தொடங்கினார்.
'சித்திரையில இரண்டு முறை கோடை உழவு செய்து, ஒரு ஏக்கருக்கு 10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்துவிட வேண்டும். மறுபடியும் இரண்டு உழவு செய்து மண்ணை 'பொலபொல’ப்பாக்கி, தேவையான அளவுகளில் பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளுக்குள் ஓர் அடி இடைவெளியில் பார்களை அமைத்து, பாரின் மத்தியில்... ஒன்றரை அடி இடைவெளியில், நேர்த்தி செய்யப்பட்ட விதைமஞ்சளை நட வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு டன் விதை மஞ்சள் தேவைப்படும்.
70 நாளில் வெங்காயம் !
மஞ்சள் நடவின்போதே... வரப்பு, வாய்க்கால் கரைகளின் ஓரங்களில் ஓரடி இடைவெளியில் விதை வெங்காயத்தை நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 70 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். மஞ்சளுக்குக் கொடுக்கிற உரமே இதற்கும் போதுமானது. 60 முதல் 70 நாட்களுக்குள் இதை அறுவடை செய்து விடலாம். ஊடுபயிரில் சராசரியாக 600 கிலோ வெங்காயம் மகசூலாகக் கிடைக்கும்.
150 நாட்களில் மிளகாய் !
மஞ்சள் நடவு செய்யும் போதே, தேனிசம்பா மிளகாய் நாற்றுகளை
5 அடிக்கு ஒன்று வீதம் வரப்புகளில் நடவேண்டும். 60-ம் நாளில் மகசூல் கொடுக்கத் தொடங்கி, அடுத்த 90 நாட்களுக்குத் தொடர்ந்து மகசூல் கிடைக்கும். பரவலாக நடவு செய்வதால், 750 முதல் 1,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
270 நாளில் சேனை !
மஞ்சள் நடவு செய்த ஒரு வார இடைவெளியில் ஊடுபயிராக சேனைக் கிழங்கை 10 அடிக்கு ஒன்று என்ற கணக்கில் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 கிலோ விதைக் கிழங்கு தேவைப்படும். 5 கிலோ வரை எடையுள்ள பெரிய கிழங்குகளை நான்காக வெட்டி, சிறிதாக்கி தனித்தனியே நடவு செய்யலாம். சிறிய கிழங்காக இருந்தால், அதை அப்படியே நடவு செய்யலாம். விதைக் கிழங்குகளை நடவு செய்யும்போது நடுப்பாத்திகளில் நடவு செய்யாமல்... வரப்புகளில் மண்வெட்டி கொண்டு குழி எடுத்து, நடவு செய்து மண்ணால் மூட வேண்டும். சொட்டுநீர் மூலம் சூழலை அனுசரித்துத் தேவையான அளவுக்குப் பாசனம் செய்து வர வேண்டும்.
நடவு செய்த 25-ம் நாளில் களை எடுத்து, இயற்கை உரமாக 100 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய உரத்தை ஒவ்வொரு செடிக்கும் வைத்து பாசனம் செய்ய வேண்டும். இரண்டு மாத இடைவெளியில் தலா 200 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய உரத்தைச்  செடிகளுக்குக் கொடுக்க வேண்டும். சேனைக் கிழங்குக்குத் தனியாக உரமிடத் தேவையில்லை. மஞ்சளுக்குக் கொடுக்கும் உரமே போதுமானது. பயிர்கள் நன்றாக வேர் பிடித்து வளரவும், இலைகள் விரிந்து செழிப்பு அடையவும் இந்த உரம் துணை புரிகிறது. தொடர்ந்து 9-ம் மாதம் 200 கிலோ பொட்டாஷ் உரத்தை சரி சமமாகப் பிரித்து, செடிகளுக்குக் கொடுக்க வேண்டும். கிழங்குகள் ஊக்கமுடன் விரைவாக வளரவும், மஞ்சள் மற்றும் சேனைக் கிழங்குகள் நிறம் பெறவும், பொட்டாஷ் உதவுகிறது.
வேரழுகலுக்கு வேப்பம் பிண்ணாக்கு !
இலைப்பேன், இலைப்புள்ளி நோய், வேரழுகல் ஆகிய மூன்று நோய்கள்தான் கிழங்கு வகைப் பயிர்களை சேதப்படுத்தி அழிக்கும் முக்கிய நோய்களாகும். இவற்றைக் கட்டுப்படுத்த ஊடுருவிப் பாயும் பூச்சிக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வீதம் கலந்து 30, 60 மற்றும் 90-ம் நாட்களில் விசைத்தெளிப்பான் மூலமாக காலை வேளைகளில் புகை போல் படரும்படி தெளிக்கவேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வேம்புக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால், இலைப்புள்ளி நோய் கட்டுப்படும். வளர்பருவத்தில் செடிக்கு 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை தகுந்த கால இடைவெளியில் கொடுத்து நீர்ப் பாசனம் செய்தால், வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்தி விடலாம்.
ஏக்கருக்கு 1,000 கிலோ சேனை !
மஞ்சள் செடிகளும் அதற்கிடையில் சேனைச் செடிகளும் போட்டி போட்டு வளர்ந்து, பச்சைகட்டி வரும். 9-ம் மாதத்தில் சேனைக் கிழங்குகள், உருண்டு திரண்டு வளர்ந்து வரும் சமயத்தில், அவற்றின் இலைகள் வெளிறிப் போய் காணப்படும். அந்த சமயத்தில் ஒரு செடியைப் பறித்து கிழங்கின் வளர்ச்சியை சோதிக்க வேண்டும். முழுமையாக வளர்ந்து விட்டது உறுதியானால்... அறுவடையைத் தொடங்கலாம். ஈரப்பதமுள்ள மண்ணில் விளைந்திருக்கும் செடிகளைத் தண்டோடு பிடுங்கி களத்தில் குவித்து... பிறகு, தண்டுகளை வெட்டி கிழங்குகளை மட்டும் சேகரித்து, தண்ணீரில் கழுவி நிழலில் உலர்த்த வேண்டும். ஈரம் காய்ந்த பிறகு விற்பனை செய்யலாம். சராசரியாக ஏக்கருக்கு 1,000 கிலோ சேனை மகசூலாகக் கிடைக்கும். தனிப்பயிராக இருந்தால், 8 டன் வரை மகசூல் கிடைக்கும். ஊடுபயிர் அறுவடை எல்லாம் முடிந்த பிறகு, 10-ம் மாதம் மஞ்சளை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் மஞ்சள் கிடைக்கும்.'
சாகுபடிப் பாடம் முடித்த பாலசுந்தரம், தொடர்ந்து வருமானம் பற்றிப் பேசியபோது... ''600 கிலோ வெங்காயம், 1,000 கிலோ மிளகாய், 1,000 கிலோ சேனை மூணையும் சராசரியா கிலோ 10 ரூபாய்னு விக்கலாம். அது மூலமா 26 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 20 குவிண்டால் மஞ்சள் மூலமா ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கர் மஞ்சளுக்கு முட்டுவளிச் செலவு 25 ஆயிரம் ரூபாய். இந்தச் செலவை ஊடுபயிர்கள் மூலமாவே எடுத்துடறதால... மஞ்சள் மூலமா கிடைக்கற மொத்தப் பணமும் லாபம்தான்'' என்று உற்சாகமாகச் சொன்ன பாலசுந்தரம்,
''ஊடுபயிர் வெள்ளாமை விவசாயிகளை எப்பவும் நஷ்டத்திலிருந்து காப்பாத்தக் கூடியது. ஒண்ணு விலை குறைஞ்சாலும்... இன்னொண்ணு சரி செஞ்சுடும். அதுபோக... ஊடுபயிர் மூலமாவே முக்கிய பயிர்களுக்குத் தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைச்சுடும்கறதையும் மறந்துடக் கூடாது'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் பூரித்தவராக!

இயற்கை முறையில் மகசூலைக் கூட்டலாம் !
விவசாயி பாலசுந்தரம், முழுமையாக இயற்கை வழி வேளாண்மைக்கு மாறவில்லை. இயற்கை மற்றும் ரசாயனத்தைக் கலந்து கலந்துதான் செய்து வருகிறார். இங்கே மஞ்சள் மற்றும் ஊடுபயிர்களுக்கான இயற்கை முறை பயிர் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூறுகிறார் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியும், மஞ்சள் விவசாயியுமான ஈரோடு, விஜயமங்கலம், சாமிநாதன்.
''இயற்கை முறை மஞ்சள் விவசாயத்தை சிறப்பாக செய்துவரும் பலநூறு விவசாயிகளில் நானும் ஒருவன். இலைப்பேன், இலைப்புள்ளி நோய், கரும்பேன் தாக்குதல், வேர் மற்றும் கிழங்கு அழுகல் நோய்கள்தான் மஞ்சளைத் தாக்கும் முக்கிய நோய்கள். இவற்றைக் கட்டுப்படுத்திட, வேம்பு எண்ணெய், புங்கன் எண்ணெய் இரண்டையும் தலா 45 மில்லி எடுத்துக்கொண்டு, இவற்றுடன் 10 மில்லி சோப்புக் கரைசலைச் சேர்த்து, பத்து லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ள வேண்டும். இக்கரைசலை மஞ்சள் நடவு செய்த 25-ம் நாள் தொடங்கி, 9-ம் மாதம் வரை வாரம் ஒருமுறை விசைத் தெளிப்பான் கொண்டு காலை வேளைகளில் செடிகள் நனையும்படி தெளிக்க வேண்டும். ஊடுபயிரான சேனைக் கிழங்கையும் இதே வகை நோய்கள் தாக்குவதால், அதற்கான பயிர் பாதுகாப்பும் கிடைத்துவிடும்.
மாதம் ஒருமுறை வளர்ச்சி ஊக்கியாக ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து கொடுக்கவேண்டும். ஒவ்வொரு செடிக்கும் வேப்பம் பிண்ணாக்கு 50 கிராம் வைக்க வேண்டும். இதை 75-ம் நாள், 150-ம் நாள், 200-ம் நாள் என்ற வரிசையில் வைத்து, பாசனம் செய்ய வேண்டும்.
இது, வேர் சம்பந்தமான நோய்களை விரட்டும். இதையெல்லாம் செய்தால்... மகசூலும் கூடும்'' என்கிறார் சாமிநாதன்.
தொடர்புக்கு,
ஏ.எஸ். பாலசுந்தரம்,
செல்போன்: 99526-70584
சாமிநாதன், செல்போன்: 93630-42178
ஜி. பழனிச்சாமி
படங்கள்: க. ரமேஷ்
Source: pasumaivikatan

1 comment:

Muthukumar said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238