அள்ளிக் கொடுக்கும் இயற்கை குண்டுமல்லி !
"நாள் கணக்குல
காத்திருந்து, அறுவடை நேரத்துல வெயிலுக்கோ, மழைக்கோ மகசூலை பந்தி
வைக்குறதுதான் விவசாயிங்க பொழப்பா இருக்கு. ஆனா, பூ சாகுபடியில தினந்தோறும்
அறுவடை செய்ய முடியும்கறதால லாப, நஷ்டம் வந்தாலும்... சராசரி
வருமானத்துலயே கரையேறிடலாம். அதனாலதான் எங்க பகுதியில முக்கிய இடத்துல
இருக்கு பூ சாகுபடி. அதுவும் நான் இயற்கை முறையில சாகுபடி செய்றதால குறைச்ச
செலவுல கூடுதல் வருமானம் கிடைக்குது" என்கிறார் ஈரோடு மாவட்டம்,
சத்தியமங்கலம்
அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓதிச்சாமி.
அவரை நாம்
சந்தித்தது... அதிகாலை வேளையில். அப்போது குண்டுமல்லி மொட்டுகளை
செடிகளிலிருந்து மளமள என பறித்துக் கொண்டிருந்த ஓதிச்சாமி, அப்படியே
நம்மிடமும் பேச்சைத் தொடர்ந்தார்.
"15 வருஷமா பூ
விவசாயம் செஞ்சுட்டு வர்றேன். ரெண்டு வருஷமாத்தான் இயற்கை விவசாயத்துக்கு
மாறியிருக்கேன். இப்ப ஒரு ஏக்கர்ல குண்டுமல்லி இருக்குது. நல்ல செம்மண்
பூமி. அதோட பவானி தண்ணி வேற. இது ரெண்டும் சேர்ந்துட்டதால, பொங்கசோறு போல
வெளைஞ்சு கிடக்கு குண்டுமல்லி" என்றவர், நேரடியாக சாகுபடி முறைக்குள்
புகுந்தார்.
ஆடி முதல் மார்கழி வரை குண்டுமல்லி நடவுக்கு ஏற்ற
பட்டம். கோடை உழவு செய்து நிலத்தைப் புழுதியாக்கி, 15 டன் தொழுவுரத்தைப்
பரவலாக இறைத்துவிட்டு, மறுபடியும் இரண்டு முறை ஏர் உழவு செய்ய வேண்டும்.
நான்கு அடி இடைவெளியில் பார் முறை பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திகளில் நான்கு அடி இடைவெளியில், ஒரு அடி ஆழம், அரை அடி அகலம் கொண்ட
குழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2,500 குழிகள் வரை
எடுக்கலாம். ஐந்து மாத வயதுடைய நாற்றுகளைக் குழிக்கு இரண்டாக பதியம் போட்டு
மூடி, உடனே உயிர்த் தண்ணீர் கொடுக்க வேண்டும் (ராமநாதபுரம் மாவட்டம்,
தங்கச்சிமடம் பகுதியில் இருந்துதான் தமிழகம் முழுக்க மல்லி நாற்றுகளை
விவசாயிகள் வாங்கி நடுகிறார்கள். நாற்று ஒரு ரூபாய் என்கிற விலையில்,
அங்கிருந்து கொண்டு வந்து நேரடியாகக் கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்).
நடவு
முடிந்ததும் வாரம் ஒரு தடவை தண்ணீர்ப் பாசனம் செய்ய வேண்டும்
(சொட்டுநீர்ப் பாசனமும் அமைக்கலாம்). முதல் ஐந்து மாதத்துக்கு மாதம் ஒரு
களை எடுக்க வேண்டும். இரண்டாவது களை மற்றும் ஐந்தாவது களைக்குப் பிறகு,
செடிக்கு இரண்டு கிலோ வீதம் மண்புழு உரத்தை வைத்துப் பாசனம் செய்ய
வேண்டும். தொடர்ந்து 2 மாதத்துக்கு ஒரு முறை 500 லிட்டர் கோமூத்திரத்துடன்,
50 கிலோ சாணத்தைக் கலந்து பாசனத் தண்ணீரோடு கொடுத்தால்... வேர் நன்றாக
பிடித்து, செடிகள் ஒரே சீராக தளதளப்புடன் வளரும். செம்பேன், மொக்குப் புழு,
வேர்ப் புழு, இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதலை சமாளிக்க மூலிகைப்
பூச்சிவிரட்டி தெளித்தாலே போதும். நடவு செய்த 150-ம் நாளில் பூ மொட்டுகளை
அறுவடை செய்யலாம்.
ஆரம்பத்தில் 10
கிலோ என்று இருக்கும் மகசூல், மெள்ள உயர்ந்து அதிகபட்சமாக 150 கிலோ
வரைக்கும்கூட செல்லும். குறிப்பாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே
மாதங்களில் அதிகபட்ச மகசூல் கிடைக்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மற்றும்
செப்டம்பர் மாதங்களில் 10 கிலோ அளவுக்கே கிடைக்கும். டிசம்பரில் மிகமிகக்
குறைந்து 1 கிலோ என்கிற அளவில்தான் கிடைக்கும். ஆனால், அந்த சமயத்தில்தான்
குண்டுமல்லியின் விலை உச்சத்தில் இருக்கும்.
அறுவடை
35 நாள், இடைவெளி 35 நாள் என்கிற வகையில்தான் குண்டுமல்லி அறுவடை
இருக்கும். அதிலும் கவாத்து செய்யும்போது சுத்தமாக அறுவடையே இருக்காது.
ஆகக்கூடி, சராசரியாக ஆண்டுக்கு 3 டன் மகசூல் கிடைக்கும்.
குண்டுமல்லிச்
செடியை ஒரு தடவை பயிர் செய்து விட்டால், சுமார் 15 ஆண்டுகள் வரை தொடர்
மகசூல் கொடுக்கும். எனவே, தொடர்ந்து 6 மாதத்துக்கு ஒரு தடவை செடிகளைக்
கவாத்து செய்வது அவசியம்.
சாகுபடித்
தொழில்நுட்பப் பாடத்தை முடித்த ஓதிச்சாமி, "பறிக்குறப் பூவை சத்தியமங்கலம்,
கோயம்புத்தூர் மார்க்கெட்டுகள்லதான் விலைக்குக் கொடுக்கிறேன். கிலோ 70
ரூபாய்க்கு குறைச்சு இதுவரைக்கு விலை போனதில்ல. போன வருஷம் டிசம்பர் மாசம்
10-ம் தேதி ஒரு கிலோ பூ 700 ரூபாய்க்கு விலை போச்சு. சராசரியா கிலோவுக்கு
80 ரூபாய் கிடைக்கும்.
நான் இயற்கை
முறையில உற்பத்தி செய்றதால, ரெண்டு நாள் வரைக்கும் பூ வாடாம, மலர்ச்சியா
இருக்கறது பெரிய வரப்பிரசாதம். அதனால சில வியாபாரிக, தோட்டத்துக்கே வந்து
கிலோவுக்கு 20 ரூபாய் கூடுதலா கொடுத்து வாங்கிட்டுப் போறாங்க. இயற்கை
விவசாயம் செய்றதைப் பார்த்து ஆரம்பத்துல கேலி பேசின பலரும், நான் நல்ல
மகசூல் எடுக்கறதைப் பார்த்துட்டு, என்கிட்ட வந்து ஆலோசனை கேட்டுட்டுப்
போறாங்க. ரசாயன உரக் கம்பெனி விற்பனைப் பிரதிநிதிங்க சிலர்கூட என் வயலுக்கு
வந்து பார்த்து ஆச்சரியப்பட்டு போயிருக்காங்க.
ஒரு நாளைக்கு, ஒரு
மாடு, சராசரியா 10 லிட்டர் கோமூத்திரம், 8 கிலோ சாணம் கொடுக்குது.
எங்கிட்ட ரெண்டு மாடுக இருக்கு. என் இடுபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய
இதுவே போதுமானதா இருக்குது" என்றார் பெருமிதத்துடன்.
மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
வரி குறும்பைக்காய் (காட்டுப் பகுதிகளில் நிறைய கிடைக்கும்) -ஒரு கிலோ,
வில்வக்காய்-ஒரு கிலோ, வேப்பிலை-ஐந்து கிலோ, சிறியாநங்கை-ஐந்து கிலோ,
திருகுகள்ளி-ஐந்து கிலோ, ஆடு தின்னாத தழை (ஏதாவது ஒன்று)-10 கிலோ.
செய்முறை அனைத்தையும் லேசாக இடித்து,
25 லிட்டர் கோமூத்திரத்தில் ஊற
வைக்க வேண்டும். அவ்வப்போது கலக்கிவிட வேண்டும். 25 நாள் கழித்து
சுத்தமானத் துணியினால் கலவையை வடிகட்டி, வேறு பாத்திரத்தில் ஊற்றி, அந்த
மூலிகைச் சாற்றை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி வீதம் கலந்து, மாலை
நேரத்தில் செடிகள் நன்றாக நனையும் படி தெளிக்க வேண்டும். வாரம் ஒரு தடவை
இதைச் செய்தால் குண்டு மல்லிச் செடியைத் தாக்கும் அனைத்து நோய்களும்
காணாமல் போய்விடும்.
|
தொடர்புக்கு ப. ஓதிச்சாமி,
அலைபேசி 97894&15898.
|
1 comment:
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238
Post a Comment