தரமான நாற்று... ஏமாற்றாத மகசூல்... அழைப்பு விடுக்கும் அரசுப் பண்ணை..!
பயிருக்கு உயிர்நாடி, விதைதான். தரமான விதையையோ, நாற்றையோ உபயோகப்படுத்தினால்தான், விளைச்சல் அதிகமாகக் கிடைக்கும். இந்த எதார்த்தம் தெரிந்திருந்தாலும்... சில ஏமாற்றுக்கார நாற்றுப் பண்ணையாளர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, வீரியமில்லாத விதைகள், தரமில்லாத நாற்றுகளை வாங்கி, ஏமாந்து விடுகிறார்கள், விவசாயிகள் பலரும். அதேபோல பலருக்கு எந்தப் பண்ணையில் தரமான நாற்று கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதே சிரமமான விஷயமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில், அரசாங்கத்தின் ஒரு நாற்றுப் பண்ணை, தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது... என்பதைத் தெரிந்து கொள்வது... நல்லதுதானே!
வேலூர்-சென்னை சாலையில் இருபத்தைந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, விசாரம் எனப்படும் கிராமம்.
இங்கிருந்து இடதுபக்கமாக செல்லும் பாதையில், ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள பாலாற்றைக் கடந்தால்... 'நவ்லாக்’ என்னும் பகுதியில் அமைந்திருக்கும் அரசு தென்னைப் பண்ணையை அடையலாம்.
இளம்தென்றல் வீசிய காலைப் பொழுதொன்றில், பண்ணையின் மேலாளர் தேன்மொழியை சந்தித்தபோது...
''ஒரு காலத்தில் ஆற்காடு நவாப்புக்கு சொந்தமான இப்பகுதி முழுக்க 9 லட்சம் தென்னை மரங்கள் இருந்ததால், அதைக் குறிக்கும் வகையில் இந்தப் பகுதிக்கு 'நவ்லாக்’ என்று பெயர் வந்துள்ளது. 1974-ம் ஆண்டு, 207 ஏக்கரில் தமிழக அரசால் இந்தப் பண்ணை துவங்கப்பட்டது. நாற்று உற்பத்திக்காக நெட்டை, குட்டை, குட்டைஜ்நெட்டை ரகங்களில் 8 ஆயிரத்து 595 தென்னைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 25 ஆண்டுகளுக்கு மேலான தாய் மரங்களில் இருந்து தரமான நெற்றுகளைத் தேர்வு செய்து முளைக்க வைப்பதால், எல்லா நாற்றுகளும் தரமாக இருக்கின்றன.
தரமான நெட்டைஜ்குட்டை, குட்டைஜ்நெட்டை வீரிய ஒட்டுரக நாற்றுகள், 'வெஸ்ட் கோஸ்ட் டால்’ என்று சொல்லப்படும் நெட்டை ரகம், 'சௌகாட் ஆரஞ்ச் டூவாப்’ என்ற குட்டை ரக நாற்றுகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளுக்கு பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தேனி, மதுரை... என தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது'' என்று முன்னுரை கொடுத்த தேன்மொழி, தென்னை ரகங்களைப் பற்றி விளக்க ஆரம்பித்தார்.
கொப்பரைக்கு ஏற்ற நெட்டை ரகம்!
''வெஸ்ட் கோஸ்ட் டால் என்ற நெட்டை ரக தென்னை நாற்றுகளை நடவு செய்தால்... 5-ம் ஆண்டு முதல் காய்ப்புக்கு வரும். இதன் ஆயுள்காலம் 70 ஆண்டுகள்.
50 அடி முதல் 70 அடி உயரம் வரை வளரக் கூடியது. தேங்காய்க்கும் கொப்பரைக்கும் ஏற்ற ரகம். ஒரு மரத்தில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக 80 காய்கள் முதல் 100 காய்கள் வரை கிடைக்கும். 6 மாதங்கள் வயதுடைய நாற்றின் விலை 15 ரூபாய்.
இளநீருக்கு ஏற்ற குட்டை ரகம் !
'சௌகாட் ஆரஞ்ச் டூவாப்’ எனப்படும் குட்டை ரக தென்னை 3-ம் ஆண்டு முதல் மகசூல் கொடுக்கும். இளநீருக்கு ஏற்ற ரகமான இதன் ஆயுள்காலம் 25 ஆண்டுகள். சராசரியாக, ஆண்டுக்கு 60 காய்கள் முதல் 80 காய்கள் வரை கிடைக்கும். அதிகபட்சம் 40 அடி முதல் 50 அடி உயரம் வரை வளரக்கூடியது. 6 மாதங்கள் வயதுடைய நாற்றின் விலை 15 ரூபாய்.
அதிக காய்களுக்கு நெட்டைஜ்குட்டை !
நெட்டைஜ்குட்டை வீரிய ஒட்டு ரக நாற்றுகளை 25 அடிக்கு 25 அடி இடைவெளியில்... ஏக்கருக்கு 80 நாற்றுகள் வீதம் நடவு செய்யலாம். நடவு செய்த 4-ம் ஆண்டு முதல் காய்ப்புக்கு வரும். 40 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரும். இதன் ஆயுள் காலம் 40 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள். ஒவ்வொரு மரத்தில் இருந்தும், ஆண்டுக்கு சராசரியாக 120 காய்கள் முதல் 200 காய்கள் வரை கிடைக்கும். மண்வளம் மற்றும் முறையான பராமரிப்பு இருந்தால்... ஆண்டுக்கு சுமார் 300 காய்கள் வரையிலும் கிடைக்கும். இந்த ரக காய்களை இளநீருக்கு, சமையலுக்கு, கொப்பரைக்கு... என அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். அதனால்தான் இதை 'ஆல்-ரவுண்டர்’ என்கிறார்கள். இளநீராகப் பயன்படுத்தும் போது ஒரு காயில், 350 மில்லி முதல் 450 மில்லி வரை இளநீர் இருக்கும். 6 மாதங்கள் வயதுடைய நாற்றின் விலை 25 ரூபாய்.
இளநீருக்கு ஏற்ற குட்டைஜ்நெட்டை !
குட்டைஜ்நெட்டை வீரிய ஒட்டுரக நாற்றுகளை 18 அடிக்கு 18 அடி இடைவெளியில்... ஏக்கருக்கு சராசரியாக 135 நாற்றுகள் வரை நடவு செய்யலாம். நடவு செய்த மூன்றரை ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். 25 அடி முதல்
40 அடி உயரம் வரை வளரும் இதன் ஆயுள் காலம், 40 ஆண்டுகள். ஒவ்வொரு மரத்தில் இருந்தும் ஆண்டுக்கு சராசரியாக 150 காய்கள் முதல் 200 காய்கள் வரை கிடைக்கும். மண்வளம் மற்றும் பராமரிப்பைப் பொருத்து 400 காய்கள் வரைகூட அறுவடை செய்யலாம். ஒரு காயில், 400 மில்லி முதல் 700 மில்லி வரை இளநீர் இருக்கும். இளநீராக விற்பனையாகாத பட்சத்தில் தேங்காயாக முற்றவிட்டு, கொப்பரையாகவும் மாற்றிக் கொள்ளலாம். 6 மாதங்கள் வயதுடைய நாற்றின் விலை 75 ரூபாய்.
ஆயிரம் காய்ச்சி மரம் !
'ஆயிரம் காய்ச்சி’ என்ற தென்னை ரகம் ஒன்று இருக்கிறது. இந்த ரகத்தில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 தேங்காய்கள் முதல் 1000 தேங்காய்கள் வரை கிடைக்கும். இதன் காய் சிறியதாகவும், பருப்பு சுவையாகவும், இருக்கும். ஒரு தேங்காய் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் ஒரு நாள் தேவைக்குப் போதுமானது.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஆயிரம் காய்ச்சி மரம் இருந்தால் தேங்காய் பிரச்னையே இருக்காது. நடவு செய்த 5-ம் ஆண்டில் காய்ப்புக்கு வரும். 40 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக்கூடியது. கன்று விலை ரூ.25 முதல் கிடைக்கும். இந்த ரக நாற்றுகளை விவசாயிகள் விரும்பிக் கேட்டால் மட்டும் உற்பத்தி செய்து கொடுக்கிறோம்'' என்று தென்னை ரகங்களைப் பற்றி விளக்கிய தேன்மொழி நிறைவாக,
''இங்கு 6 மாதங்கள் வரை வளர்த்த நாற்றுகளைத்தான் விற்பனை செய்கிறோம். தற்போது தேவையான அளவுக்கு நாற்றுகள் கையிருப்பு உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.
தொடர்புக்கு,
தேன்மொழி, செல்போன்: 99523-88672.
(காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டும் தொடர்பு கொள்ளவும்)
இப்படித்தான் உற்பத்தி செய்யணும் நாற்றுகளை !
நாற்று உற்பத்தி முறைகள் பற்றிப் பேசிய தேன்மொழி, ''25 ஆண்டுகள் முடிந்த தென்னை மரங்களில் இருந்து தேங்காய் நெற்றுகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அவற்றில் தரமான நெற்றுகளைப் பிரித்து, 20 முதல் 25 நாட்கள் வரை தண்ணீர் சுண்டுவதற்காக வெயிலில் போட்டு வைக்க வேண்டும். மணற்பாங்கான இடத்தில் இரண்டரை அடி ஆழத்துக்குக் குழி எடுத்து, அதில் நெற்றுகளின் காம்புப் பகுதி மேல் நோக்கி இருப்பது போல வரிசையாக அடுக்கி, மணலால் மூடி வைத்து... இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஒரு மாதத்தில் லேசாக முளைப்பு எடுக்க ஆரம்பிக்கும். அதன்பிறகு, நாற்றங்காலுக்கு மாற்றிவிட வேண்டும்.
நாற்றங்காலில் பூச்சி-நோய் தாக்குதலைத் தடுக்க 1,000 நெற்றுகள் நடவு செய்யும் இடத்துக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு என்கிற கணக்கில் இடவேண்டும். ஒரு பாத்திக்கு 250 நெற்றுகள் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்தியில், தேங்காய் நெற்றுகள் நடவு முடிந்த பிறகு ஒரு அடி அகலத்துக்கு பார் அணைத்து... அடுத்தப் பாத்தியில் நடவைத் தொடங்க வேண்டும். நாற்றங்காலில் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, பாசனம் செய்து வர வேண்டும். தட்ப வெப்பநிலை மாறுபாடுகளால் பூச்சி-நோய் தாக்குதல் இருந்தால் மட்டும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 250 நெற்றுகள் நடவு செய்தால், 190 முதல் 200 நாற்றுகள் வரை கிடைக்கும்.
மகசூலை அதிகப்படுத்தும் வீரிய ஒட்டு !
காய்ப்புத்திறனை அதிகப்படுத்தவும், காய்ப்புக்கு வரும் காலத்தைக் குறைக்கவும், இரண்டு ரகங்களைக் கலப்பு செய்து வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கலாம். இதன் மூலம் குறைந்த வயதில் அதிக தேங்காய்கள் கிடைக்கும். நெட்டை ரக தாய் மரத்தில், பாலை விட்ட ஒரு வாரத்தில்... ஊதா நிறத்தில் பூக்கள் வெடிக்கும். அந்த சமயத்தில் பூக்களில் இருக்கும் ஆண் மகரந்தங்களை நீக்கிவிட்டு, அதில் ஏற்கெனவே தயாராக வைத்திருக்கும் குட்டை ரக தென்னை மரத்தின் ஆண் மகரந்த துகள்களைத் தூவ வேண்டும். பிறகு, வெள்ளைச் சாக்குப் பை கொண்டு பாலையைக் கட்டி விட வேண்டும். இரண்டு வாரங்களில் சிறு குரும்பைகள் உருவாகிவிடும். பிறகு, பையை அகற்றி விடலாம். 8 முதல் 10 மாதங்களில் இது தேங்காயாக மாறிவிடும். இந்தத் தேங்காய்களை தனியாக சேகரித்து, நாற்று உற்பத்தி செய்தால்... நெட்டைஜ்குட்டை ரக நாற்று தயாராகி விடும். குட்டைஜ்நெட்டை ரக நாற்றுகளை உற்பத்தி செய்ய, தாய் மரமாக குட்டை ரக மரங்களையும், நெட்டை ரகத்தின் ஆண் மகரந்தங்களை மேல் சொன்ன முறையில் கலப்பு செய்ய வேண்டும்'' என்று சொன்னார்.
காசி. வேம்பையன் படங்கள்: ச. வெங்கடேசன்
Source: pasumaivikatan
7 comments:
எனக்கு சுமார் 5 ஏக்கர் ல் தென்னை கன்று நடுவதற்க்கு, நாற்று தேவை
எனக்கு 40 செவ்விளநீர் குட்டைநெட்டை கன்றுகள் தேவை.
எனக்கு 3 ஏக்கரில் இளநீருக்கான தென்னை நற்று வேண்டும்
I need nettai kuttai 100 pieces. My contact number 8883839006.9790350151
I need kuttai x nettai 500
No 8610578532
I NEED NETTAIXKUTTAI,AYIRAM KAICHI AND SEVILANEER KANDRU PLS CNTACT 8489307610
I need West coast tall coconut seedlings 50. Pieces. Please contact 8608694346
Post a Comment