ஆடு வளர்ப்பில் அடுத்த மைல்கல் !
பளிச்...பளிச்....
பிளாக் ஆடு வளர்ப்பு...
எல்லா வகையான
இலைதழைங்களையும் தின்னும்...
7 மாசத்துல 20 கிலோ எடை...
|
வான்கோழி,
காடை, வெண்பன்றி, முயல், கறிக்கோழி என இறைச்சிக்காக பல வகை கால்நடைகளை
வளர்த்தாலும்... நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான
கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை,
அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின்
தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து
வருவது ஆடு வளர்ப்புதான்.
தமிழ்நாட்டில்
கொடி ஆடு, கன்னி ஆடு என ஏகப்பட்ட வகைகள் இருந்தாலும்... தட்டுப்பாடு
காரணமாக வெளிமாநில வரவுகளான சிரோஹி, தலைச்சேரி, போயர், ஜமுனாபாரி போன்ற ஆடு
வகைகளோடு கலப்பு செய்து, கலப்பினக்குட்டிகளை உருவாக்கி வளர்க்கும்
பழக்கமும் நம் விவசாயிகளிடம் பெருகி வருகிறது. அந்த வகையில், ‘பெங்கால்
பிளாக்’ எனும் ஆடு வகையை வளர்த்து வருகிறார்கள், திருப்பூர் மாவட்டம்,
உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள கண்ணம்மநாயக்கனூரைச் சேர்ந்த விவசாயத்
தம்பதியர் ஆர். சுந்தரராஜன்-செண்பகவல்லி.
ஏறத்தாழ நம் ஊர்
வெள்ளாடுகளைப் போன்ற தோற்றம். ஆனால், உயரம் மட்டும் கொஞ்சம் குறைவு.
முழுவெள்ளை மற்றும் முழுகருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும் இந்த
ஆடுகளின் காது, கண், கால் என்று சில இடங்களில் மட்டும் கருப்பு அல்லது
வெள்ளை நிறத்தில் பரஸ்பரம் மாறி இருக்கின்றன.
ஆடுகளைக் கொட்டிலிலிருந்து மேய்ச்சலுக்காகத்
திறந்துவிட்ட சுந்தர்ராஜன், "பெங்கால் கருப்புன்ற வகை ஆட்டுக்கும், ஆஸ்டின்
வெள்ளைன்ற ஆட்டுக்குமான கலப்பின வகை இது. நம்ம ஊரு செம்மறி ஆட்டை வளர்க்கற
மாதிரி மேயவிட்டும் வளர்க்கலாம். வெள்ளாடு மாதிரி கொட்டில்ல அடைச்சு,
தீவனம் கொடுத்தும் வளர்க்கலாம். ஆக, எல்லா வகையிலும் சௌகரியமானது இந்த ஆடு.
பெரும்பாலும் இதை அழகுக்காகத்தான் வளர்க்கறாங்க. நானும் அப்படித்தான்
வாங்கிட்டு வந்தேன். நாலு வருஷத்துக்கு முன்ன ஒரு தடவை சந்தைக்குப்
போயிருந்தப்ப, ஒரு வியாபாரி இந்த ஆட்டை கொண்டு வந்திருந்தார். பாக்கறதுக்கு
நல்ல ஜாதி நாய்க்குட்டி மாதிரி இருந்துச்சு. சரி, பேத்தி விளையாடறதுக்கு
ஆகட்டுமேனு ஐநூறு ரூபாய்க்கு வாங்கினேன். ஆனா, நாளடைவுல இதையே பெரிய அளவுல
வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்" என்று பெருமிதத்தோடு ஒரு ஆட்டுக்குட்டியைத்
தடவிக் கொடுத்தார்.
தற்போது
57 வயதாகும் சுந்தரராஜன், கோவையில் பத்து ஆண்டு காலம் வழக்கறிஞராகப்
பணியாற்றியவர். கோர்ட்டையும், கோப்புகளையும் பார்த்துப் பார்த்து ஒரு
கட்டத்தில் அலுத்துப் போகவே... சட்டப் பணிக்கு மொத்தமாக முழுக்குப்
போட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பி, மனைவியோடு கைகோத்து முழுநேர
விவசாயத்தில் இறங்கிவிட்டார்.
"அந்த ஆட்டைப்
பிடிச்சுக்கிட்டு வந்தப்போ... அது என்ன ரகம்னெல்லாம் எனக்குத் தெரியாது.
ஆனா, வீட்டுல எல்லாத்துக்கும் பிடிச்சுப் போயிடுச்சு. அந்த சமயத்துல
வீட்டுக்கு வந்த சொந்தக்காரர் ஒருத்தர்தான் இதோட ரகத்தைச் சொல்லி, கேரளாவுல
இருந்து இதுக்கு ஜோடியா ஒரு கிடாக் குட்டியை வாங்கிட்டு வந்து கொடுத்தார்.
அந்த ரெண்டு ஆடுகதான் இன்னிக்கு நாப்பது ஆடுகளா பெருகியிருக்கு. இதுக்காக
நான் தனியா கொட்டகையெல்லாம் அமைக்கல. ஏற்கெனவே காலியா கிடந்த கறிக்கோழிக்
கொட்டகைக்கு உள்ளேயேதான் வளர்த்துக்கிட்டு இருக்கேன்.
அதிகபட்சம் ரெண்டரை
அடி உயரம்தான் இதுங்க வளருதுங்க. தீவனம், தண்ணியெல்லாம் குறைவாத்தான்
எடுத்துக்குதுங்க. நோய் எதிர்ப்புச் சக்தி நல்லாவே இருக்கறதால, பெருசா எந்த
நோயுமே வர்றதில்லை. பூச்சிமருந்துகூட கொடுக்குறதில்லைனா பார்த்துக்கோங்க.
காலையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் கால் கிலோ மக்காச் சோளத்தைக் கொடுத்து,
தண்ணியையும் வெச்சுடுவோம். சாயங்காலம் மூணு மணி வாக்குல மேய்ச்சலுக்கு
அனுப்புவோம். ஆறரை மணிக்குப் பிறகு திரும்பவும் அடைச்சுடுவோம்.
எந்த இலை, தழையையும்
கழிக்கிறதில்லை. தென்னை ஓலை, தேக்கு இலைனு விட்டு வெக்காம சாப்பிட்டுட்டு,
‘கண்டதைத் தின்றால் குண்டன் ஆவான்’ன்ற மாதிரி ÔகொழுகொழுÕனு ஆயிடும்.
மேய்ச்சலுக்காகவே தட்டை, கொள்ளு, கம்புனு மாத்தி மாத்தி பயிர் பண்ணிடுவோம்.
மேய்ச்சல் முடிஞ்சதும் ஒரு தண்ணி பாய்ச்சுனோம்னா... மறுதழைவு வந்துடும்.
ஆடுகளோட எருதான் அதுக்கு உரம்" என்று சுந்தர்ராஜன் நிறுத்த, தொடர்ந்தார்
செண்பகவல்லி.
"ஆடுகளுக்குனு
எதையும் வெளியில வாங்குறதில்ல. இயற்கை முறையில நாங்களே உற்பத்தி பண்ற
மக்காச் சோளம், சவுண்டல்தான் தீவனம். வழக்கமா ஆடுக ரெண்டு வருஷத்துக்கு
மூணு தடவை குட்டி ஈனும். இந்த ஆடுக, வருஷத்துக்கே ரெண்டு தடவை ஈனுதுங்க.
அஞ்சு மாசத்துலேயே பருவத்துக்கு வந்துடுது. ஒவ்வொரு ஈத்துக்கும் ரெண்டு
குட்டிங்களை ஈனுது. தென்னந்தோப்பு வெச்சுருக்கவங்களுக்கு களை
எடுக்குறதுக்கு இந்த வகை ஆடுகள் வரப்பிரசாதம்னே சொல்லலாம். அந்தளவுக்கு
எல்லாச் செடிகளையும் பிடுங்கிச் சாப்பிட்டுடுதுக. நம்ம சீதோஷ்ண நிலைக்கு
நல்லா தாங்கி வளருதுங்க இந்த ஆடுக" என்று தன் பங்குக்கு கலப்பின ஆடுகளின்
பெருமையைச் சொன்னார்.
நிறைவாக வருமானம்
பற்றிப் பேசிய சுந்தரராஜன், "கிடைக்கிற குட்டிகளில் சராசரியா பாதி அளவுக்கு
கிடாக் குட்டிகளும் இருக்கு. நான் இந்த ஆடுகளைப் பெருக்கணும்னு நினைச்சு
வளர்க்கறதால பெரியளவுல விற்பனை செய்யலை. கிடாக் குட்டிகளை மட்டும் ஏழு
மாசம் வளர்த்து வித்துடுவேன். ஏழு மாசத்துல இருபது கிலோ வரை எடை வந்துடும்.
உயிர் எடைக்கு கிலோ 125 ரூபாய்னு எடுத்துக்கறாங்க. இதுவரைக்கும் இப்படி
அஞ்சாறு கிடாக்களை கறிக்காக வித்துருக்கேன். வளப்புக்காக ஏழு ஜோடியை
வித்துருக்கேன். இதெல்லாம் கழிச்சது போக, கையில நாப்பது ஆடுக இருக்கு.
கசாப்புக் கடைக்காரங்க தேடி வந்து விலைக்கு கேட்டுக்கிட்டு இருக்காங்க.
இனிமேதான் விற்பனையைத் தொடங்கணும். எப்படி இருந்தாலும் பத்து பெட்டை, ஒரு
கிடா வாங்கி விட்டோம்னா வருஷத்துக்கு நாப்பது குட்டி கண்டிப்பா கிடைக்கும்"
என்றார் சந்தோஷ கணக்குடன்!
"விற்பனை வாய்ப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!"
இந்த
வகை ஆடுகள் குறித்து விளக்குகிறார், திருப்பூர், தமிழ்நாடு கால்நடைப்
பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர்
செல்வராஜ். "மேற்குவங்க மாநிலத்தில் இறைச்சிக்காக இந்த ஆடுகளை
வளர்க்கிறார்கள். பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், மற்ற மாநிலங்களில்
அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். நம் மாநில சீதோஷ்ண நிலைக்கு எந்த அளவுக்கு
இவை சரிப்பட்டு வரும் என்பது இன்னமும் முழுமையாகத் தெரியவில்லை. இந்த
ஆடுகள் ரொம்பவும் மென்மையானவை. இறைச்சியும் ருசியாகவே இருக்கும். ஆனால்,
எந்த அளவுக்கு விற்பனை வாய்ப்பு இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு களத்தில்
இறங்குவது நல்லது.
மொத்தமாக இதை வாங்காமல், ஒரு ஜோடி அல்லது இரண்டு ஜோடி வாங்கி வந்து, அவற்றை வளர்த்து பெருக்குவதுதான் லாபகரமானதாக இருக்கும்
எந்த ஆடாக
இருந்தாலும் சரியானப் பருவத்தில் தடுப்பூசிகள், குடற்புழு நீக்க
மருந்தெல்லாம் கொடுத்து வளர்ப்பதுதான் நல்லது. இல்லையென்றால், என்னதான்
நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தாலும், மற்ற கால்நடைகள் மூலமாக நோய் தொற்றும்
ஆபத்து இருக்கிறது" என்றார்.
"விற்பனை வாய்ப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!"
|
படங்கள் தி. விஜய்
தொடர்புக்கு சுந்தர்ராஜன்,
அலைபேசி 93675-33111
|
1 comment:
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238
Post a Comment