Wednesday

மரபணு மாற்ற விதைகள்

             மக்களை ஏமாற்றும் நமது அரசுகளின் மௌடீக நாடகங்களைப் பார்த்தால், திரைப் படங்களில் நகைச்சுவை நடிகர் வடிவேலு அவ்வப்போது சொல்லும் வசனம்தான் நம் நினைவுக்கு வருகிறது. 

எதுன்னாலும் சொல்லிட்டுச் செய்ங்கப்பா!

கடந்த 2002ம் ஆண்டிலேயே மரபணு மாற்றப் பருத்தி விதையை மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அனுமதித்த மத்திய அரசு, அண்மையில் கத்திரிக்காயையும், மரபணு மாற்றச் சந்தைச் சுழற்சிக்குள் தள்ளப் பார்த்தது.

எதிர்பாராத தளங்களில் இருந்தெல்லாம் எதிர்ப்புக் கிளம்ப, தற்காலிகமாக மத்திய அரசு அதனைத் தள்ளிப் போட்டது.

ஆனாலும், கத்தரிக்காய்க்கு வந்த ஆபத்து நீங்கிவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது.  அந்தக் கத்தி இன்னும் இந்திய விவசாயிகளின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் மரபணு மாற்றப் பயிர்கள் விவகாரத்தில், புதிதாக ஒரு சர்ச்சை இப்போது புறப்பட்டுள்ளது.

அதாவது, மரபணு மாற்றப் பயிர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு வரும் பொருட்களின் உறை, அல்லது அட்டைகள் மீது அதற்கான அடையாள முத்திரைகள் இடப்பட வேண்டும் என ஒரு கோரிக்கை எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த முறை அமலுக்கு வந்திருப்பதால் இந்தியாவிலும், மரபணு மாற்றப் பொருட்களை அவற்றுக்கான முத்திரை இட்டு மட்டுமே சந்தையில் அனுமதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நுகர்வோருக்குத் தாங்கள் எதை வாங்கிச் சாப்பிடுகிறோம் என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அடிப்படை உரிமையும் கூட.

தகவல் உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் இப்படி நமது உரிமைக்கான சட்டங்களின் வரிசையில் இதனையும் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளலாம்.  உரிமைக்கான சட்டங்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே போனாலும், எதிலும் முழுமையான உரிமை தான் இன்னும் கிடைத்த பாடில்லை என்பது வேறு செய்தி.

அது ஒரு புறம் இருக்க, மரபணு மாற்றப் பொருட்கள் தொடர்பான நுகர்வோர் அமைப்புகளின் இந்தக் கோரிக்கை நமக்கு இன்னொரு எச்சரிக்கை யையும் தருகிறது.

மரபணு மாற்ற விதைகள் இந்தியாவில் அறிமுகம் ஆவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.  குறைந்தபட்சம் அவற்றின் சந்தைப்படுத்துதலை யாவது கட்டுப்படுத்தலாம் என்ற முயற்சியின் அறிகுறியாகவே இதனைப் பார்க்க வேண்டி உள்ளது.


ஆக, மரபணு மாற்றப் பயிர்கள் குறித்து அஞ்சும் நிலையில் இருந்து, அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் பற்றிய அச்சமாக அந்த விவகாரம் தற்போது பரிணாமம் அடைந்துள்ளது என்பது மட்டும் புரிகிறது.

இந்தியா வளரும் நாடாயிற்றே.. அதுதான் பிரச்சனைகளும் கூட வேகமாகவே வளருகின்ற போலும்.

சரி.. இவ்வளவு பெரிய உயிரியல் ரீதியான ஆபத்தை, மரபணு மாற்ற உணவுப் பொருட்களின் உறை மீது லேபிள் ஒட்டுவதன் மூலம் மட்டுமே எதிர்கொண்டு முறியடித்துவிட முடியுமா.

அணுகுண்டு போன்ற பேரழிவு ஆயுதங்களோடு வரும் எதிரிகளுடன், வெறும் கழிகளையும், கத்திகளையும் வைத்துக்கொண்டு சண்டை போடலாம் என்று சொல்வதுபோல் இருக்கிறது இந்த யோசனை.

பீஸா கார்னர்களில் உண்டு மகிழ்வதன் மூலம், அமெரிக்கா சென்று திரும்பும் மோட்சம் கிடைப்பதாக எண்ணிக் கிறங்கும் நமது இளைஞர்களா லேபிள்களைக் கண்டு அடடே,, இது மரபணு மாற்றப் பொருளா.. என ஒதுக்கித் தள்ளிவிடப் போகிறார்கள்..?

அல்லது அந்த சிந்தனைச் செரிவைத்தான் நாம் அவர்களுக்கு ஊட்டி வளர்த்திருக்கிறோமா?

ஆனாலும், ஜனநாயகத்தில் இது போன்ற குறைந்த பட்சத் தீர்வுகளுக்கான முயற்சிகள் தவிர்க்க முடியாதவை என்பதை மறுப்பதற் கில்லை.

இது ஒருபுறம் இருக்க, கடந்த 2006ம் ஆண்டு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மரபணு மாற்றப் பொருட்களின் மீது கட்டாயமாக லேபிள் ஒட்ட வேண்டும் என்று ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

1955ம் ஆண்டு உணவுப் பொருள் கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  ஆனால், அப்படி எதுவும்  நடக்கவில்லை

மகாராஷ்டிரா மாநிலத்தில், மரபணு மாற்றப் பருத்தியை விவசாயம் செய்ததால், பல லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்த அதே நேரத்தில், அந்தப் பருத்தியில் இருந்து எடுக்கப் பட்ட எண்ணெய் சமையல் எண்ணெயாக இன்றும் பல பகுதிகளில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் விபரீத விளைவுகள் ஏதும் நிகழ்ந்ததாகச் தெரியவில்லை எனினும், மரபணு மாற்றப் பொருளில் இருந்து தயாரிக்கப் பட்டது என்ற அடையாளத் தோடு அந்த எண்ணெய் சந்தைப் படுத்தப்படவில்லை என்கிõறர்கள் ஆய்வாளர்கள்.

உணவுப் பொருள் கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ், மத்திய சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவு கண்டிப்பாக அமல்படுத்தப்பட்டு இருந்தாலே, மான்சான்டோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வேரூன்றி இருக்க முடியாது என்கிறார்கள், இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள்.

மரபணு மாற்ற உணவுப் பொருட்கள் மனித உடலுக்கு ஒவ்வாதவை அல்லது ஆபத்தானவை என இதுவரை ஆய்வு ரீதியாக நிரூபிக்கப் படவில்லை என்ற வாதம் தற்போது முன்வைக்கப் பட்டு வருகிறது.

இருக்கலாம்.  ஆனால், மரபணு மாற்றப் பயிர்கள் குறித்த நமது பிரச்சனை வெறும் சுகாதாரம் சார்ந்தது அல்ல.  மண் சார்ந்தது.. தற்சார்பு சார்ந்தது.. இறையாண்மை சார்ந்தது.

2015ம் ஆண்டை நூற்றாண்டு இலக்காக வைத்து மத்திய அரசு ஆண்டுக்கு நூறுநாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அவை அனைத்தையும், விவாசயம் என்ற நாட்டின் ஆதாரத் தொழிலின் மேம்பாடு சார்ந்தவையாகவே உள்ளன.  விவசாயத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் மட்டுமே, வறுமையை ஒழிக்க முடியும் என அண்மையில் நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, அதனை மேற்கொண்ட உலக வங்கிக் குழு தெரிவித்துள்ளது.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை உலகம் உணரத் தொடங்கி உள்ளது.  இந்த நிலையில், நமது மண்வளத்தையும், மரபார்ந்த விதைகளின் வளத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மரபணு மாற்று விதைகள் விவகாரத்தை இந்த  அடிப்படையில் மட்டுமே மத்திய அரசு அணுக வேண்டும்.


நாட்டின் எதிர்காலம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் அடியோடு நாசம் செய்யக்கூடியது என அஞ்சப்படும் மரபணு மாற்றப் பொருட்களை, லேபிள் ஒட்டி விற்பனை செய்வதை விட அடியோடு மறுதலிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
Source: http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=7785

No comments: