அள்ளிக் கொடுக்கும் அடுக்குப் பயிர்கள்...
ஒன்றரை ஏக்கரில் இரண்டரை லட்சம்!
இடைவெளியில் சாகுபடி.
வேலி, வரப்பிலும் வருமானம்.
வேலி, வரப்பிலும் வருமானம்.
'ரசாயன முறை விவசாயமாக இருந்தாலும் சரி... பாரம்பரிய இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும் சரி... முதன்மைப் பயிரோடு ஊடுபயிர்கள், கூட்டுப்பயிர்கள் ஆகியவற்றையும் சேர்த்து சாகுபடி செய்தால் மட்டும்தான் விவசாயத்தில் லாபம் எடுக்க முடியும்' என்பதை நிரூபித்து, நல்ல லாபத்தை ஈட்டி வரும் விவசாயிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக, அடுக்குப்பயிர் சாகுபடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார் விழுப்புரம் மாவட்டம், குமளம் கிராமத்தைச் சேர்ந்த சோமு.
சின்ன வயசுலேயே விவசாயம் எனக்குப் பரிச்சயம். அப்பா, மூலமா எனக்கு நாலு ஏக்கர் தோட்டம் கிடைச்சுது. ஆசிரியர் பயிற்சி முடிச்சுட்டு, 68-ம் வருஷம் கல்வித்துறையில வேலைக்குச் சேந்தேன். வேலை பாத்துக்கிட்டிருந்த சமயத்துலயும் விவசாயத்தை தீவிரமா பாத்துக்கிட்டே இருந்தேன். ஓய்வுக்குப் பிறகு, இது மட்டும்தான் வேலைனு ஆகிப்போச்சு. பாரதியாரோட 'காணி நிலம் வேண்டும் பராசக்தி’ பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்ங்கறதால, 'காணி நிலம் தோட்டம்’னே என்னோட பண்ணைக்கு பேர் வெச்சுட்டேன்'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்ன சோமு, தொடர்ந்தார்.
பயிற்சிகளால் பண்பட்டேன்!
''80-ம் வருஷம் ஒண்ணரை ஏக்கர்ல 120 தென்னை நாற்றுகளை நடவு செஞ்சுட்டு, மீதி ரெண்டரை ஏக்கர்ல பட்டத்துக்கு ஏத்தமாதிரி வெள்ளாமை வெச்சுட்டுருந்தேன். நாலு வருஷத்துக்கு முன்ன மத்த வெள்ளாமையையும் நிறுத்திட்டு, அதுல எண்ணெய்ப் பனையை வெச்சுட்டேன். இனிதான் அது மகசூலுக்கு வரும். இயற்கை விவசாயத்துல ஆர்வம் இருந்ததால எந்த வெள்ளாமைக்கும் ரசாயன உரங்களைப் பயன்படுத்துனதே இல்லை. அதில்லாம விவசாயம் சம்பந்தப்பட்ட எல்லாப் பயிற்சிகளுக்கும் போயிடுவேன். பயிற்சிகள் மூலமா எனக்கு 'துகிலி’ சுப்பிரமணியன் அய்யாவோட பழக்கம் ஏற்பட்டுச்சு. அவர்தான் ஊடுபயிர் வெள்ளாமை பத்தி எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.
ஒன்றரை ஏக்கரில் 740 மரங்கள்!
அதுக்குப் பிறகுதான் தென்னந்தோப்புக்குள்ள வாழை, பாக்கு, கோகோ...னு ஊடுபயிர்களை நட ஆரம்பிச்சேன். இப்போ இந்த ஒண்ணரை ஏக்கர்ல 110 தென்னை, 25 பெருநெல்லி, 460 கோகோ, 30 பாக்கு, 2 மா, 4 கொய்யா, 9 சீத்தா, 4 ராம் சீத்தா, 10 பலா, 3 சாத்துக்குடி, 2 ஆரஞ்சு, 3 பப்ளிமாஸ், 3 நாரத்தை, 3 சிறுநெல்லி, 15 தேக்கு, 15 குமிழ், 20 மகோகனி, 4 அத்தி, 3 எலுமிச்சை, 10 செண்பகம்... உள்பட 740 மரங்கள் இருக்கு.
வழிகாட்டும் பசுமை விகடன்!
மலையில விளையுற காப்பி, மிளகு இதையெல்லாம்கூட போட்டுப் பாத்தேன். ஓரளவுக்கு நல்லாவே வந்திருக்கு. 'பசுமை விகடன்’ மூலமா தெரிஞ்சுகிட்ட ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டி, பஞ்சகவ்யா... எல்லாத்தையும் தயாரிச்சு தோட்டத்துல பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். பசுமை விகடனைப் பார்த்தே மஞ்சள் சாகுபடியும் பண்ணினேன். அதுவும் நல்லா வருது.
வேலியில் வெற்றிலை... வரப்பில் வெட்டிவேர்!
தோட்டத்தைச் சுத்தியும் உயிர்வேலி போட்டு அதுல வெத்தலைக்கொடியை ஏத்தி விட்டிருக்கேன். தோட்டத்துக்குள்ள மண் அரிமானத்தைத் தடுக்கறதுக்காக வரப்புலயெல்லாம் வெட்டிவேர் நடவு செஞ்சிருக்கேன். ரெண்டு கொட்டகை போட்டு, தொட்டி கட்டி, மண்புழுக்களையும் வளர்த்துக்கிட்டிருக்கேன். ஆரம்பத்துல வெளிநாட்டு மண்புழுக்களைத்தான் விட்டேன். அது சரிப்பட்டு வராததால நாட்டு மண்புழுக்களை வளர்க்க ஆரம்பிச்சுட்டேன்.
தென்னை மரத்தில் இருந்து கிடைக்கிற கழிவு, மத்த மரங்கள்ல இருந்து கிடைக்கிற எல்லா கழிவுகளையும் மூடாக்கா போட்டுடுவேன். அதுபோக மிச்சமிருக்குற கழிவுகள மண்புழுத் தொட்டிக்குள்ள போட்டுடுவேன்' என்ற சோமு, நிலத்தைச் சுற்றிக் காட்டியபடியே அடுக்கடுக்காக பயிர் சாகுபடி செய்யும் முறை பற்றி விளக்க ஆரம்பித்தார்.
25 அடி இடைவெளி வேண்டும்!
''25 அடிக்கு 25 அடியில் தென்னை நட்டிருந்தால்தான் அங்கே அடுக்குப்பயிர் சாகுபடி செய்ய முடியும். 12 அடி இடைவெளியில் கோகோ கன்றுகளை நடவு செய்ய வேண்டும். தென்னை மற்றும் கோகோ ஆகியவற்றுக்கு இடையே சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில், வாழை நடவு செய்ய வேண்டும் (மோரீஸ், கற்பூரவள்ளி, பூவன்... உள்ளிட்ட 11 வாழை ரகங்களை நடவு செய்துள்ளார்). அடுத்து ஒன்றரை அடி இடைவெளியில் இரண்டடி பார் எடுத்து மஞ்சள் நடவு செய்யலாம்.
களையைக் கட்டுப்படுத்தும் மூடாக்கு!
மஞ்சளுக்கு இடைவெளி அரையடி இருக்க வேண்டும். நடவு செய்த பிறகு, இலை தழைகள் மற்றும் செய்தித்தாள்களைக் கொண்டு மூடாக்கு அமைத்து விட்டால், களை பிரச்னை இருக்காது. இவை போக, இருக்கும் இடங்களில் எல்லாம் பாக்கு, தேக்கு, குமிழ்... போன்ற மரங்களையும் பல வகையான பழ மரங்களையும் தேவைக்கேற்ப நடவு செய்து கொள்ளலாம்.
பூச்சிகள் தாக்குவதில்லை!
2 டன் மண்புழு உரம், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 100 கிலோ புங்கன் பிண்ணாக்கு, 1 கிலோ அசோஸ்பைரில்லம், 1 கிலோ பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, நிலம் முழுக்க இடவேண்டும். இது ஒன்றரை ஏக்கரில் உள்ள அனைத்துப் பயிர்களுக்குமே போதுமானதாக இருக்கும். 3 மாதங்களுக்கு ஒரு முறை இப்படி நிலத்துக்குக் கொடுக்க வேண்டும்.
20 நாட்களுக்கு ஒரு முறை, ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் ஜீவாமிர்தக் கரைசலை சொட்டுநீரில் கலந்து விடலாம். 20 லிட்டர் பஞ்சகவ்யாவை, 60 லிட்டர் தண்ணீரில் கலந்து, சொட்டுநீர் மூலமாக பாசனம் செய்யலாம்
முழு இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் குறைவாகத்தான் இருக்கும். ஏதேனும் பூச்சிகள் தாக்கினால், 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் மூலிகைப்பூச்சி விரட்டியைக் கலந்து தெளிக்க வேண்டும். வாழையில் ஐந்து வருடங்கள் வரை பக்கக்கன்றுகளை மறு தழைவாக விடலாம். அதற்குப் பிறகு, மொத்தமாக அழித்து விட்டு வேறு இடத்தில் நடவு செய்ய வேண்டும். பெரும்பாலும், அனைத்து வகை மரங்களுமே மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் பலன் கொடுக்க ஆரம்பித்து விடும்.''
ஒன்றரை ஏக்கரில் 3,89,000 ரூபாய்!
சாகுபடி விவரங்களை விவரித்து முடித்த சோமு, 'நான் தேங்காய்களைப் பறிக்கிறதில்ல. கீழ விழுறதை மட்டும்தான் விற்பனை செய்றேன். 110 மரங்கள் மூலமா வருஷத்துக்கு 17,000 காய்களை விற்பனை செய்றேன். சராசரியா ஒரு காய்க்கு அஞ்சு ரூபா விலை கிடைக்குது. நெத்துக்காய்கள்ல இருந்து 4,000 நாத்துக்களை உற்பத்தி பண்ணி, ஒரு நாத்து 20 ரூபாய்னு விக்கிறேன். மொத்தமா தென்னையில இருந்து 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கிடைக்குது.
வருஷத்துக்கு 360 வாழைத்தார் விற்பனை மூலமா 45 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. மஞ்சளை, விதைமஞ்சளா கொடுத்தது போக, மீதியை அவிச்சு நானே தூளாக்கி விக்கிறேன். போன வருஷம் 5 டன் மஞ்சள் மகசூல் கிடைச்சது. 4 டன் மஞ்சளை அவிச்சுக் காய வெச்சு அரைச்சதுல 450 கிலோ பவுடர் கிடைச்சுது. 1 டன் விதைமஞ்சளை கிலோ 40 ரூபாய்னு வித்ததுல
40 ஆயிரம் ரூபாயும்... மஞ்சள் தூள் கிலோ 200 ரூபாய்னு வித்ததுல 90 ஆயிரம் ரூபாயும் கிடைச்சுது.
கிடைக்கிற பழங்களை வீட்டுத் தேவைக்குப்போக விக்கிறதுல வருஷத்துக்கு 10 ஆயிரம் ரூபாயும், வேலியில இருக்கற வெத்திலை மூலமா 20 ஆயிரம் ரூபாயும் கிடைக்குது.
ஆரம்பத்துல பத்து பாக்கு மரத்தைதான் நட்டிருந்தேன். அதுல இருந்து விழுந்த விதைகள் மூலமா முளைச்சு இப்போ 30 மரம் இருக்கு. இந்த மாதிரி முளைக்கிற நாத்துகளையும் எடுத்து வித்துக்கிட்டிருக்கேன். வெட்டிவேர், பாக்கு நாத்து மூலமா வருஷத்துக்கு 19 ஆயிரம் ரூபாய் கிடைக்குது.
போன வருஷம் எல்லாம் சேர்த்து 3 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. தோட்டப் பராமரிப்பு, இடுபொருட்கள் தயாரிப்பு, வேலையாட்கள் கூலினு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவு போக, 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைச்சுது.
போன வருஷம்தான் இயற்கை விளைபொருள் சான்றிதழுக்காக விண்ணப்பிச்சுருக்கேன். அது கிடைச்சுதுனா... என் தோட்டத்துல விளையறதை இன்னும் கூடுதல் விலைக்கு விக்க முடியும்'' என்றார் சந்தோஷமாக.
படங்கள்: எஸ். தேவராஜன்
தொடர்புக்கு
சோமு, அலைபேசி: 94420-86431.
தொடர்புக்கு
சோமு, அலைபேசி: 94420-86431.
No comments:
Post a Comment