முகநூலில் (பேஸ்புக்) அறிமுகமாகி சுயதொழிலில் கைகோர்ப்பு
திண்டுக்கல் அருகே முகநூலில் (பேஸ் புக்) அறிமுகமான பொறியியல் பயின்ற இளைஞர்கள் 4 பேர் `கொட்டில்' முறையில் வெள்ளாடுகள் வளர்ப்பில் சாதனை படைத்து வருகின்றனர். இந்தத் தொழிலில் கைநிறைய வருமானம் கிடைப்பதால், முகநூலில் மற்ற படித்த இளைஞர்களையும் இந்த ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுத்த விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்வமே அடிப்படை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வடமலாபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் சிங்கப்பூரில் பொறியாளராக உள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் விருதுநகர் கருப்பசாமி நகரைச் சேர்ந்த பொறியாளர்கள் விஜயகுமார், மஸ்கட்டைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், கோவையைச் சேர்ந்த எத்திராஜ் ஆகியோர் நண்பர்களாகினர். இவர்கள், அடிக்கடி முகநூலில் ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு உள்ளூர் நடப்பு முதல் உலக அரசியல் வரை கலந்துரையாடுவர். அப்போது, இவர்களுக்கு விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழிலில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
அந்த ஆர்வத்தில், நான்கு பேரும் சேர்ந்து கிராமப்புறங்களில் லாபகரமான தொழிலாகக் கருதப்படும் வெள்ளாடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட முயன்றனர். அதற்காக, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் சிங்கப்பூர் பொறியாளர் ராமசாமி உறவினரின் தோட்டத்தில் 4 பேரும் வறட்சியால் எதற்கும் உதவாமல் கிடந்த மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கினர்.
ஆடு வளர்ப்பு விழிப்புணர்வு
அந்த நிலத்தில் பகுதி நேரமாக 30 ஆடுகள், ஒரு கிடா வாங்கி கொட்டில் முறையில் வளர்க்க, பரண் வீடு அமைத்து அதில் ஆடுகளை வளர்க்கின்றனர். மற்ற இடத்தில் ஆடுகள் விரும்பிச் சாப்பிடும் அகத்திக்கீரை, புல் ஆகிய தீவனங்களை வளர்த்தனர். ஆடுகளை, மேய்ச்சலுக்கு அனுப்பாமலேயே, கீரை, புல்களை சிறிதுசிறிதாக வெட்டி தீவனமாகக் கொடுத்தனர்.
ஆடுகள், தற்போது குட்டிப்போடத் தொடங்கிவிட்டதால் நான்கு பொறியியல் இளைஞர்களும் கை நிறைய சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். இதை தங்களுடைய மற்ற முகநூல் (பேஸ்புக்) நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி ஆடு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு செய்கின்றனர்.
கிராமப்புறங்களில் ஆடு வளர்ப்பதை கௌரவக் குறைச்சலாகக் கருதும் இந்தக் காலத்தில், பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் ஆடுகளை வளர்க்கத் தொடங்கியுள்ளதை கிராமவாசிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து விஜயகுமார் கூறியது:
அடிப்படையில் எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம். தற்போது படித்து கைநிறைய சம்பாதித்தாலும் விவசாயப் பணிகளில் கிடைக்கும் மனநிறைவு வேறு எந்தத் தொழிலிலும் கிடைக்காது. அதனால், விவசாயம் சார்ந்த ஆடு வளர்ப்புத் தொழிலில் சாதிக்கலாம் என நினைத்தோம். ஆடுகளை, பொருத்தவரையில் ஒரு வயதிலேயே இனவிருத்திக்குத் தயாராகி விடுகிறது.
சினைக் காலம் 5 மாதங்கள் முடிந்து ஒன்றரை வயதில் குட்டிபோடத் தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு மூன்று முறை குட்டி போடுகிறது. மொத்தம் ஒரு ஆடு தனது ஆயுள் காலத்தில் 12 முதல் 15 குட்டிகள் வரை போடுகிறது. கடைசியில் அந்த ஆட்டையும் இறைச்சிக்கு விற்பனை செய்துவிடலாம்.
கைநிறைய வருமானம்
கொட்டில் முறையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் வளர்ப்பதால் அவற்றின் எடையும் அதிகமாக உள்ளது. தற்போது சாதாரணமாக ஒரு ஆட்டுக்குட்டி 5 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. குறிப்பிட்ட காலத்தில் கைநிறைய வருமானம் கிடைக்கும் இந்தத் தொழிலை, மற்ற இளைஞர்களும் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
Source:February 6, 2014 tamilhindu
2 comments:
May i get their Phone number
Thanks
Karthic
9894685604
Coimbatore
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238
Post a Comment