தென்னைக்கு இடையில் விரால்...
50 சென்ட் குளத்தில் 6 லட்சம் லாபம்
விவசாயத்தோடு... ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால், விவசாயிகளுக்கு என்றைக்குமே தோல்வி இல்லை. இதை நிரூபிக்கும் வகையில், தென்னந்தோப்புக்கு நடுவே விரால் மீன்களை வளர்த்து வருகிறார்கள், நண்பர்களான மாரிமுத்து, செல்லப்பாண்டியன்!
திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மூன்றாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சென்றால், ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வீரகளப்பெருஞ்செல்வி கிராமம். திரும்பியப் பக்கமெல்லாம் நிமிர்ந்து நிற்கும் வாழை மரங்கள், அந்த ஊரின் வளமையைச் சொல்லாமல் சொல்கின்றன. இக்கிராமத்தில்தான் இந்த நண்பர்களின் மீன் பண்ணை இருக்கிறது.
பசுமை விகடன்தான் வாத்தியார்!
''முதல் புத்தகம் வெளியான நாளிலிருந்தே நான், தீவிரமான 'பசுமை விகடன்’ வாசகர். அத்தனைப் புத்தகங்களையும் பத்திரமா சேத்து வெச்சுருக்கேன். அப்பப்போ விவசாயத்துல வர்ற சந்தேகங்களைத் தீர்த்து வெக்கிற வாத்தியார், பசுமை விகடன்தான். இப்போ என்னோட நண்பர் செல்லப்பாண்டியன், வெளியூர் போயிருக்காரு. வரும் போது, மறக்காம பசுமை விகடன் வாங்கிட்டு வந்துடுவாரு'' என்று உற்சாகமாக ஆரம்பித்த மாரிமுத்து,
சிறிய இடமே போதும் !
''ஒரு ஏக்கர்ல அம்பை பதினாறு ரக நெல்லும், ஒரு ஏக்கர்ல ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கோம். இது போக... அரை ஏக்கர்ல 21 தென்னை இருக்கு. எல்லாம் ஏழு வயசான மரங்கள். நடவு செய்யும்போதே 25 அடி இடைவெளி கொடுத்திருந்தோம்.
'6 சென்ட் குளம்... 10 மாதம்... 30 ஆயிரம்! விறு விறு லாபம் தரும் விரால் மீன்!’னு சமீபத்துல பசுமை விகடன்ல (10.11.10 தேதியிட்ட இதழ்) ஒரு கட்டுரை வந்திருந்துச்சு. அதைப் படிச்சதும்தான், 'சின்ன இடத்துலேயே இவ்வளவு லாபம் கிடைக்கும்போது... அரை ஏக்கர்ல இருக்கற தென்னைக்கு இடையில ஏன் விரால் மீன்கள வளர்க்கக் கூடாது?’னு தோணுச்சு. நண்பர் செல்லப்பாண்டியன்கிட்ட சொன்னேன். அவரும் இதுல ஆர்வமானதும்... ரெண்டு பேரும் சேர்ந்து விரால் வளர்க்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்.
சேவியர் கல்லூரியோட நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்துக்குப் போய், விரால் மீன் வளர்ப்புப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, உடனடியா வளர்க்க ஆரம்பிச்சுட்டோம். இதோ... பத்து மாசம் ஓடிப் போயிடுச்சு. மீனெல்லாம் விற்பனைக்குத் தயாரா இருக்கு'' என்றபடியே ஒரு மீனைப் பிடித்துக் காட்டிவிட்டு, விரால் மீன் வளர்ப்பு முறைகளை அடுக்க ஆரம்பித்தார், மாரிமுத்து.
நான்கடி உயரத்துக்குத் தண்ணீர் !
''தென்னைக்கு இடையில, 150 அடி நீளம், 18 அடி அகலம், 5 அடி ஆழத்துல தனித்தனியா ரெண்டு குளங்கள் வெட்டியிருக்கோம். எங்க தோட்டம் முழுக்கவே களிமண் பூமிங்கிறதால வண்டல் கொண்டு வந்து போட வேண்டிய அவசியமில்லாமப் போயிடுச்சு.
நாலடி உயரத்துக்குத் தண்ணீர் நிறுத்தி... ஸ்ரீவைகுண்டம் அணையில இருந்து ஒரு மாச வயசுள்ள விரால் குஞ்சுகளை வாங்கி விட்டோம். ஒரு குளத்துக்கு ஐயாயிரம் குஞ்சுகள்னு ரெண்டு குளத்துலயும் பத்தாயிரம் குஞ்சுகள்.
நிழல் கொடுக்க தாமரை !
மீன் குஞ்சுகள, பறவைகள்கிட்ட இருந்து காப்பாத்தறதுக்காக குளத்துக்கு மேல வலையைக் கட்டியிருக்கோம். தென்னை மரங்களோட நிழல் கிடைக்கறதால, மீன்களுக்கு வெயிலோட பாதிப்பு அதிகளவுல இருக்காது. கூடுதல் பாதுகாப்புக்கு, தாமரையையும் படர விட்டிருக்கோம்.
கொழுக்க வைக்கும் கொழிஞ்சி !
ரெண்டு மாச வயசு வரைக்கும், ரெண்டு குளத்துல இருக்கற மீனுகளுக்கும் சேர்த்து, ஒரு நாளைக்கு மூணு கிலோ கடலைப்புண்ணாக்கு போட்டோம். இதை ரெண்டா பிரிச்சு... காலையிலயும் சாயங்காலமும் போடலாம். மூணாவது மாசத்துக்கு மேல கொழிஞ்சி இலையை வெட்டி, சின்னச்சின்னக் கட்டுகளா கட்டி குளத்துக்குள்ள போட்டோம். அது தண்ணியில அழுகினதும், அதிலிருந்து நிறைய புழுக்கள் உருவாகும். அதை மீன்கள் நல்லா சாப்பிட்டு கொழுத்துடுச்சு. ரெண்டு குளத்துக்கும் சேர்த்து, ஒரு மாசத்துக்கு ஒரு டன் கொழிஞ்சி இலை தேவைப்பட்டுச்சு.
ஆறு மாதத்துக்கு மேல் கோழிக்கழிவு !
ஆறாவது மாசத்துக்கு மேல மீன்களுக்குக் கோழிக்கழிவுதான் தீவனம். கோழிக்குடல், கறினு கறிக்கடையில் வீணாகுற கழிவுகளை வாங்கிட்டு வந்து, வேக வெச்சு குளத்துக்குள்ள அங்கங்க போட்டுடுவோம். ரெண்டு குளத்துக்கும் சேத்து ஒரு நாளைக்கு நாப்பது கிலோ கோழிக்கழிவு போடுறோம். அதனால மீனுங்க நல்ல எடைக்கு வந்திருக்கு.
பற்றாக்குறைக்கு ஜிலேபி மீன்கள் !
1,000 விராலுக்கு 25 ஜிலேபி மீன் அப்படிங்கற கணக்குலயும் மீன்கள குளத்துல விட்டுருக்கோம். இந்த ஜிலேபி மீன்கள் அடிக்கடி குஞ்சு பொரிச்சுட்டே இருக்கும். நாம கொடுக்குற உணவு பத்தாதப்போ... இந்தக் குஞ்சுகள விரால் மீன்கள் பிடிச்சு சாப்பிட்டுக்கும்.
நோய்கள் தாக்காது !
விரால் மீனைப் பெரும்பாலும் எந்த நோயும் தாக்குறதில்லை. எப்பயாவது அம்மை மாதிரியான கொப்பளம் வரும். அந்த சமயத்துல மஞ்சளையும், வேப்பிலையையும் அரைச்சு தேங்காய் எண்ணெயில குழைச்சுத் தடவினா சரியாகிடும். வயலுக்கான பாசன நீர், பம்ப் செட்ல இருந்து முதல்ல மீன் குளத்துலதான் விழும். அதுக்குப் பிறகுதான்... வயலுக்குப் பாயும். அதனால இந்தத் தண்ணியே வயலுக்கு நல்ல உரமாயிடுது'' என்ற மாரியப்பன், நிறைவாக விற்பனை வாய்ப்புகள் பற்றிச் சொன்னார்.
தேடி வரும் சந்தை வாய்ப்பு !
''மீனைப் பிடிச்சு, சோதனைக்காக எடை போட்டுப் பார்த்தப்போ... குறைஞ்சபட்சமா முக்கால் கிலோவும் அதிகபட்சமா ஒண்ணே கால் கிலோ வரைக்கும் இருந்துச்சு.
10 ஆயிரம் குஞ்சுகள் விட்டதுல... இப்போ, '8 ஆயிரம் மீன் வரைக்கும் குளத்துக்குள்ள இருக்கும்’னு நினைக்கிறோம். பாதிக்குப் பாதி போனாலும், எப்படியும் 5 ஆயிரம் மீனுக்குக் குறையாது. தமிழ்நாட்டுல, தேவையான அளவுக்கு விரால் மீன் உற்பத்தி இல்லாததால, வியாபாரிகளே பண்ணைக்குத் தேடி வந்து கேட்டுக்கிட்டிருக்காங்க.
ஒரு மீன், முக்கால் கிலோனு வெச்சுக்கிட்டாலே, பிடிக்கிறப்போ மொத்தமா, 3 ஆயிரத்து 750 கிலோ மீன் கிடைக்கும். மொத்த விலையில ஒரு கிலோ 250 ரூபாய்னு போகுது. அதன்படி பார்த்தா, ரெண்டு குளத்துலயும் இருக்கற மீன்கள் மூலமா, 9 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
செலவெல்லாம் போக, எப்படி பாத்தாலும் ஆறு லட்ச ரூபாய்க்கு குறையாம லாபம் கிடைக்கும். இந்த லாபம் பசுமை விகடன் எங்களுக்குக் கொடுத்த பரிசு' என்றபடி நன்றிப் பெருக்கோடு விடை கொடுத்தார், மாரிமுத்து.
தொடர்புக்கு,
மாரிமுத்து,
செல்போன்: 98437-22112.
மாரிமுத்து,
செல்போன்: 98437-22112.
என். சுவாமிநாதன் படங்கள் எல். ராஜேந்திரன்
Source:pasumaivikatan
1 comment:
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238
Post a Comment