100% மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம்!
விவசாயத்தில் உள்ள தலையாய பிரச்னை, தண்ணீர் பற்றாக்குறைதான். இதனால், விவசாயத்தையே மூட்டை கட்டிவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகிறார்கள், பல விவசாயிகள். ஆனால், பாசன முறையை மாற்றி, குறைவான தண்ணீரிலேயே நிறைவாக விவசாயம் பார்க்கும் வழிமுறைகளும் பல உள்ளன. இப்படி மாறத் தயாராக உள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு... 100 சதவிகித மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது, தமிழக அரசு.
வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த மானியத் திட்டத்தைப் பற்றியும், அவற்றைப் பெறும் முறைகள் பற்றியும் விளக்குகிறார், திருவண்ணாமலை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருபாகரன்.
1.25 லட்சம் ஏக்கர் இலக்கு!
''பற்றாக்குறை நிறைந்த இன்றையச் சூழலில், கிடைக்கும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டியது அவசியம். நுண்ணீர்ப் பாசன முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம்தான் தண்ணீரைக் குறைவாகவும் முறையாகவும் பயன்படுத்த முடியும். 2011-2012-ம் ஆண்டில், தமிழகத்தில் நுண்ணீர்ப் பாசன இயக்கம் மூலம் 87 ஆயிரத்து 500 ஏக்கர், தமிழ்நாடு நீர்வள-நிலவளத் திட்டத்தின் மூலம் 37 ஆயிரத்து 500 ஏக்கர் என்று மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க, அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது.
சிறு-குறு விவசாயிகளுக்கு 100% மானியம்!
2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க சிறு-குறு விவசாயிகள், தங்களது பங்காக 25% தொகையை முதலீடு செய்ய வேண்டியிருந்தது. பெரு விவசாயிகள் 35% தொகையை அளிக்க வேண்டிஇருந்தது. ஆனால், அந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு தமிழக முதல்வரின் உத்தரவுப்படி... குறு விவசாயிகளுக்கும் (இரண்டரை ஏக்கர் நிலமுள்ளவர்), சிறு விவசாயிகளுக்கும் (5 ஏக்கர் வரை நிலமுள்ளவர்) 100% மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொடுத்து வருகிறோம்.
100% என்பது, 43 ஆயிரத்து 816 ரூபாய் வரையிலான செலவுகளுக்குத்தான் பொருந்தும். 12 மீட்டர் இடைவெளியில் சொட்டுநீர்க் குழாய்களை அமைத்தால், இந்தத் தொகை மூலமே 5 ஏக்கர் நிலத்தில் சொட்டுநீர்ப் பாசன முறையை அமைக்க முடியும்.
ஆனால், குறைவான இடைவெளியில் அமைத்தால், ஒரு ஏக்கர் அளவுக்குத்தான் சொட்டுநீர் பாசனம் அமைக்க முடியும். மேலும் உள்ள நிலங்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பினால், 75% மானியம் கிடைக்கும். பெரு விவசாயிகளுக்கு ஐந்து ஏக்கர் முதல் பன்னிரண்டரை ஏக்கர் வரை சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, 75% மானியம் கிடைக்கும். இந்த மானியத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 16 சதவிகிதம் பேருக்கும், பழங்குடியினரில்
8 சதவிகிதம் பேருக்கும் மானியத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
குத்தகை நிலத்துக்கும் மானியம் உண்டு!
மானியம் பெற வேண்டுமானால், போதுமான அளவுக்கு நீர் ஆதாரமும், நீர் ஏற்றுவதற்கு தேவையான மோட்டார்களும் இருக்க வேண்டும்.
மேலும், குறு-சிறு விவசாயிகளுக்கான சான்று, கணினி சிட்டா, அடங்கல், சாகுபடி நிலத்தின் வரைபடம், குத்தகை நிலமாக இருந்தால், 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்தப் பத்திரம் ஆகியவற்றைத் தயார் செய்து கொண்டு... வேளாண்மை இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நிறுவனத்தையும் தேர்வு செய்து, அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு, சொட்டுநீர்ப் பாசன நிறுவனம், நிலத்தை மதிப்பீடு செய்து, தனது அறிக்கையை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்கும். அந்த மதிப்பீடு சரி பார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும். அடுத்த 10 நாட்களில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாம்'' என்ற கிருபாகரன், நிறைவாக,
தெளிப்புநீர்ப் பாசனத்துக்கும் மானியம்!
''சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க முடியாத, மலைப்பகுதிகளில் தெளிப்புநீர்ப் பாசன முறையை அமைக்க, இதே அளவு தொகையை (43 ஆயிரத்து 816 ரூபாய்) மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். 430 சதுர மீட்டர் அளவுள்ள பசுமைக் குடிலின் உள் பகுதியில் பாசனம் அமைக்கவும், இதே மானியம் வழங்கப்படுகிறது.
பயறு வகைகளுக்குப் பாசனம் செய்ய தோட்டக்கலைத் துறையின் 'தேசியப் பயறு வகை உற்பத்தித் திட்ட’த்தின் மூலம் 100% மானியமாக 24 ஆயிரத்து 940 ரூபாய் செலவில் 'ரெயின் கன்’ வழங்கப்படுகிறது. கடலை போன்ற பயிர்களுக்கும் தெளிப்புநீர்ப் பாசனம் செய்ய 16 ஆயிரத்து
993 ரூபாய் அளவுக்கு பாசனக் கருவிகள் வழங்கப்படுகின்றன.
விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தைப் பயன்படுத்தி நிலங்களைத் தரிசாக்காமல் விவசாயம் செய்ய முன்வர வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார் விவசாயிகளுக்கு!
தொடர்புக்கு,
கிருபாகரன்,
செல்போன்: 98848-50522.
கிருபாகரன்,
செல்போன்: 98848-50522.
காசி. வேம்பையன்
Source: Pasumaivikatan
No comments:
Post a Comment