1,500 சதுரடியில் 50 வகை பயிர்கள்
மாநகருக்குள்ளே ஓர் அதிசயம் !
மாநகர வாழ்க்கைக்கே உரிய பிரத்யேக பரபரப்பு... தடதட ஓட்டம்... என துள்ளியோடிச் செல்பவர்கள்கூட, சென்னை, புரசைவாக்கத்தில் இருக்கும் அந்த வீட்டைக் கடக்கும்போது சில வினாடிகள் நிதானிக்கிறார்கள். காரணம்... மலர்கள், காய்கள், பழங்கள், செடிகள், கொடிகள் ஆகிவற்றோடு ஒரு குட்டி காடு போல அந்த வீடு காட்சியளிப்பதுதான்! தெருவிலிருக்கும் அந்த அழகான காட்டுக்குச் சொந்தக்காரர்... அமிர்தகுமாரி!
''விவசாயம் செய்யணும்னா... ஏக்கர் கணக்குல எல்லாம் நிலம் தேவையில்லை. ஆர்வமும் முயற்சியும் இருந்தா போதும்'' என்று அழுத்தமாகச் சொல்லியபடி பேச்சைத் துவக்கிய அமிர்தகுமாரி,
''நீலகிரி மாவட்டம் குன்னூர்ல ஆரம்பத்துல நாங்க இருந்தோம். அங்க இடவசதி நிறைய இருந்ததால, காய்கறிகளை வீட்டுலயே பயிர் பண்ணினேன். கணவரோட வேலை காரணமா சென்னைக்குக் குடி வந்தபிறகு, இங்கேயும் வீட்டைச் சுத்தி காலி இடத்தை விட்டு வைக்காம... காய்கறி, பூனு வளர்க்க ஆரம்பிச்சேன். கொட்டாங்குச்சி, காலி ஐஸ்கிரீம் டப்பா, கூல்டிரிங்ஸ் பாட்டில்னு எந்தப் பொருளா இருந்தாலும், வீணாக்காம செடிகளை வளர்த்துருவேன். நஞ்சு இல்லாத... ஆரோக்கியமான காய்கறிகளைச் சாப்பிடணும்கறதுக்காக... காய்கறிகளை இயற்கை முறையிலதான் உற்பத்தி செய்றேன்.
கிடைக்கற இலை, தழைகள், சமையலறைக் கழிவுகளை ஒரு பெரிய டிரம்மில் கொட்டி வெச்சு மட்கின பிறகு பயன்படுத்துறேன். காய்கறிச் செடிகள் இருக்குற தொட்டிகள்ல மண்புழுக்களையும் வாங்கி விட்டிருக்கேன். பூச்சிகள் தாக்கினா... வேப்பெண்ணெயைத் தண்ணியில கலந்து தெளிச்சுடுவேன்.
மொத்தம் 1,500 சதுரடியில மல்லி, மனோரஞ்சிதம், செம்பருத்தி, சங்குப்பூனு 30 வகையான பூக்கள்; கத்திரி, கொய்யா, வெண்டைக்காய், கரும்பு, வாழை, பப்பாளி, சப்போட்டா, மாதுளைனு 20 வகையான காய், கனிகள் இருக்கு. இதுபோக, வீட்டைச் சுத்தி நிறைய மரங்களும் இருக்கு. தாமரைப் பூ கூட என்கிட்ட இருக்கு'' என்று பெருமையோடு குறிப்பிட்ட அமிர்தகுமாரி,
''என்னோட ஓய்வு நேரம் மொத்தமும் இந்த செடி, கொடிகளோடதான். அதனால என் மனசு எப்பவும் இளமையாவே இருக்கு. வீட்டுக்கு வர்றவங்களுக்கும் இயற்கை முறையில விளைஞ்ச காய்கறி, பழம்னு கொடுக்கும்போது, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றார் முகம் நிறைந்த பூரிப்போடு.
படங்கள்: ப. சரவணகுமார், நா. சிபிச்சக்கரவர்த்தி
Source:pasumaivikatan
No comments:
Post a Comment