ஆயுளைக் கூட்டும் அற்புத அரிசி
பலகாரத்துக்கேற்ற ரகம், சாதத்துக்கு ஏற்ற ரகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற ரகம்... என்று பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றுக்குமே ஒவ்வொரு சிறப்பு குணமுண்டு. இதற்காகவே, இயற்கை வழி முறையில் விவசாயம் செய்பவர்கள் இப்படிப்பட்ட ரகங்களைத் தேடிப்பிடித்து பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்... போன்ற நோய்களை விரட்டும் மருத்துவ குணமுள்ள 'காலா நமக்’ எனப்படும் பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், பெரிய கொழப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மணி.
இவர், 25.1.2012 தேதியிட்ட இதழில், வெளியான 'வறட்சியிலும் வாடாத வரகு... பாடில்லாமல் தருமே வரவு!’ கட்டுரை மூலமாக வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.
கல்வி கொடுத்த ஐ.ஆர்.-8!
''நான், எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சிட்டு, பி.யூ.சி. படிக்க தாத்தாகிட்ட பணம் கேட்டேன். 'படிக்கப் போக வேண்டாம், தறி நெய்ற வேலையைப் பார்’னு சொல்லிட்டார். அந்த சமயத்துலதான் ஐ.ஆர்.-8 நெல் ரகத்தை அறிமுகப்படுத்துனாங்க. அதை சாகுபடி செய்றதுக்கு ஏக்கருக்கு 400 ரூபாய் கூட்டுறவு சங்கம் மூலமா கடனும் கொடுத்தாங்க. ரேடியோவுல இந்த விஷயத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, 'கூட்டுறவுக் கடனை வாங்கிக் கொடுங்க ஒரு ஏக்கர்ல பயிர் வெச்சு, வழக்கமா விளையுற 15 மூட்டையை உங்களுக்குக் கொடுத்துடறேன். மீதியை நான் எடுத்துக்கிறேன்’னு தாத்தாகிட்ட கேட்டேன். அவரும் வாங்கிக் கொடுத்தார்.
ஐ.ஆர்.-8 ரகத்தை சாகுபடி பண்ணுனப்போ, ஒரு ஏக்கர்ல 80 மூட்டை (75 கிலோ) நெல் கிடைச்சது. அதுல 40 மூட்டையை வீட்டுக்குக் கொடுத்திட்டு, 40 மூட்டையை வித்துதான் நான் படிச்சேன். அதுக்கப்பறம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல பேராசிரியரா வேலை பார்க்கும்போதுதான், ரசாயன விவசாயத்தோட பாதிப்பைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, திரும்பவும் இயற்கை முறை விவசாயத்துக்கே திரும்பிட்டேன்.
எனக்கு இயற்கை விவசாயம் செய்யவும், விவசாயத்துல புதுவிதமான தொழில்நுட்பங்களைச் சிந்திக்கவும் தூண்டி விட்டது, நம்மாழ்வாரும்... பசுமை விகடனும்தான்'' என்று முன்கதை சொன்னவர், தொடர்ந்தார்.
'இப்ப 40 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டிருக்கேன்.
5 ஏக்கர்ல தென்னை, மா, குமிழ் இருக்கு. ஒன்றரை ஏக்கர்ல வெட்டிவேர்; ஒன்றரை ஏக்கர்ல பசுந்தீவனம்; 10 ஏக்கர்ல வரகுனு இருக்கு. 14 ஏக்கர்ல இருந்த பொன்னியை அறுவடை பண்ணியாச்சு. ரெண்டு ஏக்கர்ல சீரக சம்பா நெல் இருக்கு. அரை ஏக்கர்ல அடுத்த போகத்துக்கு நாத்து விட்டிருக்கேன். அரை ஏக்கர்ல கருங்குறுவை நெல்லும், நாலு ஏக்கர்ல 'காலா நமக்’ நெல்லும் அறுவடைக்குத் தயாரா இருக்குது. மீதி ஒரு ஏக்கர்ல கட்டடமும் வண்டிப்பாதையும் இருக்கு'' என்றவர், 'காலா நமக்’ ரகத்தைப் பற்றிச் சொன்னார்.
புத்தருக்குப் பிடித்த ரகம்!
''காலா என்ற சொல்லுக்கு ஹிந்தியில 'கருப்பு’னு அர்த்தம். 'நமக்’னா 'உப்பு’னு அர்த்தம். உடம்புக்கு மொத்தம் 72 வகையான தாது உப்புகள் தேவையாம். அதுல கிட்டத்தட்ட 40 தாது உப்புகள் இந்த காலா நமக் ரக நெல்லுல இருக்கறதா சொல்றாங்க.
மூளை நரம்பு இயங்காமை, சிறுநீரகப் பிரச்னை, கேன்சர், தோல் சம்பந்தமான நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்கள்னு நிறைய நோய்கள் இந்த ரக அரிசியை சாப்பிட்டா கட்டுப்படும்.
புத்தர் இந்த அரிசியில செஞ்ச உணவை மட்டும் சாப்பிடுவாராம். இப்பவும் புத்த பிட்சுக்கள் எங்க போனாலும், இந்த நெல்லையும், அரிசியையும் கையோட எடுத்துக்கிட்டுப் போறாங்க. அவங்கள்லாம் அதிக வயசு வாழறதுக்குக் காரணம் இந்த அரிசிதான்'' என்று வரலாற்றுத் தகவல்களைச் சொல்லி பிரமிப்பூட்டியவர், காலா நமக் நெல் சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார். அவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.
ஏக்கருக்கு 30 கிலோ விதை!
காலா நமக் ரகத்தின் வயது 120 நாட்கள். ஆடி முதல், கார்த்திகை வரை உள்ள மாதங்களில் சாகுபடி செய்யலாம். சாதாரண நடவு முறையில் ஏக்கருக்கு 30 கிலோ விதைநெல் தேவைப்படும். ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய, 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைப் போட்டு, ரெண்டு சால் சேற்று உழவு செய்து நிலத்தை சமப்படுத்திக் கொள்ள வேண்டும். 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் அமுதக்கரைசல் கலந்து, அதில் 30 கிலோ விதைநெல்லை சணல் சாக்கில் இட்டு கட்டி, 12 மணி நேரம் ஊறவைத்து எடுத்து... தண்ணீரை வடித்து 12 மணி நேரம் இருட்டறையில் வைத்திருக்க வேண்டும். பிறகு நான்கு அங்குல உயரத்துக்கு நாற்றங்காலில் தண்ணீர் கட்டி விதைக்க வேண்டும்.
12 மணி நேரம் கழித்து, நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும். இது போல நான்கு நாட்களுக்குச் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் முளைப்பு எடுத்து விடும். அதற்குப் பிறகு தண்ணீரை வடிக்க வேண்டியதில்லை. 10-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் வடிகட்டிய மாட்டுச் சிறுநீரைக் கலந்து தெளித்தால், பூச்சி-நோய் தாக்குதல் இருக்காது. நாற்றும் நன்றாக வளர்ந்து வரும். 25 முதல் 30 நாட்களுக்குள் நடவுக்குத் தயாராகி விடும்.
நாற்று தயாராகும் சமயத்திலேயே நடவு வயலையும், தயார் செய்துவிட வேண்டும். நடவு வயலில் இரண்டு சால் சேற்று உழவு செய்து சமப்படுத்தி, ஏக்கருக்கு 200 கிலோ தொழுவுரத்தை இட்டு, சாதாரண முறையில் அரையடி இடைவெளியில் குத்துக்கு, இரண்டு மூன்று நாற்றுக்களாக நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20-ம் நாளில் தொழுவுரம் இடவேண்டும். 25-ம் நாளில் கைகளால் களை எடுக்க வேண்டும். அதற்குமேல் பயிர் வளர்ந்து மூடிக் கொள்வதால், களைகள் வளர்வதில்லை.
மகசூலைக் கூட்டும் மோர்க் கரைசல்!
90-ம் நாளில் கதிர் பிடிக்கத் துவங்கும். இச்சமயத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் மோர் (ஒரு வாரம் வரை புளிக்க வைத்தது) என்ற விகிதத்தில் கலந்து... ஏக்கருக்கு 10 டேங்க் தெளித்துவிட வேண்டும். இதனால், சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படும். 105-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் துவங்கும். 110-ம் நாள் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி, 120-ம் நாளில் அறுவடை செய்யலாம்.
ஏக்கருக்கு 54 ஆயிரம் ரூபாய் !
நிறைவாகப் பேசிய மணி, ''தூருக்கு இருபதுல இருந்து இருபத்தஞ்சு சிம்புகளும், ஒரு சிம்புக்கு நூத்தி இருபதுல இருந்து, நூத்தம்பது மணிகளும் இருந்துச்சு. அறுவடை செஞ்சப்போ, ஏக்கருக்கு 20 மூட்டை (75 கிலோ) கிடைச்சுது. எப்பவும் நான் அரிசியா மாத்திதான் விப்பேன்.
நான் மருத்துவரா இருக்கறதால, என்கிட்ட சிகிச்சைக்காக வர்றவங்களே பெரும்பாலும் வாங்கிடறாங்க. மீதியை பசுமை அங்காடிகள் மூலமா விற்பனை பண்ணிடறேன்.
ஒரு மூட்டைக்கு 45 கிலோ அரிசி வீதம் 20 மூட்டைக்கு 900 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ 60 ரூபாய்னு வித்தா... 54 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு போக, 39 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்'' என்று சொல்லி சந்தோஷமாக விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
மணி, செல்போன்: 96294-66328.
மணி, செல்போன்: 96294-66328.
மகசூலைக் கூட்டும் கழுநீர்!
மணி, மாட்டுக் கொட்டகை கழுவிய நீரையும் உரமாகப் பயன்படுத்தி வருகிறார். அது பற்றிப் பேசிய அவர், ''இயற்கை விவசாயத்துக்காக நாட்டுமாடுகளை வெச்சுருக்கேன். வழக்கமா எரு மட்டும் போடுற நிலத்தைவிட, ஆட்டுக்கிடை மடக்குற நிலத்துல அதிக மகசூல் கிடைக்கும். அதுக்கு காரணம் ஆடுகளோட மூத்திரமும் நிலத்துல விழறதுதான்.
இதை வெச்சே... மாட்டுச் சாணத்தையும், மூத்திரத்தையும் சேர்த்தே வயல்ல விடலாம்னு நினைச்சேன். அதுக்காக, 60 அடி நீளம், 20 அடி அகலம், 8 அடி ஆழத்தில் கான்கிரீட் தொட்டி கட்டியிருக்கேன். மாடு கட்டுற இடத்துல கிடைக்கற மூத்திரம், சாணத்தைக் கழுவி இந்த தொட்டியில விட்டு, நாலு நாள் தேக்கி வெச்சா அதுல நிறைய நுண்ணுயிரிகள் பெருகிடும். அந்தத் தண்ணியை வாரம் ஒரு தடவை நெல் வயலுக்கு விடுறப்போ மகசூல் கூடுது. இந்தத்தொட்டி மேல ஆடு, கோழி, புறானு வளர்க்கப் போறேன். அதுங்களோட எச்சமும் சேர்றதால... இன்னும் சத்துள்ள உரத்தண்ணி கிடைக்கும்'' என்று தொழில்நுட்ப தகவல்களைப் பகிர்ந்தார்.
இயற்கைக்கு மரியாதை!
சென்னை, அடையாறு கஸ்தூர்பா நகரில் செயல்பட்டு வரும் 'ரீ-ஸ்டோர்’ இயற்கை அங்காடியின் 5-ம் ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. சித்த மருத்துவர்
கு. சிவராமன், 'நம்ம சென்னை’ பத்திரிகையின் ஆசிரியர் அரவிந்தன், 'ரீ-ஸ்டோர்’ இயற்கை அங்காடியின் நிறுவனர் மற்றும் தன்னார்வலர் சங்கீதா ஸ்ரீராம், எழுத்தாளர் பாமயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சங்கீதாஸ்ரீராம் எழுதிய 'பசுமைப் புரட்சியின் கதை’ புத்தக அறிமுக விழா நடைபெற்றது. விழாவில், செங்குன்றத்தைச் சேர்ந்த நேதாஜி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை சேர்ந்த கோதண்டராமன், திருத்தணியைச் சேர்ந்த சித்தம்மா மற்றும் குன்னூர், நெல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர். இறுதியில் சுவையான சிறுதானிய உணவு விருந்தும் நடைபெற்றன.
த. ஜெயகுமார். படங்கள்: பீரகா வெங்கடேஷ்
காசி. வேம்பையன் , படங்கள்: கா. முரளி
Source:pasumaivikatan
No comments:
Post a Comment