ஆண்டுக்கு 400 காய்கள்...
இனிக்கும் இளநீர்...கொழிக்கும் மகசூல்...!
'தென்னை செழித்தால்... பண்ணை செழிக்கும்’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதை உண்மையாக்கி, தனது வாழ்க்கையையும் செழிப்பாக்கி இருக்கிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி ராஜேந்திரன். பொள்ளாச்சி பகுதியே செழிப்பான பூமி. அதிலும் ஆழியார் அணையை ஒட்டிய பகுதி என்றால், கேட்கவா வேண்டும்! இங்கே இருக்கும் புளியங்கண்டி பகுதியில்தான் பசுமை கட்டி நிற்கிறது, ராஜேந்திரனின் தென்னந்தோப்பு!
இங்கு மட்டுமல்ல பகுதி முழுக்கவே தென்னந்தோப்புகள் செழிப்பாகத்தான் நிற்கின்றன. ஆனால், 'தென்னையில் பெரிதாக லாபம் இல்லை’ என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் குரலாக இருக்கிறது. அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போலத்தான் தேங்காயின் விலை நிரந்தரமாக 2 ரூபாய் 3 ரூபாய் என்றே நீடித்துக் கொண்டிருக்கிறது! ஏதோ வரவுக்கும் செலவுக்கும் சரி என்கிற வகையில்தான் பலரும் தென்னை விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்!