மனிதர்களுக்குத் தேவையான புரதச்சத்து மிகுந்த உணவினை அளிப்பதில் வளர்ப்பு விலங்குகளின் பங்கு வெகுவாக இருந்து வருகின்றது. இத்தகைய வளர்ப்பு விலங்குகளிலிருந்து பெறப்படும் இறைச்சியானது பெருமளவு புரத அமிலங்களையும், கொழுப்பு அமிலங்களையும் மற்றும் கனிமச் சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இறைச்சி என்பது முழுவதுமாகச் செரிக்கப்படக் கூடியதும், அனைத்துச் சத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான சரிவிகித உணவுப் பொருளாகும்.
இன்றைய மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள், மேலைநாடுகளின் நாகரீக மோகம் மற்றும் மென்பொருள் தொழிலகங்களில் பணிபுரியும் இன்றைய யுவன்களும் யுவதிகளும் அதிக உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்துகொண்டே செயல்படும் நிலையில் உள்ளனர். அதனால் எரிசக்தி அவர்களில் அவ்வளவாக செலவாவதில்லை. ஆனால் அதே சமயத்தில் எரிசக்தி நிறைந்த, கொழுப்புச்சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர்.