தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம்.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னை, பனை, பாக்கு உள்பட கிளையில்லாத அனைத்து உயரமான மரங்களிலும் ஏறுவதற்கான கருவி தற்போது சந்தைகளில் விலைக்குக் கிடைக்கிறது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த டி.என். வெங்கட் (என்கிற) ரெங்கநாதன் வடிவமைத்த கருவி உயரமான மரங்களில் ஏறுவதை மிகவும் எளிதாக்கியுள்ளது.
இந்தக் கருவியை வடிவமைத்த தனது அனுபவம் குறித்து வெங்கட் கூறியதாவது:
25 ஆண்டுகள் ஜவுளி ஆலையில் நான் தொழிலாளியாகப் பணியாற்றினேன். 1999-ம் ஆண்டு ஆலையை மூடி விட்டார்கள். அப்போதுதான் தென்னை மரம் ஏறும் கருவியை வடிவமைப்பதற்கான எண்ணம் என்னிடம் ஏற்பட்டது.தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தேங்காயின் தேவை அதிகமாக இருக்கும். அப்போது தென்னந் தோப்புகளை வைத்திருப்பவர்கள் காய்களை வெட்டி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் மரம் ஏறி காய் வெட்ட ஆள் கிடைக்காமல் பல விவசாயிகள் அல்லல்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் கருவியை வடிவமைக்கத் தொடங்கினேன். என் சித்தப்பா குருசாமி வைத்திருந்த பட்டறை என்ஜினீயரிங் கண்ணோ ட்டத்தோடு கருவியை வடிவமைப்பதற்கான பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது.
2005-ம் ஆண்டில் நான் உருவாக்கியதுதான் தென்னை மரம் ஏறும் கருவி. தென்னை மரத்துக்கு மட்டுமின்றி, பனை மரம் ஏறும் கருவி, பாக்கு மரம் ஏறும் கருவி ஆகியவற்றையும் உருவாக்கினேன். எனது கண்டுபிடிப்பு பற்றி அறிந்த புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான தேசிய நிறுவனம் (National Innovation Foundation), மதுரை சேவா மற்றும் நபார்டு போன்ற நிறுவனங்கள் எனது கருவியை பிரபலப்படுத்த பல உதவிகளை செய்தன. NIF நிறுவனத்தின் உதவியால் எனது கண்டுபிடிப்புக்கு நான் காப்புரிமை பெற்றேன்.
பாரம்பரிய அறிவைப் பயன்ப டுத்தி அரிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்துவோருக்காக மத்திய அரசின் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை வழங்கும் தேசிய விருது 2012-ம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது. எனது கண்டுபிடிப்புக்காக மேலும் பல விருதுகள் கிடைத்துள்ளன. குஜராத் மாநில அரசு எனது கண்டுபிடிப்பை பெரிதும் ஊக்கப்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகம் என்னிடமிருந்து 150 கருவிகளை விலைக்கு வாங்கியது. தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் நான் வடிவமைத்த கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இலங்கை, ஆஸ்திரேலியா, மாலத்தீவு, மொரீசியஸ் உள்பட உலகின் பல நாடுகளில் எனது கருவி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
தென்னை, பனை மற்றும் பாக்கு மரங்களில் ஏற தனித்தனி கருவிகளை வடிவமைத்த நான், ஒரே கருவியின் மூலம் கிளை கள் இல்லாத அனைத்து வகை உயரமான மரங்களிலும் ஏறு வதற்கான புதிய கருவியை தற்போது வடிவமைத்துள்ளேன். பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் இந்தக் கருவியைப் பயன்படுத்தி பாதுகாப்பாக மரத்தின் உச்சிக்கு சென்று காய்களைப் பறிக்க முடியும். 60 அடி உயரமுள்ள மரத்தில் 5 நிமிட நேரத்துக்குள் ஏறி, இறங்கலாம்” என்றார் வெங்கட். எல்லா வகை உயரமான மரங்களிலும் ஏறுவதற்கு ஏற்ற புதிய கருவியை வெங்கட் விற்பனை செய்கிறார்.
மேலும் விவரங்களுக்கு 99442 84440 என்ற செல்போன் எண்ணில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.
Source: tamil.thehindu.com