வேலியில் மட்டுமல்ல, தோப்பிலும்..... கசக்கும் வேம்பில் இனிக்கும் லாபம்
வைக்கோல் புரியில் வேப்பிலை செருகி தயாரிக்கப்பட்ட தோரணங்கள், தெருக்களில் பசுமைக் கூட்டும். மூங்கில் கழியில் வேம்பும், நவதானியமும் வைத்து கன்னிமூலையில் பந்தல்கால் நடுவார்கள்.
இப்படி தெய்வமாகவே வழி படப்படும் அளவுக்கு மக்கள் மனதில் வேம்பு பதிந்திருப் பதற்குக் காரணம்... மிகமிகச் சிறந்த கிருமிநாசினியாக இன்ற ளவிலும் அவர்களுக்கு அது கைகொடுத்துக் கொண்டிருப் பதுதான். அம்மை உள்ளிட்ட பலநோய்களுக்கும் அதைத்தான் கைகண்ட மருந்தாக பயன் படுத்தி வருகின்றனர் நம் மக்கள்.
கோயில் இல்லாத ஊர்கள் கூட இருக்கும்... ஆனால், வேப்பமரம் இல்லாத ஊரே இல்லை எனும் அளவுக்கு வேலி, குளக்கரை, பள்ளிக்கூட வளாகம், அரசு அலுவலக வளாகம், வீட்டு வாசல் என தமிழகத்தில் எங்கெங்கும் வேம்பு வின் அரசாட்சிதான்.
இங்கு மட்டுமல்ல... உலகின் பல நாடுகளி லும் வேம்புவுக்கு இருக் கும் மரியாதையே தனி. கடந்த நாற்பது ஆண்டுகளாக வேம்பு பற்றிய ஆராய்ச்சி உலக அளவில் நடந்து வருகிறது. இதுபோன்ற காரணங் களால், வேம்புவுக்கு மேலும் மரியாதை கூடிக்கொண்டிருக்கிறது. இதனால் வேம்புவை தனிப்பயிராக பயிரிட ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர் பலரும். மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உருவாகி நிற்கும் பெரிய பெரிய வேப்பந்தோப்புகளே இதற்கு சாட்சி!
வேர் முதல் பழம் வரை!
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், பெரியவள்ளிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரமோகன் (அலைபேசி 94431-10449), சுமார் 9 ஏக்கர் அளவுக்கு வேம்பு பயிரிட்டி ருக்கிறார். அத்தோடு, வியாபாரியாகவும் அவதாரமெடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்.
''பொருளாதார ரீதியில் இது லாபகரமானதா?'' என்பது உள்ளிட்ட கேள்விகளோடு... அவரு டைய தோட்டத்தில் நாம் கால் பதித்தபோது விலாவாரியாக பேச ஆரம்பித்தார் சந்திரமோகன்.
‘‘வேர், பூ, இலை, பழம், விதை என்று வேம்பிலிருந்து கிடைக்கும் அத்தனையுமே பலன் தருபவைதான். அதிலும் வேப்ப மரத்துக்கு இருக்கும் மவுசு அதிகம். கன அடி 500 ரூபாய் என்று விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால்... தேவையான அளவுக்கு வேம்புப் பொருட்கள் கிடைப்பதில்லை என்பது தான் குறை.
குறைந்த அளவே மழை இருந்தாலும், வறட்சி யைத் தாங்கி, 44 டிகிரி சென்டிகிரேட் வெயிலையும் தாங்கி, எங்கள் ஊரின் கரிசல் மண்ணிலும் கூட வளரும் தன்மை கொண்டது வேம்பு. இதைத் தனிப்பயிராக சாகுபடி செய்ய நினைத்தேன். கணக்குப் போட்டுப் பார்த்தில், வேலிக்கருவேல் மரத்தைக் காட்டிலும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது தெரிந்தது. தைரியமாகக் களமிறங்கினேன்’’ என்று முன்னோட்டமாகச் சொன்ன சந்திரமோகன், சாகுபடி குறிப்புகளை பட்டியலிட்டார்.
நாற்றுகள் ஜாக்கிரதை!
''வேப்பங்கன்றுகளை நடவு செய்வதற்கு முன்பாக டிராக்டர் கொண்டு இரண்டு சால் உழவு ஓட்டினால், களைகளை முற்றாகத் தடுக்கமுடியும். 8 ஙீ 8 அடி இடைவெளியில்... ஒரு அடி ஆழம், அகலம், நீளம் உள்ள குழி எடுத்து குழிகளில் குப்பை உரம் மற்றும் மேல் மண் கொண்டு மூடி தயாராக வைக்கவேண்டும். பிறகு, விதை மூலம் வளர்க்கப் பட்ட வேம்பு நாற்றுகளை (இப்போது திசு வளர்ப்பு வேப்பங்கன்றுகளும் கிடைக்கின்றன) அந்தக் குழிகளில் நடவு செய்யவேண்டும். ஒரு ஏக்கரில் 680 கன்றுகள் வரை நடவு செய்யலாம்.
நாற்றுப் பண்ணைகளில் (நர்சரி) நாற்று வாங்கும்போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. நாற்று வீரியமானதாக இருக்கவேண்டும். அடித்தண்டு ஊக்கமாக, வாளிப்பாக, நேராக வளர்ந்த நாற்றுகளாகப் பார்த்துத் தேர்வு செய்யவேண்டும். ஏனென்றால் வேப்ப மரத்தின் மிகப்பெரிய வருமானமே... வாளிப்பான, இலைகளற்ற அடிமரம்தான்.
பருவமழை துவங்கும் சமயத்தில், நாற்று வைக்கப்பட்டிருக்கும் பாலிதீன் பைகளைக் கிழித்து, செடியோடு இருக்கும் மண்ணோடு சேர்த்து குழிகளில் நடவு செய்யவேண்டும். தண்ணீர் பாசன வசதி இருப்பவர்கள் எப்போது வேண்டு மானாலும் நடவு செய்யலாம். வேப்பம் இலைகளும் தளிர்களும் கசக்கும் என்றாலும் ஆடு, மாடுகள் விட்டு வைக்காது. எனவே, வேலியிட்டு பாதுகாக்க வேண்டும்.
‘வெட்டிக் கெட்டது வேம்பு, வெட்டாமல் கெட்டது புளி’
ஆரம்பக் காலங்களில் வேம்பின் வளர்ச்சி மிகவும் மெதுவாகத்தானிருக்கும். மண்ணின் தன்மை. பராமரிப்பு, மழையளவு போன்றவற்றைப் பொறுத்து, மரத்தின் வளர்ச்சியானது இடத்துக்கு இடம் மாறுபடும். சுமார் 36 அடியிலிருந்து 60 அடி உயரம் வரை மரம் வளரும். நன்கு இலை விட்டு, பரந்து, விரிந்து பார்க்க லட்சணமாக இருக்கும். வருடம் பூராவும் பச்சையாயிருப்பது வேம்புவின் சிறப்பு (சமீப வருடங்களாக பெரும் பாலான மரங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இலைகள் காய்ந்து காணப்படுகின்றன. ஏதோ ஒரு நோய் தாக்கியது போல தெரிகிறது. ஆனால், எந்தவிதமான மருந்துகளும் அடிக்காமலே... மறுபடியும் மரங்கள் பச்சைக் கட்டிவிடுகின்றன).
நடவு செய்யப்பட்ட வேப்பங்கன்றின் பக்க இலைகளைக் கிள்ளியெடுத்து, ஒற்றை தடி மரமாக நேராக வளர்க்கவேண்டும். கிளைவெடித்த பிறகு, அவற்றை வெட்டினால் மரத்தில் பொந்துகள் விழுந்துவிடும். இதை வைத்துதான் ‘வெட்டிக் கெட்டது வேம்பு, வெட்டாமல் கெட்டது புளி’ என்று ஒரு பழமொழியே சொல்லப் பட்டிருக்கிறது.
நடவு செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பழங்களின் மூலமாக வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும். ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள்ளாக ஒரு மரம் விட்டு, ஒரு மரத்தை வெட்டி எடுத்து விடவேண்டும். நடவு செய்ததில் பாதி மரங்கள்தான் இப்போது தோப்பில் இருக்கும். அடுத்த ஐந்தாறு வருடங்களில் இதில் பாதியை வெட்டியெடுத்து விடவேண்டும். ஆக, சுமார் 170 மரங்கள் மட்டுமே ஒரு ஏக்கரில் இருக்கும். இப்படிப் பராமரித்தால்தான் மரங்களின் வளர்ச்சி நல்லவிதமாக இருக்கும். நமக்கு லாபகரமானதாகவும் இருக்கும். இடையிடையே இப்படி வெட்டப்படும் மரங்களை அதன் தரத்தைப் பொறுத்து விறகுக்கோ... அல்லது மர வேலைகளுக்கோ விற்பனை செய்யலாம். இதன் மூலம் உபரி வருமானம் கிடைக்கும்.
தமிழக வேம்புக்கு தனி மரியாதை!
ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பழங்கள் கிடைக்க ஆரம்பிக்கும். மஞ்சள் தோலுக்கு அடுத்து இனிப்புடன் கூடிய லேசான கசப்புடன் கூடிய கூழ் பகுதியும். அதனுள் ஒரு விதையும் இருக்கும். நீள்முட்டை வடிவ பழம் ஒன்றரை செ.மீ. நீளமும் 0.5 செ.மீ. பருமனுடனும் இருக்கும். 5-ம் ஆண்டிலிருந்து காய்ப்புத் துவங்கினாலும், 7-ம் ஆண்டுக்கு மேல்தான் கணிசமான பலன் கிடைக்க ஆரம்பிக்கும். வளர்ந்த மரம் ஒன்றிலிருந்து 200 முதல் 250 கிலோ வரை பழங்கள் கிடைக்கும்.
30 ஆண்டுகள் ஆகிவிட்ட மரங்கள் என்றால் விற்பனைச் செய்ய ஆரம்பிக்கலாம். வருடங்கள் ஆகஆக மரத்துக்கு மரியாதைக் கூடும். அதேபோல வருமானமும் பெருகும். இன்றைக்கு கனஅடி 500 ரூபாய் போகிறது. இதை வைத்து 170 மரங்களுக்கு கணக்குப்போட்டால் பல லட்சங்கள் கிடைக்கும். அது எவ்வளவு என்பதை இப்போதே துல்லியமாக சொல்லமுடியாது... அப்படிச் சொல்வதும் சரியாக இருக்காது. ஆனால், நிச்சயமாக வேம்பு நம்மை ஏமாற்றாது. ஆண்டுதோறும் பழங்கள், இலைகள் மூலமாக ஒரு தொகைகையக் கொடுக்கும் வேம்பு, கடைசிவரை நம்மைக் காப்பாற்றும்'' என்று சொன்னவர்,
''தமிழ்நாட்டில்தான் தரமான, பழுத்த பழங்களை சேகரித்து ஏற்றுமதிக்கு ஏற்ற வேம்பு பொருட்களைத் தயாரிப்பது சிறப்பாக நடக்கிறது. ஆந்திராவில் பச்சைக் காய்களை வெட்டி, அவித்து செயற்கையாய் பழமாக்கி வேப்ப முத்தை பிரித்து தரம் குறைந்த பொருட்களாகக் கொடுக்கின்றனர். அதனால் தமிழக வேம்புக்கு நல்ல மரியாதை'' என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.
விற்பனை வாய்ப்பு எப்படி?
‘ஏற்றுமதித் தரத்தில் வேம்பு’ என்பதை மிகச் சரியாக புரிந்து கொண்டு, அந்தத் துறையில் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார் தேனியைச் சேர்ந்த அருண்குமார் (99444-05518). வேம்பு பொருட்களை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் அவர், '‘வேம்பின் ஒவ்வொரு பகுதியும் பயன் உடையது. மரத்தை வெட்டினால்... நிலை, ஜன்னல், கதவு என வீட்டுக்கு பயன்படுகின்றது. பால்சத்து உள்ள வேப்பமர பொருட்களை கரையான் அரிப்பதில்லை.
வேப்பம் பழத்தின் உள்ளிருக்கும் ‘காக்காமுத்து’ என அழைக்கப்படும் வேப்பமுத்தை உடைத்து, அதனுள்ளிருக்கும் சிறிய விதைப் பருப்பை சுத்தம் செய்து அதில் இருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெய், அதன் வாயிலாகக் கிடைக்கும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை ஜப்பான் கொரியா, கனடா, பிரேசில், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக ஏற்றுமதி செய்கின்றோம் (காரைக்குடி, தேவகோட்டை, பட்டுக்கோட்டை கோவில்பட்டி, விருதுநகர், சிவகங்கை, ஒட்டன்சத்திரம், மணப்பாறை, திண்டுக்கல், கரூர், சேலம், மேலூர், சிங்கம்புனரி போன்ற பகுதிகளில் வேப்பமுத்து வர்த்தகம் நடைபெறுகின்றது) '' என்றவரிடம், '‘அதென்ன காக்கா முத்து..?'’ என்றொரு கேள்வியைப் போட்டோம்.
காசு கொடுக்கும் காக்கா முத்து!
‘‘காகம் வேப்பம் பழத்தை உட்கொண்டு எச்சமிடும் போது, பழத்தின் வழவழப்பு, மேல் தோலெல்லாம் நீங்கி, விதை மட்டும் தனியாகக் கிடைக்கும். இதுபோல இருக்கும் எல்லா விதைகளையும் ‘காக்கா முத்து’ எனச் சொல்கிறோம். நல்ல தரமான 50 கிலோ காக்கா முத்தினை உடைத்தால், 22 கிலோ பருப்பு கிடைக்கும். 22 கிலோ பருப்பை குளிர்முறையில் சூடே இல்லாமல் ஆட்டினால், 8.5 லிட்டர் நயம் வேப்பெண்ணெய், 12 கிலோ நயம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவை கிடைக்கும். வேப்பெண்ணெயில் ‘அசாடிராக்டின்’ எனும் வேதிப்பொருளும் நிம்பின், நிம்பிடின், கலானின் ஆகியவையும் இருக்கின்றன. வேப்பெண்ணெய் எளிதில் நீரில் கரையாது. ஆனால், ஜப்பானிலிருந்து பெறப்பட்ட இயற்கை உத்தியின் மூலம் தண்ணீரில் எளிதில் கரையும் வேப்பெண்ணெய் தயாரித்து விற்பனை செய்கிறோம்.
பூச்சிகளை சமாளிக்க!
விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகளைக் கொல்ல 1 லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லியும், புழுக்களைக் கொல்ல 1 லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லியும் கலந்து தெளித்தால் போதும். புழுக்களுக்கே உரிய தோலுரிக்கும் தன்மையைக் கெடுத்து, வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்படுத்தி, புழுக்களை கொல்லும் வேலையை இது செய்யும். பூஞ்சணக்கொல்லியாகவும், பாக்டீரீயா கொல்லியாகவும், வைரஸ் எதிரியா கவும் பயன்படுகிறது. ‘மல்பரி’ பயிரைத் தவிர எல்லாவிதமான பயிருக்கும் ஏற்ற ஒரே மருந்து வேப்பெண்ணெய்தான்.
புண்ணாக்கின் அதிசய குணம்!
வேப்பம் புண்ணாக்கு என்பது நிலத்தைத் திருத்துவதற்கான அருமை யான ஆயுதம். இது நல்லதொரு இயற்கை உரமும் கூட! மண்ணிலி ருக்கும் மண்புழுக்களை கொல் லாமல் வேர்ப்புழுக்களை அழிக்கும் குணமுடையது. அனைத்துப் பயிர்களுக்கும் ஏற்றது.
ரசாயன முறையில் விவசாயம் செய்பவர்களும் வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்துகின்றனர். நெல்லுக்கு அடியுரமாக யூரியா இடும்போது அதிலுள்ள தழைச்சத்து விரைவில் தண்ணீரில், கரைந்தும், ஆவியாகியும் வீணாகிறது. 100 கிலோ யூரியாவுடன் உருகிய ‘தார்’ ஒன்றரை கிலோ, நன்கு உடைத்து தூளாக்கிய வேப்பம் புண்ணாக்கு 20 கிலோ ஆகியவற்றைக் கலந்து 12 மணி நேரம் வைத்து பின்னர் வயலுக்குத் தெளித்தால் தழைச்சத்து நிலைத்து நின்று சிறுசிறுக பயிருக்கு கிடைக்கின்றது. 25 - 50% தழைச்சத்து வீணாவதும் தடுக்கப்படுகின்றது. இதற்காக வேப்பம் புண்ணாக்கு பயன்படுகிறது (ஆனால், தரமான வேப்பம்புண்ணாக்கு விலை அதிகம் என்பதால் விவசாயிகள் தரம் குறைந்த, கலப்படம் செய்யப்பட்ட வேப்பம் புண்ணாக்கையே வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் வேம்பின் முழுப்பயனையும் அடைய முடிவதில்லை)'' என்று சொன்ன அருண்குமார்,
''இப்படி பல ரூபங்களில் பயன் தரும் வேம்புவை வெளிநாட்டினர்தான் முழுமையாக அறிந்து பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த மண்ணிலேயே விளைந்தும், நம்மவர்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அவர்களும் பயன்படுத்தும்போது வேம்பின் மவுசு இன்னும் உயரப் பறக்கும்'' என்றார் எதிர்பார்ப்போடு!
|
1 comment:
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238
Post a Comment