''ஊர்நாட்டுல, 'கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்'னு ஒரு பழமொழி சொல்வாங்க. ஆனா, நிசத்துல முத்திப்போன கத்தரிக்காயை யாரும் கடைவீதிக்கு கொண்டு வரமாட்டாங்க. அப்படி கொண்டு வந்தா முதலுக்கே மோசம்தான் வந்து சேரும். யாரும் வாங்க மாட்டாங்க. சும்மா ‘பளீர்'னு டாலடிக்கிற இளம்கத்தரிகாய்க்குதான் எப்பவுமே ஏககிராக்கி. பல வருஷத் கத்தரி விவசாய அனுபவத்துல இதுதாங்க நிஜம்''
-இப்படிச் சொல்பவர்... ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், மேற்கு சடையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ராஜேஸ்வரன் (அலைபேசி 98423-06574).
காலை நேரம்... ''வேன் வர்ற நேரமாச்சு'' என்றபடியே, அப்பா ராமசாமி, அம்மா ராமாத்தாள் ஆகியோருடன் சேர்ந்து கத்தரிக்காய் குவியலை மூட்டைகளில் அடைத்து தையல் போட்டுக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரன். திருப்பூரிலிருக்கும் தினசரி சந்தைக்கு அனுப்பு வதற்கான பரபரப்போடு அவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அங்கே நாம் ஆஜரானோம். அவர்களின் வேலை விரைவாக முடியும் வகையில், நாமும் மூட்டை பிடிப்பதில் உதவிக்கரம் நீட்டியபடியே கத்தரி விவசாயம் பற்றி பேச்சை ஆரம்பிக்க, கப்பென்று பற்றிக் கொண்டார் ராஜேஸ்வரன்.
''மொத்தம் 10 ஏக்கர் நிலம். ரெண்டு கிணறு, பம்ப்-செட் எல்லாம் இருக்கு. முழுக்கமுழுக்க கிணத்துப் பாசனம்தான். எங்க வீட்டுல பருத்தி, மஞ்சள்னு ஆரம்பத்துல ஒரு கை பார்த்துக்கிட்டிருந்தாங்க. இந்த சமயத்துல நான் ப்ளஸ்- டூ படிச்சிக்கிட்டிருந்தேன். அதுல நல்ல மார்க் எடுத்து ‘பாஸ்’ பண்ணினேன். விவசாயக் கல்லூரியில சேர்ந்து படிக்க முயற்சி எடுத்தேன். இடம் கிடைக்கலே. கூடப்படிச்ச பசங்க சிலர், 'கம்ப்யூட்டர் படிக்க வாயேன்'னு கூப்பிட்டாங்க. 'கை நிறைய சம்பளம் வாங்கலாம்'னு சொன்னாங்க. ரொம்பவே யோசிச்சிப் பார்த்தேன். கடைசியில, ‘எனக்கு கம்ப்யூட்டர் வேணாம். கத்தரிக்காயே போதும்’னு சொல் லிட்டு, கத்தரி விவசாயத்துல இறங்கி 10 வருஷமா ஜெயிச்சிக் கிட்டிருக்கேன். என்னோட முடிவுக்கு வீட்டுலயும் பச்சைக்கொடி காட்டினதால எனக்கு கூடுதல் பலம் கிடைச்சிடுச்சி'' என்று கூறும் ராஜேஸ்வரன், கத்தரி விவசாயத்தில் கலக்குவதோடு, பக்கத்து ஊரான சாலைப்புதூரில் இருக்கும் தனியார் பால் கொள்முதல் மைய நிர்வாகியாகவும் இருக்கிறார்.
வேன் வந்து நிற்க, மூட்டைகளை ஏற்றி அனுப்பியவர், திண்ணையில் அமர வைத்துப் பேச்சைத் தொடர்ந்தார்.
''10 ஏக்கர் நிலத்துல, மானா வாரியாவும், இறவையாவும் பல பயிர் சாகுபடி நடக்குது. அதுல நான் உற்சாகமா செய்றது... கத்தரி சாகுபடிதான். அதுவும் நாட்டு ரகமான ‘வரிக்கத்தரி’தான் போடுறோம். எங்க பகுதியில இந்த கத்தரி 500 ஏக்கருக்கும் மேல விளையுது. நான் 2 ஏக்கர்ல போட்டிருக்கேன்'' என்ற ராஜேஸ் வரன், கத்தரி சாகுபடி தொழில் நுட்பங்களைப் பாடமாக படித்தார்.
நாட்டுச்சரக்கு நல்ல சரக்கு!
'வீரியரக கத்தரி வகைகள் நிறைய இருக்கின்றன. புதிது புதிதாகவும் வருகின்றன. ஆனால், நாட்டுரக கத்தரிக்குத்தான் எப் போதும் முதலிடம். பூனைத்தலை, கண்ணாடி கத்தரி, வெள்ளக் கத்தரி, பவானி நீளவரி என்று நாட்டுக் கத்தரியில் பல ரகங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில வரிகத்தரிதான் பிரபலம்.
பொதுவாக நாட்டுரகம் என்றாலே மகசூல் குறைவாகத்தான் கிடைக்கும் என்றொரு கருத்து இருக்கிறது. தக்காளி, கொத்துமல்லி, வெங்காயம் போன்றவற்றுக்கு வேண்டுமென்றால் அக்கருத்து பொருந்தலாம். வரிகத்தரியைப் பொருத்தவரை அது தவறான கருத்து. ஆடியில நடவு செய்தா... புரட்டாசி இரண்டாம் வாரம் தொடங்கி மாசி மாதம் முடிய கிட்டத்தட்ட 6 மாதம் வரை காய்ப்புதான். சுமாராக காய்த்தாலே 20 டன் வரை மகசூல் பார்க்கலாம். நல்ல பக்குவம் செய்து வளர்த்தெடுத்தால், 30 டன் வரைக்கும் கிடைக்கும். ஐப்பசி, கார்த்திகை இரண்டு மாதம் மட்டும் மழைக்காலம் என்பதால் நோய் தாக்குதல், அதிகம் இருக்கும். அதனால் மகசூல் குறையும். மார்கழி, ஆரம்பித்துவிட்டால்... தை, மாசி வரை மகசூல் கும்மி அடிக்கும்.
நாட்டுரக கத்தரி நல்ல ருசி கொண்டது, பொரியல், சம்பார் என்று 'கமகம'க்கும். வீரியரக விதையில் உற்பத்தியாகும் காய்கள் எல்லாமே 'சப்'பென்று ருசியில்லாமல் இருப்பதால் வரிகத் தரிக்கு என்றைக்குமே நிறைய வரவேற்பு இருக்கிறது. இதனால் விற்பனையில் பிரச்னை கிடையாது.
விதைத் தயாரிப்பு!
எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மை கொண்டதுதான் வரிகத்தரி. எல்லாப் பட்டத்திலும் சாகுபடி செய்யலாம். ஆனால், உவர் மண் நிலத்தில மட்டும் மழைக் காலத்தில் நடவு போடுவது நல்லது. விதைகளைப் பொருத்தவரை வேறு எங்கும் தேட வேண்டாம். விவசாயிகளிடமே கிடைக்கும். நாமும் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். நல்ல ஊக்கமுடன் உள்ள சில செடிகளைத் தேர்ந்தெடுத்து அதில் மட்டும் காய் பறிப்பு செய்யாமல் விட்டுவிட்டால், காய்கள் முற்றி மஞ்சள் நிறத்தில் பழுத்து தொங்கும். அத்தகைய காய்களைப் பறித்தெடுத்து, அரிவாள் மனையில நீளவாக்கில அரிந்து, வாளி தண்ணீரில அதை அமுக்கி கசக்கிப் பிழிய வேண்டும். பின்பு, விதை களை அரித்து எடுத்து, அடுப்புச் சாம்பல் அல்லது நாட்டு மாட்டின் சாணம் இவை களில் தண்ணீர் விட்டு விதைகளை கலந்து பிசைந்து, சுத்தமான துணி விரித்து அதன் மீது பரப்பி, ஈரப்பதம் நீங்கும் வரை நிழலில் காய வைக்கவேண்டும்.
நான்கு நாட்களில் காய்ந்து சலசல என்று விதைகள் காணப் படும். அதை அப்படியே வழித்து சுத்தமான துணிப்பையில் மூட்டைக் கட்டி வைத்துவிடவேண்டும். தேவைப்படும்போது எடுத்து நாற் றங்கால் அமைத்துக்கொள்ள வேண்டியதுதான். நேர்த்தி செய்யப் பட்ட விதை என்பதால் எத்தனை நாட்கள் வேண்டுமானலும் வைத்தி ருந்து விதைக்கலாம். ஏக்கருக்கு 200 கிராம் விதைகள் போதுமானது. வெளியில வாங்கினால், 200 ரூபாய் வரை கொடுக்கவேண்டியிருக்கும்
நாற்றங்கால் அமைப்பது எப்படி?
ஒரு ஏக்கருக்கான செடிகளைத் தயாரிக்க, 2 சென்ட் நிலம் தேவை. வடிகாலுடன் கூடிய மேட்டுப் பாத்தி அமைத்து, அடியுரமாக... தொழு உரம், அல்லது ஆட்டு எரு 20 கிலோ அளவுக்குக் கொட்டி, அதை நன்றாக பரப்பி சமன் செய்யவேண்டும். சின்னச்சின்ன கல், மண்ணாங்கட்டிகள் எல்லாவற் றையும் அப்புறப்படுத்த வேண்டும். அதில் 200 கிராம் விதைகளைத் தூவி, குச்சிக் கொண்டு கீறி விட்டு லேசாக மூடிவிட வேண்டும். உடனே உயிர்த் தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.
நாற்றங்கால் வயது 40 நாட்கள். லேசாக ஈரம் காயாத வண்ணம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடல் அவசியம். இடையில் ஒரு கை களை எடுப்பது நல்லது. 40-ம் நாளில் கண்டிப்பாக நாற்றுகளை பறித்து நடவு போடவேண்டும். நாள் கடத்தினால் காய்ப்புத் திறன் மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்துவிடும்.
நிலமும் உரமும்!
ஏக்கருக்கு 2 லோடு தொழு உரத்தை பரவலாக இறைத்து பரப்ப வேண்டும். இரண்டு தடவை டிராக்டர் கொண்டு உழவு செய்து, பின்னர் ஏர் கலப்பை கொண்டு பாத்தி வாய்க்கால்ஓட்ட வேண்டும். மண்வெட்டி கொண்டு ஆட்கள் மூலமாக பாத்தி அமைத்து, அதில் நிறைய தண்ணீர் விட்டு, வற்றச் செய்யவேண்டும். பிறகு, 3 அடி இடைவெளியில், ஒரு குழிக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடவு போடலாம். நான்கு அங்குல ஆழத்துக்கு பதியும்படி நடவு செய்யவேண்டும். 3-ம் நாள் உயிர் தண்ணீர் கொடுக்கவேண்டும். பிறகு, காய்ப்பு முடியும் வரை வாரம் இரண்டு முறை கட்டாயம் நீர் கொடுக்கவேண்டும்.
செடி முளைத்து வந்த 15-ம் நாளில், கை களை எடுக்கவேண்டும். கூடவே அரை லிட்டர் பூச்சி மருந்தை (ஆர்கானோ குளோரின்) 120 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். செடிகளை தாக்கும் தண்டுத் துளைப்பானை இதன் மூலம் தடுக்க முடியும். தொடர்ந்து 20 நாட்களுக்குள் தழைச் சத்து கொடுக்கக் கூடிய 75 கிலோ உரத்தை பகிர்ந்து செடிக்கு செடி வைத்து நீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் வேகமாகவும், தளதளவென்றும் வளர இது தேவை. 20 முதல் 30 நாட்களுக்குள் தழை, மணி, சாம்பல் சத்துகளை உள்ளடக்கிய கலப்பு உரம் 100 கிலோவை இதே முறையில் கொடுக்க வேண்டும். செடிகள் நன்றாக கிளை பரப்பி, பூக்கள் பிடிக்க இது அவசியம். தொடர்ந்து ஒரு களை எடுத்து, செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.
கொழுகொழு கோழி உரம்!
45-ம் நாளில் 2 டன் கோழி உரத்தை பாசன நீரில் கரைத்துக் கொடுக்கவேண்டும். செடிகள் ஊக்கமுடன் நின்று நீண்ட நாள் பலன் தர இது உதவும். ஐப்பசி, கார்த்திகை இரண்டு மாதங்களுக்கு மட்டும், மாதம் 1 டன் கோழி எரு கொடுப்பது நல்லது. மழைக் காலமாக இருப்பதால் கோழி எருவானது நன்றாக மண்ணில் கலந்து... பலன் தரும். பாத்திகளில் நிழல் கட்டிவிடுவதால் களை எடுக்கத் தேவை இல்லை.
50-ம் நாள். காய்கள் பரவலாகக் காணப்படும். அப்புறம் என்ன? அறுவடைதான். முதல் தடவை சுமார் 300 கிலோ கிடைக்கும். தொடர்ந்து வாரம் இரண்டு பறிப்பு நடத்தலாம். புரட்டாசி இரண்டாம் வாரத்தில் தொடங்கி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சுமாராகவும், மார்கழி, தை, மாசி, மாதங்களில் கூடுதலாகவும் மகசூல் கொடுக்கும். மொத்தம் 40 பறிப்புகள். ஒரு பறிப்புக்குச் சராசரியாக 500 கிலோ கிடைக்கும் மொத்தமாக 20 டன் மகசூல் கிடைக்கும்.
பாடத்தை பக்குவமாக நடத்தி முடித்த ராஜேஸ்வரன், ''ஆனியில் நாற்றங்கால் விட்டு, 40 நாட்கள் கழித்து, ஆடி 10-ல் நடவு செய்து, புரட்டாசி முதல் வாரத்தில் பறிக்கத் தொடங்கி, வாரம் இரண்டு பறிப்புனு மாசி முடிய வஞ்சனையில்லாம மகசூல் கொடுக்கும். அதனாலயே என்னை விட்டுப் பிரிக்க முடியாத வெள்ளா மையாகிடுச்சி இந்த வரிகத்தரி.
இன்னிக்கி தேதியில கொஞ்சம் சுமாராத்தான் விலை கிடைக்குது. கிலோ 5 ரூபாய்னுதான் எடுக்க றாங்க (கடைகளில் 12 ரூபாய்க்கும் அதிகமாகவே விலை வைத்து விற்கப்படுகிறது). போன வருஷம் சீசனில் கிலோ 25 ரூபாய் வரை விவசாயிங்க கிட்டயே விலை போச்சு. இப்ப கிலோவுக்கு 5 ரூபாய்னு விலை கிடைச்சாலும் தப்பில்லாத நிலைமைதான்.
எதிர்காலம் இயற்கைக்கே!
விலை குறைஞ்சாலும் விவசாயத்தை லாபகரமா னதாக மாற்ற ஒரே வழி. முட்டுவளி செலவுகளைக் குறைக்கிறதுதான். அதைத்தான் கொஞ்சம் கொஞ்சமா நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்கேன். கோழி எரு, தொழு உரம் கொடுத்து ரசாயன உரத்தை பாதியா குறைச்சிட்டேன். அதேபோல ரசாயன மருந்துகளையும் குறைக்கலாம்னு இருக் கேன். அநேகமா அடுத்த போகம் கத்தரி சாகு படிக்கு, முழுக்க இயற்கை முறை விவசாய வழி முறைகளை கடைபிடிக்கப் போகிறேன். நிறைவான லாபம் கிடைக்கும்கறதோட... மக்களுக்கு இயற்கை முறையில விளையற பொருட்களை கொடுத்தா, அவங்களோட ஆரோக்கியம் நல்லாயிருக்கும். அது நல்லாயிருந்தா நம்மள மனசாரா வாழ்த்து வாங்கனு நினைக்கிறேன். அதனால, அடுத்த வருஷத்துல இருந்து 'இயற்கை விவசாயத்துல விளைஞ்ச கத்தரிக்காய்'னு கூவி.. கூவி.. விற்க போறேன்'' என்று சபதமாகச் சொன்னவர்,
''கம்ப்யூட்டர் படிச்சி கை நிறைய காசு பாக்க முடிய லங்கிற வருத்தம் துளியும் எனக்கு இல்ல. மனசு நிறைஞ்சு இருக்கிற கத்தரிக்காய் வித்து கிடைக்கற காசே போதும்'' என்ற மகிழ்ச்சி பொங்க!
|
No comments:
Post a Comment