Thursday

இயற்கை வழி வேளாண்மை

நமது நாட்டின் மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்கேற்ப உணவுத் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு உயர் விளைச்சல் பயிர் ரகங்களைச் சாகுபடி செய்து வேளாண் உற்பத்தியை அதிகரித்தே ஆக வேண்டும்.
   ஆனால் வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது
.
  இதற்கெல்லாம் காரணம், நாம் இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே ஆகும். ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து,  இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.
  நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், நீடித்த  நிலையான நன்மைகளை அடைதல், இயற்கை வழங்கியுள்ள மண், நீர், சூரிய ஒளி ஆகியவற்றுடன் மனித சக்தியை இணைத்து சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு ஏற்டாமல் தடுத்து, ரசாயன உரங்களைத் தவிர்த்து சாகுபடி செய்வதே இயற்கை வளாண்மை ஆகும்.
  இயற்கை வழி வேளாண்மைக்கு மிகவும் அவசியமான இயற்கை உரங்கள் வ கையையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும் காண்போம்.
  1. கம்போஸ்ட் உரம்: பண்ணைக் கழிவுகளில் இருந்தும், இலை, சருகு மற்றும் குப்பைகளில் இருந்தும் புளுரோட்டஸ் என்னும் காளான் வித்துகளைப் பயன்படுத்தி, ஒரு மாதத்துக்குள் மக்க வைத்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது.
  2. தென்னை நார் கம்போஸ்ட் உரம்: தென்னை நார்களில் 50 சதவீதத்திற்கு மேல் லிக்னின் மற்றும் செல்லுலோஸ் உள்ளது. தென்னை நார்களுடன் புளுரோட்டஸ் காளான் வகையைச் சேர்த்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
3. தொழு உரம்: இரு மாடுகள் வைத்திருக்கும் விவசாயி, ஓராண்டில் 6 டன் தொழு உரம் தயாரிக்கலாம். மாட்டுச் சாணத்தை விட மாட்டின் சிறுநீரில்தான் தழைச்சத்து அதிகம் உள்ளது. எனவே மாட்டுக் கொட்டகையில் மண் பரப்பி, மாடுகள் தின்று  கழித்த வைக்கோலை அதில் பரப்பி, அவற்றில் மாட்டை சிறுநீர் கழிக்கும்படி செய்து, அதைச் சேகரித்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
  4. பிண்ணாக்கு உரம்: ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய், புங்கன், இலுப்பை, வேப்பங்கொட்டை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்டும் பிண்ணாக்குகளைக் கொண்டு இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.
  5. பசுந்தாள் உரம்: தக்கைப் பூண்டு, சணப்பு, கொழுஞ்சி, மணிலா, அகத்தி,
நரிப்பயறு முதலியவற்றைப் பயன்படுத்தியும், மரம், செடி, கொடி ஆகியவற்றின் தழை களைப் பயன்படுத்தியும் இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் தழைச் சத்தாகவும், மக்குச் சத்தாகவும் பயன் ஆகி, நுண்ணுயிர்களைச் செயல் திறன் பெறச் செய்கிறது.
  6. மண்புழு உரம்: ஆடு, மாடு கழிவுகள் மற்றும் வீடு, தோட்டக் கழிவுகளை பள்ளத்தில் குவித்து, அதில் மண் புழுக்களை இட்டு மக்கச்செய்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை உரத்தால் பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம் போன்ற உலோகச் சத்துகளும் கிடைக்கின்றன. பயிர் சாகுபடி வரையிலும் இந்த சத்துகள் பயன்படுகின்றன. இது
தவிர பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஜிம்ரலின், சைட்டோகனிஸ் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளும் கிடைக்கின்றன.
  இந்த அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் துறை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி வழிகாட்டுதலில் வேளாண் துறை அலுவலர்கள் இயற்கை வழி வேளாண்மை அவசியம் மற்றும் பயன்பாடு குறித்து தாலுகாதோறும் விவசாயிகள் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றனர்.  கமுதி வட்டாரத்தில் உதவி இயக்குநர் (பொறுப்பு) வன்னியராஜன், வட்டார அதிகாரி கெüதமன், துணை அதிகாரி சேதுராம் மற்றும் உதவி அதிகாரிகள் பலரும் ஊர் ஊராகச் சென்று விவசாயிகள் மத்தியில் இயற்கை வழி வேளாண்மை பற்றி தீவிரமாக விளக்கி வருகின்றனர்.

Source:www.dinamani.com/edition_madurai/article950522.ece

No comments: