கூடும் விளைச்சல்.....'கொட்டும்' வருமானம் !
கன்னியாகுமரி
மாவட்டம் என்றாலே... தென்னை, வாழை மற்றும் ரப்பர் ஆகியவைதான் கண்முன்னே
வந்து நிற்கும். சாதகமான காலநிலை இங்கே நிலவுவதுதான் இதற்குக் காரணம்.
முக்கியப் பயிர்கள்
பசுமைக் கட்டி கைகொடுப்பது ஒரு பக்கம் இருக்க... ஏதாவது ஒரு ஊடுபயிர்
சாகுபடி செய்வதையும் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள் இப்பகுதி
விவசாயிகள்.
அதிலும்... மார்த்தாண்டம் பகுதியைச் சுற்றியுள்ளவர்களின்
முக்கியத் தொழில் விவசாயத்தோடு இணைந்த 'தேனீ வளர்ப்பு'. வீட்டுப் புழக்கடை,
தோட்டம் என்று கிடைக்கும் இடத்தில் எல்லாம் தேனீக்களை வளர்த்து வருமானம்
பார்க்கிறார்கள்.
சற்றேறக்குறைய 25
ஆயிரம் குடும்பங்கள், இப்பகுதியில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன.
குலசேகரத்தைச் சேர்ந்த அன்புச்செழியனும் அவர்களில் ஒருவர். தேனீ
பராமரிப்பில் ஈடுபட்டிருந்தவரை காலைவேளையில் சந்தித்தோம். உற்சாகமாக
ஆரம்பித்தவர், ''எங்க அப்பா, 40 வருஷமா குடிசைத் தொழிலா தேனீ வளர்ப்பைப்
பண்ணிட்டுருக்காரு. தேனீ வளர்ப்பு பயிற்றுநராவும் இருக்காரு. நானும்
பயிற்சி எடுத்துக்கிட்டுதான் இதுல இறங்கியிருக்கேன்.
தென்னை, வாழை, காய்கறி, பூந்தோட்டங்கள்னு வெள்ளாமைக்கு
இடையில, தேனீ வளர்த்தா... அதிக அளவுல தேன் கிடைக்கிறதோட, அயல் மகரந்தச்
சேர்க்கை ஏற்பட்டு பயிர்கள்லயும் மகசூலும் கூடும். ஒரே கல்லுல ரெண்டு
மாங்காய் அடிச்ச மாதிரி வருமானம் பார்க்கலாம்.
அரை ஏக்கர்ல வாழை,
தென்னை, கமுகு (பாக்கு) மரங்கள் நிக்குது. அதுல ஊடுபயிரா அன்னாசியும்
போட்டிருக்கேன். தோட்டத்துல, வீட்டுப் புழக்கடைனு கிடைக்குற இடத்துல
எல்லாம் தேனீப் பெட்டிகளையும் வெச்சுருக்கேன். மொத்தம் 70 பெட்டிகள்ல தேன்
உற்பத்தி பண்றேன். இதுல கிடைக்கற தேனை நேரடியாவே விற்பனை
செய்துகிட்டிருக்கோம்'' என்றவர், தேனீ வளர்ப்பு தொடர்பாக நம்மிடம் அடுக்கிய
தகவல்களைப் பாடமாகத் தொகுத்துள்ளோம்.
கவனம் தேவை... பெட்டித் தயாரிப்பில்!
முதலில்
தேனீக்களுக்கானப் பெட்டியைத் தயாரிக்க வேண்டும். பல இடங்களில் பெட்டிகளைத்
தயாரித்து விற்கிறார்கள். தேக்கு, வேப்பமரம், புன்னைமரம் என்று நல்ல மணம்
வீசுகிற மரங்களில்தான் பெட்டியைச் செய்ய வேண்டும். வெளியில் வாங்கும்போது
இதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது என்பதால், நாமே பெட்டிகளைத்
தயார் செய்வதுதான் நல்லது. இப்படிச் செய்வதால் செலவும் குறையும்.
இந்தப் பெட்டிகளில்
இரண்டு வகை உண்டு. முதல் வகை நமது பகுதிகளில் உள்ள ஓட்டுவீடு தோற்றத்தில்
இருக்கும். இதை ஐ.எஸ்.ஐ. என்று சொல்வார்கள். இரண்டாவது வகை பெட்டி,
கான்கிரீட் வீடு போல மேல்தளம் சமமாக இருக்கும். இதை 'நியூட்டன்' என்றும்,
'வெளிநாட்டு வகை' என்றும் சொல்வார்கள்.
ஒரு பெட்டி 500 ரூபாய்!
ஒரு பெட்டி
தயாரிக்க, 500 ரூபாய் வரை செலவு பிடிக்கும். ஒரு தடவை பெட்டி தயாரித்தால், 5
ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். பெட்டியைத் தரையிலிருந்து இரண்டரை அடி
உயரத்தில் இருக்குமாறு அமைக்க வேண்டும். பெட்டிகளில் மேலும் கீழுமாக இரண்டு
அறைகள் இருக்கும். மேல் அறையைத் தேன் சேகரிக்கவும், கீழ் அறையைக்
குஞ்சுகள் மற்றும் தேனீக்களுக்காகவும் ஒதுக்கவேண்டும்.
பெட்டி தயார் செய்த
பின்பு, தேனீக்கள் குடும்பமாக இருக்கும் தேனடைகளை வாங்கி, ஒவ்வொரு
பெட்டியிலும் வைக்க வேண்டும். ஒரு தேனடையை ஒரு குடும்பம் என்று சொல்லலாம்.
இந்த அடையை 'ராடு' என்றும், ஃபிரேம் என்றும் சொல்வார்கள். இதை, தேனீ
வளர்ப்பு விவசாயிகளிடமே வாங்கிக் கொள்ளலாம். ஒரு அடையின் விலை, 300 ரூபாய்.
ஒரு குடும்பத்தில் 1,500 தேனீக்கள் இருக்கும்.
6 அங்குல நீளம் மற்றும்
10 அங்குல அகலம்
இருக்கும் பெட்டி என்றால், குஞ்சுகளுக்கான அறையில் ஆறு அடைகளும், தேன்
சேகரிப்பு அறையில் ஐந்து அடைகளும் அமைக்கலாம். கூடுதலாக அமைத்தால், வெப்பம்
உருவாகி, தேனீக்களின் வளர்ச்சி பாதிக்கும். குஞ்சுகளுக்கான அறையில்
ஒவ்வொரு அடைக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று மில்லி மீட்டர்
இடைவெளியும், தேன் அறையில் இதைவிட சற்றே கூடுதலான இடைவெளியும் இருக்கலாம்.
ராணித்தேனீயின் ராஜாங்கம்!
ஒரு
குடும்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலான ஆண் தேனீக்கள், ஒரேயரு ராணித்தேனீ
மற்றும் ஆயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்கள் இருக்கும். சமயங்களில்
ராணித்தேனீக்களின் எண்ணிக்கை இரண்டு, மூன்று என்றுகூட அதிகரிக்கக்கூடும்.
ஒவ்வொரு தேனீயும்,
ஒவ்வொரு வேலையைச் செய்யும். ஆண் தேனீக்கள், இனப்பெருக்கத்துக்கு
மட்டும்தான். இவற்றின் ஆயுள் ஆறு மாதம்தான். தன் வாழ்நாளில் ஒரேயரு முறை
மட்டும்தான் ராணித்தேனீயுடன், ஆண் தேனீ உறவு கொள்ளும். பிறகு,
இறந்துவிடும்.
ராணித்தேனீயும்
வாழ்வில் ஒரே முறைதான் ஆண் தேனீயுடன் உறவு கொள்ளும். ஆயிரம் முட்டைகள் வரை
இடும். ராணித்தேனீயின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள்.
வேலைக்காரத்
தேனீக்கள், வெளியில் சென்று தேன் சேகரிப்பது, மெழுகு உற்பத்தி செய்வது,
சிறிய குஞ்சுகளுக்கு உணவு கொடுப்பது, பறவை, விலங்குகள் போன்ற
எதிரிகளிடமிருந்து தேனைக் காப்பது போன்ற வேலையைச் செய்யும். இவற்றின் ஆயுள்
ஓராண்டு.
ஒரு பெட்டியில் உள்ள
ராணித்தேனீக்கு வயதாகிவிட்டால், கூட்டில் உள்ள ஒரு தேனீயைத்
தேர்ந்தெடுத்து, அடுத்த ராணித்தேனீயாக பதவியில் அமர வைக்கும் வகையில்
வளர்க்க ஆரம்பிக்கும். வயதான ராணித்தேனீ இறந்து விட்டால், இளம் ராணித்தேனீ
பதவிக்கு வரும். வயதாகாத நிலையில், எதிர்பாராதவிதமாக ராணித்தேனீ இறக்கும்
சமயங்களில், அதிகப்படியாக ராணீத்தேனீக்கள் இருக்கும் பெட்டியில் இருந்து
இடம் மாற்றிவிடலாம். அப்படி கிடைக்கவில்லை என்றால், லார்வா மற்றும்
தேனீக்கள் என்று இருக்கும் புதிய தேனடை ஒன்றை வாங்கி, ராணித்தேனீ இறந்துபோன
பெட்டியில வைக்க வேண்டும். புதிய அடையில் இளவயதில் இருக்கும் வேலைக்கார
தேனீக்கள், தங்களிடம் சுரக்கும் 'ராயல் ஜெல்லி' என்ற ஒரு வகை திரவத்தையும்,
தேனையும் தங்களிலேயே ஒரு வேலைக்காரத் தேனீக்குக் கொடுத்து, அதை
ஆரோக்கியமான ஒரு ராணித்தேனீயாக உருவாக்கும்.
ஏக்கருக்குப் பத்துப் பெட்டி!
ஒரு ஏக்கருக்கு 10
பெட்டிகள் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும். அதிகமாக வைத்தால், தேன்
கிடைப்பது குறையும் என்பதுடன், நம்முடைய பயிர்களில் மகரந்தச் சேர்க்கை
ஏற்படுவதிலும் சிக்கல்கள் உருவாகும். தேனீ வளர்க்கும் பெட்டியின் மீது
பாக்கு மரத்தின் பாளைகளை வைத்து மூடி விட்டால்... மழை மற்றும்
வெயிலிலிருந்து பாதுகாப்புக் கிடைப்பதோடு, தேனீக்களுக்குக் குளிர்ச்சியும்
கிடைக்கும்.
தேனீயை மயக்க, புகை!
தேனீக்கள்
மற்றும் குஞ்சுகள் இருக்கும் கீழறையில்.. இறந்துபோனத் தேனீக்கள், அதன்
கழிவுகள் மற்றும் மெழுகு ஆகியவை சேர்ந்திருக்கும். அதையெல்லாம்
அப்புறப்படுத்த வேண்டும். இப்படிச் செய்யும்போது பெட்டியில் இருக்கும் சில
தேனீக்கள் நம்மைக் கொட்டும். அதைத் தவிர்க்க, காய்ந்த தென்னை நாரினை (சவரி)
தீயிட்டுக் கொளுத்தி, புகையை ஊதிவிட வேண்டும். இதற்காக பிரத்யேகமாக
தயாரிக்கப்பட்ட, கையால் இயக்கும் புகைப்போக்கிகள் கடைகளில் கிடைக்கின்றன.
இதன் மூலம் புகையைச் செலுத்துவது சுலபமான வழி. இந்தப் புகைக்கு, தேனீக்கள்
மயங்கிவிடும். பராமரிப்பின் போதும்... தேனை எடுக்கும் போதும் இப்படி புகை
அடிக்கலாம்.
கூடுதலான ராணித்தேனீக்களை அழிக்க வேண்டும்!
சில சமயங்களில் ஒரு
பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட ராணித்தேனீ உருவாகிவிடும். அப்படி உருவாகும்
ராணித்தேனீ, ஒரு கூட்டத்தைக் கூட்டி கொண்டு பெட்டியைவிட்டு வெளியே
போய்விடும். இதனால் தேன் உற்பத்தி குறைந்து விடும். இதைத் தவிர்க்க, வாரம்
ஒரு முறை பராமரிப்பு செய்யும்போதே, முட்டையிலேயே அடையாளம் கண்டு
ராணித்தேனீக்களை அழித்துவிடவேண்டும். இந்த முட்டைகள், பார்ப்பதற்கு
பட்டுப்புழுவின் கூண்டுப் பருவத்தைப் போல இருக்கும்.
தொடர் மழை மற்றும்
வெயில் காலங்களில், அதாவது பூக்கள் பூக்காத காலங்களில், தேனீக்களுக்கு
போதுமான உணவு கிடைக்காது. அந்த நேரங்களில் முறைப்படி உணவு கொடுத்து
பராமரிக்காவிட்டால், உணவு இருக்கும் இடத்தை தேடி கூட்டமாக பறந்து சென்று
விடும்.
கொஞ்சம் சர்க்கரையை
தண்ணீரில் கரைத்து, கொட்டாங்குச்சியில் ஊற்றி பெட்டியில் வைக்க வேண்டும்.
கூடவே, தென்னை ஈர்க்குகள் சிலவற்றையும் (குச்சிகள்) கொட்டாங்குச்சியில்
போட்டு வைக்க வேண்டும். தேனீக்கள் தடுமாறி உள்ளே விழுந்தாலும், இந்த
ஈர்க்குகளைப் பிடித்து மேலே ஏறி வந்து விடும்.
'பூ பூத்தா தேன் கூடும்!'
தேன் உற்பத்தியைப்
பொறுத்தவரை பூக்கள் அதிகமாக பூக்கும் காலத்தில் வாரம் 4 கிலோவுக்கு
குறையாமலும், சாதாரண சமயங்களில் ஒரு கிலோ அளவிலும் இருக்கும். கன்னியாகுமரி
மாவட்டத்தைப் பொறுத்தவரை, பிப்ரவரி 15 முதல் மே மாத தொடக்கம் வரை அதிகமாக
தேன் கிடைக்கும். பிப்ரவரி, மார்ச் இரண்டு மாதங்களில் மட்டும் ஒரு
பெட்டியில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
அடையில் உள்ள
அறுங்கோண வடிவத்திலான சின்ன, சின்ன ஓட்டைகள் முழுமையாக அடைபட்டு, மெழுகால்
மூடப்பட்டிருந்தால்... தேன் எடுக்க சரியான சந்தர்ப்பம் என்று புரிந்து
கொள்ளலாம். தேனைப் பிழிந்தெடுக்க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு டிரம்
உள்ளது. இதில் பல் சக்கரத்துடன் கூடிய கைப்பிடி இருக்கும். இந்த டிரம்மில்
அடையை வைத்து, கைப்பிடியைச் சுற்றினால், தேன் வடிந்து டிரம்மில்
சேகரமாகும். பிழிவதற்கு முன்பாக, அறுங்கோண வடிவ ஓட்டைகளை அடைத்துக்
கொண்டிருக்கும் மெழுகைக் கத்தியால் லேசாக கீறி விடவேண்டும். அப்போதுதான்
தேன் சுலபமாக வடியும்.
தேன் சேமிப்பில் அதிக அக்கறை!
இப்படிச்
சேகரிக்கும் தேனை சூடுபடுத்த வேண்டும். வெப்பம் நேரடியாக தேன் மீது
பட்டால், தேன் கருகிடும். அதனால், அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை வைத்து
சூடாக்கி, சிறிய பாத்திரத்தில் தேனை ஊற்றி, அதை வெந்நீர் பானையில் வைத்து
சூடாக்க வேண்டும். இப்படி கொதிக்க வைத்த தேனை, சுத்தமான வெள்ளை வேட்டியில்
வடிகட்டினால், இறந்துபோன தேனீக்கள், மெழுகு, பூ, இலை என தேவையில்லாத
கழிவுகள் தங்கிவிடும்.
வடிகட்டியத் தேனை
மூன்று மாதங்கள் டிரம்மில் சேமித்து வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது
கொஞ்சம் நுரை வரும். மகரந்தத் தூள்கள் தேனில் கலக்காமல் இருக்க, மிகவும்
மெல்லியதாக இருக்கும் 100&ம் நம்பர் வாயில் வேட்டியில் மீண்டும்
வடிகட்டி, மெழுகு பூச்சு கொண்ட டிரம் வழியாகச் செலுத்தி, குழாய் மூலம்
சேகரிக்க வேண்டும். மெழுகுப் பூச்சு இல்லாவிட்டால் டிரம்மில் உள்ள
இரும்புத் துகள்கள், தேனுடன் கலந்துவிடும் வாய்ப்பு உள்ளது. இப்படிப்
பக்குவம் செய்தால்... நீண்ட நாட்களுக்கு தேன் கெடாமல் இருக்கும்.
பக்குவப்படுத்திய சுத்தமானத் தேன் ஒரு கிலோ 125 ரூபாய் வரை விலை போகும்.
தேனீ வளர்ப்பில்
செலவு என்று பார்த்தால்... பெட்டித் தயாரிப்பும், தேனீக்களும்தான்.
தேனீக்களோடு சேர்த்து ஒரு பெட்டிக்கான தயாரிப்பு செலவு, அதிகபட்சம் 800
ரூபாய் செலவாகும். ஒரு பெட்டி மூலம் ஆண்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வருமானம்
கிடைக்கும்.
Source:pasumaivikatan
|
No comments:
Post a Comment