இயற்கையில் ரூ.22,000....ரசாயனத்தில் ரூ.17,000....
முள்ளங்கித்
தொழிற்சாலையாகவே மாறிக் கிடக்கிறது தர்மபுரி மாவட்ட கிராமங்களான சின்னமிட்ட
ஹள்ளி மற்றும் பெரியமிட்ட ஹள்ளி. தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில்
காரிமங்கலம் அருகே உள்ள இந்த கிராமங்களில் கிட்டத்தட்ட 500 ஏக்கரில்
முள்ளங்கி சாகுபடி நடக்கிறது. ஆண்டு முழுவதும் இங்கு முள்ளங்கி விளைவதால்,
வெளியூர் காய்கறி சந்தைகளில் இந்தக் கிராமங்களின் முள்ளங்கிக்கு ஏக
கிராக்கி.
தொழுவுரம் மட்டும் போதும்...!
ஏக்கருக்கு 12 டன் மகசூல்...!
முள்ளங்கி பறிப்பு, இலையை நறுக்குவது, நீரில் கழுவுவது,
மூட்டைப் பிடிப்பது என முள்ளங்கியைச் சுற்றியே இயங்கிக் கொண்டிருக்கும்
இந்த கிராமங்களுக்குள் வலம் வந்தோம்.
பெரும்பாலானவர்கள்
ரசாயன முறையில் முள்ளங்கி அறுவடை செய்துவரும் நிலையில், சின்னக்காளி என்ற
விவசாயி இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார். நம்மை
அறிமுகப்படுத்திக் கொண்டதுமே குஷியோடு பேச ஆரம்பித்தார்.
"எனக்கு
சுமார் 3 ஏக்கர் நிலம் இருக்கு. 25 வருஷமா முள்ளங்கியை நடுறத வழக்கமா
வெச்சுருக்கோம். ஆரம்ப காலத்துல ரசாயன உரம் போட்டுத்தான் பயிர்
செஞ்சிகிட்டிருந்தோம். ஆனா, அதோட சுவை அந்த அளவுக்கு இல்லை. 'தழையுரம்
மட்டும் போட்டு நெல்லு நட்டா... விளைச்சலும், சுவையும் நல்லா இருக்குது.
அதேமாதிரி முள்ளங்கியையும் செய்து பார்த்தா என்ன?'னு ஒரு யோசனை
உள்ளுக்குள்ள ஓட... ரெண்டு வருஷத்துக்கு முன்ன தொழுவுரம் மட்டும் போட்டு
முள்ளங்கியை நட்டுப் பார்த்தேன். ஏற்கெனவே ரசாயனத்துல விளைஞ்சதைக்
காட்டிலும் பெருசா, பால் நிறத்துல நல்லா விளைஞ்சிது. அதையே தொடர்ந்து செய்ய
ஆரம்பிச்சிட்டேன். இதனால, என் முள்ளங்கிக்கு எப்பவுமே கிலோவுக்கு ஒரு
ரூபாய் கூடுதலான விலையும் கிடைக்குது. இருப்பு வச்சாலும்... ரெண்டு, மூணு
நாள் வரை கெடாம இருக்குது. உரமெல்லாம் போடாமலே ஏக்கருக்கு 10 முதல் 12 டன்
மகசூல் எடுக்கிறேன்.
பனிரெண்டாம் வகுப்பு
படிக்குறப்பவே முள்ளங்கி விவசாயம் செய்ய ஆரம்பிச்சவன் நான். அப்பவே
வாரத்துக்கு 5,000 ரூபாய்க்குக் குறையாம கிடைச்சதால... மேற்கொண்டு படிக்கல.
ஆனாலும் இந்த முள்ளங்கி குலதெய்வமா நின்னு என்னை வாழ வச்சுக்கிட்டுதான்
இருக்கு. நான் மட்டுமில்லை எங்க ஊர் விவசாயிங்க எல்லோருமே முள்ளங்கி
இல்லைனா... பெங்களூருல கூலிகளாதான் சுத்திக்கிட்டு இருப்போம்" என்று
பெருமூச்சு விட்டவர், சாகுபடி பற்றி பாடமெடுத்தார்.
காசு பார்க்கும் காலம்... கார்த்திகை முதல் தை!
முள்ளங்கி
சாகுபடிக்கு மணல் பாங்கான மண் ஏற்றது. இது ஆண்டு முழுவதும் விளையும்.
என்றாலும், கார்த்திகை முதல் தை மாதம் வரையிலான பனிக் காலத்தில் நல்ல
நிறத்துடனும், உருண்டு, திரண்டு திரட்சியாகவும் விளையும். புரட்டாசி முதல்
தை மாதம் வரை மழைக்காலம் என்பதால், இந்த சாகுபடி கொஞ்சம் கஷ்டமான
காரியமாகத்தான் இருக்கும். ஆனால், இந்த நேரத்தில்தான் நல்ல விலை கிடைக்கும்
என்பதால்... கஷ்டப்பட்டு அறுவடை செய்தால், நல்ல பலன் பார்க்கலாம்.
ஒரு ஏக்கருக்கு...
இரண்டு டிராக்டர் தொழுவுரத்தை இறைக்க வேண்டும். உடனே இரண்டு சால்
உழவடித்து, களைகள் காய்ந்த உடன் இரண்டு மூட்டை வேப்பம்பிண்ணாக்குடன்,
இரண்டு பாக்கெட் சூடோமோனஸ்,
10 பாக்கெட்
அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பாஸ்போ- பாக்டீரியா ஆகிய உயிர் உரங்களைக்
கலந்து நிலத்தில் தூவிவிட்டு, மீண்டும் ஒரு சால் உழவு செய்ய வேண்டும்.
பிறகு, மண்வெட்டி மூலமாக குவியலாக பார் அமைத்துக் கொள்ள வேண்டும். பாருக்கு
பார் அரை அடி இடைவெளி இருக்க வேண்டும். பாரின் அகலம் அரை அடியும், நீளம்
10 முதல் 15 அடிக்குள் இருந்தால் போதும்.
வெள்ளைப் பூச்சிக்கு வேப்பெண்ணெய்!
ஒரு ஏக்கருக்கு
சுமார் 2 கிலோ விதை தேவைப்படும். பாரின் இரண்டு பக்கங்கள் மற்றும் உச்சி என
மூன்று இடங்களில் வரிசையாக விதைகளை ஊன்ற வேண்டும். இதேபோல 10 முதல் 15
செ.மீட்டர் இடைவெளியில், வரிசை வரிசையாக ஊன்ற வேண்டும். உடனே தண்ணீர்
பாய்ச்ச வேண்டும். பிறகு, மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஈரம்
காயாதபடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நான்காவது நாள் முளைப்பு வரும்.
முதல்
களையெடுப்பதற்கு முன் அதாவது 12 அல்லது 13-ம் நாள் சாறு உறிஞ்சும் பேன்,
வெள்ளைப்பூச்சிகளை அழிப்பதற்காக, ஒரு டேங்குக்கு 100 மில்லி
வேப்பெண்ணெயுடன், ஒட்டும் திரவமாக 100 மில்லி காதி சோப்புக் கரைசலைக்
கலந்து தெளிக்க வேண்டும் (இரண்டு பார் காதி சோப்பை ஒரு லிட்டர் தண்ணீரில்
முதல் இரவே ஊற வைத்து ஒட்டும் திரவத்தைத் தயாரித்துக் கொள்ளவேண்டும்).
இந்தக் கரைசலை ஏக்கருக்கு 10 டேங்க் வீதம் தெளிக்க வேண்டும். 15 அல்லது
16-ம் நாள் கொத்து மூலம் களை எடுக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டச்
செடிகள் ஒரே இடத்தில் இருந்தால், அதைக் களைத்துவிட வேண்டும். களையெடுத்த
பிறகு, நான்கு நாட்கள் தண்ணீர் பாய்ச்சக் கூடாது. அப்போதுதான் களைகள்
சுத்தமாக சாகும்.
28-ம் நாளில்
சுண்டுவிரல் அளவில் கிழங்குவிட ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் பச்சைப்புழு
தாக்குதல் இருந்தால், ஏற்கெனவே தெளித்த வேப்பெண்ணைய், காதி கரைசலை
மறுபடியும் அடிக்க வேண்டும். மற்றபடி மருந்து, உரம் என எதுவுமே தேவையில்லை.
இடையில் களைகள் முளைத்தால் கையால் களைத்து விடவேண்டும். 37-ம் நாள்
அறுவடையை ஆரம்பித்து,
45 நாட்களுக்குள்
அறுவடையை முடிக்க வேண்டும். 45 நாட்களுக்கு மேல் தாமதித்தால், முள்ளங்கி
முற்றிவிடும். நிறமும் மாறி விடும். இதற்கு நல்ல விலை கிடைக்காது.
சாகுபடி பாடத்தை
முடித்த சின்னக்காளி, ''எனக்கு ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்குது.
மழைக்காலத்துல மத்த பகுதிகள்ல முள்ளங்கி விளைச்சல் ரொம்ப குறைவா இருக்கும்.
ஆனா, எங்க ஊர் மேட்டுப் பகுதிகள்ல கஷ்டப்பட்டு முள்ளங்கியை விளைவிக்கறதால,
எங்க முள்ளங்கிக்கு நல்ல விலை கிடைக்கும். சராசரியா கிலோவுக்கு ரெண்டு
ரூபாய்ல இருந்து 13 ரூபாய் வரை சீசனுக்கு ஏத்தமாதிரி கிடைக்கும். சராசரியா
கிலோவுக்கு 5 ரூபாய்னு விலைபோகும்" என்று சொன்னார்.
ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம்... இது ரசாயனக் கணக்கு!
இதேபகுதியைச்
சேர்ந்த சரவணன் ரசாயன முறையில் முள்ளங்கி விவசாயம் செய்கிறார். அவரிடம்
பேசியபோது, "எங்க அப்பா காலத்துல இருந்தே சுமார் 20 வருஷமா எங்க நிலத்துல
முள்ளங்கி நட்டுக்கிட்டு வர்றோம். கொஞ்சம் உடம்பை வளைச்சு கஷ்டப்பட்டா
உண்மையாகவே முள்ளங்கி நல்ல லாபம் கொடுக்கக்கூடிய பயிர். தொழுவுரத்தைக்
கொட்டி நல்லா உழுதவுடன், ரெண்டு ஏக்கர் குருணை மருந்தை மணலில் கலந்து தூவி
விட்டு பார் பிடிப்போம். இதைத் தூவினா... முள்ளங்கிகிழங்குல சொத்தை விழாது.
பார்
பிடிச்சதும், ரசாயன உரத்தை தூவிட்டு நடவு செய்வேன். அதுக்கு பிறகு,
வளர்ச்சிக்காக ரெண்டு முறை உரங்களைத் தூவுவேன். சாறு உறிஞ்சும் பேன்,
வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த, ஒரு ஏக்கருக்கு, அரை லிட்டர் மோனோகுரோடோபாஸ்
மருந்தை (இதை காய்கறி பயிர்களுக்கு தெளிக்க அரசு தடை விதித்துள்ளது) 10
டேங்க் வீதம் பிரிச்சு ஸ்பிரேயர் மூலம் அடிச்சு விடுவோம். பச்சைப் பூச்சி
விழுந்தா, அரை லிட்டர் எக்காலக்ஸ் மருந்தை, பத்து டேங்க் வீதம் அடிப்போம்.
என்னோட நிலத்துல ஏக்கருக்கு
8 முதல் 10 டன் முள்ளங்கி ஒரு போகத்தில் கிடைக்கும். செலவெல்லாம் போக, குறைஞ்சபட்சம்
15,000
ரூபாய் லாபம் பார்க்கலாம். வருஷத்துக்கு நாலு போகம் தாராளமா முள்ளங்கி
நடலாம். முள்ளங்கியால நல்ல வருமானம் கிடைக்குறதாலதான் நான் வேலைக்கு போற
ஆசையையே கைவிட்டுட்டேன்" என்று சொல்லும் சரவணன், டிப்ளமோ இன்ஜினீயரிங்
படித்திருக்கிறார்.
கைகொடுக்கும் வேளாண்மை விற்பனைத்துறை!
தர்மபுரி
மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் அலுவலர் தாம்ஸன்
கூறுகையில், " இந்தப் பகுதி விவசாயிகள் பாரம்பர்யமா முள்ளங்கி நட்டாலும்,
உள்ளூர் வியாபாரிகள், இடைத்தரகு மாதிரியான விஷயங்களால நஷ்டப்பட்டுக்கிட்டு
இருந்தாங்க. இதை மாத்துறதுக்காக எங்க அதிகாரிகளோட வழிகாட்டுதல்படி
விவசாயிகளை ஒருங்கிணைச்சு விற்பனை வாய்ப்புகளைப் பத்தி சொல்லிக்
கொடுத்தோம். அதுமட்டுமில்லாம இவங்க அறுவடை செய்த முள்ளங்கியை சாதாரண
சாக்குகள்ல கட்டித்தான் விற்க எடுத்துப் போய்க்கிட்டு இருந்தாங்க.
காற்றோட்டமில்லாத அந்தப் பைகளால சிலநேரம் கிழங்கு அழுகி வீணாகிடும். அதைத்
தவிர்க்க உள்ளே ஈரம் தேங்காமலும், காற்றோட்டம் தரும் வகையிலும் உள்ள
‘பாலித்தீன் வலைப் பைகளை சிபாரிசு செஞ்சோம். இப்போ ஒரு கிழங்குகூட
சேதமில்லாம வித்துட்டு வர்றாங்க. இதனால அவங்களுக்கு கூடுதல் லாபம்
கிடைக்குது" என்றார்.
வேளாண்மை
விற்பனைத்துறை மூலமாக இந்த கிராமத்தில் 'முள்ளங்கி விளைபொருள் குழு'க்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவின் தலைவருக்கும் வேளாண்மை
விற்பனைத்துறை மூலமாக தினசரி மதியம்வாக்கில்... கோவை, சென்னை, பெங்களூரு,
திருச்சி, கும்பகோணம், மதுரை மார்க்கெட் விலை நிலவரம் தொலைபேசி மூலம்
தெரிவிக்கப்படுகிறது. எங்கே அதிக விலை கிடைப்பது போல் இருக்கிறதோ... அந்த
மார்க்கெட்டுக்கு போன் மூலமாக தகவல் தந்துவிட்டு, அங்கே சென்று விற்பனை
செய்கிறார்கள் அந்தக் குழு விவசாயிகள்.
தொடர்புக்கு தாம்ஸன் அலைபேசி 9443563977
Source:pasumaivikatan
|
|
No comments:
Post a Comment