Wednesday

அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை

என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல் ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக பராமரித்தால் ""ஆடு வளர்ப்பு'' ஒரு லாபகரமான தொழில் என்பது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.
பசுந்தீவன உற்பத்தி: கோட்டைப்பாளையம் கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து கோ 4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர், வேலி மசால், குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டேன். ஆடுகளுக்கு தேவைப்படும் பசுந்தீவன அளவை கணக்குப்போட்டு, சிறிய சிறிய பாத்திகளை அமைத்து பசுந்தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீவனப் பற்றாக்குறை ஏற்படுவது இல்லை.
விற்பனை வழிமுறைகள்: நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை அறுப்பதற்கு விற்பனை செய்வதற்கு முன்பே எனது ஆடுகளை எடைபோட்டு, அதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப்பை தெரிந்துகொண்டு விலை நிர்ணயம் செய்துகொள்வேன். பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும்போது நான் நிர்ணயித்த விலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன். இவ்வாறு ஆடுகளை விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் உயிருடன் ஆடுகளை விற்பதைவிட அவற்றை இறைச்சியாக மதிப்பூட்டி விற்பனை செய்யும்போது மேலும் அதிக லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத்தை ஏற்படுத்தி, போதிய வசதிகளைச் செய்து, தேவைப்படும்போது, ஆடுகளை அறுத்து இறைச்சியாகவும் விற்பனை செய்கிறேன்.
மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையாளர்கள் கீழ்க்காணும் சில முக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
* ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண்ணையின் முதல் வேலையாளாக இருக்க வேண்டும்.
* ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.
* பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகை மற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயிரிட வேண்டும்.
* உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும்.
* நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணை நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
மேற்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அறிவியல் ரீதியாக ஆடுகளை வளர்த்தால் வெற்றி நிச்சயம். தொடர்புக்கு: ஐ.நாசர், கோயம்புத்தூர். 99943 82106.

-கே.சத்தியபிரபா, உடுமலை.

Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4193&ncat=7

2 comments:

Siva said...

Very good information! I am planning to make GOAT FORMING and willing to take classes as well.

Thanks,
Siva
Tanjore.

Muthukumar said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238