தென்னை, கோகோ, கீரை... முத்தான வருமானம் தரும் மூன்றடுக்கு சாகுபடி..!
விருது வாங்கித் தந்த இயற்கை விவசாயம்
நிலம் முழுவதும் பயிர்கள்.
ஆண்டு முழுவதும் வருமானம்.
குறைவானப் பராமரிப்பு.
ஆண்டு முழுவதும் வருமானம்.
குறைவானப் பராமரிப்பு.
'குறைவானச் செலவில், நிறைவான மகசூல் பெற இயற்கை விவசாயம்தான் ஒரே வழி. அதிலும் ஊடுபயிர் விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால்... வளமான வருமானம் நிச்சயம்' என்று அடித்துச் சொல்கிறார்... கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் மைக்கேல் ஹென்றி.
இவருக்குத்தான் அண்மையில் கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உழவர் தினவிழாவில் அங்கக வேளாண்மைக்காக 'வேளாண்மைச் செம்மல் விருது' வழங்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் துளிர்த்த இயற்கை ஆசை!
விருது பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தபடியே பேசிய அருள் மைக்கேல் ஹென்றி, ''எங்க தாத்தா காலத்துல 30 ஏக்கர்ல தென்னை, வாழை, பனை, நெல், முந்திரி, புளி, மா இப்படி பல பயிர்களை சாகுபடி செஞ்சோம். அந்தக் காலத்துல எல்லாருமே இயற்கை விவசாயம்தான். தொழுவுரத்துக்காகவே வீட்டுக்கு வீடு ஆடு, மாடு வளர்ப்பாங்க. நாங்களும் ஏழெட்டு மாடுகள வெச்சிருந்தோம். 'பசுமைப் புரட்சி’க்குப் பிறகுதான் பாரம்பரிய விவசாயத்திலிருந்து விலகி, ரசாயன உரங்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அந்த சமயத்துல 'அபுதாபி’யில வேலை கிடைக்கவே, நான் அங்க போயிட்டேன்.
பதினைஞ்சு வருஷத்துக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பினதும் விவசாயத்தைக் கையில எடுத்தேன். மத்தவங்கள மாதிரியே நானும் ரசாயன விவசாயம்தான். ஆனா... சரிவர விளைச்சல் கிடைக்கல. அப்பத்தான்... 'ஏற்கெனவே இஷ்டத்துக்கு ரசாயன உரத்தைக் கொட்டியிருந்தா... மண்ணு மலடாகிப் போய், சரிவர விளைச்சல் கிடைக்காது'ங்கற விஷயத்தைக் கேள்விப்பட்டேன். ஒருவேளை நம்ம நிலமும் அதுமாதிரி ஆகியிருக்குமோனு சந்தேகம் வந்துச்சு.
அபுதாபியில இருந்தப்ப இயற்கை விவசாயத்துக்கு அந்த நாட்டுல கொடுத்த முக்கியத்துவம்; இயற்கையில விளைஞ்ச பொருள் மேல அந்த மக்கள் காட்டின தனி மரியாதை: அதுக்கு இருந்த பலமான சந்தை வாய்ப்பு; ரசாயன விவசாயத்தால வர்ற கேடுகள் தொடர்பான அரசாங்கத்தோட பிரசாரம்னு பல விஷயங்களும் என் நினைவுக்கு வந்துச்சு. அதனால இயற்கை விவசாயம் பத்தின விஷயங்களைத் தேட ஆரம்பிச்சேன். அப்போதான் நாகர்கோவில் 'ரூரல் அப்லிஃப்ட் சென்டர்’ அறிமுகம் ஆச்சு. அங்க போய் விஷயங்களைத் தெரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா இயற்கைக்கு மாற ஆரம்பிச்சேன். இப்போ முழுசா இயற்கைக்கு மாறி ஏழு வருஷம் ஆச்சு'' என்று முன்னுரை கொடுத்த ஹென்றி, பண்ணையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
முன்னேற வைத்த மூன்றடுக்கு முறை!
''எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல தென்னை, மா, பலா மரங்க நிக்குது. தென்னைக்கு 25 வயசு. மாவுக்கும் பலாவுக்கும் 20 வயசு. முன்ன தோட்டம் முழுக்க களிமண்ணாதான் இருந்துச்சு. நான் விவசாயத்துக்கு வந்தப்பறம் வெளிய இருந்து வளமான மண்ணைக் கொண்டு வந்து, கொட்டி சரிபண்ணினேன். தோட்டத்துல வளர்ற களைகள், தென்னையில கிடைக்கிறக் கழிவுகள் எல்லாத்தையும் மண்ணுக்குள்ள புதைச்சு வெச்சிடுவேன். தோட்டம் முழுக்க அதுக மக்கிக் கிடக்கிறதால மண்புழுவுக்கு பஞ்சமே கிடையாது. தென்னைக்கு இடையில் இருக்கற இடைவெளியில ஊடுபயிர்களை போடலாம்னு நினைச்சேன். அதுலதான் இந்த மூன்றடுக்கு விவசாயத்தை ஆரம்பிச்சேன்.
கீரை முதல் மரம் வரை!
முதல் அடுக்குல நீண்டகாலப் பயிர்களான தென்னை, மா, பலா (தென்னை உள்ளூர் ரகமான நாடன் ரகம்தான்); இரண்டாவது அடுக்குல கோகோ, வாழை, மாதுளை, கொய்யா, சப்போட்டா, சீத்தா மரங்கள்... அப்புறம், ஹெலிகோனியா பூ. மூணாவது அடுக்குல திப்பிலி, துளசி, கீரை வகைகள்னு நடவு செஞ்சுருக்கேன். தோட்டம் முழுக்க சொட்டுநீர் போட்டிருக்கேன். இப்படி பல பயிர் பண்றதால வருஷம் முழுக்க வருமானம் வந்துக்கிட்டே இருக்கு'' என்றவர், மூன்றடுக்கு முறையில் சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி விரிவாகச் சொன்னார். அதைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஆண்டுக்கு ஒரே உரம்!
ஏற்கெனவே வளர்ந்த தென்னை மரங்கள் உள்ள தோப்புகளில்தான் மூன்றடுக்கு விவசாயம் செய்ய முடியும். தென்னைக்கு இடையில் இரண்டாம் அடுக்குப் பயிரான கோகோவை செடிக்குச் செடி மற்றும் வரிசைக்கு வரிசை பத்து அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை உரம் வைக்க வேண்டும். மரத்தின் தூரில் இருந்து மூன்றடி தள்ளி, கால் அடி ஆழத்துக்குக் குழி பறித்து, அதில் 5 கிலோ மண்புழு உரம், 10 கிலோ தொழுவுரம் ஆகியவற்றைக் கொட்டி, மேல் மண்ணைக் கொண்டு மூடவேண்டும். நான்காவது ஆண்டில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை கோகோவில் மகசூல் எடுக்கலாம்.
நோய்கள் தாக்காது!
தென்னைக்கும் ஆண்டுக்கு ஒரு முறை உரம் கொடுத்தால், போதும். தென்னையின் தூரில் இருந்து நான்கடி தள்ளி மூன்றடி அகலம், ஒரு அடி ஆழத்துக்குக் குழி எடுத்து அதில், காய்ந்தத் தென்னை ஓலை, மட்டை, பாலை போன்றக் கழிவுகளைப் போட்டு, அதற்கு மேல் 50 கிலோ கதம்ப கம்போஸ்ட் (பார்க்க, பெட்டி செய்தி), 10 கிலோ மண்புழு உரம், 2 கிலோ பாறை பாஸ்பேட் ஆகியவற்றைப் போட்டு மூடவேண்டும். இதில் ஒரு மாதம் வரை தண்ணீர் விட்டு வர வேண்டும். இதன் மூலம் அமோக விளைச்சல் கிடைக்கும்.
முழு இயற்கை விவசாயம் செய்யும்போது பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் குறைவாகத்தான் இருக்கும். தென்னையில் 'செம்பேன் சிலந்திகள்’தாக்குதல் இருக்கலாம். இப்பூச்சிகள் தாக்கினால், காயின் எடை குறைந்து விடும். பூண்டுக் கரைசலைத் (பார்க்க, பெட்டிச் செய்தி) தெளித்து இவற்றைக் கட்டுப்படுத்தலாம். வேறு எந்தப் பராமரிப்பும் தென்னைக்குத் தேவையில்லை. 50 நாட்களுக்கு ஒரு முறை என்ற கணக்கில், ஆண்டுக்கு ஏழு முறை காய்களைப் பறிக்கலாம்.
உரமே இல்லாமல் வாழை!
தென்னை, கோகோ ஆகியவற்றுக்கு இடையில் சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் வாழையை நடவேண்டும் (இவர் ரசகதளி, கற்பூரவள்ளி ஆகிய ரகங்களை நடவு செய்துள்ளார்). நடவு செய்த பிறகு, இலை, தழை கழிவுகளைக் கொண்டு மூடாக்கு போட்டால் மட்டும் போதும். தனியாக எந்த உரமும் இடத் தேவையில்லை. தென்னை, கோகோ ஆகியவற்றுக்கு இட்ட உரத்தைக் கொண்டே வாழை சிறப்பாக வளர்ந்துவிடும்.
வாழையில் 'கூன் வண்டு’ பிரச்னை இருக்கும். இவற்றால் தாக்கப்பட்ட வாழையின் கரிந்த இலைகளை வெட்டி எடுத்துவிட வேண்டும். பூச்சிகள் தென்பட்டவுடனேயே 'மூலிகைப் பூச்சி விரட்டி’ (பார்க்க, பெட்டிச் செய்தி) தெளித்து விடவேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை பஞ்சகவ்யாவைத் தெளித்து வர வேண்டும்.
வாழை நடவு செய்த இடங்களைத் தவிர, மீதமுள்ள இடங்களில் சப்போட்டா மற்றும் மாதுளைச் செடிகளை நடவு செய்யலாம். நல்ல நிழல் உள்ள இடங்களில், ஹெலிகோனியாவை நடவு செய்யலாம். இது வாழை மாதிரியான தாவரம்தான். முழுக்க பயன்படுவது பூக்களுக்காகத்தான்.
ஒரே ரகத்தை நடவு செய்தால், சந்தை வாய்ப்பு இருக்காது. எனவே பல ரகங்களையும் கலந்து நடுவது நல்லது. அப்போதுதான் வியாபாரிகள் கேட்கும் ரகத்தைக் கொடுக்க முடியும். நடவு செய்த 90-ம் நாளிலேயே இவை பூக்க ஆரம்பித்து விடும். 105-ம் நாளிலிருந்து அறுவடை செய்யலாம்.
தொடர் வருமானத்துக்கு திப்பிலி, துளசி, கீரை!
மூன்றாவது அடுக்குப்பயிர்களாக திப்பிலி, துளசி, கீரை வகைகளை நடவு செய்யலாம். திப்பிலி ஒரு மூலிகைப்பயிர் என்பதால், இயல்பாகவே இதற்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகமாக இருக்கும். பூச்சிகளும் தாக்குவதில்லை. இதற்கும் உரம் இட வேண்டியதில்லை. ஒரு முறை நடவு செய்து விட்டால், தானாகவேப் படர்ந்து பரவி விடும். மார்ச் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் திப்பிலியை அறுவடை செய்யலாம். இதுபோக, துளசி மற்றும் கீரைகள் மூலம் தினசரி வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஐந்து ஏக்கர் நிலத்திலும் ஒரு சிறிய இடத்தைக்கூட விட்டு வைக்காமல், மூன்றடுக்கு முறையில் சாகுபடி செய்யும்போது, குறைந்த செலவில் அதிக வருமானம் கிடைப்பதுடன் மண்ணும் வளமாகிக் கொண்டே இருக்கும்.’
வருமானமும் பல அடுக்கில்!
சாகுபடித் தொழில்நுட்பங்களை முடித்த ஹென்றி, வருமானத்தின் பக்கம் பார்வையைத் திருப்பினார். ''ஐந்து ஏக்கர்ல இருக்குற 480 தென்னை மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 59,500 தேங்காய் கிடைக்குது. ஒரு தேங்காய்க்கு 8 ரூபாய் சராசரி விலையா வெச்சுக்கிட்டா... வருஷத்துக்கு 4 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
குறைந்த அளவில் இருக்கும் மா, பலா, சீத்தா, கீரை வகைகளை வீட்டுத் தேவைக்குப் போக மீதியை உள்ளூர் சந்தையில வித்துடுவேன். கீரைகள்ல பெரிய வருமானம் இல்லாட்டியும்... கிடைக்கிறதெல்லாமே லாபம்தான். 200 கோகோ மரங்கள் இருக்கு இப்பதான் காய்க்க ஆரம்பிச்சிருக்கு. முதல் தடவையில 14 கிலோ மகசூல் கிடைச்சுது. இனி, தொடர்ந்து மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். இப்போதைக்கு கோகோ ஒரு கிலோவுக்கு 165 ரூபாய் விலை கிடைக்குது.
400 வாழைத்தார் மூலமா... வருஷத்துக்குக் குறைஞ்சபட்சமா 40 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. ஒரு கிலோ திப்பிலிக்கு 400 ரூபாய் வரை விலை கிடைக்குது. இதன் மூலமா வருஷத்துக்கு 7,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். ஹெலிகோனியா மூலமா வருஷத்துக்கு 2,000 ரூபாய் வரை வருமானம் கிடைச்சுடும்.
தென்னை, கோகோவைப் பொறுத்தவரை வியாபாரிக தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. வாழையை நாகர்கோவில்ல இருக்கிற இயற்கை விவசாயக் கடைகள்லயும், அப்டா சந்தையிலும் விக்கிறேன்.
தோட்டப் பராமரிப்புக்கு தினமும் ஒரு ஆள் தேவை. மண்புழு உரம், கம்போஸ்ட் தயாரிப்புச் செலவு, வேலையாட்கள் கூலி, அறுவடைக் கூலி, போக்குவரத்துச் செலவுனு அத்தனைச் செலவுகளையும் ஊடுபயிர்கள்ல கிடைக்கற வருமானம் மூலமாவே சமாளிச்சுடுவேன்.
அதனால தென்னையில கிடைக்குற மொத்தப் பணமும் அப்படியே லாபம்தான். தோட்டத் தேவைக்குப் போக மீதியிருக்குற மண்புழு உரம், கம்போஸ்ட் ரெண்டையும் வித்துடறதால அதுலயும் கணிசமா லாபம் கிடைக்கும்' என்றார் மனநிறைவாக.
கதம்ப கம்போஸ்ட்:
10 அடி நீளம், 3 அடி அகலம், 3 அடி உயரத்தில் ஒரு தொட்டி அமைத்து, மேல் பகுதியில் தென்னை ஓலையைக் கொண்டு கூரை அமைக்க வேண்டும். தொட்டிக்குள் 4 அங்குல உயரத்துக்கு (200 கிலோ) தென்னைநார்க் கழிவைப் பரப்ப வேண்டும். அதற்கு மேல் 200 கிராம் புரூட்டஸ் காளானைத் தூவ வேண்டும். காய்ந்த இலை, தழைக் கழிவுகளை அதன் மீது நான்கு அங்குலத்துக்கு பரப்பி,
10 லிட்டர் மாட்டுச் சிறுநீரை முழுவதும் தெளித்து விட வேண்டும். பிறகு, 40 கிலோ தொழுவுரத்தை அதன் மீது பரப்பி, 10 கிலோ பாறைத்தூளை தூவி, தென்னை ஓலையைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். இது ஒரு அடுக்கு. இதுபோல ஐந்து அடுக்குக்கு தயார் செய்ய வேண்டும். தினமும் மேற்புரத்தில் தண்ணீர் தெளித்து வர வேண்டும். 3 மாதங்களில் கதம்ப கம்போஸ்ட் தயாராகி விடும்.
மூலிகைப் பூச்சி விரட்டி:
ஆடுதொடா இலை (ஆடாதொடை), நொச்சி, எருக்கு, வேப்பிலை போன்ற கசப்பான இலைகளை ஒரே அளவு எடையில் எடுத்துக்கொண்டு ஒரு தொட்டியில் இட்டு, அவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீரை சேர்க்க வேண்டும். 90 நாட்கள் ஊற வைத்தால், மூலிகைப் பூச்சிவிரட்டி தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் கலந்து பயன்படுத்தலாம். புகையிலை, கருந்துளசி ஆகியவற்றை சேர்த்தால்... இன்னும் வீரியம் கூடும்.
பூண்டுக் கரைசல்:
ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லி பூண்டுச் சாறு, 5 மில்லி வேப்பெண்ணை, சிறிது காதி சோப் கலவை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி, பாதிக்கப்பட்ட மரத்தின் காய்களில் தெளிப்பான் மூலம் அடித்தால்... செம்பேன் சிலந்தி காலியாகி விடும்.
விருதுக்கு உயர்த்தியது, விகடன்தான்!
'என்னை விருது பெறும் அளவுக்குத் தகுதியாக்கிய பெருமை பசுமை விகடனைத்தான் சேரும். பசுமை விகடன் ஆரம்பிச்சதுல இருந்து நான் சந்தாதாரர். இப்போ வரைக்கும் வெளியாகியிருக்குற அத்தனைப் புத்தகங்களையும் பொக்கிஷம் மாதிரி சேர்த்து வெச்சிருக்கேன். 'மண்புழு மன்னாரு’ பகுதி மூலமா பல ஆச்சரியமான விஷயங்களைத் தெரிஞ்சிக்க முடியுது. விவசாயிகளையும், விஞ்ஞானிகளைப் போல யோசிக்க வைக்கிறார் மன்னாரு. அடுத்ததா திப்பிலி சாகுபடியில இருந்து கொய்மலர்கள் வரை நான் சந்தேகம் கேட்கும்போதெல்லாம் கை பிடிச்சு வழிகாட்டுறது, பேச்சிப்பாறை கே.வி.கே.'' என்று நன்றியுடன் நினைவு கூர்ந்தார், ஹென்றி.
வேளாண் கல்லூரி மாணவர்களின் இயற்கைப் பாசம்!
விருது பெற்ற ஹென்றியின் பண்ணையைப் பார்வையிடுவதற்காக திருநெல்வேலி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். அவர்களிடமிருந்து ஒட்டுமொத்தக் கருத்தாக வந்து விழுந்த வார்த்தைகள்... விவசாயத்தின் மீதான இந்திய அரசின் பார்வையையே அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. அந்த மாணவர்கள் கூறியது இதுதான்-
''கல்லூரியில் அதிகமா ரசாயன விவசாயத்தைப் பத்தின பாடங்களைத்தான் படிப்போம். ஆனா, இந்தப் பண்ணையை நேரடியா பார்வையிட்டதன் மூலமா இயற்கை விவசாயத்தோட பெருமைகளைத் தெரிஞ்சுக்கிட்டோம். இதுவரைக்கும் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும்தான் விவசாயிகளின் வரம்னு நினைச்சுட்டு இருந்தோம். அது ஒட்டுமொத்த இந்தியாவையும் பிடிச்சு ஆட்டுவிக்குற சாபம்னு இப்பதான் புரியுது. குறைவானச் செலவிலேயே இயற்கை விவசாயத்தில் வளமான மகசூலை எடுக்கறதுக்கு வாய்ப்பு இருக்குறப்போ... விவசாயிகள் ஏன் ரசாயனத்தைச் தூக்கிச் சுமக்கணும்?''
''எல்லாவற்றிலும் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றுவோம்'' என்று மேடைகளிலும், அறிக்கைகளிலும் சொல்லிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவாவது இந்தக் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு, விவசாயம் தொடர்பான தன்னுடையப் பார்வையை மாற்றிக் கொண்டு, இயற்கை விவசாயம் பற்றி குறைந்தபட்சம் வெளிப்படையாக விவாதிக்கவாவது முன்வர வேண்டும்.
|
தொடர்புக்கு
அருள் மைக்கேல் ஹென்றி,
அலைபேசி: 94433-65274.
படங்கள்: ரா. ராம்குமார்
அலைபேசி: 94433-65274.
படங்கள்: ரா. ராம்குமார்
No comments:
Post a Comment