ஆடு +தென்னை +மா
அமோக வெற்றி தரும் அசத்தல் கூட்டணி !
பறக்கப் பறக்கத்தான் இறகுகள் பலப்படும். உழைக்க உழைக்கத்தான் உயர்வுகள் உனதாகும்'
அந்த ஆட்டுப் பண்ணையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தன்னம்பிக்கை வாசகம், அங்கே நுழையும் அனைவரையும் ஈர்க்கிறது. பண்ணையின் உரிமையாளர்களான வாசுதேவன்-கவிதா தம்பதி, அந்த வாசகங்களுக்கு உதாரணமாகவும் நின்று கொண்டிருப்பது, அனைவரையும் வியக்க வைக்கிறது!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், தேவிநாயக்கன்பட்டியில் இருக்கிறது, இந்தத் தம்பதிக்குச் சொந்தமான 'அருவங்காடு தோட்டம்’. ஒருபுறம் தென்னந்தோப்பு... மறுபுறம் மாந்தோப்பு. அவற்றுக்கிடையேதான் பிரமாண்டமாய் நீள நீளமான பரண் அமைப்பிலான இரண்டு கொட்டில்கள். அவற்றின் நடுவே, தீவனம் அரைக்கும் இயந்திரம், பசுந்தீவனம் வெட்டும் இயந்திரம்... என ஒரு தொழிற்சாலை கணக்காக காட்சியளிக்கிறது, அவர்களுடைய 'வீரா ஆட்டுப்பண்ணை’!
கை கொடுக்கும் பசுமை விகடன்!
''முதல் புத்தகத்துல இருந்து இப்ப வரைக்கும் ஒண்ணு விடாம அத்தனை 'பசுமை விகடன்’ புத்தகங்களையும் நாங்க சேர்த்து வெச்சுருக்கோங்க. அதைப் படிச்சுதான் 'கொட்டில் முறை ஆட்டுப்பண்ணை’ பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். இந்த இடத்துல பரம்பரை பரம்பரையா பண்ணையம் பண்ணிக்கிட்டிருக்கோம். தாத்தா, வீரப்ப கவுண்டர், அந்தக் காலத்துலேயே நூறு செம்மறி ஆடு, அம்பது வெள்ளாடு, அம்பது பால் மாடுனு வெச்சு பண்ணையம் பண்ணிக்கிட்டிருந்தார்.
துவள வைத்த வேலையாள் பிரச்னை!
காலப்போக்குல... கொஞ்சம் கொஞ்சமா அதையெல்லாம் குறைச்சுக்கிட்டு, வீட்டுத்தேவைக்கு மட்டும் கால்நடைகளை வளத்துக்கிட்டிருந்தோம். நான் விவசாயத்துக்கு வந்து இருபத்தி மூணு வருஷம் ஆச்சு.
ஆரம்ப காலத்துல வேலைக்கு ஆளுங்களைக் கூட்டிட்டு வர்றது குதிரைக் கொம்பா இருந்துச்சு. ராத்திரியே டிராக்டரை எடுத்துக்கிட்டுப் போய் காத்துக் கிடந்து விடியற்காலை ஆளுங்கள ஏத்திட்டு வரணும். 'காலையில போயிக்கலாம்'னு கொஞ்சம் தயங்கினா... அவ்வளவுதான், வேற தோட்டத்துக்கு வேலைக்குப் போயிடுவாங்க.
இந்தப் பிரச்னையால... ஒரு கட்டத்துல நான் ரொம்பவே நொந்துட்டேன். 'இனிமே நமக்கு இந்தப் பிஞ்சு வெள்ளாமை ஆகாது’னு மொத்தத்துல தென்னை, மாமரம் இது ரெண்டையும் வெச்சுட்டேன். தென்னைக்கு இப்போ இருபது வயசாகுது. மாமரத்துக்கு பதினஞ்சு வயசாகுது. நடவு செஞ்சதுல இருந்து அந்த மரங்களுக்கு இதுவரை துளிகூட ரசாயனம் போட்டதில்லை. முழுக்க இயற்கை விவசாயம்தான். தொழுவுரம், ஆட்டுப்புழுக்கை, கொழிஞ்சினுதான் கொடுப்போம்.
பண்ணையிலேயே இருக்கணும் தொழுவுரம்!
பத்து ஏக்கர்ல 500 மாவும், 16 ஏக்கர்ல 1,000 தென்னையும் இருக்கு. அதுபோக கொஞ்சம் தரிசும் இருக்கு. இந்த மரங்களுக்கு வெளியில இருந்துதான் ஆட்டுப்புழுக்கையையும், தொழுவுரத்தையும் வாங்கிட்டு இருந்தோம். அதுக்குப் பெரிய டிமாண்டு. முத நாள் போய் நாம ஒரு ரேட் பேசி வெச்சுட்டு மறு நா வண்டியோட போனா... 'அம்பது, நூறு ரூபா அதிகமா கிடைக்குது’னு வேற ஆளுக்கு வித்துருப்பாங்க. 'அது சரிப்பட்டு வராது’னு தொழுவுரமும் நம்ம பண்ணையிலேயே இருக்கணும்னுதான் ஆட்டுப்பண்ணை வெக்கிற ஐடியா வந்துச்சு.
திண்டுக்கல்ல இருக்குற கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பேராசிரியர் பீர்முகமதுவைப் பார்த்து யோசனை கேட்டப்போதான் 'பரண் மேல் ஆடு’ முறை பத்தி சொன்னார். அதோட, 'பசுமை விகடன்'ல வந்திருந்த ரெண்டு பண்ணைகளைப் போய் பாத்துட்டு வந்தோம். உடனே அதுக்கான வேலைகளை ஆரம்பிச்சுட்டோம்.
தலைச்சேரி கன்னி கலப்பு!
கேரளாவுல இருந்தும் பாண்டமங்கலத்துல இருந்தும் தலைச்சேரி ஆடுகளை வாங்கினோம். எட்டயபுரம், கோவில்பட்டி பக்கம் இருந்து கன்னி ஆடுகளையும் கிடாக்களையும் வாங்கினோம். அங்கங்க, நாலு போயர் பெட்டை, ஒரு போயர் கிடா, சிரோஹி ஆடுனு வாங்குனதுல மொத்தம் இப்போ 350 ஆடுக இருக்கு. ஆரம்பிச்சு ஒரு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. நாலு மாசமாத்தான் விற்பனையை ஆரம்பிச்சுருக்கோம். எல்லா ஆடுகளும் சேர்ந்து உருவானதுல 160 கலப்பினக்குட்டிகளும் இப்போ கையில இருக்கு.
உரத்துக்குப் பிரச்னையில்லை!
ஆட்டுப்பண்ணை ஆரம்பிச்ச பிறகு, தோட்டத்தோட உரத் தேவைக்கு பிரச்னையில்லை. ஆட்டுக்குட்டி விக்கிறது மூலமா வருமானமும் கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. இதுபோக வீட்டுத்தேவைக்காக மூணு பசு மாடு இருக்கு. அம்பது மாடு இருந்த காலத்துலயும் சரி இப்போவும் சரி... எங்க தோட்டத்துல இருந்து நூறு மில்லி பாலைக்கூட வித்ததில்லை. பால், தயிர்னு கேட்டு வந்தா சும்மாதான் கொடுப்போம். இன்னமும் குழந்தைகளுக்குக்காக இலவசமாத்தான் கொடுத்துட்டுருக்கோம். எங்க தாத்தா, 'பாலை விக்கக் கூடாது’ங்கிற கொள்கையில இருந்ததாலதான் நான் மாடுகளை வாங்காம ஆடுகளை வாங்கினேன். அதேமாதிரி ஆட்டுப்புழுக்கையையும் நாங்க விக்கிறதில்லை. எங்க தோட்டத்துக்கு மட்டும்தான் உபயோகப்படுத்துவோம். குட்டிகளை மட்டும்தான் விக்கிறோம்'' என்றவர், தோட்டத்தையையும் பண்ணையையும் சுற்றிக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.
செலவே இல்லாமல் தீவனம்!
''பத்து ஏக்கர்ல தென்னைக்கு இடையில, கோ-4, கோ.எஃப்.எஸ்-29, வேலிமசால், கிளரிசீடியா எல்லாம் போட்டிருக்கேன். தீவனங்களை வெட்டுறதுக்கு, அடர் தீவனம் தயாரிக்கிறதுக்குனு எல்லாத்துக்கும் மெஷின் இருக்கு. அடர் தீவனத்துக்காக தனியா சோளத்தட்டை, மக்காச்சோளமும் சாகுபடி பண்ணி எடுத்து வெச்சுக்குவோம். அதோட தட்டைக, தோட்டத்துல அங்கங்க இருக்குற புல், வேப்பிலை எல்லாத்தையும் வெட்டி ஆடுகளுக்குத் தீவனமா கொடுத்துடுவோம். 'ஆடு வளர்க்கணும்'னு பிளான் பண்ணின உடனேயே... தீவன உற்பத்தியை ஆரம்பிச்சுட்டோம். தென்னைக்கு ஆட்டுப்புழுக்கை போடுறப்ப அந்த ஊட்டத்துலேயே தீவனமும் நல்லா வளர்ந்துடுது. இது, செலவில்லாம தீவனம் கிடைச்ச மாதிரிதான்.
ஆட்டுப் பண்ணைக்காக 200 அடி நீளம், 22 அடி அகலத்துல நல்லா சிமெண்ட் பில்லர் போட்டு, தரையை விட்டு அஞ்சடி உயரத்துல ரெண்டு ஷெட் போட்டிருக்கோம். அதை 20 அடிக்கு 22 அடிங்கற கணக்குல தடுப்பு போட்டு 20 அறைகளா பிரிச்சு வெச்சுருக்கோம். கழிவுகள் கீழ விழுந்துடுற மாதிரி சின்னச்சின்ன இடைவெளி விட்டு பலகையால அடிப்பகுதியை அமைச்சுருக்கோம்.
ஒவ்வொரு அறைக்கு வெளியேவும் தீவனம் வைக்கறதுக்கான அமைப்பும், உள்ளே தண்ணி வெக்கிறதுக்கான அமைப்பும் இருக்கு. இதையெல்லாம் ஏற்பாடு பண்ணினது மட்டும்தான் நான். மத்தபடி கவிதாதான் முழுக்க முழுக்க ஆட்டுப்பண்ணையைக் கவனிக்கறாங்க'' என்ற வாசுதேவனைத் தொடர்ந்த கவிதா, வளர்ப்பு முறைகளை விவரித்தார்.
மூன்று வேளை தீவனம்!
''ஒவ்வொரு அறையிலயும் இருபத்தஞ்சுல இருந்து முப்பது ஆடுகள் வரைக்கும் விட்டிருக்கோம். தாய் ஆடுகளும், கிடாக்களும் எப்பவும் கொட்டில்லதான் இருக்கும். குட்டிகளை மட்டும் மேய்ச்சலுக்கு அனுப்புவோம். காலையில ஒன்பது மணிக்கு ஒரு ஆட்டுக்கு நாலரைக் கிலோங்கற கணக்குல எல்லா பசுந்தீவனங்களையும் கலந்து சின்னச்சின்னதா மெஷின்ல வெட்டிக் கொடுத்துடுவோம். இப்படி கொடுக்கறதால, எதையும் கழிக்காம அவ்வளவையும் ஆடுக சாப்பிட்டுடும்.
மதியம் ஒரு மணிக்கு ஆட்டுக்கு 200 கிராம்ங்கற கணக்குல அடர் தீவனம் கொடுப்போம். திரும்ப சாயங்கலாம் நாலு மணிக்கு காலையில கொடுத்த மாதிரியே பசுந்தீவனம் கொடுப்போம். காலையில ஷெட்டை நல்லா சுத்தப்படுத்திடுவோம். எப்பவும் சுத்தமான தண்ணி நிரப்பிக்கிட்டே இருப்போம். பசுந்தீவனம் அறுத்துட்டு வந்து நறுக்குறது, தீவனம் தயாரிக்கிறது, பராமரிப்பு எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தம் நாலு பேர் (2 ஆண்கள், 2 பெண்கள்) தினசரி வேலைக்கு வர்றாங்க. டாக்டருங்க சொல்ற மாதிரி தடுப்பூசி போட்டுடுவோம். அதேமாதிரி குடற்புழு நீக்கம் செஞ்சுடுவோம்'' என்று பராமரிப்புக் குறிப்புகளை அழகாக அடுக்கினார்.
மாதத்துக்கு 50 குட்டிகள்!
வருமானம் பற்றி பேச ஆரம்பித்த வாசுதேவன், ''வெள்ளாடுகள் ரெண்டு வருஷத்துல மூணு ஈத்து எடுக்கும். ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிக கிடைக்கும். நாலு மாசம் வரைக்கும் வளர்த்து வித்துடுவோம். நல்லா பால் குடிச்ச பிறகு கொஞ்ச நாள் மேய்ச்சலுக்கும் அனுப்புறோம். அதனால எங்ககிட்ட வளர்ப்புக்கு வாங்கிட்டுப் போறவங்களுக்கும் ஆரோக்கியமான குட்டிங்கதான் கிடைக்கும்.
ஒரு குட்டி, மூணாயிரத்து ஐநூறு ரூபாய்ல இருந்து நாலாயிரத்து இரு நூறு ரூபா வரைக்கும் விலை போகுது. நாங்க விற்பனையை ஆரம்பிச்சு நாலு மாசம் ஆகுது. மாசத்துக்கு நாப்பத்தஞ்சுல இருந்து அம்பது குட்டிக வரைக்கும் விக்கிறோம். சராசரியா மாசத்துக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது.
மாதம் 1 லட்சம் லாபம்!
ஆடுகளுக்கு அமைச்ச கொட்டில்கள், தீவனம் தயாரிக்கிற மெஷின், வெட்டுற மெஷின், தாய் ஆடுகள், போக்குவரத்துனு எல்லாத்துக்கும் சேர்த்து 35 லட்ச ரூபாய் செலவாச்சு. சம்பளம், கரன்ட், தீவனம் எல்லாத்துக்கும் மாசம் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகுது. இந்த ஒரு வருஷத்துல 40 லட்ச ரூபாய்க்கு மேல செலவு பண்ணிட்டோம். மா, தென்னையில கிடைக்கிற வருமானத்தை இதுக்குதான் செலவு செஞ்சுட்டிருந்தோம்.
இதுவரை சம்பாதிச்ச பணத்தையெல்லாம் புரட்டி இதுல போட்டாச்சு. இப்போதான் வருமானம் பாக்க ஆரம்பிச்சுருக்கோம். இனி நிரந்தர முதலீடு எதுவும் கிடையாது. பராமரிப்புக்கும், தீவனத்துக்கும் மட்டும்தான் செலவு. அதை வெச்சுப் பாத்தா... மாசம் 1 லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். அடுத்த வருஷம் குட்டிகளோட எண்ணிக்கை கூடலாம். அப்போ இன்னமும் வருமானமும் கூடும். போட்ட முதலீட்டைத் திரும்ப எடுக்கறதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் ஆகும். அதுக்கப்பறம் எல்லாம் லாபம்தான். கண்டிப்பா ரெண்டு வருஷத்துல எடுத்துடுவேன்'' என்றார், நம்பிக்கையுடன்.
இயற்கை முறையில் தென்னை மற்றும் மா ஆகியவற்றை சாகுபடி செய்து வரும் வாசுதேவன், அவற்றின் பராமரிப்பு மற்றும் விற்பனை பற்றியும் விரிவாகவே பேசினார்....
மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!
''27 அடி இடைவெளியில தென்னை இருக்கு. முன்னாடி, வருஷத்துக்கு ரெண்டு தடவை கொழிஞ்சியையும் தொழுவுரத்தையும் செழிம்பாக் கொடுத்துட்டு இருந்தோம். இப்போ, ஆட்டுப்புழுக்கையையும் கொழிஞ்சியையும் கொடுத்துட்டிருக்கோம். வேற எந்த உரமும் கொடுக்கறதில்லை. அதேமாதிரி தேங்காயா விக்கிறதில்லை. கொப்பரையாக்கி, வெள்ளகோவில்ல இருக்குற எண்ணெய் மில்லுக்கு நேரடியா அனுப்பி வெச்சுடுவோம். அதனால, புரோக்கர் கமிஷன், மார்க்கெட் கமிஷன்னு எந்தச் செலவும் இல்லை. போக்குவரத்துச் செலவு மட்டும்தான். நாங்க, கொப்பரை அனுப்புற அன்னிக்கு மார்க்கெட் விலை என்னவோ... அதை அப்படியே கொடுத்துடுவாங்க.
சிரட்டை 8,000 ரூபாய்... மட்டை 4,000 ரூபாய்.
வருஷத்துக்கு ஆறு தடவை காய் பறிக்கலாம். ஆயிரம் தென்னை மரங்கள்ல இருந்து, ஒரு தடவைக்கு 30 ஆயிரம் காய் கிடைக்குது. ஆறு தடவைக்கும் சேர்த்து 1,80,000 காய் கிடைக்கும். அதை உரிச்சு உடைச்சுக் காய வெச்சு பருப்பு எடுத்தா... 18 டன் கொப்பரையும், 18 டன் சிரட்டையும் கிடைக்கும். 1 டன் சிரட்டை, 8 ஆயிரம் ரூபாய்; 1 லாரி லோடு தேங்காய் மட்டை 4 ஆயிரம் ரூபாய்னு விலை போகுது. சிரட்டை, மட்டையில கிடைக்கிற வருமானத்தை வெச்சே தேங்காய் வெட்டுக்கூலி, உரிக்கிற கூலி, பருப்பு எடுக்கற கூலி எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்.
இயற்கை விவசாயம்கறதால உரச் செலவும் கிடையாது. கொப்பரை விக்கிற பணம் அப்படியே லாபம். ஆகக்கூடி... ஆயிரம் தென்னை மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 10 லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது. அதேமாதிரி மட்டைகளைப் பொடியாக்குற மெஷின் ஒண்ணையும் வாங்கி வெச்சுருக்கேன். தேவையான அளவுக்கு மட்டும் மட்டைகளைப் பொடியாக்கி மூடாக்கு போட்டுடுவோம். மீதி மட்டைகளைத்தான் விப்போம்.
நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்...
25 அடி இடைவெளியில மா மரங்கள் இருக்கு. அல்போன்சா, பங்கனப்பள்ளி, கல்லாமை, செந்தூரா, கருங்குரங்குனு 500 மரங்கள் இருக்கு. இதுக்கும் வருஷத்துக்கு ரெண்டு தடவை இயற்கை உரம் மட்டும்தான் கொடுக்குறோம். பத்து ஏக்கர்ல இருந்து கிடைக்கற பழங்களை விக்கிறது மூலமா வருஷத்துக்கு 4 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது.
இதையும் நாங்க மார்க்கெட்டுக்கு அனுப்பறதில்லை. நேரடியா, கரூர்லயும், கோயம்புத்தூர்லயும் இருக்கற பழமுதிர்ச்சோலை நிலையம் கடைகளுக்குதான் அனுப்புறோம். போக்குவரத்து மட்டும்தான் செலவு. இதன் மூலமா கூடுதல் லாபம் கிடைக்குது. இயற்கையா விளைஞ்சதுனு சொல்லி அதிக விலைக்கு விக்கணும்னெல்லாம் நாங்க ஆசைப்படலை. மார்க்கெட் விலை கிடைச்சாலே போதுமானது. செலவு குறையறப்போ, தானா லாபம் கூடிடுதுல்ல'' என்றார் வாசுதேவன், மகிழ்ச்சியின் உச்சத்தில் நின்றவராக!
தொடர்புக்கு
வாசுதேவன், செல்போன்: 94433-29300.
பீர்முகமது, செல்போன்: 94433-21882.
இப்படித்தான் வளர்க்கணும்!
திண்டுக்கல் ,கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் பீர்முகமது, (தற்போது நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராக மாறுதலாகியிருக்கிறார்), ஆடு வளர்ப்பைக் கையில் எடுக்க நினைப்பவர்களுக்கு சில ஆலோசனைகளைச் சொல்கிறார்.
முதலில் பசுந்தீவனம்!
''ஆடு வளர்ப்பில் இறங்கலாம் என்று தீர்மானித்த உடனேயே, முதலில் பசுந்தீவனங்களை வளர்க்க ஆரம்பித்துவிட வேண்டும். ஓரளவுக்குத் தீவனங்கள் தயாரான பிறகு, நாம் வளர்க்கப் போகும் ஆடுகளின் எண்ணிக்கை, இடவசதி, பொருளாதார வசதி ஆகியவற்றுக்கேற்ப ஆடுகளுக்கான கொட்டிலை அமைத்துக் கொள்ளலாம். தரையில் இருந்து ஐந்தடி அடி உயரத்தில் கொட்டிலை அமைக்க வேண்டும். ஆடுகளின் கால்கள் சிக்கிக் கொள்ளாத அளவுக்கு இடைவெளி கொடுத்து, உறுதியான ரீப்பர்கள் மூலம் கொட்டிலின் தரைப்பகுதியை அமைத்துக் கொள்ள வேண்டும். கொட்டிலை தனித்தனி அறைகளாகப் பிரித்து வைத்துக் கொள்வது நல்லது. முடிந்தளவுக்கு வெவ்வேறு பண்ணைகளில் ஆடுகளை வாங்கி வருவது நல்லது.
ஒரு மாதத்தில் பசுந்தீவனம்!
ஆறு மாத வயதுக்கு மேல் பெட்டைகள் பருவத்துக்கு வரும். பருவத்துக்கு வருவதை அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு கிடாவை விட்டு வைத்தால்... தானாகவே இணைந்து இனப்பெருக்கம் செய்து கொள்ளும். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை கிடாக்களை மாற்றுவது நல்லது. குட்டிகள் பிறந்து ஒரு மாதம் வரை தாயுடன் இருக்கவிட்டு, தனியாகப் பிரித்து பசுந்தீவனங்களைச் சாப்பிடப் பழக்க வேண்டும். பால் குடிக்கும் நேரத்துக்கு மட்டும் வேண்டுமானால், தாயுடன் விடலாம். மூன்று மாத வயது வந்தவுடன், குட்டிகளிலிருக்கும் பெட்டை மற்றும் கிடாக்களை தனித்தனியாகப் பிரித்து, ஏற்கெனவே பெரிய ஆடுகளைப் பராமரிக்கும் அறைகளில், அடைத்துவிட வேண்டும்.
சரிவிகிதத்தில் தீவனம்!
வேலிமசால், முயல்மசால், கிளரிசீடியா, சவுண்டல் போன்ற இலை வகைத் தீவனங்களில் 60 சதவிகிதமும், கோ-4, கோ-3, கோ.எஃப்.எஸ்-29 போன்ற புல் வகை தீவனங்களில் 40 சதவிகிதமும் இருக்குமாறு கலந்து நறுக்கி ஆடுகளுக்கு தினசரி பசுந்தீவனமாகக் கொடுக்க வேண்டும் (பார்க்க, பட்டியல்).
தவறாமல் தடுப்பூசி!
வெக்கை, துள்ளுமாரி, கோமாரி, ஜன்னி... போன்ற நோய்கள் வராமல் தடுக்க அருகிலுள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போட்டு வர வேண்டும். இரண்டு மாத குட்டிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். குட்டிகள் பிறந்து மூன்று மாதங்கள் ஆனபிறகு, ஒவ்வொரு மூன்றாவது மாதமும் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இதையெல்லாம் சரியாகச் செய்தால், ஆடுகளுக்கு எந்த நோயும் தாக்காது'' என்று விவரித்த பீர்முகம்மது, நிறைவாக சொன்ன விஷயம், பண்ணையாளர்கள் எல்லோருமே நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடமாகும்.
அவர் சொன்னது இதுதான்- ''எந்தப் பண்ணையானாலும் சரி... அடிக்கடி, கால்நடை மருத்துவர்களின் வருகை இருந்தால், 'பண்ணை நிர்வாகம் ஆரோக்கியமாக இல்லை’ என்று புரிந்து கொள்ளலாம். அவசர காலங்களில் மட்டும்தான் கால்நடை மருத்துவர்களின் வருகை இருக்க வேண்டும். சரிவிகித உணவு, பண்ணைப் பராமரிப்பு இருந்தால்... மருத்துவர்களின் வருகைக்கு அவசியமுமே இருக்காது. பண்ணைக்கு வரும் பார்வையாளர்கள் ஆளுக்கு ஒரு விஷயத்தை வாய்க்கு வந்தபடி சொல்லிக் கொடுப்பார்கள். அதையெல்லாம் ஆர்வக் கோளாறில் உடனே நடைமுறைப் படுத்தக் கூடாது. நன்று யோசித்து மருத்துவர் மற்றும் அனுபவசாலிகளின் அறிவுரைப்படி செய்தால் 'நஷ்டம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை.
மூலிகை மருத்துவம் சிறந்தது !
தடுப்பூசிகளைத் தவிர்த்து பெரும்பாலான நோய்களுக்கு நமது பண்ணைகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டே வைத்தியம் செய்து கொண்டால், செலவைக் குறைப்பதோடு ஆரோக்கியமாகவும் ஆடுகளை வளர்க்க முடியும்!''
ஜி.பழனி
படங்கள்: வீ. சிவக்குமார்
source:pasumaivikatan
No comments:
Post a Comment