இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே வருவாய் ஈட்ட வழிகாட்டுகிறது. வண்ண மீன் வளர்ப்பு + விற்பனைத்தொழில்.
இந்தியாவில் கடல் மற்றும் குளம், குட்டைகளில் வளரக் கூடிய ஆயிரக்கணக்கான வண்ண மீன்கள் உள்ளன. இவற்றை நம் வீடுகளில் எந்த சீதோஷண நிலையிலும் வளர்க்க முடியும். கண்ணாடி பாட்டில் முதல் பெரிய அளவிலான தொட்டிகள் வரை அமைத்து இவற்றை வளர்க்கலாம்.
நாள்தோறும் காலை, மாலை நேரத்தில் சில நிமிடங்கள் இவற்றின் பராமரிப்புக்கு ஒதுக்கினால் போதும். இல்லத்தரசிகள் இத்தொழில் மூலம் வருமானம் காணலாம்.
வண்ண மீண்களுக்கு தற்போது நல்ல விற்பனை சந்தை உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தை நம்புவோர் சைனீஸ் ஃபெங்சூயி முறை வாஸ்து பரிகாரமாக மீன் தொட்டிகளை வீடுகளில் வைப்பதுண்டு. இன்றைக்கு இத்தகைய மீன்தொட்டிகளை வைப்போரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
உள்ளூர் விற்பனை தவிர வெளியூர்களுக்கும் இந்த மீன்களை பெரிய அளவில் எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வெளி நாடுகளுக்கும் இந்த மீன்கள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு பெருகியுள்ளது.
இந்த வண்ண மீன்களுக்கான உணவு பாக்கெட்டுகள் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. விலையும் சொற்பமே. வண்ண மீன்கள் வளர்ப்பதற்கு ஒரு முறை சொற்ப அளவில் முதலீடு செய்தாலே போதும்.
ஒரு ஜோடி வண்ண மீன்களை ரூ.5-க்கு விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூ.1000 எளிதாக சம்பாதிக்க இயலும்.
அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் வண்ண மீன்கள் வளர்ப்பது, அதிகம் காணப்படுகிறது. உலக அளவில் செல்லப் பிராணிகளை வளர்ப்போரின் எண்ணிக்கைக்கு அதிகமாக வண்ண மீன்கள் வளர்ப்போர் எண்ணிக்கையும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
உலகில் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் பெறுவது புகைப்படம் எடுப்பது, அடுத்து வண்ண மீன்கள் வளர்ப்பது என்பதை மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
வண்ண மீன்கள் ஓட்டல்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், நீண்டநேரம் பொது மக்கள் காத்திருக்கும் இடங்கள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் ஆகியவற்றில் இடம்பெற்று வருகின்றன.
வீடுகளில் இவை அழகு அம்சமாக இடம் பெறுகின்றன. வெளியில் சென்று மன அழுத்தத்தோடு வீடு திரும்பும் நிலையில் இந்த மீன்களை சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் மன அழுத்தம் குறைவதும், ரம்மியமான சூழல் மனதில் ஏற்படுவதும் இயற்கை.
மீன்களுக்கு உணவிடும் முறை, தண்ணீர் மாற்றுதல், ஆண், பெண் மீன்களை அடையாளம் காணுதல். முட்டையிடும் மீன் வகைகளில் அம்முட்டைகளை தனியாக பிரித்தெடுத்தல் ஆகியவற்றை தெரிந்துகொள்ளுதல் மீன் வளர்ப்பு அடிப்படை அம்சம் ஆகும்.
மீன் தொட்டிகளை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். இரும்புக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சிலிக்கான் பேஸ்ட் மூலம் கண்ணாடிகளை ஒட்டி தொட்டியாக உருவாக்கலாம்.
மீன் தொட்டிகளால் சுகாதாரச் சிர்கேடு, கொசு பரவுவதாக சிலர் புகார் தெரிவிப்பதுண்டு. அது தவறு. மீன்களின் முக்கிய உணவு கொசுவின் லார்வா. எனவே இயற்கையாகவே கொசுக்களின் உற்பத்தியை இவை தடை செய்யக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீரை நீண்ட நாள் மாற்றாமல் உணவு பொருள் கசடுகளால் மாசு ஏற்படும் நிலையிலே மீன் தொட்டிகளில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இறந்துவிடும் மீன்களை உடனடியாக அகற்றுவது அவசியம்.
பெரிய அளவில் மீன்கள் வளர்க்கப்படும் போது அவற்றுக்கு சில நோய்கள் வருவதுண்டு. அவற்றுக்கான தடுப்பு மருந்துகளும் தற்போது உள்ளன.
மீன் பராமரிப்பவர்களுக்கு தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் இல்லை.
வண்ண மீன்களை அதிக அளவில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மரைன் புராடக்ட் எக்ஸ்போர்ட் டிவிஷன் வழிகாட்டுகிறது.
No comments:
Post a Comment