வறண்ட கிணறுகள்... வாடாத தென்னைகள்...
பலமூட்டும் பிளாஸ்டிக் கேன் சொட்டுநீர்!
தமிழக விவசாயிகள் இப்படியரு வறட்சியைப் பார்த்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. ஏரி, குளம் மட்டுமன்றி... கிணறு, குழாய்க்கிணறு என அனைத்து நீராதாரங்களும் வறண்டு கிடக்கின்றன.
பருவப்பயிர்களை நட்ட விவசாயிகள், வானத்தைப் பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். தென்னை விவசாயிகளுக்கும் இதே கதைதான்.
இப்படிப்பட்ட இக்கட்டானச் சூழ்நிலையில, மழை கிடைக்கும் வரையிலான காலம் வரை தென்னையைக் காக்க, புதியநுட்பம் ஒன்றைக் கையில் எடுத்திருக்கிறார், சேலம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பச்சமுத்து. அக்கம்பக்கத்துத் தென்னைகள் வாடிக்கிடக்கும் சூழலில், புதியநுட்பம் காரணமாக, இவருடைய தோட்டத்துத் தென்னைகள் பசுமைக் கட்டி நிற்கின்றன... படு தெம்பாக!
செல்லியம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பச்சமுத்துவுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், 120 தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். இருந்த ஒரே கிணறும் வறண்டுவிட... தென்னை மரங்களை இழக்க விரும்பாத பச்சமுத்து, பிளாஸ்டிக் கேன்கள் மூலம் புதிய நுட்பத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, செழிப்பு குறையாமல், மரங்களைக் காத்து வருகிறார்.