Tuesday

வறண்ட கிணறுகள்... வாடாத தென்னைகள்... பலமூட்டும் பிளாஸ்டிக் கேன் சொட்டுநீர்!


வறண்ட கிணறுகள்... வாடாத தென்னைகள்...
பலமூட்டும் பிளாஸ்டிக் கேன் சொட்டுநீர்!
தமிழக விவசாயிகள் இப்படியரு வறட்சியைப் பார்த்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. ஏரி, குளம் மட்டுமன்றி... கிணறு, குழாய்க்கிணறு என அனைத்து நீராதாரங்களும் வறண்டு கிடக்கின்றன.
பருவப்பயிர்களை நட்ட விவசாயிகள், வானத்தைப் பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். தென்னை விவசாயிகளுக்கும் இதே கதைதான்.
இப்படிப்பட்ட இக்கட்டானச் சூழ்நிலையில, மழை கிடைக்கும் வரையிலான காலம் வரை தென்னையைக் காக்க, புதியநுட்பம் ஒன்றைக் கையில் எடுத்திருக்கிறார், சேலம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பச்சமுத்து. அக்கம்பக்கத்துத் தென்னைகள் வாடிக்கிடக்கும் சூழலில், புதியநுட்பம் காரணமாக, இவருடைய தோட்டத்துத் தென்னைகள் பசுமைக் கட்டி நிற்கின்றன... படு தெம்பாக!
செல்லியம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பச்சமுத்துவுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், 120 தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். இருந்த ஒரே கிணறும் வறண்டுவிட... தென்னை மரங்களை இழக்க விரும்பாத பச்சமுத்து, பிளாஸ்டிக் கேன்கள் மூலம் புதிய நுட்பத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, செழிப்பு குறையாமல், மரங்களைக் காத்து வருகிறார்.
''இந்த நுட்பத்தை, 'பசுமை விகடன்’தான் எனக்கு அறிமுகம் செஞ்சது. 10-04-2012 தேதியிட்ட இதழ், 'நீர் மேலாண்மை’ சிறப்பிதழா வந்துச்சு. அதில் 'சின்ன யோசனை... பெரிய பலன்’னு தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர், பாலசுப்ரமணியன் பத்தி ஒரு செய்தி வந்துச்சு. வாட்டர் பாட்டில்களையும், குளுக்கோஸ் ட்யூப்களையும் பயன்படுத்தி, செலவில்லாம செடிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனம் பண்றதைப் பத்தி அவர் சொல்லியிருந்தாரு.
இந்த வறட்சியில தென்னைகள் வாடி நின்னப்போ அந்தப் புத்தகத்தைத் தேடிப்பிடிச்சு, மறுபடியும் ஒரு தடவை படிச்சுட்டு, அதே முறையில் தென்னைகளுக்கு தண்ணீர் ஏற்பாடு பண்ணிட்டேன். ஆனா, தென்னைகளுக்கு சின்ன வாட்டர் பாட்டில் போதாததால, 20 லிட்டர் வாட்டர் கேன்கள் மூலமா பாசனம் பண்றேன்'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்னவர், தொடர்ந்தார்.  
''கேன்களை வாங்கிட்டு வந்து, அதோட வாய்ப்புறத்துல வழக்கமா இருக்கற பிளாஸ்டிக் மூடியைப் போட்டு மூடி, அதுல கோணி ஊசியால ஒரு துளை போட்டுக்கிட்டேன். அடிபாகத்தத் திருப்பி, கொஞ்சத்தை மட்டும் விட்டுட்டு, மீதியை வெட்டினேன் ('ஃபுட் பால்’ல காத்து அடிக்கிற இடத்துல இருக்குற 'வால்வு’ மாதிரி). இப்ப, வெட்டுன பாகம் திறந்து மூடுற மூடி மாதிரி இருக்கும்.
ரெண்டு தென்னைகளுக்கு மத்தியில் அரை அடி ஆழத்துக்குக் குழி தோண்டி, தேங்காய் நாரைப் போட்டு, கோணி ஊசியால  துளை போட்ட வாய்ப்புறம் மண்ணுக்குள்ள இருக்குற மாதிரி புதைச்சு வெச்சேன்.
கேன் சாயாத அளவுக்கு மண் அணைச்சுவிட்டு... கேனுக்குள்ள தண்ணி ஊத்தி வெச்சப்போ, சொட்டு சொட்டா தண்ணி மண்ணுக்குள்ள போக ஆரம்பிச்சது. ஒரு தடவை கேனை நிறைச்சா, ரெண்டு நாளைக்கு தண்ணீர் இறங்கிட்டு இருக்கும். தேங்காய் நார் இருக்கறதால, துவாரத்துல அடைப்பே வராது'' என்ற பச்சமுத்து,
''இப்படி 60 கேன்களை வெச்சு, தண்ணியை விலைக்கு வாங்கி ஊத்தி, 120 மரங்களுக்கு பாசனம் பண்ணிட்டு இருக்கேன். மண் ஈரமாகுறதால மரம் காயாம இருக்கு. அதனால, ஒரு மரத்துக்கு ஒரு கேன் கணக்குல வைக்கப் போறேன். வறட்சி நீங்குற வரைக்கும் தென்னையைக் காப்பாத்த இதுதான் நல்ல வழினு தோணுது'' என்றார்.
அதை ஆமோதிக்கும் வகையில், தலையசைத்தன அவருடைய தோட்டத்துத் தென்னைகள்!
 தொடர்புக்கு, பச்சமுத்து, 
செல்போன்: 97919-72323.
Source:pasumaivikatan

No comments: