சத்தான வருமானம் தரும் சம்பங்கி..!
70 சென்ட் நிலத்தில்... ஆண்டுக்கு 3 லட்சம்!
'ஒவ்வொரு விவசாயியும் தனது நிலத்தில், வருட வருமானம், மாத வருமானம், வார வருமானம், தினசரி வருமானம் என்று கிடைக்குமாறு கலப்புப் பயிர்களை சாகுபடி செய்தால்... நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்பதுதான் காலகாலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதை நிரூபிக்கும் விவசாயிகளும் இங்கே நிறைய! அந்த வகையில், தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்களில் முதலிடத்தில் இருப்பது மலர்கள். குறிப்பாக, சம்பங்கி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு தினசரி வருமானத்துக்குப் பஞ்சமே இல்லை. அதனால்தான் பலரும் சம்பங்கி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள ரெங்கப்பநாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயரங்கன்.
''கரும்பை நட்டவங்க கண்ணீர் விடுறாங்க, காய்கறி போட்டவங்க கையை சுட்டுக்கறாங்க. ஆனா, சம்பங்கி பூ விவசாயம் செஞ்ச யாருமே 'நஷ்டம்’னு புலம்புறதில்லை. இதுல வேலையும் கம்மி, தினசரி வருமானமும் கிடைக்கும். என்ன பயிர் தோட்டத்துல இருந்தாலும், கொஞ்ச இடத்துலயாவது சம்பங்கியை சாகுபடி பண்ணினா... கண்டிப்பா நல்லா சம்பாதிக்கலாம்'' என்று குரலில் நம்பிக்கைத் தெறிக்கப் பேசுகிறார், விஜயரங்கன்.
''நான் பரம்பரை விவசாயி. எனக்கு 6 ஏக்கர் நிலமிருக்கு. அதுல, 5 ஏக்கர்ல கொய்யாவும், 70 சென்ட்ல சம்பங்கியும் போட்டிருக்கேன். ஆரம்பத்துல கொய்யாவுக்கு ரசாயன உரங்களைத்தான் போட்டுட்டு இருந்தேன். ஒரு தடவை கையில காசு இல்லாம உரம் போடாம விட்டுட்டேன். ஆனாலும், 'மரத்துக்கு எதாவது ஊட்டம் கொடுத்தாகணுமே’னு என்கிட்ட இருந்த ஆட்டு எரு, மாட்டு எருவையெல்லாம் போட்டு தண்ணி மட்டும் பாய்ச்சிட்டிருந்தேன். ரசாயன உரங்கள போடாததால 'பெரியளவுல காய்ப்பு இருக்காது’னுதான் நினைச்சுட்டுருந்தேன். ஆனா, அந்த வருஷம் செமத்தியா காய்ச்சுடுச்சு. அப்புறம்தான் இயற்கை உரமான எருவோட அருமை புரிஞ்சுது. அதிலிருந்தே ரசாயன உரத்தை மூட்டை கட்டிட்டேன். கிட்டத்தட்ட ஏழு வருஷமாச்சு. இப்போ வரை இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டிருக்கேன்.
நான் 'பசுமை விகடன்' தீவிர வாசகர். போன வருஷம், அதுல, 'சம்பங்கி சாகுபடி செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்’ங்குற தலைப்புல திண்டுக்கல் மாவட்டம், தவசிமடை மருதமுத்துவைப் பத்தி எழுதியிருந்தாங்க. உடனே, எனக்கும், என்னோட மனைவி நளாயினியிக்கும் சம்பங்கி சாகுபடியில ஆசை வந்துடுச்சு. உடனே, மருதமுத்துவோட தோட்டத்துக்குக் கிளம்பிட்டேன். அவர், சம்பங்கி சாகுபடியைப் பத்தித் தெளிவா சொல்லிக் கொடுத்தார். அதோட, 'பிரஜ்வல்’ ரக விதைக் கிழங்கையும் கொடுத்தார். ஆனாலும், 'மருதமுத்து சொல்ற மாதிரி, மாசம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியுமா?’னு ஒரு சந்தேகத்தோடயேதான் இருந்தேன். இப்ப, நானே சம்பங்கியில மாசம் 50 ஆயிரம் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அது தீர்ந்துச்சு. இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்'' என்ற விஜயரங்கன், 70 சென்ட் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்யும் விதம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
அது அப்படியே பாடமாக இங்கே...
அடியுரமாகச் செடிகள்!
'பிரஜ்வல்’ ரக சம்பங்கி வீரிய ரகம் என்பதால், அனைத்துப் பட்டங்களிலும் நடவு செய்யலாம். 70 சென்ட் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்ய, 9 டன் அளவுக்கு ஆட்டு எரு, மாட்டுச் சாணம், மட்கியக் குப்பைகள் எனக் கலந்து நிலத்தில் இறைத்து, இரண்டு உழவு செய்ய வேண்டும். பிறகு, 8 கிலோ தக்கைப் பூண்டு, 4 கிலோ தட்டைப் பயறு விதைகளை ஒன்றாகக் கலந்து, விதைத்து உழவு செய்து... ஒரு சென்ட் அளவுக்கு ஒரு பாத்தி என அமைத்துக் கொண்டு, வாரம் ஒரு பாசனம் செய்து வரவேண்டும்.
40 நாட்களுக்குள் அவை பூக்கும் நேரத்தில் ரோட்டோவேட்டர் மூலமாக அவற்றை அடித்து, மண்ணோடு மண்ணாக்கி விட வேண்டும். மறுநாள், ஒரு சென்ட் நிலத்துக்கு 3 கிலோ என்ற கணக்கில் வேப்பம்பிண்ணாக்கை இட்டு உழவு செய்ய வேண்டும். மறுநாள், இரண்டரை அடி அகலம், இரண்டு அங்குல உயரம் என்ற அளவில் மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இரண்டடி இடைவெளி இருக்க வேண்டும்.
ஒரு சென்டுக்கு மூன்று கிலோ கிழங்கு!
ஒரு சென்ட் நிலத்துக்கு 3 கிலோ என்ற கணக்கில் சம்பங்கி விதைக்கிழங்கை வாங்கி, அவற்றை ஜீவாமிர்தக் கரைசலில் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பாத்தியில், மண்வெட்டி அல்லது களைக்கொத்தியால் நான்கு விரல் (2 அங்குலம்) ஆழத்துக்குப் பறித்து... ஒரு குழிக்கு ஒரு கிழங்கு வீதம் முளைப்புப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு செங்குத்தாக நடவு செய்ய வேண்டும். இரண்டரை அடி இடைவெளியில்... பாத்தியின் ஒரு கரையில் இரண்டு கிழங்குகளும் அவற்றுக்கு நேர் எதிரில் பாத்தியின் மறுகரையில் ஒரு கிழங்கும் இருக்குமாறு, முக்கோண நடவு செய்ய வேண்டும்.
சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது!
மேட்டுப்பாத்தி அமைத்து, சாகுபடி செய்ய சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. நிலத்தின் தன்மையைப் பொருத்து வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ பாசனம் செய்தால் போதுமானது. மாதம் ஒரு முறை 150 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீருடன் கலந்து விட வேண்டும். நடவு செய்த 12-ம் நாள் முளைப்பு எடுக்கும். 30-ம் நாள் தோகையை வெளியே தள்ளி நிலத்தில் படர்ந்து விரியும். 60-ம் நாள் படர்ந்துள்ள தோகைக்கு நடுவில் செங்குத்தாக உயரமாகத் தண்டோடு சேர்த்து மொட்டு வரும். அந்தச் சமயத்தில், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 100 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு செடியின் வேருக்குப் பக்கத்திலும் கையால் குழி தோண்டி ஒரு கைப்பிடி அளவு வைத்து, மண்ணால் மூடி விட வேண்டும்.
நோய்த் தாக்குதல் இல்லை!
90-ம் நாளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். ஆரம்பத்தில், 70 சென்ட் நிலத்துல இருந்து தினமும் 2 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். நடவு செய்த ஆறாவது மாதத்துக்குப் பிறகுதான், மகசூல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மூன்று டிராக்டர் அளவுக்கு தொழுவுரம் இட வேண்டும். நன்கு பூக்க ஆரம்பித்த பிறகு, 70 சென்ட் நிலத்தில், தினமும் 30 கிலோ முதல் 50 கிலோ வரை மகசூல் இருக்கும். இயற்கை முறையில் சாகுபடி செய்வதால், கிழங்கு அழுகல் நோய், வேர்ப்புழுத் தாக்குதல், மொட்டுத் துளைப்பான் போன்றவை வருவதில்லை. பூக்களும் தரமாக இருக்கும்.'
ஊடுபயிரில் கூடுதல் லாபம்!
சாகுபடிப் பாடம் முடித்த விஜயரங்கன், ''ஒரு தடவை சம்பங்கியை நடவு செஞ்சா... இருபது வருஷத்துக்கு மேல மகசூல் கிடைக்கும்னு சொல்றாங்க. ஆனா, 'அஞ்சு வருஷம் மகசூல் கிடைச்சாலே போதும்’னு நான் நினைக்கிறேன். அதுவும் இயற்கை முறையில செய்றதால கட்டாயம் அஞ்சு வருஷம் இதுல எனக்கு மகசூல் கிடைச்சுடும். சம்பங்கியைப் பாத்ததுமே அது 'இயற்கையில விளைஞ்சதா?’, 'ரசாயனத்துல விளைஞ்சதா?’னு சுலபமா கண்டுபிடிச்சுடலாம்.
இயற்கை முறையில பூவோட நுனியில சிவப்பு நிறம் ரொம்ப கம்மியா இருக்கும். ரசாயன உரம் போட்டா... சிவப்பு நிறம் அதிகமாக இருக்கும். சம்பங்கி வயல்ல, ஆரம்பத்துல ஊடுபயிர் சாகுபடியும் செய்யலாம். நான், சம்பங்கி நட்ட உடனேயே, சின்ன வெங்காயத்தை விதைச்சு, 70 நாள்ல அறுவடை செஞ்சுட்டேன். இதுக்குனு தனியா எந்தச் செலவும் செய்யல. மொத்தம் 24 மூட்டை வெங்காயம் மகசூல் கிடைச்சுது. ஒரு மூட்டை 1,000 ரூபாய்னு வித்ததுல, 24 ஆயிரம் ரூபா கிடைச்சுது.
ஒரு நாளைக்கு 1,500 ரூபாய்!
2012-ம் வருஷம் ஜூன் 16-ம் தேதி சம்பங்கி நடவு செஞ்சேன். அந்த வருஷம் டிசம்பர் மாசம் 15-ம் தேதியில இருந்து எனக்கு ஓரளவுக்கு பூ கிடைக்க ஆரம்பிச்சுது. இந்த வருஷம் ஜூன் மாசம் வரைக்கும் மொத்தம் 3,007 கிலோ பூ கிடைச்சிருக்கு.
பெரும்பாலும், நானும் என் மனைவியுமே பறிச்சுடுவோம். அதனால அறுவடைக்கூலி கிடையாது. என்னோட மொபெட்லயே அதை ஸ்ரீவில்லிபுத்தூர் பூ மார்க்கெட்டுக்குக் கொண்டு போயிடுவேன். சம்பங்கிக்கு தினமும் பூ மார்க்கெட்ல ஒவ்வொரு ரேட் வெப்பாங்க. கிலோ முப்பது ரூபாயில இருந்து ஐநூறு ரூபா வரைக்கும் நான் வித்துருக்கேன்.
ஜூன் மாசம் வரை சம்பங்கியில மார்க்கெட் கமிஷன் (100 ரூபாய்க்கு, 12 ரூபாய் 50 காசு) போக, 2 லட்சத்து 95 ஆயிரத்து 937 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. சராசரியா ஒரு நாளைக்கு 16 கிலோ மகசூலும், கிலோவுக்கு சராசரி விலையா 99 ரூபாயும் கிடைச்சுருக்கு. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 1,584 ரூபாய். பருவநிலையைப் பொருத்து ஒவ்வொரு நாளும் மகசூல் கூடிக் குறையும். அதேமாதிரி மார்கெட்டுக்கு பூ வரத்தைப் பொருத்து விலையும் ஏறி, இறங்கும். எப்படிப் பாத்தாலும் சராசரியா ஒரு நாளைக்கு 1,500 ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைச்சுடும்'' என்று நம்பிக்கையோடு சொன்ன விஜயரங்கன்,
''ஒரு வருஷத்துல வெங்காயம், சம்பங்கி ரெண்டுலயும் மொத்தமா கிடைச்ச வருமானம்... 3 லட்சத்து 19 ஆயிரத்து 937 ரூபாய். அதுல, 97 ஆயிரம் ரூபாய் செலவு போக, 2 லட்சத்து 22 ஆயிரத்து 937 ரூபாய் லாபம். இப்போ சம்பங்கியில மகசூல் நல்லா கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. இந்த ஜூலை 1-ம் தேதியில இருந்து, 16-ம் தேதி வரை 389 கிலோ பூ கிடைச்சுருக்கு. அதை 33 ஆயிரத்து 590 ரூபாய்க்கு வித்துருக்கேன். இதுவரை கிடைச்ச லாபத்தைவிட, இனிமே அதிகமா கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்'' என்றார், மகிழ்ச்சியாக.
தொடர்புக்கு, விஜயரங்கன், செல்போன்: 94447-88004.
எதிர்பார்ப்புக் கணக்கு!
''இரண்டாம் ஆண்டில் சராசரியாக தினமும் 20 கிலோ சம்பங்கிப் பூ கிடைக்கும். கிலோவுக்கு 100 ரூபாய் சராசரி விலை என வைத்துக் கொண்டால்... மொத்தம் 7 ஆயிரத்து 300 கிலோ பூவின் மூலம், 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆண்டு வருமானமாகக் கிடைக்கும். 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு போனாலும், 6 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். அதாவது... மாசத்துக்கு 50 ஆயிரம் ரூபாய்'' என்று எதிர்பார்ப்புடன் சொல்கிறார் விஜயரங்கன்.
No comments:
Post a Comment