Sunday

மல்பெரி பயிரிடுங்கள்... மாத வருமானம் பெற்றிடுங்கள்!’ பட்டு விவசாயத்துக்கு

மல்பெரி பயிரிடுங்கள்... மாத வருமானம் பெற்றிடுங்கள்!’
பட்டு விவசாயத்துக்கு
 விவசாயிகளுக்கு அதிக வருமானத்தைக் கொடுத்து வரும் விவசாய உபதொழில்களில் முக்கியமானது, 'பட்டுக்கூடு’ உற்பத்தி. இந்தியாவில், பட்டு நூலுக்கு எப்போதுமே தேவை இருந்து கொண்டே இருப்பதால்... தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை, விவசாயிகளை அதிக அளவில் இத்தொழிலுக்கு இழுத்து வருகிறது. விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு மானியங்களும் வழங்கப்படுகின்றன.  
இதுபற்றி துறை சார்ந்த வல்லுநர்கள் பகிரும் தகவல்கள், இங்கே இடம்பிடிக்கின்றன.
பஞ்சாயத்துக்கு ஒரு பட்டு விவசாயி!
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநரகத்தின், உதவி இயக்குநர் பா. வைத்தியநாதன், ''கடந்த மூன்று வருடங்களாக பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒரு கிலோ 400 ரூபாய்க்குக் குறையாமல் விற்று வருகிறது. குறைந்த அளவு பாசன வசதி கொண்ட விவசாயிகள் கூட மல்பெரி சாகுபடி செய்து அதன் மூலம் பட்டுப்புழுக்களை வளர்த்து, வறட்சியிலும் நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தில், மல்பெரி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு, தர்மபுரி, தாளவாடி, ஓசூர், திண்டுக்கல், செய்யாறு, உடுமலைப்பேட்டை, தாராபுரம், கோபிச்செட்டிப்பாளையம், கிருஷ்ணகிரி, அரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு பட்டுக்கூடுகள் உற்பத்தியாகின்றன.
நாட்டின் பட்டு  நூல் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யும் வகையில், 'தமிழ்நாட்டில் பட்டு விவசாயிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது’ என்கிற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, பட்டு வளர்ச்சித்துறை. இதை மனதில் வைத்துத்தான் 'பஞ்சாயத்துக்கு ஒரு பட்டு விவசாயி’ என்கிற திட்டத்தை, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்'' என்ற வைத்தியநாதன் தொடர்ந்தார்.
மல்பெரி மானியம்!
''பட்டு விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மானியங்களில் மத்திய பட்டு வளர்ச்சி வாரியத்தின் பங்களிப்பும் உள்ளது. பட்டுப்புழுக்கள்தான் பட்டுக்கூடுகளாக மாறுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் 20 முதல் 25 நாட்களில் கூடு கட்டி முடிக்கின்றன. பட்டுப்புழுக்களுக்கு உணவாகப் பயன்படுவது மல்பெரி இலைகள். அந்த இலைகள், தரமானதாக இருந்தால்தான் தரமான பட்டுக்கூடுகளைப் பெறமுடியும். எனவே, வீரியரக மல்பெரி நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 6 ஆயிரத்து 750 ரூபாய் மானியம் உண்டு. அதிகபட்சம் இரண்டரை ஏக்கர் நிலத்துக்கு 16 ஆயிரத்து 875 ரூபாய்.
சொட்டுநீர் மானியம்!
சொட்டுநீர்ப் பாசன முறைதான் மல்பெரிக்கு உகந்ததாக உள்ளது. அதை ஊக்கப்படுத்தும்விதமாக, மல்பெரி தோட்டங்களில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம், பிற விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் என மானியம் வழங்கப்படுகிறது.
புழு வளர்ப்பு மனை!
பட்டுப்புழுக்களை நல்ல காற்றோட்டம் உள்ள சுகாதாரமான இடத்தில் அமைக்கப்பட்ட மனைகளில்தான் வளர்க்க வேண்டும். இந்த மனைகளை அமைத்துக்கொள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் உண்டு. 1,000 சதுர அடியில் மனை அமைக்க 75 ஆயிரம் ரூபாயும், 1,500 சதுர அடியில் மனை அமைக்க ஒரு லட்ச ரூபாயும் நேரடி மானியமாக வழங்கப்படுகின்றன.
உபகரணங்களுக்கும் உண்டு மானியம்!
பட்டுப்புழு வளர்ப்பில் புழுக்களை விடும் தட்டிகள், அடுக்கு அலமாரிகள், வலைகள் போன்ற பல உபகரணங்களின் பயன்பாடு அதிகம். இவற்றுக்காக, 37 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட, நவீன புழு வளர்ப்புத் தளவாடங்கள் பட்டுவளர்ச்சித் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
காப்பீடுத் திட்டம்!
மல்பெரி மற்றும் புழு வளர்ப்புக்கான காப்பீடு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது, பட்டு வளர்ச்சித் துறை. அந்த வகையில், ஆண்டு பிரீமியம் தொகையில், 90 சதவிகித பங்கை, மத்திய மற்றும் மாநில பட்டு வளர்ச்சித் துறைகள் இணைந்து இலவசமாக செலுத்தி வருகின்றன. 10 சதவிகிதம் பிரீமியம் தொகை மட்டுமே விவசாயிகளிடம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், ஆண்டு பிரீமியம் தொகை 413 ரூபாய் 60 காசு. அதில், மத்திய பட்டு வாரியத்தின் பங்களிப்பாக 206 ரூபாய் 80 காசும், மாநில பட்டுவளர்ச்சித்துறை சார்பாக 165 ரூபாய் 40 காசும் வழங்கப்பட்டு விடும். தவிர, பட்டுக்கூடு உற்பத்தி விவசாயி, அவரது மனைவி மற்றும் வாரிசுகள் ஆகியோருக்கு 50 ஆயிரம் ரூபாய் அளவில் விபத்துக் காப்பீடும் உண்டு. பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுவரும் பெண் விவசாயி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 4 நபர்கள் ஆகியோருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை உடல் நலக்காப்பீடு திட்டம் நடைமுறையில் உள்ளது.
இலவசப் பயிற்சி!
பட்டுக்கூடு உற்பத்தியில், உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குக் கற்றுத்தரும் விதமாக... ஓசூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறை பயிற்சி மையத்தில், சிறந்த வல்லுநர்கள் மூலம் ஆண்டுதோறும் 50 விவசாயிகளுக்கு இலவசமாக ஐந்து நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்ளும் விவசாயிகளின் போக்குவரத்துச் செலவு, தங்கும் இடம் மற்றும் உணவுக்கான செலவுகளை பயிற்சி மையமே ஏற்றுக்கொள்கிறது. பயிற்சியின் முடிவில்
5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தளவாடங்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மத்திய பட்டு வாரியம், மைசூரில் உள்ள பயிற்சி மையத்தில் இதுபற்றிய 15 நாட்கள் பயிற்சியையும் வழங்கி வருகிறது.
மல்பெரி மரங்களுக்கு மானியம்!
மல்பெரி செடிகளை வீட்டுப்புறக்கடை, தோட்டத்தின் வரப்புக்கள் ஆகிய இடங்களில் மரமாக வளர்த்து கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம். புரதச்சத்து அதிகம் உள்ள மல்பெரி இலைகளை உண்ணும் கறவை மாடுகள் மூலம், அதிகப்பால் பெறலாம். இதை ஊக்கப்படுத்தும் விதமாக மல்பெரி மரம் வளர்ப்பவர்களுக்கும், ஒரு மரத்துக்கு 8 ரூபாய் என மானியம் வழங்கப்படுகிறது.
இளம்புழு வளர்ப்பு மையம்!
முட்டைகளைப் பொரித்து இளம்புழுக்களை பாதுகாப்பான மனைகளில் 7 நாட்கள் வரை வளர்த்து விவசாயிகளுக்கு வழங்குவதுதான், 'சாக்கி சென்டர்’ என்று அழைக்கப்படும் இளம்புழு வளர்ப்பு மனைகள். இம்மையங்களை அமைக்கும் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
நூற்பாலை!
விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பட்டுக்கூடுகளை வேகவைத்து, நூற்பு இயந்திரங்களில் கொடுத்து அதன் மூலம் பட்டு நூல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. போதிய அளவு பட்டு நூற்பாலைகள் தமிழகத்தில் இல்லாத காரணத்தினால்... பட்டுக்கூடு விற்பனைக்கு கர்நாடக வியாபாரிகளையே எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இதைப்போக்கும் விதமாக, தமிழக அரசு சிறிய அளவில் பட்டு நூற்பாலைகளை அமைக்க ஊக்கம் கொடுத்து வருகிறது. நூற்பாலை அமைக்க 4 லட்சம் ரூபாய் வரை மானியம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்ற வேண்டுகோளுடன் முடித்தார் வைத்தியநாதன்.
கிருமிநாசினிகளுக்கும் மானியம்!
சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் மாநில பட்டுவளர்ச்சிதுறையின் இயக்குநர் வே.பிரபாகரன், ''தமிழ்நாட்டின் ஒரு ஆண்டுக்கான பட்டு நூல் தேவை
3 ஆயிரம் மெட்ரிக் டன். ஆனால், இங்கு 1,200 டன் பட்டு நூல்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. 1,800 மெட்ரிக் டன் பட்டு நூல் பற்றாக்குறையில் உள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும், மத்திய பட்டு வாரியம் மூலமாக
14 கோடி ரூபாய், மாநில பட்டுவளர்ச்சித் துறை 9 கோடி ரூபாய் என 23 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மஞ்சள் பட்டுக்கூடு உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்திலும், மேற்கு வங்காளம் இரண்டாவது இடத்திலும், ஆந்திரா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. தமிழ்நாடு, நான்காவது இடத்தில்தான் உள்ளது. அதேசமயம், வெண்பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. இதுவரை மஞ்சள் மற்றும் வெண்பட்டு என்று இரண்டு வண்ண பட்டு கூடுகள்தான் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. பட்டு நூலுக்கு சாயம் ஏற்றும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு, பல வண்ண பட்டுக்கூடுகளை கண்டுபிடித்து விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்'' என்று சொன்னார்.
தொடர்புக்கு:
உதவி இயக்குநர் அலுவலகம்,
தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறை,
8/52, டாக்டர் பாலசுந்தரம் சாலை,
கோயம்புத்தூர்-641 018.
தொலைபேசி: 0422-2246948.
பட்டுவளர்ச்சித்துறை இயக்குநரகம்,
போக்ஸ் காம்பவுண்டு, அணை மேடு,
சேலம்-636 001.
தொலைபேசி: 0427-2296161.
Source:pasumaivikatan

No comments: