Thursday

மாடியில் ஒரு உணவுத் தோட்டம்

மாடியில் ஒரு உணவுத் தோட்டம்


நாங்கள் சைவம். முட்டையைக்கூடத் தொடுவதில்லை. மீன், முட்டை, இறைச்சி எல்லாமே புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் நிரம்பியவை. இவற்றை ஈடு செய்ய பால், மோர், நெய், நல்லெண்ணெய், பருப்பு, காய்கறிகள் போதுமானவை. சைவ உணவு உண்பவர்களுக்கு நோய் குறைவாக வரும். சைவ உணவு உண்பவர்கள் நிறைய எண்ணெய்ப் பலகாரங்கள் மற்றும் வனஸ்பதியில் செய்யப்பட்ட இனிப்பின் காரணமாக நோயுறுவார்கள். அளவோடு உண்டால் அவ்வளவாக நோய் வராது. உணவில் அதிகளவில் காய்கறிகள் சேர்க்க வேண்டும். சென்னையில் வாழ்க்கை ஓடியவரையில் காய்கறிகள் பார்த்துப் பார்த்து வாங்குவதுண்டு. என் மனைவியை எந்தப் பொருளாலும் திருப்தி செய்ய முடியாது. பச்சென்று காய்கறிகளை வாங்கிப் போட்டால் அப்பசுமையைப் பார்த்து அவள் சினமும் தணிந்துவிடும்.
காய்கறிகளை நான் இன்று மொட்டை மாடியிலும் தரையில் வீட்டைச் சுற்றிலும் சாகுபடி செய்து வருவதுடன் மொட்டை மாடியில் எப்படி காய்கறி சாகுபடி செய்யலாம் என்பது பற்றிய விவரத்துடன் ரூ.55/- விலையில் ஒரு புத்தகம் எழுதி அதுவும் ஆயிரக்கணக்கில் விற்றவண்ணம் உள்ளது. நான் காய்கறிகளைப் பற்றிய அங்காடி அறிவைச் சென்னையில் கொத்தவால் சாவடியில் கற்றேன்.
terracegarden
1962-ஆம் ஆண்டில் நான் சென்னையில் ‘நியூ இண்டியா மேரிடைம்ஸ்’ என்ற கப்பல் கம்பெனியில் ஒரு உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் எனக்கு உண்டு. கப்பல் கம்பெனி வேலை மிகவும் கடுமையானது என்றாலும் ஒரு சுவாரசியமும் உண்டு. அந்தக் கம்பெனிக்குச் சொந்தமான கப்பல் கிடையாது. யுகோஸ்லேவியா கப்பல்களுக்குச் சென்னையில் அந்தக் கம்பெனி ஏஜெண்டு. சரக்கு ஏற்றுவார்கள். Bill of Lading வசூல் செய்வதிலிருந்து கப்பலுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்குவது வரை எனது பணி. காய்கறி, வெண்ணை, டீ போன்றவை வாங்க வேண்டும். அவர்கள் விரும்பும் ஆங்கில காய்கறிகள் முதல் தரம் பார்த்து வாங்க வேண்டும். சில பசுமை ஐட்டங்கள் மூர் மார்க்கெட்டில் மட்டுமே கிடைக்கும். செலரி, ஹெலாட், இலையுடன் உள்ள இளசான பீட்ரூட் போன்றவை வெள்ளைக்காரர்களின் தேவைக்காகவே அந்தக்காலமூர்மார்க்கெட்டில் கிடைத்தன.
கப்பல் கம்பெனி அனுபவங்களில் காய்கறி பற்றிய சில நுண்ணறிவும் கற்றேன். இது திருமணத்துக்குப் பின் உதவின. மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய மார்க்கெட், கபாலி கோயிலை ஒட்டிய தெற்கு மாடவீதி மார்க்கெட், சைதாப்பேட்டை மார்க்கெட், திருவான்மியூர் மார்க்கெட் என்று எதையும் விட்டுவைப்பதில்லை. பயண உத்தியோகம் என்பதால் வெளியூர் செல்லும்போது வேலூர் ஆர்க்காட் மார்க்கெட்டில் அருமையான முள்கத்தரி வாங்காமல் திரும்புவதில்லை. திருநெல்வேலியில் வெள்ளைக் கத்தரிக்காய்,  மதுரை திண்டுக்கல்லில் பச்சைக் கத்தரிக்காய், கும்பகோணம் நீலக்கத்தரிக்காய் என்று வகைவகையான கத்தரிக்காய்களை வாங்கி வருவதுண்டு. எனது பயண சூட்கேஸுடன் காய்கறிப் பையும் சென்னை திரும்பும்.காய்கறி வாங்குவது சரி. அவற்றை ஒருவர் ருசியுடன் சமைக்க வேண்டுமே! அந்த விஷயத்தில் இறைவன் கொடுத்த வரமாக என் மனைவி இன்றளவும் அப்பணியை நிறைவேற்றி வருகிறாள்.
ஓய்வு பெற்றதும் சென்னையிலிருந்து அம்பாத்துறைக்கு ஜாகையை மாற்றும்பொழுது நிலம் வாங்கி காய்கறி தோட்டம், பசுமாடு எல்லாம் பராமரிக்க முடிவு செய்தாலும், அப்படி உடனேயே அமையவில்லை. நிலம் வாங்குவது 1996-ல் அவ்வளவு கடினமில்லை. விலையும் அதிகமில்லை. நிலம் வாங்க நண்பர்களுடன் அலைந்தபோது என் வீட்டு நிதியமைச்சர் ஒப்புதல் தரவில்லை. இன்னம் ஒரு கடமை மீதமுள்ளதே என்று எச்சரித்தாள்.
உண்மைதான், பெண்ணுக்கு வரன் பார்த்து கல்யாணத்தை முடித்துவிட்டு மிச்சப் பணத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம், என்றாள் என் மனைவி. என் பெண்ணோ படித்துக் கொண்டே இருந்தாள். எம்.எஸ்.ஸி., எம்.எட்., எம்.ஃபில் என்று போய்க் கொண்டிருந்தாள். உகந்த வரன் தேடுவது கடினமான செயல். பொருத்தமான நபர் கிட்டினாலும் ஜாதகம் பொருந்த வேண்டும். இது ஒரு பக்கம். அந்தக் கடமையும் இரண்டு ஆண்டுக்குப்பின் முடிந்தபோது சேமிப்புகள் எல்லாம் கரைந்துவிட்டன. கடன் ஏற்படவில்லை என்ற அளவில் மகிழ்ச்சிதான்.
என் மகள் திருமணம் என்ற பொறுப்பை எண்ணியதும் நிலம் வாங்கும் யோசனை நின்று போனது. இறைவன் கொடுத்த வரம் மொட்டை மாடியில் காய்கறி சாகுபடிக்கான ஒரு புதிய யோசனை உதித்து தொடக்க விழாவையும் நடத்தியது. எனது தமையனார் நிறைய மண்தொட்டிகளை வாங்கி பூச்செடிகளை நட்டிருந்தார். சரியாக பரமாரிக்கப்படாததால் 75 சதவிகித செடிகள் பட்டுப்போய் விட்டன. அவற்றை நீக்கிவிட்டு பூந்தொட்டிகளை மொட்டை மாடிக்கு மாற்றும் யோசனையை மனைவி கூறினாள். கீழே இடப்பற்றாக்குறை. அதிக அளவில் மண்தொட்டிகள் நெருக்கமாக இருந்ததால் சுருட்டைப் பாம்புகளும் அடைந்திருந்தன. பாம்புகள் அடையாமல் இருக்க என் மனைவி பூனைகளை வளர்த்திருந்தாள்.
எங்கள் வீட்டின் சிறப்பு பூனைப்படைகள். கீரியைப் போல் பூனையும் பாம்பைப் பிடித்துத் தின்றுவிடும். ஓணானைப் பிடித்தால் தலையை மட்டும் பூனை தின்னும். பாம்பைப் பிடித்தால் தலையைத் தின்னாது. எலி, அணில் ஆகியவற்றைத் தின்னும்போது வாலை மட்டும் மிச்சம் வைக்கும். பழத்தோட்டம் போடும்போது அணில் தொல்லையைப் போக்க பூனைகள் வளர்க்க வேண்டும். மண்புழுக்களைத் தின்ன வரும் கோழி, பெருச்சாளி போன்றவற்றைப் பூனைகள் பிடித்துத் தின்றுவிடும்.
terrace
20 பூந்தொட்டிகள் மொட்டை மாடிக்குச் சென்றன. மேலும் 30 பூந்தொட்டிகள் மதுரையிலிருந்து வாங்கி வந்தோம். அப்போது, 1197-ல் ஒரு அடி உயரமுள்ள பூந்தொட்டியின் விலை பத்து ரூபாய். பூந்தொட்டிகளின் அடியில் சிறுசிறு ஜல்லிக்கற்களை கால் அடி ஆழத்துக்கு நிரப்பிவிட்டு கீழே உள்ள தோட்ட மண்ணை நிரப்பி கத்தரி நாற்று நட்டேன். வெண்டை விதைத்தேன். ஊட்டத்திற்கு என்ன செய்வது? ஒரு பெரிய சிமெண்டு தொட்டியில் குழாய் மூலம் தண்ணீர் நிரப்பி தினமும் ஒரு கிலோ அளவில் பசுஞ்சாணியைக் கரைத்து ரசப்பதத்தில் விட்டேன். விருட்சாயுர்வேதப் புத்தகத்தில் உள்ள குறிப்புப்படி பால் ஜலம், மோர் ஜலம், கழுநீர், ஆகியவற்றையும் விட்டேன். வேப்பம் பிண்ணாக்கை நீரில் ஊறவைத்து அந்த ஜலத்தை இலைவழி ஊட்டமாக வழங்கியபோது பூச்சித்தொல்லையும் ஏற்படவில்லை.
அடுத்த கட்டமாக பூந்தொட்டிகளுடன் சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிர் எழுப்பும் யோசனை வந்தது. சிமெண்டு சாக்கு உயரத்தைக் குறைத்து – அதாவது, உட்புறமாக மடித்து பாதி சாக்காக மாற்றி, உள்ளே நிறைய காய்ந்த சருகுகளை அடைத்துவிட்டு அடிப்பாகத்தைச் சற்று கிழித்துவிட்டு போதிய மண் நிரப்பி இரண்டு செங்கல் வைத்து அதன்மீது வைத்தேன். நீர் வடியும். தளத்திற்கும் பாதிப்பு வராது. அவ்வாறு சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிரிடும்போது மரப்பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன். முருங்கை, அகத்தி மிகவும் உகந்தவை. இரண்டு மரங்களுக்கும் ஆணிவேர். பக்கவாட்டில் வேர் குறைவாக வளரும். காற்றில் உள்ள நைட்ரஜனை கிரகிக்கும் ஆற்றல் அதிகம். அதே சாக்கில் வெண்டை, தக்காளி, கத்தரி ஊடுபயிர்களாகவும் நடலாம்.
சிமெண்டுச் சாக்கில் கொடி வகை பயிர்களான அவரை, புடல், பாகல், பீர்க்கை போன்றவற்றையும் நடலாம். ஒரு குச்சி வைத்து ஏற்றலாம். பந்தல் அமைக்க பூந்தொட்டி, சிமெண்டுத் தொட்டி, மண்ணில் குச்சி ஊன்றி பின்னர் கம்பி கட்டிக் கொள்ளலாம்.
இப்படிப்பட்ட யோசனைகளை வெற்றியுடன் நிறைவேற்றி வீட்டுக்குத் தேவையான அவரை, புடல், பீர்க்கை, பாகல் போன்ற காய்கறிகளும் மாடியில் உற்பத்தியாயின. இடவசதியைப் பொறுத்து கொடிப்பயிர்களைத் தேர்ந்தெடுத்துதான் பயிரிட முடியும். ஒரே நேரத்தில் இரண்டு கொடிவகைகளுக்கு மேல் இயலாது. கறிக்கோவையையும் சாகுபடி செய்யலாம். அவரை சாகுபடி செய்யும்போது அது அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துக் கொள்ளும்.
அடுத்த கட்டமாக வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாளி, டப் முதலியவை ஓட்டையாகும்போது அவற்றையும் பூந்தொட்டியைப் போல் பயன்படுத்தலாம். நுட்பமாக மேலும் ஓட்டை போட்டுச் சிறு கற்களை நிரப்பிவிட்டு மண் கொட்டலாம். மரம், கொடிப்பயிர்களை ஏற்ற வாய்ப்பாயிருக்கும்.
Microsoft Word - Oota from your Thota event Feb 2013
நான் எனது மாடித் தோட்டத்தைத் திட்டமிட்டு உருவாக்கவில்லை. வீடு காட்டும்போதே மேல்தளத்தை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம். வீடு கட்டும்போது மாடியில் தோட்டம் போடும் எண்ணமே வரவில்லை. திட்டமிடாமல் திடீரென்று உருவாக்கியதனால் எதுவும் பாழாகி விடவில்லை. செலவேயில்லாமல் சீரோ பட்ஜெட் என்ற கருத்தில் உருவான இந்த மாடித் தோட்டத்தில் வீண் பொருளை மறுசுழற்சி செய்யும் உத்தியும் கடைபிடிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் வாளி, டப் முதலியன உடைந்தால் அது பயிரேற்றப் பயனாகிறது. புதிய தொட்டி வாங்கும் செலவும் மிச்சம்.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது மாடித் தோட்டம், மாடியில் காடாக மாறியிருந்தது. அப்போதுதான் கோடை பண்பலையிலிருந்து சோமஸ்கந்தமூர்த்தி வந்து பார்வையிட்டார். இப்போது பாதிக்கு மேல் திருத்தியமைக்கப்பட்டிருந்தாலும் மொட்டை மாடிக்கு இவ்வளவு மண் எப்படி வந்தது? நான் நிறைய சிமெண்டு பைகளைப் பயன்படுத்தி வந்தேன். அப்போது ஆறு மாத விசாவில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வந்தது. மாடித் தோட்டத்தை நிர்வகிக்க முடியவில்லை. எனினும் சிமெண்டுச் சாக்கு மண் மூட்டைகளில் முருங்கை விதைகள் ஊன்றியிருந்தேன். அவை நான் புறப்படும்போதே நன்கு வளர்ந்து மூன்றடிச் செடியாக இருந்தன. சிமெண்டுச் சாக்கு இத்துப் போய் மண் சரிந்துவிட்டது. நெருக்கமாகப் பயிர் வைத்திருந்த அவ்வளவு சிமெண்டுச் சாக்குகளும் நைந்து மண் தரையில் கொட்டி அருகம்புல்லும் மண்டி வளர்ந்திருந்தன. முருங்கை, மரமாகி நிறைய காய்த்திருந்தது. நடுவில் மாதுளை மரமும் உருவானது. புற்கள், பூக்கள், காய்கறிச் செடிகள் எல்லாம் தரையில் உள்ளது போல் வளர்ந்திருந்தன. மாடியே ஒரு புஷ்பவனமாகக் காட்சியளித்தது. மனிதனால் நிர்வாகம் செய்ய முடியாத சூழ்நிலையில் இயற்கை தன்னைத் தானே அற்புதமாக நிர்வாகம் செய்துகொண்டது. இவ்வளவு வளர்ந்தும்கூட நீர்க்கசிவு ஏற்படாதது எனக்கே வியப்பாக இருந்தது. புற்களின் வேர்கள், பிரண்டை வேர்கள் எல்லாம் தண்ணீரை உறிஞ்சிக் கொள்கின்றன. நீர்த்தேக்கம் இல்லை. நீர்க்கசிவும் இல்லை.
அடுத்த கட்டமாக எனது மாடித் தோட்ட அனுபவத்தை ஏன் நூலாக எழுதக் கூடாது என்ற எண்ணம் வந்தது. யாரும் என்னைத் தூண்டவில்லை. அப்படி வந்ததுதான் மாடியில் மரம், காய்கறி சாகுபடி என்ற புத்தகம்.
கடந்த 16 ஆண்டுகளாக நான் மாடித் தோட்டத்தைப் பராமரித்து வருகிறேன். எல்லாவிதமான காய்கறிகளையும் கீரை வகைகளையும் சாகுபடி செய்துள்ளேன். காய்கறி வகைகளில் செடிப்பயிராக தக்காளி, வெண்டை, கத்தரி, கொத்தவரை, முட்டைகோஸ், காலிஃப்ளவர், பாலக் கீரை, அரைக் கீரை, முளைக் கீரை, தண்டுக் கீரை, மணத்தக்காளி; கொடி வகைகளில் அவரை, பிடல், பாகல், கறிக்கோவை, பூசணி, செம்பசலை, பிரண்டை, கறித்தட்டாம்பயிறு; கிழங்கு வகைகளில் பீட்ரூட், வெங்காயம், முள்ளங்கி; மர வகைகளில் முருங்கை, அகத்தி, மாதுளை, கொய்யா; மலர் வகைகளில் மல்லிகை, ரோஜா, அரளி என்று அனைத்து பயிர்களையும் மாடியில் சாகுபடி செய்த அனுபவம் உள்ளது. இத்துணைப் பயிர்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. மாடியில் உள்ள இடநெருக்கடி காரணமாக இரண்டு வகை கொடிப்பயிர், பல வகை செடிப் பயிர்கள் மட்டுமே உண்டு.
உணவு மனிதர்களுக்கு மட்டுமல்ல, பசுக்களுக்கும் உண்டு. முருங்கை மரங்கள் எனது வீட்டின் தரைப் பகுதியில், காய்ப்புக்கு இருப்பதால் மாடியில் உள்ள முருங்கை, அகத்தி, தீவனப் புற்கள் எல்லாம் நான் வளர்க்கும் பசுக்களுக்கு பசுந்தீவனமாகப் பயனுறுகிறது. மாடியில் வளரும் முருங்கையையும் அகத்தியையும் மர்மாக்காமல் கவாத்து செய்து பசுந்தீவனமாகவும் வழங்கலாம். ஆகவே மாடியில் செடித்தோட்டம், மரத்தோட்டம், கொடித்தோட்டம், பூந்தோட்டம் என்று சொல்வதைவிட மாடியில் உணவுத் தோட்டம் என்று சொல்வது பொருந்தக்கூடியதுதானே!
-ஆர்.எஸ்.நாராயணன் | இதழ் 92 | 26-09-2013|சொல்வனம்
Source: http://solvanam.com/?p=28976

No comments: