Monday

மரபணு மாற்றம் என்ற மாய்மாலம்

மூல விதைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆடும் ஆட்டமே மரபணு மாற்று விதைத் தொழில் நுட்பம் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்து செயல்படுகிறது. இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்சு, ஜெர்மனி, அயர்லாந்து, ரொமேனியா, போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளின் அனுபவங்கள் கசப்பானவை என்பதால் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அவை தடை விதித்து விட்டன. இவ்வகை பயிர் பொருட்கள் சிறுநீரகக் கோளாறு, தோல் வியாதிகள், ஒவ்வாமை, இதயநோய், புற்றுநோய் என்று 55 வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.பி.டி. கத்திரிக்காயை தொடர்ந்து நெல், பருப்பு, கோதுமை மூலிகைகள், காய்கனிகள் சிறு தானியங்கள் என்று பல பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட ரகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்பது ஓர் அபாயம்.
உணவு உதவி என்ற பெயரில் இவற்றின் விதைகள் தாராளமாக கிடைக்கச் செய்வதில் மேலும் அபாயம் காத்துக் கொண்டிருக்கிறது.

எலிகளைப்போல் மனிதர்களையும் மரபணு மாற்றுப் பொருட்களைப் பரிசோதித்துப் பார்க்க அமெரிக்க நிறுவனங்கள் தயாராகி விட்டன. உற்பத்திப் பெருக்கம் என்று ஆசை காட்டப்படுகிறது. உலகில் அதிக உற்பத்திப் பொருட்களை மரபணு மாற்று விவசாயத்தின் பிடியில் கொண்டு வந்து லாபத்தைக் குவிப்பதே அதன் குறிக்கோளாகும்.

இந்தியாவில் கத்தரிக்காய் சுலபமாகக் கிடைக்கிறது. அப்படியிருக்க மரபணு மாற்று பி.டி. கத்தரிக்காயை பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. உற்பத்தி அதிகரிப்பு என்பதற்காக பசுமை புரட்சி கொண்டு வரப்பட்ட உயர் விளைச்சலை தரும் ஒட்டு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரசாயன உரமும், பூச்சிக் கொல்லிகளும் தாராளமாக கிடைத்தன. நிலம் உயிரியல் தன்மையை இழந்து நிற்கிறது. மரபணு மாற்று விவசாய முறை என்பது செலவைக் குறைத்து உணவு உற்பத்தியை அதிகரிக்கும் என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பாக உள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் மிகப் பெரிய விதை உற்பத்தி நிறுவனமாக மான்சான்டோவின் கூட்டு நிறுவனமான மஹிகோ இந்தியாவில் பி.டி. கத்தரிக்காயை உருவாக்கியுள்ளது. இதை சாப்பிடுவோரின் விருப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. எல்லா வகை கத்தரிக்காய் போலத்தான் இதுவும் இருக்கும். எந்த வித லேபிளும், முத்திரையும் இருக்காது. தமிழ் மாற்று மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படும் கத்தரிக்காயில் இந்த வகை சேருமானால் மருத்துவ குணங்கள் காணாமல் போய்விடும். 4000 ஆண்டுகளாக பல தலைமுறைகளாக உணவுப் பழக்க வழக்கத்தில் சாதாரண வகை கத்தரிக்காய் இருக்கிறது. கத்தரிக்காய் உற்பத்தியை அதிகமாக்க ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறையும், இயற்கை வேளாண்மை முறையும் குறைந்த செலவில் பல வழிகளைக் கொண்டிருக்கின்றன.

ஒரு எலி பி.டி வகை உணவை சாப்பிடும் போது கீழ்க்கண்டவை உருவாகின. வயிற்றுப் புண், குட்டி எலிகளின் இறப்பு விகிதம் 4 மடங்கு அதிகரிப்பு, ஈரல், கணையம் பாதிப்பு (சோயாவை சாப்பிட்டதால்), ஒவ்வாமை (பட்டாணி) ஈரல் வீக்கம் (எண்ணை விதைகள்), வயிற்றில் புற்று நோய் (உருளைக்கிழங்கு), சிறுநீரக நோய் (சோளம்) உடல் உறுப்புகள் மாற்றம் (சோளம்). இதே வகை நோய்கள்தான் மனிதர்களுக்கும் ஏற்படும் என்று 55 வகை நோய்களின் பாதிப்புகளைப் பட்டியலிடுகிறார்கள் இவை ஆன்டிபயாட்டிக் மருந்தால் உடம்பில் சென்று தங்கி, எளிதில் நோய் தாக்கும் நிலையும் நோய்ப்பட்டவர்கள் எளிதில் குணமாக முடியாத நிலையும் உருவாக வாய்ப்புகள் உள்ளன. பயிர்களின் பன்முகத் தன்மை என்பது முக்கிய இயற்கை வளமாகக் காப்பாற்றப்படுகிறது. மரபணு மாற்றத்தால் மகரந்த சேர்க்கை மூலம் எல்லா வகை பயிர்களும் மாசுபடும் என்பது தலையாயது. இவ்வகை விதைகளை விவசாயிகள் யாரிடம் வேண்டுமானாலும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி விட முடியாது. தங்கள் நிலத்தில் விளைந்த பயிரின் விதையை மறுபடியும் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு தடவையும் விதைகளை பன்னாட்டு நிறுவனங்களிடம் உரிமை பெற்ற முகவர்களிடம்தான் வாங்க வேண்டும். விலை நிர்ணயம் கூட அவர்கள்தான் செய்வர். இந்திய விவசாயி விவசாயம் செய்யும் ஒவ்வொரு விதைக்குள்ளும் தனது மரபணு உரிமை இருக்கிறது என்று பன்னாட்டு நிறுவனங்கள் முத்திரை குத்துவது எந்தவொரு ஜனநாயக நெறிமுறைக்கும் எதிரானதாகும்.

அதிகப்படியான பூச்சிக் கொல்லிகளின் நுகர்வால் பாதிப்புக்கு உள்ளாகி நிலத்தை இழந்து கொண்டிருக்கும் விவசாயிகள் மரபணு மாற்ற பி.டி பருத்தி வகையால் இன்னும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பருத்திக்கான பூச்சிக் கொல்லிகளால் பூச்சிகள் பல மடங்கு பெருகி விட்டன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பருத்தியை ஆறெழு வகைப் பூச்சிகள் தாக்கின. இன்று எழுபது வகை பூச்சிகள் தாக்குகின்றன. இந்தியாவில் பயிரிடப்படும் பருத்தி விதை அமெரிக்க மான்சாண்டோ நிறுவனத்தின் உரிமைப் பொருளே. சாதாரண பருத்தி விதை ரூ 300 என்றால், பி.டி. பருத்தி விதை ஆறு மடங்கு அதிகமாகும். இதில் பாதிக்கு மேல் மான்சாண்டோ நிறுவனத்திற்கு உரிமைத் தொகையாகச் செல்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கிய விதை அவர்கள் உறுதி அளித்தபடி மகசூலைத் தராததால், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட கதைகள் நீண்டு கொண்டிருக்கின்றன.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பலன் பெரிதாக இல்லை. தனது நிலத்தில் என்ன பயிரிடலாம் என்ற விவசாயியின் உரிமை பறிபோகிறது. நமது உள்ளூர் வகை மரபணு பயிர்கள் காணாமல் போய்விடும். பெரும் உடல் நலக் கேடுகள் வாய்க்கும். விவசாயம், உணவு சார்ந்து நாம் கொண்டிருக்கும் சுதந்திர கருத்துகளுக்கு ஊறு ஏற்பட்டு இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஊடுருவ இந்த மரபணு மாற்ற பயிர்கள் வழிவகுத்து, எலிகளைப் போல 135 கோடி மக்களையும் பரிசோதனைப் பொருட்களாகி பன்னாட்டு நிறுவனங்கள் வேடிக்கை பார்க்கின்றன.

Source: www.dinamani.com

No comments: