Wednesday

மாதம் 15 ஆயிரம்...குறைந்த செலவில்...நிறையும் வருமானம்...

பட்டையைக் கிளப்பும் பட்டுரோஜா..!
மாதம் 15 ஆயிரம்...குறைந்த செலவில்...நிறையும் வருமானம்...
'உணவுப் பயிர்களை மட்டும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கலாம். உணவாக உட்கொள்ளாத மலர்களுக்கு, எதற்காக இயற்கை உரம்?’
-இப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். இத்துடன் 'மலர் சாகுபடிக்கு ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தவில்லையென்றால், மகசூல் கிடைக்காது’ என்கிற நம்பிக்கையும் விவசாயிகள் பலருடைய மனங்களில் அடர்த்தியாக முளைத்துக் கிடக்கிறது. குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் தயவில்தான் மலர் சாகுபடியே நடக்கிறது. இதற்கு நடுவே, அத்தனைப் பேரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக... பட்டுரோஜாவை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி.
''பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு, விவசாயத்துக்கு வந்துட்டேன். சொந்தமா ஏழரை ஏக்கர் நிலம் இருக்கு. அஞ்சு ஏக்கர்ல கரும்பு, ஒண்ணரை ஏக்கர்ல முந்திரி, ஒரு ஏக்கர்ல பட்டுரோஜானு சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்.
மூணு வருசத்துக்கு முன்னவரைக்கும் ரசாயன உரம்தான் பயன்படுத்திட்டிருந்தேன். விளைச்சல் அதிகமாக கிடைச்சாலும், செலவும் அதிகமாவே இருந்துச்சு. இயற்கை விவசாயத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, எங்கிட்ட இருக்குற மூணு மாடுகள் மூலமா கிடைக்கிற சாணம், மூத்திரத்தை வெச்சே இடுபொருட்களைத் தயாரிக்க ஆரம்பிச்சுட்டேன். இப்போதைக்கு, கரும்புக்கு மட்டும்தான் ரசாயன உரம் போடுறேன். முந்திரி, பட்டுரோஜா ரெண்டையும் இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றேன். சீக்கிரம் கரும்பையும் இயற்கைக்கு மாத்திடுவேன்.
இயற்கைக்கு மாறினதுக்கப்பறம், தண்ணீர் தேவை குறைஞ்சுடுச்சு. ரசாயனம் போடுறப்போ தினமும் தண்ணி பாய்ச்ச வேண்டியிருக்கும். இப்போ, வாரம் ஒரு தண்ணி கொடுத்தா போதுமானதா இருக்கு. அதில்லாம பூச்சித்தாக்குதலும் குறைஞ்சுடுச்சு. பூக்களும் நல்லா நிறமா, பார்க்குறதுக்கு 'பளிச்’னு இருக்கு. ரொம்ப நேரம் வாடாம தாக்குப் பிடிக்குது. இதழ்களும் உதிர்றதில்லை. இதையெல்லாம் ரசாயன விவசாயத்துல எதிர்பார்க்கவே முடியாது'' என்று தன் அனுபவத்திலிருந்து முன்னுரை தந்த ராமசாமி, தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.
''இந்த பட்டுரோஜா செடிகளுக்கு இப்ப மூணு வயசு முடியப் போகுது. இப்பவும் பூ பூத்து வருமானம் கொடுத்துக்கிட்டு இருக்கு. ரசாயனத்துல சாகுபடி செஞ்சுருந்தா, ரெண்டரை வருஷத்துலயே செடி காய்ஞ்சி போயிருக்கும். மாட்டு எரு, கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, அமுதகரைசல்னு தாராளமா இயற்கை இடுபொருட்களைக் கொடுக்கறதால, செடிகள் இப்பவும் பசுமை குறையாம இருக்கு. ரசாயன உரத்துக்கான செலவைக் கணக்கு பண்ணும்போது, கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, அமுதக்கரைசலுக்கான நாட்டுச் சர்க்கரை... இதுக்கெல்லாம் ஆகுற செலவு கம்மிதான். இப்போதைக்கு ரசாயனம் பயன்படுத்துறப்போ கிடைச்ச மகசூலைவிட குறைவாத்தான் கிடைக்குது. ஆனா, இடுபொருள் செலவுகள கணக்குப் போட்டு பார்த்தா... ரசாயன விவசாயத்துல கிடைச்சதை விட அதிக லாபம்தான். அதில்லாம, வேலையும் குறைவாகிடுச்சு. சீக்கிரமே... அதிக மகசூலும் கிடைக்க ஆரம்பிச்சுடும்கிற நம்பிக்கை இருக்கு'' என்ற ராமசாமி, பட்டுரோஜா சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
தெளிப்புநீரில் கூடுதல் மகசூல்!
'அனைத்து வகையான மண்ணிலும் பட்டுரோஜா சாகுபடி செய்யலாம். என்றாலும், செம்மண் நிலம் மிகவும் ஏற்றது. தண்ணீர் தேங்காத மேட்டுப்பாங்கான நிலமாக இருக்க வேண்டும். ஆடி அல்லது தை மாதங்களில் கன்று நடவு செய்ய வேண்டும். மழை, பனிக் காலங்களில் அதிக எண்ணிக்கையில் பூக்கள் கிடைக்கும். தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்து, மழை போல் தண்ணீர் பொழியச் செய்தால், கூடுதல் மகசூல் கிடைக்கும்.
குறைந்த செலவில், கன்று உற்பத்தி!
இதற்கு கன்று நடவுதான் ஏற்றது. ஒரு கன்று 5 ரூபாய் விலையில் நர்சரிகளில் கிடைக்கிறது. நம்மிடம் ஏற்கெனவே ரோஜா இருந்தால், குறைவான செலவில் நாமே கன்றுகளை உற்பத்தி செய்து கொள்ளலாம். ஒரு சதுர மீட்டர் அளவுக்கு பாத்திகள் எடுத்து, அதில்தான் கன்று உற்பத்தி செய்ய வேண்டும். எத்தனைப் பாத்திகள் அமைக்கப் போகிறோம் என்று கணக்கிட்டுக் கொண்டு, ஒரு பாத்திக்கு 50 கிலோ மாட்டு எரு, 2 கிலோ வேப்பம் பிண்ணாக்கு என்ற கணக்கில் தேர்வு செய்த நிலத்தில் இட்டு உழுது... ஒரு சதுர மீட்டர் கொண்ட பாத்திகளாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றரை ஆண்டு வயதுடைய செடியிலிருந்து, ஒரு சாண் உயரத்துக்கு குச்சிகளை வெட்டி எடுத்து, பாத்தியில் 4 அங்குல இடைவெளியில் ஊன்ற வேண்டும் (ஒரு பாத்திக்கு 100 குச்சிகள் ஊன்றலாம்).  2 நாட்களுக்கு ஒரு முறை பூவாளியால் தண்ணீர் தெளித்து வந்தால், 10, 15 நாட்களில் துளிர் வரும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, பாத்தியில் களை எடுக்க வேண்டும். இப்படி 6 மாதங்கள் பராமரித்து வந்தால், ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை வளர்ந்து, நடவுக்கு ஏற்ற வகையில் கன்று தயாராகி விடும்.
ஏக்கருக்கு 2,500 கன்றுகள்!
ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் 3 சால் உழவு ஓட்டி, ஒன்றரையடி அகலம், முக்கால் அடி ஆழம் கொண்ட வாய்க்கால் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வாய்க்காலுக்கும் 8 அடி இடைவெளி இருக்க வேண்டும். வாய்க்காலின் மையத்தில், 2 அடி இடைவெளியில், அரையடி ஆழத்துக்கு குழி எடுத்து கன்றுகளை நடவு செய்ய வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் பாத்தி எடுத்து நடவு செய்வார்கள். அந்த முறையில், தண்ணீர், இடுபொருட்கள் அதிகமாக விரயமாவதுடன்... களைகளும் அதிகமாக மண்டும். வாய்க்காலில் நடவுசெய்தால், வாய்க்கால் நனையும் அளவுக்கு மட்டும் தண்ணீர் பாய்ச்சினாலே போதும். இந்த முறையில், ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரத்து 500 கன்றுகளை நடவு செய்யலாம். மாலை நேரத்தில் கன்று நடவு செய்து, உடனே தண்ணீர்விட வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப, தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
மாதம் ஒரு முறை அமுதக்கரைசல்!
(நடவுசெய்த 20 நாளிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக பூக்கள் பூக்கத் தொடங்கும். நடவிலிருந்து ஐந்து மாதங்கள் கழித்து, ஒரு ஏக்கரில் தினமும் 500 பூக்கள் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமாக மகசூல் அதிகரித்து, ஓர் ஆண்டுக்குப் பிறகு தினமும் 2 ஆயிரம் பூக்களில் இருந்து... 3 ஆயிரம் பூக்கள் வரை கிடைக்கும்)
நடவு செய்த 20-ம் நாளில், 25 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 10 கிலோ கடலைப் பிண்ணாக்கு இரண்டையும் நன்கு தூளாக்கி, ஒவ்வொரு செடியைச் சுற்றியும் போட வேண்டும். 4 மாதங்களுக்கு ஒரு முறை பிண்ணாக்குக் கலவையைத் தொடர்ந்து இட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை
4 லிட்டர் அமுதக்கரைசலை, 40 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். இது தழை உரமாகவும், பூச்சிவிரட்டியாகவும் செயல்படும். நடவிலிருந்து ஒரு மாதத்துக்குப் பிறகு, வாரம் ஒரு முறை 10 லிட்டர் அமுதக்கரைசலை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பாசன நீரோடு விட வேண்டும். நடவிலிருந்து 60-ம் நாள் களை எடுத்து, ஒவ்வொரு செடிக்கும் அரை கிலோ வீதம் மாட்டு எரு இட வேண்டும். தொடர்ந்து, 4 மாதங்களுக்கு ஒரு முறை இதே அளவில் மாட்டு எரு தர வேண்டும்.
தினமும் 2,500 பூக்கள்!
இரண்டாண்டுகளுக்குப் பிறகு, செடிகளை கவாத்து செய்ய வேண்டும். ஒன்றரையடி முதல் 2 அடி உயரத்துக்கு அடிக்கட்டையை விட்டு விட்டு, மேல் பகுதியை மட்டும் வெட்டி, அகற்றி, வாய்க்காலை சரி செய்து எரு போட வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் பூக்கள் பூத்து விற்பனைக்குத் தயாராகும்.
சாகுபடிப் பாடம் முடித்த ராமசாமி, நிறைவாக வருமானம் பற்றிப் பேசினார். ''நானும் என் மனைவியும் சேர்ந்து, ஒரு மணி நேரத் துல ஒரு ஏக்கர் பூவையும் பறிச்சுடுவோம். தினமும் சராசரியா 2 ஆயிரத்து 500 பூக்களுக்குக் குறையாம கிடைச்சுட்டிருக்கு. காலையில
6 மணிக்கெல்லாம் தஞ்சாவூர் பூ சந்தைக்கு கொண்டு போய் விற்பனை செஞ்சுடுவேன். 100 பூக்களுக்கு பத்து ரூபாய்ல இருந்து, நாப்பது ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது. எப்படியும், சராசரியா இருபது ரூபாய் விலை கிடைச்சுடும். மாசம் 75 ஆயிரம் பூங்கிற கணக்குல... மாசத்துக்கு பதினைஞ்சாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆரம்பகட்ட செலவுகளைத் தவிர்த்துட்டு, மாதந்திரச் செலவை மட்டும் வெச்சு கணக்குப் போட்டா... செலவு போக, பதிமூணாயிரம் ரூபாய் லாபமா கையில மிஞ்சுது'' என்றார் குஷியான குரலில்!

 தொடர்புக்கு, ராமசாமி, 
செல்போன்: 99424-
கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்
Source:pasumaivikatan

No comments: