Wednesday

வறண்ட மண்ணில் அசத்தும் "அல்போன்சா'


உலகம் தெரியாத விவசாயியாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டும் பலன் இல்லாமல் போகும். விவசாயி வியாபாரியாக மாறினால் இந்த உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் சிவகங்கையை சேர்ந்த விவசாயி முருகேசன்.

வறண்ட மண்ணான சிவகங்கை எ.கருங்குளத்தை சேர்ந்த இவரது பண்ணை 2,000 ஏக்கர். பண்ணைக் குட்டைகளுடன் தென்னந்தோப்பு என பலவகை மரங்களை வளர்த்து வருகிறார்.
வறட்சியில் இந்த கிராமம் தத்தளித்த போது பிழைப்புக்காக வேறு ஊருக்கு புலம் பெயர்ந்த இவர் பல தொழில்கள் செய்தாலும், கடைசியாக தேர்வு செய்தது விவசாயம்.
"அல்போன்சா' மாம்பழம் அதிக விலையில் விற்பதை பார்த்து, தோட்டத்தில் அதை அமைக்கும் விருப்பத்தை விவசாய பல்கலையிடம் கேட்டுள்ளார். இந்த மண்ணில் அது வளராது என கூறியதை கேட்டு, அதையே சவாலாக எடுத்து முதல்கட்டமாக 20 ஏக்கரில் மா சாகுடியை துவங்கி இன்று பெரும் ஏற்றுமதியாளராகவும் மாறியுள்ள முருகேசன் கூறியதாவது:
25 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு இயற்கை உரம் மீது தான் நம்பிக்கை இருந்தது. 15 டன் மண்புழுவை தோட்டத்தில் கொட்டி மண் வளத்தை பெருக்கினேன். 4 இடங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து மழைநீரை சேமித்து வந்ததால், நிலத்தடிநீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து மாங்கன்றுகள் வாங்கி ஏக்கருக்கு 40 மற்றும் 66 மரங்கள் வீதம் நடவு செய்தேன்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை களை எடுப்பதற்காக உழவு செய்து, அந்த களைகளே உரமாக்கினேன். சொட்டு நீர் பாசனத்தில் அனைத்து மரங்களும் நல்ல பலனை கொடுத்தது. மும்பையில் ஒரு பழம் ரூ.60க்கு விற்பனையானது. அதே பழம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டால் இன்னும் அதிக வருவாய் கிடைக்கும் என மகன் மதிபாலன் அதற்கான முயற்சிகள் எடுத்தார். விவசாயி வியாபாரியாக மாறினால் தான் விவசாயிக்கு உண்மையான பலன் கிடைக்கும், என்பதையும் நிரூபித்தோம்.
இந்த பழங்களை பேக்கிங் செய்வதற்கு ஜார்கண்ட் தொழி லாளர்கள் ஈடுபடுகின்றனர். மரத்தில் இருந்து விளைந்த மாங்காயை அதன் காம்போடு 3 அங்குலத்தில் "கட்' செய்து, அதை பெட்டியில் வைக்கோல் சுற்றி வெளியிடங்களுக்கு அனுப்புகிறோம். இதற்கு தனி வரவேற்பு உள்ளது. இன்னும் சில மாதங்களில் இதன் சீசன் களை கட்டும். இந்த ஆண்டு நல்ல வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன், என்கிறார்.
இந்த சாதனை விவசாயி முருகேசனை வாழ்த்த - 94865 61677ல் அழுத்தலாம்.

-டபிள்யு.எட்வின், மதுரை.

Source: dinamalar

1 comment:

Unknown said...

பால் உற்பத்தி பெருக Snf மற்றும் Fat அதிகரிக்க அனுகவும்.9940072718