Wednesday

மணக்கும் மல்லிகை... மயக்கும் வருமானம்


கரும்பு பயிரிட்ட இடத்தில் தற்போது மல்லிகை தான் வருமானம் தந்து காக்கிறதுஎன்கிறார் மதுரை சத்திரப்பட்டி மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மல்லிகை விவசாயி ரெங்கநாதன். பி.எஸ்சி., இயற்பியல் படித்த இவர், மணக்கும் மல்லிகையின் மயக்கும் வருமானம் குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.


15 ஆண்டுகளுக்கு முன் வரை, நெல், கரும்பு சாகுபடி தான் செய்து வந்தேன். மனைவி ராதாவின் திருச்சி வீட்டில் மல்லிகை சாகுபடி செய்த அனுபவத்தை கூறினார். முதலில் 50 சென்ட் இடத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து 3000 பதியன்களை வாங்கி வந்து நட்டேன். ஆறு மாதத்தில் பூக்க ஆரம்பித்தது. உரம், களை நிர்வாகம் செலவு பிடித்தது. ஆறுமாதம் கழித்து 10 கிலோ பூத்தது. ஓராண்டில் 20 கிலோ பூத்தது.
கரும்பு நட்ட ஐந்து ஏக்கரையும் மல்லிகையாக மாற்றினேன். வெவ்வேறு நேரங்களில் பதியன் செய்ததால் தினமும் 100 - 200 கிலோ பூ வரத்து கிடைக்கிறது. தோட்டக்கலை உதவி இயக்குனர் காமராஜ், சொட்டுநீர் பாசனத்தை பற்றி சொன்னபோது, நூறு சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்தேன். இன்னும் இரண்டு ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க உள்ளேன். நெல், கரும்பில் ஒருமடங்கு லாபம் என்றால் மல்லிகையில் மூன்று மடங்கு லாபம் கிடைக்கிறது.
மல்லிகையில் நஷ்டம் என்று யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன். செடிகளுக்கு தேவைப்படும் உரம், தண்ணீரை கொடுத்து கொண்டே இருப்பேன். இங்கே பெரியாறு பாசனம் என்பதோடு கால்வாய் என் தோட்டம் வழியாக தான் செல்கிறது. மல்லிகைக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. எனவே சிமென்ட் வாய்க்கால் அமைத்து, தண்ணீர் தோட்டத்திற்குள் வராமல் பார்த்துக் கொண்டேன். ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒருமுறையும், தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறையும் தண்ணீர் விடுகிறேன். நவ, டிசம்பரில் கவாத்து எடுத்து எடுக்க வேண்டும். தரையில் படர்ந்து வளரும் நீர்போர்த்து கிளைகளை வெட்டிவிட வேண்டும். பூக்காமல் மேல்நோக்கி வளரும் செடிகளை கிள்ளிவிட வேண்டும். முறையாக பராமரித்தால் 15 ஆண்டுகள் வரை இப்பயிரில் இருந்து வருமானம் பார்க்கலாம்.
உற்பத்திக்காக கோவையில் ஹார்ட்டி இன்டெக்ஸ் அமைப்பின் தேசிய விருது கிடைத்தது பெருமைக்குரிய விஷயம் என்றார்.
இவரிடம் பேச: 90957 28851.

-எம்.எம்.ஜெயலட்சுமி, மதுரை.

Source : Dinamalar

No comments: