Wednesday

காசு குவிக்கும் காடை வளர்ப்பு

கிழக்கு ஆசியாவை, குறிப்பாக ஜப்பான் நாட்டை தாயகமாகக் கொண்ட காடை இனம், தற்போது இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படும், அதிகம் பறக்க இயலாத தரைப்பறவை என்றால் அது ‘ஜப்பானிய காடை’தான். இதன் அறிவியல் பெயர் கட்டூர்னிக்ஸ் ஜப்பானிக்கா (Coturnix japonica). 
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டின் அரசப் பரம்பரையினரால் பாடும் பறவைகளாகக் கருதப்பட்டு, வீடுகளில் வளர்க்கப்பட்டவை காடைகள். 1910-ம் ஆண்டுகளில் ஜப்பானிய காடையின் இறைச்சியும் முட்டையும் ஜப்பான் நாட்டின் பிரபலமான உணவாக மாறின. காடை என தமிழில் அழைக்கப்படும் இந்தப் பறவை பீசன்ட் (Pheasant) குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்தியாவில் இரண்டு வகைக் காடைகள் உண்டு. இந்திய வனப்பகுதிகளில் பெரிதும் காணப்படும் கறுப்பு நிற மார்பை உடைய கட்டூர்னிக்ஸ் கோரமண்டலிகா (Coturnix coromandelica), நமது ஆட்டின் பூர்வ வகை காட்டுப்பறவை ஆகும். 



இன்னொன்று, பழுப்பு நிற மார்பை உடைய ஜப்பான் காடையாகும். கட்டூர்னிக்ஸ் ஜப்பானிக்கா என அழைக்கப்படும் இந்த வகை ஜப்பான் காடை, வியாபார ரீதியில் பண்ணை அளவில் வளர்க்க ஏற்ற இனம்.

1974-ம் ஆண்டு, CARI (Central Avaian Research Institute) எனப்படும் மத்திய பறவை ஆராய்ச்சி நிலையம், கலிஃபோர்னியா டேவிஸ் என்ற பகுதியில் இருந்து ஜப்பானிய காடைகளை இறக்குமதி செய்து ஆய்வுக்குப் பயன்படுத்தியது. அதன்பிறகு, இந்தியாவில் உள்ள பல பல்கலைக் கழகங்கள், ஆய்வகங்கள் இந்த ஜப்பானிய காடை குறித்து ஆய்வுப் பணியில் ஈடுபடத் துவங்கின. 

தற்போது, நாடு முழுவதும் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் ஜப்பானிய காடை வளர்ப்புத் தொழில் நடைபெறுகிறது. அநேகமாக, எல்லா பருவகாலச் சூழல்களிலும் நன்கு வளரும் இந்த ஜப்பானிய காடையின் இறைச்சியும் முட்டையும் சுவையானது மட்டுமின்றி சத்துகள் நிறைந்த உணவாகவும் இருக்கிறது.

சிறிய அளவு எடையுள்ள, மிகக் குறைந்த வளர்ப்பு நாளையும், சிறிய இடத்திலும் வளர்க்க வாய்ப்பு உள்ள ஜப்பானிய காடை வளர்ப்பு, சிறிது சிறிதாக மக்கள் மனத்திலும், பண்ணையாளர்கள் மனத்திலும் இடம் பிடித்துள்ளது.




 




காடையின் குணங்கள்
ஜப்பானிய காடை, சிறிய உருவ அமைப்பை கொண்டது மட்டுமல்லாமல், மிகத் தீவிரமான நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்ட பறவை. வளர்ந்த காடை ஒன்று 150 – 200 கிராம் உடல் எடையைக் கொண்டது. முட்டை ஒன்று, 7 – 15 கிராம் எடையை உடையது. 6 – 7 வார வயதில் பெண் காடை, முட்டை இடத் துவங்கி தினசரி முட்டையிடும்.

முதல் ஆண்டில் சுமார் 300 முட்டைகளும், இரண்டாம் ஆண்டில் 150 – 175 முட்டைகளும் இடும். காடை முட்டை, மனித உணவுக்கு மிகவும் ஏற்றது. கோழி முட்டையைவிட 2.47 சதவீதம் குறைந்த கொழுப்பை உடைய காடை முட்டை, அழகான தோற்றத்தையும் பல வண்ணங்களையும் உடையது.

காடைகள், அடை காத்து குஞ்சு பொறிக்கும் பழக்கம் இல்லாதவை. மாலை வேளைகளில் முட்டை இடும் காடைக்கு, அதிக வெளிச்சம் அதன் முட்டை இடும் திறனை அதிகப்படுத்தும். அடை காக்கப்படும் முட்டைகளில் இருந்து 17-வது நாளில் குஞ்சுகள் வெளிவரும். குஞ்சுகள் ஒவ்வொன்றும் 6 முதல் 7 கிராம் எடை இருக்கும்.

ஜப்பானிய காடைகள் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வளர்ப்பதற்கு ஏற்ற சிறப்புத்தன்மைகளை கொண்டவை. ஐந்து வாரங்களில் காடையை இறைச்சிக்காக விற்பனை செய்துவிடலாம். இது, இறைச்சிக் கோழியின் வளர்ப்புக் காலத்தைவிட மிகவும் குறைவானது.

ஆண் காடையின் உடல் எடை 140 கிராம் வரும்போது, பெண் காடையின் எடை 180 கிராம் அளவுக்கு வந்துவிடும். கோழி போன்ற இதர வீட்டுப் பறவைகளை ஒப்பிடும்போது, ஜப்பானிய காடையின் வளர்ச்சி 3.5 மடங்கு விரைவானது.

ஜப்பானிய காடை விரைவில் பருவத்துக்கு வந்துவிடுகிறது. ஆறு முதல் ஏழாவது வாரத்தில் முட்டையிடத் துவங்கிவிடுகிறது. அத்துடன் அதிக எண்ணிக்கையில் முட்டையிடும். இந்தியக் காடை வகையின் எடை 100 கிராம் இருக்கும். ஆண்டுக்கு 100 முட்டைகள் இடும். ஆனால், ஜப்பானிய காடையின் எடை 200 கிராம் வரை இருக்கும். ஆண்டுக்கும் சுமார் 280 முட்டைகள் வரை இடும்.

காடைகளை வளர்க்க மிகக் குறைந்த அளவிலான இட வசதி போதுமானது. ஒரு கோழிக்கான இடத்தில் நான்கு, ஐந்து காடைகளை எளிதாக வளர்க்கலாம். ஓர் ஆண்டில் தனது இனத்தை மூன்று, நான்கு மடங்கு அளவுக்குப் பெருக்கும் ஆற்றல் உடையது. இதன் குறுகிய வயது, தன் தலைமுறைகளை விரைவில் பெருக்க உதவுகிறது.

இறைச்சி வகைக் கோழிகளைப் போன்றே ஜப்பானிய காடையும் தன் உடல் எடையில் 70 சதவீதம் இறைச்சியைக் கொடுக்கும். தொடையும் நெஞ்சுப் பகுதியுமே 68 சதவீத இறைச்சியைக் கொடுக்கும். ஆறு அல்லது ஏழாவது வாரத்தில் முட்டையிடத் தொடங்கும் பெண் காடைகள், தனது 80 சதவீத முட்டையிடும் திறனை பத்தாவது வார வயதிலேயே எட்டிவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காடையின் ரகங்கள்


தற்போது 18 காடை இனங்கள், வளர்ப்புக்கு ஏற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், சில இறைச்சி உற்பத்திக்கும், சில முட்டை உற்பத்திக்கும் ஏற்றவை. காடைகள், அதன் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு முட்டைக்கான இனம் என்றும், இறைச்சிக்கான இனம் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

முட்டைக்கான இனங்கள் (Layer)
    1. டக்ஸிடோ – Tuxedo
    2. பரோ – Pharaoh
    3. பிரிட்டிஷ் ரேஞ்ச் – British Range
    4. இங்கிலீஷ் ஒயிட் – English White
    5. மஞ்சூரியன் கோல்டன் – Manchurian Golden

இறைச்சிக்கான இனங்கள் (Broiler)


    1. பாப் ஒயிட் – Bob White (American)
    2. ஒயிட் ப்ரெஸ்டெட் – White Breasted (Indian)

இளம் குஞ்சு பராமரிப்பு (Brooding)

குஞ்சு பொரித்து வந்தது முதல் மூன்று வாரம் வரையிலான காலம், இளம் குஞ்சு பராமரிப்புக் காலமாகும். கடும் குளிர் காலத்தில் இளம் குஞ்சு பராமரிப்புக் காலமானது, நான்கு வாரம் வரைகூட நீடிக்கலாம். இளம் குஞ்சு பராமரிப்புக் காலத்தில், சராசரி குஞ்சு இறப்பு விகிதம் 6 முதல் 10 சதவீதம் வரைகூட இருக்கும். இறைச்சிக் கோழியின் இளம் குஞ்சுகளை பராமரிப்பதைவிட, காடையின் இளம் குஞ்சுகளைப் பராமரிப்பது கடினம்.

இளம் காடைக் குஞ்சுகள் பராமரிப்பில், குஞ்சுகளுக்கு வெப்பம் வழங்கும் முறையும், ஆள்கூளமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆள்கூளமானது, நன்கு காய்ந்த மணல் கீழாகவும், ஈரத்தை உறிஞ்சக்கூடிய காய்ந்த தென்னை நார்க் கழிவு அல்லது நிலக்கடமை தோல் மேலாகவும் பரப்பியதாக இருக்க வேண்டும். சுமார் 5 முதல் 10 செமீ உயரத்துக்கு ஆள்கூளம் இருக்க வேண்டும். காடைகளை கம்பிவலைக் கூண்டுகளில் வளர்ப்பதாக இருந்தால், முதல் வாரத்தில் கூண்டில் அடிப்பகுதியில் கெட்டியான அட்டைகளை விரிக்க வேண்டும்.

இன்குபேட்டரில் இருந்து வெளிவரும் காடைக் குஞ்சுகளுக்கு, முதல் வாரத்துக்கு 35 டிகிரி வெப்பம் இருக்குமாறும், தொடர்ந்து அடுத்த வாரத்தில் 3.5 டிகிரி குறைத்தும் வளர்க்கலாம். நான்காவது வரத்தில் குஞ்சுகளின் இறக்கைப் பகுதி நன்கு வளர்ந்துவிடுவதால், அதன்பின் காடைகளுக்கு அறை வெப்பநிலையே போதுமானது.

முதல் நான்கு வார காலத்துக்கு தீவனத் தொட்டி 2 – 3 செமீ உயரத்திலும், தண்ணீர்த் தொட்டி 1 – 1.5 செமீ உயரத்திலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு குஞ்சுக்கு 7.5 சதுர செமீ பரபரப்பளவு இடம் இருக்குமாறு இட வசதி செய்து தர வேண்டும். மூன்று வாரம் வரை இட வசதியை சிறிது சிறிதாக அதிகரித்துக்கொண்டே வர வேண்டும். இப்படி இட வசதியை அதிகரிப்பது என்பது குளிர், வெப்பம், காற்றின் வேகம், ஈரப்பதம், ஆள்கூளத் தன்மை போன்றவற்றை அனுசரித்து மாறுபடும்.

காடை வளர்ப்பு மனை (Housing)

1. ஆள்கூள முறை – (Deeplitter System)

ஒரு சதுர அடியில் ஆறு காடைகளை வளர்க்கலாம். இரண்டாவது வாரத்துக்குப் பிறகு, காடைகளை கூண்டுகளில் வளர்ப்பது அதன் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். கூண்டுகளில் வளர்ப்பதால் காடை தேவையின்றி நடக்காது. அதனால் எடை அதிகரிப்பு விரைவாகிறது.

2. கூண்டு முறை (Cage System)
கூண்டு முறை காடை வளர்ப்புக்கான அளவுகள்
வயதுகூண்டின் அளவுகாடைகள்
முதல் 2 வாரம்3 X 2.5 X 1.5 அடி100 காடை
  3 – 6 வாரம்4 X 2.5 X 1.5 அடி50 காடை


ஒரு கூண்டு என்பது ஆறு அடி நீளம் ஒரு அடி அகலம் இருக்கும். இதனை 6 உட்பிரிவாகத் தடுத்துக்கொள்ளலாம். இடவசதியை முழுமையாகப் பயன்படுத்த ஆறு அடுக்குக் கூண்ணுகள் அமைக்கலாம். வரிசையில் 4 – 5 கூண்டுகள் இருக்கலாம். கூண்டுகளின் அடிப்பகுதியில், எளிதில் எடுத்து காடைக் கழிவுகளைச் சுத்தம் செய்ய வசதியாக மரப் பலகைகளை பொருத்த வேண்டும். கூண்டுகளின் முன்புறம் குறுகிய, நீளமான தீவனத் தொட்டியையும், கூண்டுகளின் பின்புறம் தண்ணீர் தொட்டியையும் அமைக்க வேண்டும்.








முட்டை உற்பத்தி (Reproduction)
அதிகப்படியான முட்டை உற்பத்திக்கு வெளிச்சம் மிகவும் அவசியம். முட்டையிடும் காடையானது 14 முதல் 18 மணி நேரம் வெளிச்சம் இருப்பதை விரும்பும். அதற்கு ஏற்ப, முன் இரவு நேரத்தில் மின்சார வெளிச்சத்தை ஏற்படுத்தி, முட்டை உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். 

பெண் காடையானது, ஏழாவது வாரத்தில் முட்டையிடத் தொடங்கும். எட்டாவது வாரத்தில் 50 சதவீத முட்டை உற்பத்தி துவங்கிவிடும். பெண் காடையானது, 16 – 24 மணி நேரத்துக்கு ஒரு முட்டை வீதம் இடும். 8 – 12 மாதங்களில் அதிகபட்சமாக முட்டையிடும். மலை வேளைகளில்தான் முட்டையிடும் காடைகள், 22 மாத வயது வரை முட்டையிடும்.

தீவனம் (Feed)
தீவனம், சிறிய குருணைகளாக இருக்க வேண்டும். வளர்ந்த காடை தினமும் 20 – 25 கிராம் அளவுக்கு தீவனம் உட்கொள்ளும். ஆறு மாத வயதில் 30 – 35 கிராம் அளவுக்கு தினமும் தீவனம் எடுத்துக்கொள்ளும். 12 முட்டைகள் இடுவதற்கு ஒரு காடை 400 கிராம் அளவுக்குத் தீவனம் உட்கொள்ளும். 

முதல் 3 – 4 வாரங்களுக்கு, காடையின் தீவனத்தில் 27 சதவீத புரதச் சத்தும், 2750 கிலோ கலோரி/கிலோ எரிசக்தியும் இருக்கும் தீவனத்தைப் பயன்படுத்த வேண்டும். அதன்பின், புரதச் சத்து அளவை 24 சதவீதமாகவும், 2650 கிலோ கலோரி/கிலோ அளவுக்கு எரிசக்தி இருக்கும் தீவனத்தையும் சமன்படுத்தி நிலைப்படுத்தலாம்.

காடைகள், ஒற்றை வயிற்றை உடைய பறவை வகை என்பதால், அத்தியாவசிய அமினோ அமிலங்களும், கொழுப்பும், நுண்ஊட்டச் சத்துகளும் தீவனத்தில் இருப்பது அவசியம். 

நல்ல தரமான, ஆரோக்கியமான, முறையான, அதிக உற்பத்தித் திறனுடன் கூடிய காடை இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கு சமன்படுத்தப்பட்ட தீவனம் மிகவும் அவசியம். காடைக்கு 24 மணி நேரமும் சுத்தமான குடி தண்ணீர் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

காடை இறைச்சியில் உள்ள சத்துகள்
தண்ணீர் (Moisture)  –  73.93 %
புரதம் (Protein)       –  20.54 %
கொழுப்பு (Fat)–  3.85 %
கார்போஹைட்ரேட் (Carbohydrate)–  0.56 %    
தாது உப்புகள் (Minerals)–  1.12 %


காடை முட்டையில் உள்ள சத்துகள்
தண்ணீர் (Moisture)– 74.00 %
புரதம் (Protein)– 13.00 %
கொழுப்பு (Fat)– 11.00 %
கார்போஹைட்ரேட் (Carbohydrate)– 1.00 %
சாம்பல் (T.Ash)– 1.00 %


நோய்கள்

இதர பறவை இனங்கள், குறிப்பாக கோழி இனங்களைவிட காடைக்கு நோய் எதிர்ப்புத் திறன் மிகவும் அதிகம். முதல் இரண்டு வார கால வயதில், திடீரென மாறும் சுற்றுச் சூழல் நிலையை மட்டும் அவை தாங்குவதில்லை. பொதுவாக, காடைக்கு குடற்பூச்சி மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கொடுக்க வேண்டியதில்லை. சுகாதாரமான பண்ணைப் பராமரிப்பு, காடைகளை எந்தவிதமான நோயும் தொற்றாமல் பார்த்துக்கொள்கிறது. எலி, சுண்டெலி, அணில், ஈக்கள் போன்றவையும், கீரி, பாம்பு போன்ற எதிரிகளும் அண்டாத வகையில் காடை வீடு அமைப்பு இருப்பது அவசியம். உலர்ந்த, சுத்தமான காடை வீடு அமைப்பும், பொதுமான காற்றோட்டமும் வெளிச்சமும் அவசியம். எதிர்பாராத விதத்தில் இறந்துபோகும் காடைகளை எரித்துவிட வேண்டும்.

காடை இறைச்சி எல்லோருக்கும் ஏற்றது
பண்டைய காலத்தில், ரோமானிய தேசத்தின் சதி சரித்திரத்தில் காடை இறைச்சி உணவாகப் பயன்படுத்தப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. காடையின் இறைச்சி மிருதுவான, சுவையான, சத்தான உணவு. இதன் நெஞ்சுப் பகுதியும் கால்களும் கூடுதல் சுவையானதாக இருக்கும். அதிக பாஸ்போலிப்பிட்ஸ் சத்துடன் கூடிய காடை இறைச்சி, மிகக் குறைந்த அளவு கொழுப்புச் சத்து உடையது. காடை இறைச்சி குறைந்த அளவு சூட்டுத்தன்மை கொண்டதாக இருப்பதால், கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது. காடை இறைச்சி, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது. கர்ப்பிணிகளுக்கும், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்களுக்கும் ஏற்ற சரிவிதிக உணவு இது. ஆஸ்துமா நோயாளிகளின் நோய் எதிர்ப்புத் திறனை காடை இறைச்சி அதிகப்படுத்துகிறது.

விற்பனை வாய்ப்பு

காடை இறைச்சியும் முட்டையும் இப்போது இந்தியா முழுவதும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிது புதிதாக தொடங்கப்படும் காடைப் பண்ணைகளே இதற்கு சாட்சி. கோழி முட்டையைவிட காடை முட்டை அளவில் சிறியதாக இருப்பதே, இதன் விரைவான விஸ்தரிப்புத் தடையாக இருக்கிறது. இருந்தபோதிலும், காடை முட்டை ஊறுகாய், காடை முட்டை அடை, காடை முட்டை தோசை போன்ற பல்வேறு காடை முட்டை உணவு வகைகள் சிறிது சிறிதாக விற்பனை வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.




 




சில செய்தித் துளிகள்

ஆண் காடை எழுப்பும் ஒருவித வித்தியாசமான ஒலி, மனிதர்களை தொந்தரவு செய்வதாக சிலர் கருதுகின்றனர். ஆண் காடைகளுடன் பெண் காடைகளை கலந்து வளர்க்கும்போது, ஆண் காடைகள் மற்ற காடைகளின் கண்களைக் கொத்தி குருடாக்கிவிடுகின்றன. இதனால், காடைகள் இறந்துவிடுகின்றன.

மூன்று முதல் ஏழு மாத வயதுடைய காடைகள் இடும் முட்டையில் கருக்கூடல் நன்றாக இருப்பதால், அதன் குஞ்சு பொரிக்கும் திறன் அதிகமாக உள்ளது. முட்டையின் எடை 10 – 12 கிராம் இருக்கும். இது, தாய் காடையின் உடல் எடையில் 8 சதவீத அளவாகும்.

ஒவ்வொரு காடையின் முட்டையும் தனி நிறம், வடிவத்தில் இருக்கும். இது நமது கைரேகையைப் போன்றது. இந்த முட்டையின் அடையாளத்தை வைத்து, எந்த முட்டைய எந்தக் காடையினுடையது என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

பொரித்த சில மணி நேரங்களிலேயே 6 – 8 கிராம் எடையுள்ள குஞ்சுகள், நடக்கவும் தீவனம் எடுக்கவும், தண்ணீர் குடிக்கவும் செய்யும். சில சமயங்களில், ஒரு நாள் முழுவதும் தண்ணீர், தீவனம் இன்றி உயிர் வாழும். அப்போது, அதற்குத் தேவையான சத்துகள் அதன் நெஞ்சுக்குழியில் உள்ள முட்டையின் மஞ்சள் கருப்பகுதி கொடுக்கும்.

பிறந்தபோது இருக்கும் எடையைவிட இரண்டு மடங்கு எடையை, மூன்றாவது நாளே அடைந்துவிடும். அதற்கு 27 சதவீத அளவு புரதச் சத்து உள்ள தீவனம் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகத்தில் ஐந்து வாரத்தில் 160 கிராம் உடல் எடையை அடையக்கூடிய நந்தனம் 2 ரக காடை உள்ளது. பெங்களூரு காசர்கட்டா மத்திய கோழியின ஆய்வகத்திலும் காடைக் குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளன. நாமக்கல் உள்ளிட்ட கால்நடைப் பல்கலைக் கழகக் கல்லூரிகளிலும் காடைக் குஞ்சுகள் கிடைக்கும். தமிழகத்திலும் ஆங்காங்கே பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் காடைக் குஞ்சுகள் கிடைக்கின்றன.

1972-ம் ஆண்டின் வனத்துறை சட்டத்தின்படி, காடைப் பண்ணை அமைக்க கால்நடைத் துறை உதவி மருத்துவருடைய அந்தஸ்துக்குக் குறையாத அலுவலரின் அனுமதி பெற்று ஜப்பானிய காடைப் பண்ணையை அமைக்கலாம் என, 1997-ல் வெளியிடப்பட்ட மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குறிப்பு தெரிவிக்கிறது.

இதே அமைச்சகம், 2011-ல் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பிய அறிக்கையில் காடை இனம், பட்டியல் 4-ன் கீழ் வரும் பறைவை இனம். அதனால், இதனை வளர்ப்பது, விற்பது, உணவாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையில் காடை என பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இன்றளவும் குழப்பமானதாகவே இருக்கிறது. ஆனால், கேரளத்திலும் தமிழகத்திலும் காடைப் பண்ணைகள் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் நடத்தப்படுகின்றன.

காடையின் விரைவான முட்டை உற்பத்தியும், இறைச்சி உற்பத்தியும் வியாபாரரீதியான பண்ணைகள் தொடங்க முக்கியக் காரணங்களாக உள்ளன. சரியான தீவனம், சுகாதாரமான வளர்ப்பு முறை, நல்ல இனத் தேர்வு போன்றவை லாபகரமான காடைப் பண்ணைக்கு அடிப்படை. 

பல்வேறு வகையான சூழலையும் தாங்கி வளரக்கூடிய தன்மை இருப்பதால், கிராமப்புற பண்ணைகளுக்கு, காடை நல்ல ஒரு வாய்ப்பு வழங்கி, கிராமத் தொழில் வளர்ச்சி, உற்பத்தி, பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பைச் செய்கிறது. 

இறைச்சி உலகில் புதிய புரட்சி படைக்க வந்த காடை வளர்ப்பில் காசுகள் குவியும் என்பதில் ஐயமில்லை.
By S.V.P. வீரக்குமார்
Source: dinamani

No comments: