5 சென்ட் குளம்... 8 மாத காலம்... 1,25,000 லாபம்...
வீறுநடை போடும் விரால் வளர்ப்பு !
'மீன் வளர்ப்புத் தொழில் செய்ய வேண்டுமென்றால்... ஏக்கர் கணக்கில் குளம் வேண்டும்’ என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ''குறைவான அளவு இடம் இருந்தாலே போதும் என்பதுதான் உண்மை. குறிப்பாக, குறைவான இடத்திலேயே விரால் மீன்களை வளர்த்து, நிறைவான வருமானம் பெறலாம்'’ என்கிறார், வேலூர் மாவட்டம், ஆலங்காயம் அருகேயுள்ள ஓமகுப்பம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை.
'சலசல’வென சாரல் அடித்துக் கொண்டிருந்த காலைப் பொழுதொன்றில்... அண்ணாத்துரையைச் சந்தித்தோம்.
''சின்ன வயசுல இருந்தே நான் விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கேன். போதுமான வருமானம் இல்லாததால... வேற தொழில் ஏதாவது செய்யலாம்னு பக்கத்து ஊர் ஏரியை குத்தகைக்கு எடுத்து, மீன் வளர்க்க ஆரம்பிச்சேன். 20 ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சேன்.. 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சுது. அதுல இருந்து 15 வருஷமா தொடர்ந்து ஏரி, குளங்களைக் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்தேன். மூணு வருஷத்துக்கு முன்னதான் சொந்தமா இருந்த நிலத்துல 10 சென்ட் அளவுல குழி எடுத்து, தேளி மீன் வளர்க்க ஆரம்பிச்சேன். வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் லாபம் கிடைச்சுது.