வீட்டின் புறக்கடையில் தோட்டம் அமைத்து, குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை வளர்ப்பது, நாம் காலகாலமாக செய்துவந்த ஒன்று. ஆனால், வீடுகள் சுருங்கி அடிக்குமாடி குடியிருப்புகளாக மாறிவரும் இன்றைய சூழலில் வீட்டுத்தோட்டம் என்பதே அருகி வருகிறது. இதனால், அந்த ஆசையையே பலரும் கைவிட்டு விட்டனர். இத்தகைய சூழலில்… ‘மாற்றி யோசித்தால் இன்னொரு வழி புலப்படும்’ என்பதை நிரூபித்திருக்கிறது,
அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் நடத்திவரும் ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்கிற தலைப்பிலான பயிற்சிக் கருத்தரங்கு!
அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் நடத்திவரும் ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்கிற தலைப்பிலான பயிற்சிக் கருத்தரங்கு!
மாடிவீட்டில் வசிப்பவர்களும், தோட்டம் அமைத்து காய்கறிகள் உற்பத்தி செய்யலாம் என்று தகுந்த வல்லுநர்கள் மற்றும் சிறப்பான தொழில்நுட்பங்களுடன் தமிழகம் முழுக்க நடத்தப்படும் இத்தகைய பயிற்சிகளில் பங்கேற்ற பலரும்… தொட்டி, பை, பக்கெட் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே காய்கறி உற்பத்தி செய்து விவசாயிகளாக மாறி வருகிறார்கள். இதில் 70% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில், ‘கோயம்புத்தூர், மான்செஸ்டர் ரோட்டரி கிளப்’ மற்றும் ‘கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் ரோட்டரி கிளப்’ ஆகியவற்றுடன் இணைந்து, பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமையன்று கோயம்புத்தூர் – திருச்சி சாலையில் உள்ள எஸ்.என்.திருமண அரங்கில் பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் சக்தி இயற்கை உரம், பாரத ஸ்டேட் பாங்க், ஹியூமிக்காஸ், பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்களும் கைகோத்தன. மாடித்தோட்டம் அமைப்பு, வாடகை வீட்டில் இருப்போரும் தோட்டம் அமைக்கும் முறை, எளிமையான காளான் வளர்ப்பு மற்றும் தித்திக்கும் தேனீ வளர்ப்பு ஆகிய தலைப்புகளில், காலை 9.30 முதல் மதியம் 2 மணி வரை தகுந்த வல்லுநர்கள் பயிற்சி அளித்தனர்.
சமீபத்தில் மறைந்த ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வாருக்கு நினைவாஞ்சலியுடன் பயிற்சியைத் துவக்கி வைத்தனர் கோயம்புத்தூர் மான்செஸ்டர் ரோட்டரி சங்க தலைவர் சி.திருமூர்த்தி மற்றும் கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் ரோட்டரி சங்க தலைவர் மு.திருமூர்த்தி ஆகியோர். அப்போது பேசிய மு.திருமூர்த்தி, ”நகரத்தில் குடி யிருக்கிறவங்க மார்க்கெட்டில் வாங்கும் காய் கள் ரசாயனத்தில் விளைந்தவையாகவே இருக் கின்றன. முழுமையான சத்துக்கள் அவற்றில் கிடைக்காது. அதோட இலவச இணைப்பா பக்க விளைவுகளும் உண்டு. இதற்கெல்லாம் தீர்வு, வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்யுறதுதான். மாடி வீட்டிலும் காய்கறி உற்பத்தி செய்யலாம்னு உரக்கச் சொல்லி, அதுக்கான பயிற்சியை தந்து, பல நூறு மாடித்தோட்ட பயனாளிகளை உருவாக்கி வருகிற அவள் விகடன் மற்றும் பசுமை விகடனுக்கு நன்றி!” என்றார்.
மாடித்தோட்ட அமைப்பு, அதற்கான நுட் பங்கள் குறித்து வகுப்பெடுத்த கோவையைச் சேர்ந்த முன்னோடி வீட்டுத்தோட்ட விவசாயி வின்சென்ட், ”வேலைக்குப் போற பெண்களானாலும் சரி, வீட்டில் உழைக்கிற மகளிரானாலும் சரி, தங்கள் வீட்டிலுள்ள குறைவான காலி இடங்களைப் பயன்படுத்தி தோதான காய்கறிகள் மற்றும் கீரைகளை விளைவிக்கலாம். ஒருநாளில் அரை மணி நேரத்தை செலவழித்தாலே போதுமானது.
செம்மண், தேங்காய் மட்டை துகள், சாணம், ஆட்டு எரு அல்லது கோழி உரம் இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து, நீளக்குவியலாக நிழலான இடத்தில் கொட்டி ‘பெட்’ அமைத்து, தொடர்ந்து அதன் மீது தண்ணீர் தெளித்து ஈரத் தன்மையுடன் பார்த்துக் கொள்ளவேண்டும். 30 – 40 நாட்களில் அவை எல்லாம் நன்றாக மக்கி காபித்தூள் நிறத்துக்கு மாறிவிடும். பிறகு, அந்தக் கலவையை நன்றாக உலர்த்தி, அதன் ஈரப்பதம் குறைந்தபின், அதை அள்ளி செடி வளர்க்க பயன்படுத்தக்கூடிய பை, பக்கெட் அல்லது மண்தொட்டி இவற்றில் பாதியளவு நிரப்ப வேண்டும். அதில் காய்கறி, கீரை விதைகளைத் தூவி மண்மூடும்படி கிளறிவிட வேண்டும். தொடர்ந்து காலை, மாலை வெயில் படும்படியான இடத்தில் தொட்டியை வைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் பூவாளி தெளிப்புப்பாசனம் செய்ய வேண்டும். விதைகள் முளைத்து வளரும்போது அதைச் சுற்றி வளரும் களைகளை அப்புறப்படுத்த வேண்டும். கத்திரி, தக்காளி, மிளகாய் போன்ற கிளைபரப்பி
வளரும் காய்கறி செடிகள் வளர்க்க, ஒரு ஒரு விதையாக ஊன்றினால் போதுமானது. கீரை, வெங்காயம், மல்லி போன்ற குறுகிய காலப்பயிர்களுக்கு பரவலாக விதைகளைத் தூவி, முளைத்த பின்பு அடர்த்தியான இடங்களில் உள்ள சில பயிர்களைப் பறித்து அப்புறப்படுத்திட வேண்டும். செடிகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு தகுந்தபடி மூலிகைப் பூச்சிவிரட்டி, பஞ்சகவ்யா போன்ற நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்ட கரைசல்களை தெளிக்க வேண்டும்” என்ற வின்சென்ட் அதற்கான செய்முறை பயிற்சி மற்றும் மூலப் பொருட்களின் அளவீடுகளையும் படங்களு டன் விளக்கினார்.
”வாடகை வீட்டில் வசிப்பவர்களும் எளிமையான முறையில் இதையெல்லாம் அமைக்க முடியும்” என்று பேசிய முன்னோடி இயற்கை விவசாயி மது.ராமகிருஷ்ணன், ”பணியிட மாறுதல், வியாபாரம், குழந்தை களின் கல்வி போன்ற பல்வேறு காரணங் களினால் அடிக்கடி தாம் குடியிருக்கும் வாடகை வீட்டை சிலர் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வீட்டுத் தோட்டத்தில் வளரும் பயிர்களுக்கு துளிகூட சேதாரம் இல்லாமல் அதை அப்படியே எடுத்துச் சென்று, புதிதாக குடிபுகும் வீட்டின் ஏதாவது ஒரு காலி இடத்தில் வைத்து தோட் டத்தை தொடர்ந்து வளர்த்தெடுக்கலாம். சமையல் அறை ஜன்னல் ஓரம்கூட காய் கறிகள் வளர்க்கலாம். அவற்றைப் பறித்து அப்படியே ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தலாம்” என்றெல்லாம் சொல்லி, விளக்கப்படங்கள் மற்றும் செய்முறை மூலம் மேடையிலேயே விளக்கிக் காட்டியது, நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஹைலைட்ஸ்!
”எளியமுறை காளான் வளர்ப்பை வீட்டில் செய்து, நம் குடும்பத்துக்குத் தேவையானது போக மீதமுள்ளவற்றை வெளியிலும் விற்பனை செய்து வருமானம் பார்க்கலாம்” என்று அனைவருக்கும் புரியும்படி தெளிவாக வகுப்பெடுத்தார் திண்டுக்கல் கவிதா மோகன்தாஸ். அவரின் பயிற்சியில் சிலாகித்த பெண்களில் சிலர், மேடையேறி கைகொடுத்துப் பாராட்டினார்கள்.
குடும்பம் ஒன்றுக்கு மாதத்துக்குத் தேவையான இரண்டு லிட்டர் சுத்தமான தேனை மாடித்தோட்டத்தில் இருந்து பெறுவது குறித்து தேன்பெட்டியோடு மேடையேறி சுவையாக வகுப்பெடுத்தார் சிவகிரி தண்டாயுதபாணி.
கருத்தரங்கை ஒட்டி அமைக் கப்பட்ட வீட்டுத்தோட்ட மாதிரி, வங்கி, காப்பீடு, இடுபொருட்கள், புத்தக விற்பனை உள்ளிட்ட ஸ்டால்கள் அனைவரையும் கவர்ந்தன.
source: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=92064
1 comment:
அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்!
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
Post a Comment