வான்கோழி வளர்க்க
அதிக முதலீடோ,
இடவசதியோ தேவையில்லை
ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிகளை அடுத்து, அசைவப் பிரியர்களின் சாய்ஸாக மாறி வருகிறது வான்கோழி. விலை குறைவான அதே நேரத்தில் ஆரோக்கியமான இறைச்சியைத் தேடுவோரின் கவனம் வான்கோழி இறைச்சி பக்கமாகத் திரும்பி வருகிறது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே அசைவ ஓட்டல்களில் கிடைக்கும் வான்கோழி பிரியாணி, இப்போது அனைத்து நாட்களிலும் கிடைக்கிறது.
இப்படி பல பிஸினஸ் வாய்ப்புகள் பெருகி இருக்கிற அதே நேரத்தில், ஈமுக் கோழிகளில் முதலீடு செய்துவிட்டு ரத்தக் கண்ணீர் விடுபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது வான்கோழி வளர்ப்புத் தொழில். அதிக இடம், அதிக முதலீடு தேவைப்படாத வான்கோழி வளர்ப்புத் தொழிலை வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடங்களிலேயேச் செய்யலாம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வான்கோழிகளை வெற்றிகரமாக வளர்த்துவரும் தேனியைச் சேர்ந்த ராஜாமணி, வான்கோழி வளர்ப்பு முறைகள் பற்றி விரிவாகச் சொல்கிறார்.''வான்கோழி வளர்க்க அதிக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை. ஆர்வமும், கொஞ்சம் உழைப்பும் மட்டும் இருந்தால் போதும். வான்கோழி வளர்ப்பது சுலபமான வேலையில்லை என்பது போலத்தான் தோன்றும். ஆனால், அதிலுள்ள நெளிவுசுளிவுகளை தெரிந்துகொண்டால் அதைவிட சுலபமான தொழில் எதுவும் இல்லை. புதிதாக வான்கோழி வளர்க்க நினைப்பவர்கள், 200 முதல் 250 சதுர அடி இடத்தில் 100 குஞ்சுகளுடன் வளர்க்கத் தொடங்கலாம். ஒரு மாதத்திற்கு மேல் வயதான குஞ்சுகளாக வாங்கி வளர்ப்பது நல்லது. ஒரு மாதத்துக்குள்ளான குஞ்சுகளில் அதிக அளவில் இறப்பு இருக்கும் என்பதால்தான் இப்படி சொல்கிறேன்.
கோழி வளர்ப்பு என்றவுடனே அதிக செலவு வைப்பது கொட்டகைதான். ஆனால், புறக்கடையில் வளர்க்கும் வான்கோழிகளுக்கு அதிக செலவு செய்து கொட்டகை அமைக்கத் தேவையில்லை. பழைய டைமண்ட் லிங்க் வேலிகளை வாங்கி தடுப்பு அமைத்துக்கொள்ளலாம். வெயில், மழையில் ஒதுங்குவதற்காக ஒரு கூரை அமைத்துக் கொண்டால் போதுமானது. இதற்கு அதிகபட்சமாக 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். கொட்டகை அமைத்தப் பிறகு குஞ்சுகளை வாங்கி விட வேண்டும். பகல் நேரத்தில் கோழிகள் கொட்டகையில் இல்லாமல் வேலிக்குள் உள்ள திறந்தவெளி பகுதியில் சுற்றித் திரியும். இரவு வந்து கொட்டகையில் முடங்கிவிடும்.
வான்கோழி வளர்ப்பில் அதிகச் செலவு வைப்பது தீவனங்கள்தான். கடைகளில் விற்கும் கோழித் தீவனங்களை வாங்கிப் போட்டால் கட்டுபடியாகாது. எனவே, பச்சை புற்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். நான் எங்கள் வீட்டு அருகே உள்ள வயல் வரப்புகளில் இருந்து புற்கள், கீரைகளை அறுத்து வந்து வான்கோழிகளுக்குக் கொடுக்கிறேன். 60% புற்கள், 20% தவிடு, 20% முட்டைக் கோழித் தீவனம் என்ற விகிதத்தில் கொடுத்தால் தீவனச் செலவை அதிக அளவில் குறைக்கலாம். மனிதர்களுக்கு கீரை உண்பது எவ்வளவு ஆரோக்கியமானதோ அதேபோல பச்சை புற்கள், கீரைகள் வான்கோழிகளுக்கு ஆரோக்கியமானது.
வான்கோழிகள் குஞ்சுகளாக இருக்கும்போது பெட்டை, சேவலை கண்டுபிடிக்க முடியாது. சிறிது வளர்ந்த பிறகுதான் இனம் காண முடியும். இதற்கு பெரும்பாலும் அம்மை நோய் வரும். முகம், உடம்பில் கொப்பளங்கள் தோன்றும். அதற்கு வேப்பம் கொழுந்து, மஞ்சள் ஆகிய இரண்டையும் அரைத்து பூசிவிட்டால் சரியாகிவிடும். வான்கோழி வளர்ப்பில் சந்தை வாய்ப்பு இல்லை என்ற தவறான எண்ணத்தால் பலரும் இந்தத் தொழிலை செய்யத் தயங்குகிறார்கள். ஆனால், உண்மையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் வான்கோழி பண்ணைகள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன. அந்தளவுக்கு அதன் தேவைகளும், சந்தை வாய்ப்புகளும் உருவாகி வருகிறது. இறைச்சி தேவைக்கு இணையாக இதன் முட்டைக்கும் நல்ல கிராக்கி இருக்கிறது. தற்போது என்னிடம் 150 பெட்டைகளும்,
40 சேவலும் இருக்கிறது. இதை வைத்து வாரம் 450 முதல் 500 முட்டைகள் வரை அனுப்புகிறேன். ஒரு முட்டை 20 ரூபாய் என்ற கணக்கில் இதன் மூலம் வாரம் 10 ஆயிரம் வரை வருமானம் பார்க்கிறேன்.
ஒரு மாத குஞ்சாக வாங்கி வளர்க்கும் வான்கோழிகள் அடுத்த ஆறு மாதத்தில் முட்டை வைக்கத் தொடங்கும். நாம் வளர்க்கும் 100 கோழிகளில் 50தான் பெட்டை என்றே வைத்துக்கொள்வோம். இதன் மூலமாக சராசரியாக தினமும் 25 முட்டைகள் கிடைக்கும். வான்கோழி தினமும் முட்டை வைக்காது.
36 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் முட்டை வைக்கும். எனவே, 50 கோழிகள் மூலமாக ஒரு நாளைக்கு 25 முட்டைகள் கிடைத்தாலும் தினமும் 500 ரூபாய் வருமானம் பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் வரை ஒரு கோழி முட்டை இடும். அதற்கு மேல் அதை கறிக்கு விற்றுவிடலாம்.
முட்டை உற்பத்தி முடிந்தவுடன் ஒரு கோழி 5 முதல் 9 கிலோ வரை எடை இருக்கும். தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் நல்ல கிராக்கி இருக்கும் நேரத்தில் விற்பனை செய்யலாம். மொத்த விற்பனையில் உயிர் எடையாக ஒரு கிலோவுக்கு 120 ரூபாய் வரை கிடைக்கிறது. சில்லறையாக எனில் உயிர் எடையாக கிலோ 200 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.
வான்கோழி வளர்ப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பாகச் செய்யலாம்'' என்றார் ராஜாமணி.
அப்ப வான்கோழியை வளர்க்க ஆரம்பிச்சுட வேண்டியதுதான்!
படங்கள்: வீ.சக்தி அருணகிரி
Source: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=26049
3 comments:
Send phone no
எனக்கு 100 வான்க்கோழி குஞ்சுகள் வேண்டும் கைபேசி 7708455519
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238
Post a Comment