இலையும் வருது குலையும் தருது...
பழைய
கற்காலம்... புதிய கற்காலம்... போல, இது பிளாஸ்டிக்
பொற்காலம். எதற்கெடுத்தாலும் பிளாஸ்டிக் பொருட்களை கையில்
எடுத்துவிடுகிறார்கள் மக்கள். வாழை இலை வடிவில் கூட பிளாஸ்டிக்
தட்டுகள் வந்துவிட்டன. ஆயிரம் இருந்தாலும் தலைவாழை இலை
போட்டு... சாப்பாடு பரிமாறுவது போல வருமா...?
திருமணமா... தீபாவளியா... திருக்கார்த்திகையா... எடு
வாழை இலையை என்று மரபு மாறாமல் கணிசமான மக்கள் இன்னமும்
வாழை இலையை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இலை
இல்லை என்றால் விருந்து நடந்த திருப்தி பலருக்கும் வருவதில்லை.
இதுதான் இன்றைக்கும் இலை வாழை விவசாயிகளை வாடவிடாமல்
காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
இலை வாழைக்கு பெயர் பெற்ற பகுதி என்றால்... அது வத்தலகுண்டுதான்
(திண்டுக்கல் மாவட்டம்). அங்கே நினைவு தெரிந்த நாட்களிலிருந்து
இலைவாழை விவசாயத்தை மேற்கொண்டு வரும் மருது (அலைபேசி:
98946-13071), வாழை என்றதுமே உற்சாகமாகிவிட்டார்.
''வாழையடி வாழைம்பாங்க... அது எங்களுக்கு ரொம்பவே
பொருந்தும். எங்க பாட்டன் காலத்திலிருந்து வாழைதான் எங்க
குடும்பத்தைக் காப்பாத்திக்கிட்டி ருக்கு. வாழைக்கு பேர் போன
ஊரு இது.
மெட்ராஸ்காரங்க பயன்படுத்துறதுல முக்காவாசி இலை இங்கிருந்துதான்
போகுது. தமிழ்நாட்டுல முக்கியமான பல ஊர்களுக்கும், கேரளாவுக்கும்
கூட இங்கிருந்து இலை, காய் எல்லாத் தையும் அனுப்பிக்கிட்டி ருக்கோம்.
வெள்ளாமை செய்றதுல ஆயிரம் பிரச்னை இருந் தாலும் இப்ப
முன்னால நிக்கறது வேலைக்கு ஆள் கிடைக்காததுதான். அறுவடை
நேரத்துல ஆள் கிடைக்காம சம்சாரி படுறபாடு சொல்லி மாளாது.
ஆனா, வாழையில இந்தப்பிரச்னையே இல்ல. இலையையும், வாழைத்தாரையும்
மொத்தமா பேசி ஏவாரிக்கிட்ட விட்டுட்டா... மேக்கொண்டு
தண்ணி பாய்ச்சறது மட்டும்தான் நம்ம வேலை. அறுப்பு வேலையை
ஏவாரிங் களே பாத்துக்குவாங்க. 'அடடா வேலைக்கு ஆள் இல்லையே...
எப்படித்தான் அறுத்து விக்கப்போறோமோ'னு கவுந் தடிச்சி கவலைப்பட
வேண்டியதில்ல. அதனால நிம்மதியா மறுபடி மறுபடி இந்த வெள்ளாமையை
பண்ணமுடியுது.
நாட்டுவாழை, கற்பூரவல்லி, ரஸ்தாளி இதைத்தான் இங்க போடுவாங்க.
இப்ப புதுசா பச்சை வாழை யையும் (ரொபஸ்டா) போடுறாங்க.
பெரும்பாலும் நாட்டுவாழைதான். ‘நாள் பார்த்து (பட்டம்)
நாட்டு வாழை நட்டா... நட்டம் நாலுகல் தூரம்’னு சொலவடையே
இருக்குன்னா பாத்துக்கங்க நாட்டு வாழையோட மகிமையை. இலைவாழைன்னாலும்
தார்லயும் வருமானம் வர்றதால எல்லாருமே நாட்டு வாழை நம்ம
வாழைனு கொண்டாடுறாங்க” என்று வாழையைப் பற்றி விவரித்தவர்,
அடுத்து சாகுபடிக் குறிப்பை பரிமாற ஆரம்பித்தார்.
''தொழுவுரம், கரம்பை (நீர் நிலைகள் வறண்ட பின் கிடைக்கும்
வண்டல்) இரண்டையும் போட்டு வயலை ஊட்டமேற்றித் தயார் செய்யவேண்டும்.
ஆடி 18-ம் தேதியில் இருந்து நடவு செய்ய ஆரம்பித்துவிடவேண்டும்.
வசதிக்கு ஏற்ப ஐப்பசி கடைசி வரைக்கும் கூட நடவு செய்யலாம்.
ஜப்பசிக்கு மேல் போனால் வாழைக்கன்றுகள் மழையில் மாட்டிக்
கொள்ளும். இதனால் நஷ்டம் ஏற்படவே வாய்ப்பு அதிகம். வாரம்
ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். நிலத்தில் ஈரப்பசையைத்
தொடர்ந்து பராமரிக்கவேண்டும்.
நம்
நிலத்தில் இருந்தே விதைக்கட்டையை (கரணை) எடுக்கக்கூடாது.
வேறு மண்ணில் இருந்து தான் வாங்கி நட வேண்டும். நாங்கள் திருநெல்வேலியில்
இருந்து வாங்குவோம். கட்டை ரூ.3.50 என்று விலை பேசி காசு
கொடுத்து விட்டால் நம் இடத்துக்கே கொண்டுவந்து இறக்கிவிடுவார்கள்.
அதேபோல் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு வந்து கட்டை
வாங்கிக் கொண்டு போவதும் வழக்கம்.
பார் அமைத்து நடவுக்குத் தயாராக இருக்கும் நிலத்தில் எட்டடிக்கு
எட்டடி என்று இடைவெளியில் குழிகள் பறித்து நடலாம். ஏக்கருக்கு
ஆயிரம் கட்டை வரைக்கும் ஆகும். நட்ட ஒரு மாதத்தில் களை
கழுத்தை நீட்டும். மரம் பெரிதாகி, நிழல் படியும் வரை ஆறு
முறை களை எடுக்க வேண்டியிருக்கும். டி.ஏ.பி., பொட்டாஷ்,
யூரியாவோடு வாழைக்காக போடப்படும் ‘போரக்கால்’ ஆகிய
நான்கையும் சமமாக கலந்து... கன்றுக்கு 400 கிராம் என்ற
கணக்கில் ஆயிரம் கன்றுக்கும் தனித்தனியாக வைக்க வேண்டும். இப்படி
மூன்று உரம் கொடுக்க வேண்டும்.
நடவு செய்த மூன்றாவது மாதத்தில் பக்கக் கன்றுகள் வெடித்து
வர ஆரம்பித்துவிடும். ஆனால், அவற்றை வளரவிடுவது நல்லதல்ல.
ஏழாவது மாதம் வரைக்கும் பக்கக் கன்றுகளை வளர விடக் கூடாது.
மரம் உயரமாக வளர்ந்து வந்ததும் அதாவது, ஏழாவது மாதத்துக்குப்
பிறகு பக்கக் கன்றுகளை வளரவிடலாம். இவற்றிலிருந்துதான் நாம்
இலை அறுக்கவேண்டும். அடுத்த, மூன்றாவது மாதத்தில்... அதாவது,
நடவுசெய்த பத்தாவது மாதத்தில் இலை அறுப்புக்கு வரும். சரியாக
இந்த நேரத்தில்தான் வாழை குலை தள்ளத் தொடங்கும். அதில்
இருந்து மூன்றாவது மாதம்... தார் வெட்டலாம்.
மண் வளமாக இருந்து... மரமும் நல்ல நிலையில் இருந்தால்
ஒரு தாருக்கு பத்து சீப்பு வரைக்கும் காய் இருக்கும். குறைந்தது
ஏழு சீப்பாவது இருக்கும். காய்களைக் கணக்கிட்டால் நூத்திப்பத்து
காய்கள் வரைக்கும் இருக்கும். மொத்தம் ஆயிரம் தார்கள் கிடைக்கும்.
குறைந்தது ஐம்பது ரூபாயிலிருந்து அதிகபட்சமாக எண்பது ரூபாய்
வரைக்கும் கொடுத்து, வியாபாரிகளே வெட்டிச் செல்வார்கள்.
எப்படியும் ஏக்கருக்கு 50 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் காய்கள்
விற்கும். இதைத்தவிர, விசேஷ வீடுகளில் தோரணம் கட்டுவதற்காக
தாருடன் கூடிய மரம் ஜோடி நானூறு ரூபாய் வரைக்கும் விலை
போகிறது. இதன் மூலமும் அவ்வப்போது தனி வருமானம் பார்க்கலாம்.
சரி, இலையின்
மூலம் வருமானம் எப்படி என்று பார்ப்போமா?
நாட்டு
வாழைதான் இலைக்குச் சிறந்தது. கற்பூரவல்லியிலும் கூட இலை
அறுக்கலாம் என்றாலும், நாட்டு வாழை அளவுக்கு அது நல்ல இலையாக
இருக்காது. பச்சை வாழையில் இலை அறுக்க முடியாது. நாட்டு
வாழையில் பத்தாவது மாதத்தில் இலை அறுக்கலாம். சிலர் எட்டாவது
மாதமே அறுப்பார்கள். அது அவர்கள் கொடுக்கும் ஊட்டத்தைப்
பொறுத்தது. தார் வெட்டும் வரையிலான மூன்று மாத காலத்தில்
நான்கு நாளைக்கு ஓர் அறுப்பும், தார் வெட்டிய பிறகான எட்டு
மாத காலத்தில் இரண்டு நாளைக்கு ஓர் அறுப்பும் அறுக்கலாம்
(தார் வெட்டப்பட்ட மரத்தை உடனடியாக அழித்து விடுவார்கள்.
அதற்கும் இலைக்கும் சம்பந்தமில்லை). நாட்டு ரகத்தில் பக்கக்
கன்றுகள் பத்து வரைக்கும் வெடிக்கவிடலாம். ஒட்டுக் கன்றாக
இருந்தால் சுமாராக ஆறு கன்றுகளோடு நிறுத்திவிடவேண்டும். சராசரியாக
ஐந்து கன்றுகள் வரை இருப்பது முக்கியம்.
தார் வெட்டுவதற்கு முன்பாக ஒரு ஏக்கரில் ஓர் அறுப்புக்கு இரண்டு
கட்டு இலை கிடைக்கும். நான்கு நாளைக்கு ஒரு அறுப்பு என்று
பார்த்தால், மாதத்துக்கு எட்டு கட்டு வரும் (250 இலைகள்
கொண்டது ஒரு கட்டு). தார் வெட்டியபிறகு இரண்டு நாளைக்கு
ஒரு அறுப்பு வீதம் பார்த்தால் மாதம் பதினைந்து கட்டுகள் வரும்.
ஒரு கட்டு இலை விசேஷ நாளில் 200 ரூபாய்க்கும், மற்ற நாட்களில்
குறைந்தபட்சம் 70 ரூபாய்க்கும் போகும். ஆள் வைத்து இலைகளை
அறுப்பதை விட, குத்தகைக்கு விடுவதே நல்லது. அப்படிச் செய்தால்
ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.' என்று பக்குவமாகப்
பாடம் நடத்திய மருது,
''வாழையைக் கவனமாப் பராமரிச்சா... இலை, தார் இதிலிருந்து
வருஷத்துக்கு ஒரு ஏக்கர்ல அறுபதாயிரம் ரூபாய்க்கும் குறையாம
வருமானம் பார்க்கலாம்’’ என்று சொன்னார்.
நாரும் மணக்குது!
இலை, காய் மட்டுமல் லாமல் வாழைநாரும் கை கொடுக்கிறது. ‘‘வெள்ளாமை முடிஞ்சி மரத்தை வெட்டி னதும்... அதிலிருந்து நார் எடுப்போம். இதை பல வேலைக்கும் பயன்படுத் தறாங்க. நார் வேணும்னு கேட்கிறவங்க, ஏக்கருக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு கொடுத்து எடுத்துக்குவாங்க. இந்தப் பக்கத்துல வெத்தலை அதிகமா விளையுது. அதைக்கட்டி அனுப்பறதுக்கும், பூ அனுப்பறதுக்கும் வாழை மட்டை பயன்படுது’’ என்று கூடுதல் வருமானம் பற்றி குஷியோடு சொல்கிறார் மருது.
ஆர்.குமரேசன்
Source: pasumaivikatan
No comments:
Post a Comment