இயற்கையாகப்
பொழியும் இணையற்ற
லாபம் -நாட்டுக் கொய்யா
'‘பத்து
ஆப்பிள்களைப் பதுக்கி வைத்துவிடலாம். ஆனால், ஒரு கொய்யாவைக்
கூட மறைத்து வைக்கமுடியாது. ஊரையேக் கூட்டிவிடும் அதன் வாசனை!
ஒரு கொய்யாவுக்கே அப்படி யென்றால் தஞ்சாவூர், விளார் சாலையில்
அமைந்திருக்கும் ஐந்து ஏக்கர் கொய்யாத் தோட்டத்திலிருந்து கிளம்பும்
வாசனைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை.
கொய்யா சாகுபடியில் பழுத்த அனுபவசாலியான விவசாயி முருகன்தான்
அந்தத் தோட்டத்துக்குச் சொந்தக்காரர். மணமணக்கும் வாசனைக்கிடையே
ஒரு கொய்யா பழத்தைக் கொடுத்து இனிப்பான வரவேற்புக் கொடுத்தார்.
‘‘இப்ப நீங்க சாப்பிட்டீங்களே... இது நாட்டுரக கொய்யா...
இதுதான் நம்ம கொய்யா'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்ன
முருகன் (அலைபேசி: 93441-17028),
''நாட்டுரகத்துலதான் இனிப்பு அதிகமா இருக்கும். காய்கள்ல
வெடிப்பும் இருக்காது. நாட்டு மரம் அதிகபட்சம் 30 வருஷம்
வரை காய்ச்சுக்கிட்டே இருக்கும். காய்களோட எண்ணிக்கைக் குறைவுதான்.
ஒரு தளிருக்கு ஒரு காய்தான் வரும். ஆனா, இதோட மகிமையும்
சத்தும் வேற எதுலயும் வராது.இதுவே ஒட்டுரகம்னா ஒரு தளிருக்கு
நாலு காய் வரைக்கும் வரும். காய்களோட எண்ணிக்கையும் அதிகமா
இருக்கும். ஆனா 15 வருஷத்துக்கு மேல காய்ப்பு இருக்காது.
இனிப்பும் சுமாராதான் இருக்கும்.
ஒட்டு ரகத்துல பலது இருந்தாலும் நாட்டு ரகம் சந்தைக்குப் போனதுமே
வித்துப்போயிடும். கமிஷன் வியாபாரிங்க கிட்ட கொடுத்துட்டா எல்லாத்தையும்
அவங்க பாத் துப்பாங்க. நமக்கு எந்தக் கஷ்டமும் இல்ல. அதனால
தான் நாட்டு ரகத்தை நம்ம ரகம்னு பெருமையா சொல்றேன்” என்று
பேசிக்கொண்டே தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்தவர்,
பூச்சி மருந்தே தேவையில்ல!
''பொதுவா, கொய்யா சாகு படியில ரசாயன உரங்களத்
தவிர்க்கறது நல்லது. குறிப்பா தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களா
இருந்தா... ரசாயன உரத்தை சுத்தமா தவிர்க் கணும். அதுக்குப்
பதில் தொழு உரம்னு சொல்ற எருவை மட்டுமே போட்டா...
மூணு மாசம் வரைக்கும் தண்ணி இல்லனாலும் வறட்சியைத் தாங்கி
செடி வளரும். காய்ப்புக்கு வர்ற நேரத்துல தப்பித் தவறிகூட
யூரியா வைச்சிடக்கூடாது. வெச்சிட்டா, காய் பழுக்குற சமயத்துல
வெடிப்புக் கொடுக்கும்; கன்னல்பட்டு தொள தொளப்பாவும் ஆயிடும்.
பழத்தை பறிச்சிக் கூடையில போடுறப்ப, ஒண்ணோட ஒண்ணு லேசா
மோதினாலே பழம் நசுங்கிடும். இதுமாதிரி பல பிரச்னை வரும்.
ரசாயன உரத்தைப் போடு றதால வேற சில சிக்கல் களும்
வரும். காய்க்க ஆரம்பிச்ச முதல் ரெண்டு வருஷத்துக்கு காய்ப்பு
சும்மா போடு போடுனு போடும். ஆனா, அடுத்த வருஷமே இலை
பழுப்பாயிடும்; மஞ்சள் குளிச்ச மாதிரி துளிர் நிறம் மாறி, சத்துக்
குறைஞ்சிடும். சில வருஷத்துலயே சுத்தமா காய்ப்பும் இருக்காது.
அதேபோல பூச்சி மருந்துகளை மறந்தும் கூட அடிச்சிடக்கூடாது.
அதுக்கான தேவையும் இருக்காது’’ எனச் சொல்லிக் கொண்டே
போன முருகன், தன்னுடைய 20 வருட கொய்யா சாகுபடி அனுபவத்தைப்
பாடமாகக் கொடுத்தார்.
‘செம்மண், கரிசல்மண், சரளைமண், மணற்பாங் கான பகுதிகளில்
கொய்யா சிறப்பாக வளரும். களிமண், வண்டல் மண் போன்றவற்றில்
சுமாராகத் தான் வளரும். கொய்யாச் செடி நடவு செய்ய மார்கழி
மற்றும் ஆனி ஆகிய மாதங்கள்தான் பொருத் தமானவை. மார்கழி
என்றால் மழை முடிந்திருக்கும் அந்த மாதத்தில் நடவு செய்தால்,
கோடை வருவதற்குள்ளாக தை, மாசி மாதங்களில் செடிகள் ஒரளவுக்கு
வளர்ந்துவிடும். அதன்பிறகு பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.
ஆனி மாதத்தில் நடவு செய்தால்... ஆடி, ஆவணியில் செடி வளர்ந்து
விடும். அதைத்தொடர்ந்து வரும் மாதங்களில் கடும் மழை பெய்தாலும்
கவலையில்லை.
ஒரு ஏக்கரில் சாகுபடி எப்படி?
முதலில் இரண்டு சால் உழவு ஓட்டவேண்டும். இரண்டு டன் எரு
போட்டு, மீண்டும் இரண்டு சால் உழவு ஓட்டவேண்டும். ஒரு அடி
ஆழம் வரைக்கும் மண் 'பொளபொள'வென இருக்க வேண்டும்.
இரண்டுக்கு இரண்டு என்ற அளவுள்ள குழியை, பதினைந்து அடி இடைவெளியில்
தோண்டவேண்டும். ஏக்கருக்கு 120 குழிகள் வரை தோண்ட முடியும்.
ஒவ்வொரு குழியையும் எருவைக் கொட்டி நிரப்பி மூடிவிடவேண்டும்.
அதன்மேல் அடையாளத்துக்காக குச்சிகளை நடவேண்டும். மற்ற
இடங்களில் ஊடுபயிராக கடலை, சோளம், கம்பு பயிர்களை போடலாம்.
ஊடுபயிர்களை நேர்கோட்டு வரிசையில் விதைக்க வேண்டும். ஒவ்வொரு
வரிசைக்கும் நான்கு விரல் அளவுக்கு இடைவெளி விடவேண்டும்.
|
|
ஒரு வாரம் கழித்து, குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்து,
ஏற்கெனவே நடப்பட்டுள்ள அடையாள குச்சியோடு சேர்த்து கட்டி
வைக்கலாம். மூன்று மாதம் வரை இப்படி கட்டப்பட்டிருந்தால்
செடிகள் சாய்ந்துவிடாமல் இருக்கும். செடிகளை வேளாண் நாற்றுப்
பண்ணைகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். பத்து நாட்களுக்கு ஒரு
முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதன் மூலம் ஊடுபயிருக்கும்,
கொய்யா வுக்கும் சேர்த்தே தண்ணீர் கிடைத்துவிடும். 30 மற்றும்
45-ம் நாட்களில் ஊடுபயிர்களுக்கு இடையே களை எடுக்கவேண்டும்.
களைகள் மிக குறைவாகத் தான் இருக்கும். 120-ம் நாள் ஊடுபயிர்கள்
அறு வடைக்கு வந்துவிடும்.
முதல்
மூன்று வருடம் வரை தொடர்ச்சியாக ஊடுபயிர்களைப் போட்டுக்கொண்டே
இருக்கலாம். தேவையற்ற களைகள் முளைக்காமலிருப்பதோடு,
கொய்யாவுக்குத் தேவையான சத்துக்களும் இவற்றின் மூலம் கிடைத்துவிடும்.
ஊடுபயிர்கள் மூலமாக கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
இரண்டாவது வருடமே கொய்யா காய்ப்புக்கு வந்துவிடும். ஆனால்,
அதனை விற்பனை செய்ய முடியாது. ஒரு ஏக்கருக்கு தினமும் 150
காய்கள்தான் கிடைக்கும். இதை சந்தைக்குக் கொண்டுபோனால்
போக்குவரத்து செலவே அதிகமாகிவிடும்.
மூன்றாவது வருடம் ஒவ்வொரு செடியைச் சுற்றிலும் இரண்டு அடி அகலம்..
அரை அடி ஆழம் உள்ள குழி தோண்டி, அதில் எருவை நிரப்பி மண்ணால்
மூட வேண்டும். உடனடியாக தண்ணீர் பாய்ச்சவேண்டும். நான்காவது
வருடம்தான் ஒழுங்கான அறுவடை ஆரம்பமாகும். முதல் 60 நாட்களுக்கு
தினமும் 100 முதல் 200 கிலோ வரை பழம் பறிக்கலாம். அடுத்த
30 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் 150 கிலோ பழம்
பறிக்கலாம். இந்த 90 நாட்களை ஒரு போகம் என்று கணக்கிட்டுக்
கொள்ளலாம். இப்படி வருடத்துக்கு இரண்டு போகம் வரும்.
ஒரு போகத்துக்கு சராசரியாக 11,250 கிலோ மகசூல் கிடைக்கும்.
ஒரு கிலோ கொய்யா சமயங் களில் 8 ரூபாய் வரை விலை போகும்.
நான்கு ரூபாய்க்குக் கீழே குறையாது. சராசரியாக ஐந்து ரூபாய்
வீதம் கணக்குப்போட்டால் 56,250 ரூபாய் கிடைக்கும். முதல்
போகத்தைப் பொறுத்தவரை செலவுகள் போக 25 ஆயிரம் ரூபாய்க்குக்
குறையாமல் லாபம் கிடைக்கும். அடுத்தடுத்த போகங்களில் 30
ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் கிடைக்கும்.
ஒவ்வொரு போகம் முடிந்ததும், கொய்யா மரங்களைச் சுற்றி
2 அடி அகலம், அரை அடி ஆழ குழிகளைத் தோண்டி, எருவை
நிரப்பி தண்ணீர் பாய்ச்சவேண்டும்.'’
இப்படி பக்குவமாகக் கொய்யா பாடம் நடத்தி முடித்த முருகன்,
''ரொம்பக் குறைவான பராமரிப்பு, நம்பகமான லாபம், நீண்டகால
வருமானம், அத்தோட ஊடுபயிர்ல வேற வருமானம்... இதையெல்லாம்
கணக்குப் போட்டுத்தான் கொய்யாவைத் தவிர வேற எந்தச் சாகுபடியையும்
நான் செய்யுறதில்ல’’ என்று கட்டை விரலை உயர்த்தினார்.
ஊடுபயிர்
கணக்கு....
முருகன் தன்னுடைய கொய்யா தோட்டத்தில் ஊடுபயிராக
சோளம் விதைத்ததில் ஏக்கருக்கு 2 டன் மகசூல் கிடைத்திருக்கிறது.
கிலோ 7 ரூபாய் வீதம் கணக்குப்போட்டால் 14,000
ரூபாய் இதில் வருமானம். விதைப்பு உள்ளிட்ட சில விஷயங்களுக்காக
ரூ 1,000. செலவு செய்திருக்கிறார். மற்றபடி வேறு
செலவுகளே இல்லை. கொய்யாவுக்கான பராமரிப்பே ஊடுபயிரையும்
வளர்த்துவிடுகிறது. இந்த 1,000 ரூபாய் செலவு போக
மீதி 13,000 ரூபாய் கொத்தாக லாபம்தான். |
ஏழைகளின்
ஆப்பிள்!
வாசனை மட்டுமல்ல.... வைட்டமின்களும் நிறைந்ததுதான்
கொய்யா. ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் நிறைந்ததாக
பார்க்கப்படும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. வைட்டமின்-சி,
வைட்டமின்-பி, புரதசத்து, மணிச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்துக்கள்
என்று பலவும் இதில் அடங்கியிருப்பதால் இதையும் ‘ஏழைகளின்
ஆப்பிள்’ என்று அழைக்கலாம். |
|
3 comments:
சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238
சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238
எனக்கு 10 சென்ட் இடம் உள்ளது அதில் என்ன தொழில் செய்யலாம், நான் ராமநாதபுரம் மாவட்டம்... 9047746722
Post a Comment