Monday

அள்ளிக் கொடுக்கும் அலகாபாத் கொய்யா


கொய்யாப்பழம்ம்ம்ம்... கொய்யாப்பழம்ம்ம்ம்ம்...''
-பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலெல்லாம் நீக்கமற ஒலிக்கும், இந்தக் குரலை முந்திக் கொண்டு கொய்யாவின் வாடை மூக்கைத் துளைக்க... நாக்கைச் சுழற்றிக் கொண்டு வாங்கிச் சுவைக்கத் தயங்க மாட்டோம் நம்மில் பலர். காரணம்... அதன் சுவை அப்படி!
அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் குடியேறிய பழம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். என்றாலும், நம் மண்ணின் மணத்தோடு ஒன்றிப்போன பழங்களில் ஒன்றாகிவிட்டது கொய்யா.
பரவலாக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விளைந்தாலும், திண்டுக்கல் மாவட்டத்தில், 'ஆயக்குடிக் கொய்யா, தஞ்சாவூர் மாவட்டத்தில் விளார் கொய்யா, தேனி மாவட்டத்தில் பி.நாகலாபுரத்து செங்காட்டுக் கொய்யா' என தனித்துவம் பெற்ற நாட்டுக் கொய்யா வகைகள் ஏகப்பட்டவை இருந்தன. காலப்போக்கில் அந்த இடத்தை வீரிய ஒட்டுரக கொய்யாக்கள் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன.
ஒட்டு ரகத்துக்குத்தான் இப்ப மவுசு!
பி. நாகலாபுரத்தில் பல வருஷங்களாக கொய்யா சாகுபடி செய்து வரும் ஆண்டவர், அதைப்பற்றி பேசுகிறார்.
''எங்க பகுதி கொய்யாவுக்கு சந்தையில ஏகமரியாதை. பஸ் ஸ்டாண்டுலயெல்லாம் 'நாகலாபுரத்து நாட்டுக் கொய்யா'னு கூவிதான் விப்பாங்க. ஆனா, நாட்டுக் கொய்யா சின்னதா இருக்குறதால... அது அந்த அளவுக்கு விலை போகல. ஒட்டுரகம் பெரிசு பெரிசா இருக்கும்கிறதால மக்கள் அதைத்தான் தேடி வாங்குறாங்க. அதனால நாங்களும் நாட்டுக் கொய்யா சாகுபடியைக் குறைச்சுட்டு, ஒட்டுரகத்துக்கு மாறிட்டோம். அப்படியும் இந்த பகுதியில விளையற கொய்யாவுக்கு இன்னமும் தனி கிராக்கி இருக்குது.
பரவலா சிவப்புக் கொய்யா, வெள்ளைக் கொய்யா ரெண்டும் சாகுபடி பண்றாங்க. ரெண்டுலயும் விதையுள்ளது... விதையில்லாததுனு ரெண்டு வகை இருக்கு. மொத்தம் நாலு வகை! நான் 'லக்னோ-49', 'அலகாபாத்' னு ரெண்டு வெள்ளைக் கொய்யா வகைகளைத்தான் பயிர் பண்றேன்'' என்று முன்னுரை கொடுத்தவர் நேரடியாக சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார். அது-
மழைக்கு முன் நடவு!
கொய்யா தண்ணீர் தேங்கி நிற்காத எல்லா வகையான மண்ணிலும் வரும். பருவமழைக்கு முந்தைய காலம், நல்ல பட்டம். சொட்டுநீர்ப் பாசனமாக இருந்தால், ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம் (இவர் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்திருக்கிறார்). வழக்கமாக, கொய்யாவில் விதையை நடுவது கிடையாது. பதியன் முறையில் உருவாக்கப்பட்ட நாற்றுகளைத்தான் நடவேண்டும். அதனால் தரமான நாற்றுகளை வாங்குவது அவசியம்.
ஏக்கருக்கு 193 மரம்!
தோட்டத்தை நன்கு புழுதி பட இரண்டு சால் உழவு ஓட்டி, நூல் பிடித்து, 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் அடையாளக் குச்சி நட வேண்டும் (ஏக்கருக்கு 193 குச்சி வரும்). ஒவ்வொரு குச்சி உள்ள இடத்தையும் மையமாக வைத்து ஒன்றரை அடி சதுரத்தில், அதே அளவு ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். குழியிலிருந்து எடுத்த மண்ணை நிலத்தில் பரவலாக பரப்ப வேண்டும். இரண்டு, மூன்று வாரங்கள் குழியை ஆறவிட்டு, ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணோடு, ஒரு கூடை மக்கிய பண்ணைக் குப்பையைக் கலந்து குழியை மூடி, மீண்டும் அடையாளக் குச்சியை வைத்து விட வேண்டும்.
வேரில் கவனம்!
மறுநாள் பதியன் நாற்றின் மேல் தண்ணீர் தெளித்து, மண்சட்டியை அரிவாளால் தட்டி உடைத்து வேர் பகுதி மண் அலுங்காமல், ஒவ்வொரு குழியின் நடுவிலும் பதியனின் வெட்டுவாய் மண்ணுக்குள் இருக்குமாறு நட்டு, சுற்றிலும் காலால் மிதித்து சமப்படுத்தி உடனடியாக தண்ணீர்விட வேண்டும். சொட்டுநீர் அமைப்பதாக இருந்தால் நடவுக்கு முன்பே அமைத்துவிட வேண்டும். எந்த வகைப் பாசனமாக இருந்தாலும், நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
கவாத்து முக்கியம்!
நடவு செய்த இரண்டு மூன்று மாதங்களிலேயே கொய்யா பூ எடுத்து விடும். கொய்யா நீண்டகாலப் பயிர் என்பதால் எட்டாவது மாதம் வரை வரும் பூக்கள் அனைத்தையும் கிள்ளி எடுத்து விட வேண்டும். அதேபோல உயரமாகவும் வளர விடாமல் கவாத்து செய்து, பக்கவாட்டில் கிளைகள்விட்டு புதர்போல படர்ந்து வளரும்படிவிட வேண்டும். நுனிக்கொழுந்தைக் கிள்ளிவிட்டால் பக்கக் கிளைகள் புதிதாக உருவாகும். அப்போதுதான் அதிக பழங்கள் கிடைக்கும். தவிர, பறிப்பதற்கும் எளிதாக இருக்கும். இதற்காகத்தான் 'ஆட்டை அடிச்சு ஓட்டணும், கொய்யாவை ஒடிச்சு வளர்க்கணும்' என்கிற பழமொழியைச் சொல்லி வைத்தார்கள்.
ரசாயனம் கூடவே கூடாது!
கொய்யா மரத்துக்கு ரசாயன உரம் வைக்கவே கூடாது. ரசாயன உரம் ஊட்டப்பட்ட மரங்களில் பழங்கள் நன்றாக வருவதில்லை. ஆண்டுக்கு மூன்று முறை தொழுவுரம் கொடுக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் வந்தால், மூலிகைப் பூச்சிவிரட்டி அடிக்கலாம். பஞ்சகவ்யா தயாரிக்க முடிந்தால், பத்து லிட்டருக்கு (1 டேங்க்) 300 மிலி வீதம் கலந்து, ஆண்டுக்கு ஐந்து முறை தெளிக்கலாம் (ஆண்டவர், தன் நண்பரிடம் பஞ்சகவ்யா வாங்கிப் பயன்படுத்துகிறார்). பூச்சிவிரட்டி, பஞ்சகவ்யா இரண்டையுமே கனமழை காலத்தில் தெளிக்கக் கூடாது. எட்டாவது மாதத்துக்குப் பிறகு பூக்களை அப்படியே விட்டால், பிஞ்சாகி காய்க்கத் தொடங்கி விடும். அதிலிருந்து முப்பது ஆண்டுகள் வரைகூட காய் பறிக்கலாம்.
ஆண்டு முழுவதுமே காய்கள் கிடைக்குமென்றாலும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகப்படியான காய்கள் கிடைக்கும். காய்கள் இருப்பதைப் பொறுத்து பறித்துக் கொள்ளலாம்.
பெரிய அளவில் நோய்த் தாக்குதல் இருக்காது. ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 500 காய்கள் கிடைக்கும். ஒரு காய் 100 முதல் 300 கிராம் வரை இருக்கும். குறைந்தபட்சமாக ஒரு மரத்தில் 50 கிலோ காய்கள் வரை கிடைக்கும். ஏக்கருக்கு 193 மரங்கள் என்பதால், 9 டன்னுக்கு குறையாமல் காய்கள் கிடைக்கும். கிலோவுக்கு குறைந்தபட்சமாக ஏழு ரூபாய் கண்டிப்பாகக் கிடைக்கும். கொய்யா சாகுபடியில கவாத்தும் அறுவடையும்தான் வேலை. வேறு வேலையே கிடையாது.
நேரடி விற்பனையில் அதிக லாபம்!
சாகுபடி பாடத்தை முடித்த ஆண்டவர், ''முதல்ல விற்பனை வாய்ப்பை நல்லா கணிச்சுக்கணும். கமிஷன் மண்டிக்கு அனுப்பினா... கண்டிப்பா கட்டாது. போக்குவரத்து வசதியுள்ள தோட்டமா இருந்தாதான் கொய்யா சாகுபடியில இறங்கணும். சைக்கிள்லயும், கூடையிலயும் எடுத்துக்கிட்டுப் போய் விக்கிற சில்லறை வியபாரிக நம்ம தோட்டத்துக்கே வந்து எடை போட்டு எடுத்துட்டுப் போற மாதிரி இருக்கணும்.
காய் பறிக்கிற அளவு வந்துடுச்சுனா... காவல் காக்குறதும் ரொம்ப முக்கியம். அப்பதான் லாபம் கிடைக்கும். நான் 15 ஏக்கர்ல கொய்யா போட்டுஇருக்கறதால காவலுக்கு ஆள் போட்டிருக்கேன். வாரத்துக்கு ரெண்டு தடவை தோட்டத்துக்கே வியாபாரிக வந்து காய் எடுத்துக்குறதால போக்குவரத்துச் செலவு, கமிஷன் எதுவுமில்லாம நல்ல வருமானம் கிடைக்குது'' என்று உஷார் ஆலோசனைகளையும் தந்தார்.


Source:pasumaivikatan

1 comment:

Unknown said...

சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238